திண்ணியம்

0
2,881

தமிழ்நாட்டையே அவமானப்படச் செய்த திண்ணியம் வன்கொடுமை வழக்கும் மிக மோசமான முறையில் முடிவுக்கு வந்தது. திருச்சி அருகேயுள்ள திண்ணியம் என்ற கிராமத்தில், தொகுப்பு வீடு ஒதுக்கித் தர கள்ளர் சாதியைச் சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ராஜலட்சுமியின் கணவர் சுப்பிரமணியனிடம் ரூபாய் இரண்டாயிரத்தைத் தலித் சமூகத்தைச் சார்ந்த கருப்பையா என்பவர் லஞ்சமாகக் கொடுத்திருந்தார். இரண்டு ஆண்டுகள் ஆகியும், வீடு ஒதுக்கித் தரவில்லை என்பதால், கருப்பையா தான் கொடுத்தத் தொகையை திருப்பித் தருமாறு பலமுறை சுப்ரமணியனிடம் கேட்டு கெஞ்சியுள்ளார். தொகை யைத் திருப்பித் தர ராஜலட்சுமியும், சுப்பிரமணியனும் மறுத்ததினால், பணத்தை திருப்பித் தரச் செய்யும்படி கிராம மக்களுக்கு அறிவிப்புச் செய்யும் நோக்கத் தோடு தண்டோரா அடித்துத் தெரியப்படுத்தினார் கருப்பையா. அப்போது அவருடன் ராமசாமி, முருகேசன் என்ற இரு தலித் சமூகத்தவரும் சென்றுள்ளனர். அதை அறிந்த ராஜலட்சுமியும், சுப்பிரமணியனும் தங்களைக் கேவலப்படுத்தி விட்டதாக ஆத்திரம் கொண்டு, கருப்பையாவை வீட்டுக்கு அழைத்து வரச் செய்து கடுமையாகத் தாக்கினார். கருப்பையாவோடு தண்டோரா அடித்துச் சென்ற ராமசாமியையும் முருகேசனையும் கடந்த 2002 மே மாதம் 15ஆம் நாள் வீட்டிற்கு அழைத்து வந்து அடித்துக் கொடுமைப்படுத்தி மனித மலத்தை உண்ணச் சொல்லி, செருப்பால் அடித்துச் சித்ரவதை செய்தனர். பழுக்கக் காய்ச்சிய கம்பியால் சூடு போட்டு, தங்களின் அடங்காத சாதிவெறியை வெளிப்படுத்தினர்.

கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதற்காக அத்தனை கொடுமைளையும் அனுபவித்த தலித்துகள், காவல் நிலையத்தில் புகார் அளிக்கக்கூட துணிவில்லாத பிள்ளைப் பூச்சிகளைப் போல் இருந்துள்ளனர். செய்தியை அறிந்த சமூகநீதி வழக்கறி ஞர்கள், பாதிக்கப்பட்ட கருப்பையா, ராமசாமி, முருகேசன் ஆகியோரை அழைத்துச் சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மனித மலத்தை மனிதனை உண்ணச் செய்த அந்த படுகேவலமான சாதிவெறிச் செயலை அறிந்து தமிழகமே உறைந்து போனது. அநேகமாக அனைத்து ஊடகங்களும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. அப்போது ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. அரசு, குற்றவாளியான சுப்பிரமணியனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைத்தது. ஆனாலும் அதற்குரிய ஒப்புதலைத் தர மறுத்து விடுதலை செய்தது.

வழக்கை லால்குடி காவல்துறை துணைக் கண்காணிப் பாளர் புலன் விசாரணை செய்து வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும், இந்திய தண்டனைச் சட்டத்தின் சில பிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தார். சுப்ரமணியன், அவரது துணைவியர் ராஜலட்சுமி உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, கடந்த 10.9.2007 அன்று தீர்ப்பளித்தார்.

திண்ணியம் வன்கொடுமை வழக்கில், தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும், திண்ணியம் கிராமத்தில் சாதி இந்து கள்ளர்களும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் சாதி வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருவதால், தீண்டாமைக் கருத்துடன் குற்றவாளிகள் குற்ற மிழைக்கவில்லை என்றும் தீர்ப்பெழுதினார் கள்ளர் சமூகத்தைச் சார்ந்த நீதிபதி ராமமூர்த்தி. அதற்கு அவர் தரும் எடுத்துக்காட்டு எதுவென்றால், திண்ணியம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் கள்ளர் களும் தலித் சமூகத்தவரும் இணையான மரியாதை யுடன் நடத்தப்படுகிறார்கள். இரு சமூகத்தவரும் இணைந்து திருவிழா கொண்டாடுகிறார்கள். எனவே, திண்ணியம் கிராமத்தில் சாதிப் பாகுபாடு இல்லை என்று காரணம் வெட்கமில்லாமல் தீர்ப்புக்கூறினார்  ராமமூர்த்தி.

குறைந்தபட்ச சமூக அறிவின்றி தீர்ப்பு எழுதி இருக்கும் ராமமூர்த்தி, ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத் தவரிடம் பணம் பெற்று, வீடு ஒதுக்கித்தர மறுத்து, பணத்தையும் திருப்பித் தராமல், மனித மலத்தை உண்ணச் செய்து, செருப்பால் அடித்து, பழுக்கக் காய்ச்சிய கம்பியால் தாழ்த்தப்பட்ட சமூகத்தவரைச் சூடு போட்டு சித்ரவதை செய்த குற்றவாளிக்கு கொடுத்த தண்டனை என்ன தெரியுமா? ரூபாய் 2000 ஆயிரம் அபராதம், ஒரு மாத சிறைத்தண்டனை மட்டும்தான். குற்றம் சாட்டப்பட்ட மீதி ஏழு பேரை விடுதலை செய்து தீர்ப்பெழுதினார் ராமமூர்த்தி.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் அற்பமான முறையில் விசாரித்து, நெஞ்சறிய கள்ளத் தீர்ப்புகளை எழுதி வருகிறார்கள் என்பதற்கு திண்ணியம் வன்கொடுமை வழக்கும் அதக் தீர்ப்பும் துல்லியமான சாட்சிகளாகும். வழக்கை புலன் விசாரணை செய்ய அரசால் நியமிக்கப்படும் காவல் அதிகாரிகள் வழக்கை நாசப்படுத்தும் சதித்திட்டத்தோடு, குற்ற அறிக்கை யிலும் சாட்சியங்களிலும், சாட்சிப் பொருட்களிலும் ஏராளமான குளறுபடிகளைச் செய்து வழக்கை நீதிமன்றத்திற்கு அனுப்புகிறார்கள். கீழமை நீதிமன்றங் களிலோ, உயர்நீதிமன்றத்திலோ அப்படிப்பட்ட வழக்குகள் தோல்வியுறச் செய்யப்படும்போது, அரசு மேல்முறையீடுகளைச் செய்வதில்லை. மிக நீண்ட காலமாகக் கிடப்பில் போட்டுவிடுவது அல்லது கள்ள மௌனம் காத்து வருவது என்ற போக்கை அநேகமாக அனைத்து மாநில அரசுகளும் கடைபிடித்து வருகின் றன. அவற்றில் தமிழக அரசு முதலாவது மாநிலமாக விளங்குகிறது.

Load More Related Articles
Load More By sridhar
Load More In சமூக வன்கொடுமைகள்

Leave a Reply

Your email address will not be published.