சென்னகரம்பட்டி

0
2,882

தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கிய மதுரை சென்னகரம்பட்டியில்,

சாதிவெறியுணர்வும், தீண்டாமைக் கருத்துணர்வும் கொண்ட கள்ளர் சாதியைச் சார்ந்த பெரும் கும்பல், திரண்டு சென்று, தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் இருவரை நள்ளிரவில் வெட்டிப் படுகொலை செய்தது. குரூரமான சாதிய மண்டபங்களாக இன்று வரை செயல்பட்டுக் கொண் டிருக்கும் இந்திய கிராமங்களில், தாழ்த்தப்பட்ட மக்களைச் சாதி இந்துக்கள் மிகப் பயங்கர ஆயுதங் களுடன் ஊரோடு திரண்டு சென்றுதான் தாக்கு கிறார்கள். படுகொலையும் செய்கிறார்கள். அப்படிப் பட்ட கொடூரச் செயல்கள் அனைத்திற்கும் அடிப்படையானது சாதிவெறியுணர்வும், தீண்டா மைக் கொள்கையும்தான். இந்த அடிப்படையான சமூக அறிவில்லாமல்தான் விசாரணை நீதிபதிகளும் உயர்நீதிமன்ற நீதிபதிகளும் தீர்ப்பெழுதி வருகிறார்கள்.

1987ஆம் ஆண்டிலிருந்தே சென்னகரம்பட்டி சாதி இந்து கள்ளர் சாதியினருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கோயில் நிலத்தை குத்தகை எடுப்பது தொடர்பான சிக்கல்கள் இருந்து வந்தன. சென்ன கரம்பட்டியில் உள்ள அம்மச்சியம்மன் கோயில் நிலத்தை நீண்டகாலமாகவே கள்ளர் சாதியினர்தான் குத்த¬க்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். கள்ளர்கள் தாட்டிக்கமாக இருந்ததினால் வேறு சாதியைச் சேர்ந்தவர் எவரையும் குத்தகை ஏலத்தில் பங்கேற்க அனுமதிப்பது கூட இல்லை. இந்த சாதி ஆதிக்கத்தை எதிர்த்து கோயில் நில குத்தகை ஏலத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

ஏலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கலந்துகொண்ட தினால் ஆத்திரமடைந்த கள்ளர் சாதி இருந்துக்கள் மூன்றாண்டு காலம் ஏலம் நடத்தாமலேயே தங்களுக் குள் ரகசியமாக நிலத்தை பங்கிட்டுப் பரிமாறி உழுது வந்தனர். சென்னகரம்பட்டி தாழ்த்தப்பட்ட மக்களின் கடும் முயற்சியினால், அம்மச்சியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 9.24 ஏக்கர் நிலத்தை இந்து அற நிலையத்துறை 1991 – ல் வெளிப்படையான குத்தகை ஏலத்திற்கு கொண்டு வந்தது. சென்னகரம் பட்டியில் உள்ள 200 குடும்பங்களும் கூட்டாகச் சேர்ந்து கோயில் நில குத்தகை ஏலத்தில் பங்கேற்று நிலத்தை குத்தகைக்கும் எடுத்தனர். கள்ளர் சாதி இந்துக்களி டையே நிலத்தை குத்தகைக்கு யார் எடுப் பது என்ற போட்டி ஏற்பட்டதினால் ஏலத்திலிருந்து வெளி யேறினர்.

தலித் மக்களுக்கு நிலம் குத்தகைக்கு விடப்பட்டதை எதிர்த்து கள்ளர் சாதி இந்துக்கள் பல்வேறு நீதிமன்றங் களில் வழக்குத் தொடர்ந்தனர். பல்வேறு சிக்கல் களைச் சந்தித்துப் போராடி, நீதிமன்றத்தில் தலித் மக்கள் வெற்றி பெற்றனர். சென்னை உயர்நீதிமன்றம் அம்மச்சியம்மன் கோயில் நில குத்தகை ஏலம் செல்லும் எனத் தீர்ப்புக் கூறியது. அதனால், மேலும் ஆத்திரமடைந்த கள்ளர்கள், நேரடியான தாக்குதல் களில் ஈடுப்பட்டனர். 200 தலித் குடும்பங்களையும் ஊர் விலக்கம் செய்து ஒதுக்கி வைத்தனர். தலித் மக்கள் செய்துவந்த விவசாயத்தை இரவோடு இரவாக அழித்தனர்.

வேலைக்குச் செல்லும் இடங்களில் கொலை மிரட்டல் செய்தனர். ஆறுமாதங்களுக்கும் மேலாக ஊரில் கலவரச் சூழல் நிலவியது. எப்போது வேண்டு மானாலும் தாக்கப்படலாம் என்ற பீதியில் தலித் குடும்பங்கள் தவித்து வந்தன. மிக மோசமான சூழ்நிலை நிலவிய போதிலும், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட போதிலும் சென்னகரம்பட்டி தலித் குடும்பங்களுக்குப் பாதுகாப்புத் தர மதுரை மாவட்ட காவல்துறை மறுத்துவிட்டது. இறுதியில் தலித் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கொலை வெறித் தாக்குதலை கள்ளர் சாதி இந்துக்கள் தொடங்கினர். 1992ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் வாரத்தில் அந்த சாதிவெறித் தாக்குதல் தொடங்கியது. வெளியூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த நான்கு தலித்துகளை சென்னகரம்பட்டிக் கள்ளர்கள் சரமாரி வெட்டினர். கண்ணில்படும் தலித் ஆண்கள், பெண்கள், குழந்தை கள் என அனைவரையும் படுகொலை செய்யும் திட்டத்துடன் கள்ளர் சாதி வெறிக்கும்பல் அலைந்து கொண்டிருந்தது.

நான்கு பேர் மீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதல் குறித்து மேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் தலித்துகள். மேலூர் காவல்துறை ஆய்வாளர் தலித்துகள் அளித்த புகார்ன் பேரில், கள்ளர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தார். ஆனால், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங் குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் எதிலும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. பாதிக்கப்படப் போகிறவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என்பதை அறிந்தேதான் கள்ளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். சொத்துக்களை அழித்தனர். ஊர் விலக்கம் செய்தனர். அந்தக் குற்றங்களைச் செய்ததற்காக, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங் குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கடுமையான பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டும். ஆனால், மேலூர் காவல் நிலைய அதிகாரி அப்படி எதையும் செய்ய வேண்டும்.

சென்னகரம்பட்டியில் நிலவிய கலவரச்  சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தாழ்த்தப்பட்டோர் வன்கொடு மைச் சட்டத்தின் கீழ், ‘சென்னகரம்பட்டி தாழ்த்தப் பட்ட மக்களுக்குப் பாதுகாப்பற்ற பகுதி’ என அறிவித்து போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். தேவைப்பட் டால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வா கம் ஆயுதம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், மதுரை மாவட்ட நிர்வாகமும், காவல்துறை அதிகாரிகளும் வன்கொடுமை சட்டத்தின்படி செயல்பட மறுத்து, வழக்கமான நடைமுறைகளை மேற்கொண்டனர். அமைதிக் கூட்டத்திற்கு அறிவிப்புச் செய்தனர். அதன்படி மதுரை மேலூர் வட்டாட்சியர் அலுவலகத் தில் 5.7.1992 அன்று மாலை 4 மணிக்கு அமைதிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

குறிப்பிட்ட நாளன்று அமைதிக் கூட்டத்தில் பங்கேற்க மேலூர் வட்டாட்சியர் அலுவலத்திற்கு வந்த சென்னகரம்பட்டி தலித்துகள் மாலை 7 மணிவரை காத்திருந்தனர். கள்ளர்கள் எவரும் கூடத்திற்கு வராததால் வட்டாட்சியர் அமைதிக் கூட்டத்தை ரத்து செய்து, கூட்டதிற்கு வந்திருந்த தலித் மக்களை ஊருக்குத் திரும்பிச் செல்லும்படி கூறினார். மிக அபாயகரமான சூழ்நிலையில் அமைதிக் கூட்டத்திற்கு வந்து திரும்பிய தலித்துக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் வட்டாட்சியர் நாகராஜனுக்கு ஏற்படவில்லை. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் தலித்துகளுக்குப் பாதுகாப்பு அளிக்க அவர் தவறினார்.

அமைதிக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், முன் தினம் கள்ளர்கள் நடத்திய தாக்குதலில் படுகாய மடைந்து மேலூர் அரசு மருத்துவமனையில் தங்கள் சகோதரர்களைச் சந்தித்து நலம் விசாரித்துவிட்டு, ஊர் திரும்புவதற்காக மதுரை -மேலூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர் தலித்துக்கள். இரவு 10 மணிக்கு சென்னகரம்பட்டிக்குச் செல்லும் தனியார் பேருந்தில் ஏறினர். அந்த பேருந்தில் சென்னகரம் பட்டிக்கு காவலுக்கு நியமிக்கப்பட்ட காவலர்களும் பயணம் செய்தனர். பேருந்து சுந்தரராஜபுரம் என்ற ஊர் நிறுத்தத்தில் நின்றபோது 60க்கும் மேற்பட்ட கள்ளர் சாதி இந்துக்கள், பேருந்தை தடுத்து நிறுத்தி, அடித்து நொறுக்கி பேருந்தில் இருந்து தலித்துக்களில் அம்மாசி, வேலு ஆகிய இருவரை பேருந்திலிருந்து இழுத்துத் தரையில் போட்டு வெட்டிப் படுகொலை செய்தனர். உடன் பயணித்தவர்கள் அந்த நள்ளிரவில் உயிருக்குப் பயந்து ஓடி, தப்பித்து, மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தலித்துகளோடு பேருந்தில் பயணம் செய்த காவலர்கள் படுகொலை நடந்து கொண்டிருந்தபோது, அதைத் தடுத்து நிறுத்த முயற்சிக்காமல், பேருந்தை ஓட்டும்படி ஓட்டுநரை வற்புறுத்தித் தப்பித்துள்ளனர். படுகொலை நடந்த பிறகும் கள்ளர்களின் சாதிவெறி தணியவில்லை. இரவில் தனியாக வரும் தாழ்த்தப்பட்டவரைக் கொலை செய்ய ஆயுதங்களுடன் சுற்றிக் கொண்டிருந் தார்கள். அப்படிச் சுற்றிக் கொண்டிருந்த சிலரை ஆயுதங்களுடன் கைது செய்தது காவல்துறை.

சதி ஆலோசனை செய்து, திட்டமிட்டு மறைந்து நின்று நள்ளிரவில் நடத்தப்பட்ட அந்த படுகொலையை, மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவில்லை. மாறாக, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தார். அதற்குப் பிறகு நடந்தவைகளெல்லாம் பெரும் வேதனை அளிக்கக் கூடியவைகள். தாக்குதலில் ஈடுபட்டவர்களும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த மேலூர் காவல் நிலைய ஆய்வாளரும், அமைதிக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்த வட்டாட்சியரும், அனைவரும் கள்ளர் சாதியினராக இருந்ததால், குற்றவாளிகளைக் காப்பாற்ற அனைத்து முயற்சி களையும் மேற்கொண்டனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், சாதாரண கொலை வழக்காக நீதிமன்றம் எடுத்துக் கொண்டது.படுகொலையானவர்களின் குடும்பங் ளுக்கு இழப்பீடுகள் வழங்கப்படவில்லை. மிக மெதுவாக விசாரணை நடைபெற்றது. சாட்சியங் களைக் காப்பாற்ற காவல்துறையினர் முனைப்புக் காட்டவில்லை. மாறாக, வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட தலித்துக்களை காவல்துறையினர் மிரட்டினர்.

வழக்குரைஞர் பொ.ரத்தினம் தலைமையிலான வழக்குரைஞர் குழு ஒன்று, வழக்கின் தொடக்க நிலையிலிருந்தே தீவிரமாகப் போராடியது. படுகொலை செய்யப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர் கள் என்பதால் வழக்கை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 -ன் கீழ், மறுவிசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத் தில் மேல் முறையீடு செய்தனர். முன்னதாக அந்த முறையீட்டை மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேல்முறையீட்டை ஏற்று, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யும்படி மாவட்டக் காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், முறையான விசாரணை இல்லை. மேம்போக்கான முறையில், மிகப் பலவீனமான வழியில் மறு குற்ற அறிக்கையை மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் தாக்கல் செய்தார்.

வழக்கைச் சீர்குலைப்பதற்கு மதுரை மாவட்ட நிர்வாகத்துறையினரும், காவல்துறையினரும், நீதித்துறையினரும் கூட்டாகச் சேர்ந்து முயற்சித்ததை யடுத்து, மதுரை மாவட்டத்திலிருந்து வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்றும்படி, மதுரை உயர்நீதி மன்றத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டை ஏற்று கரூர் கோட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றியது மதுரை உயர்நீதிமன்றக் கிளை. அதையடுத்து, கரூர் அமர்வு நீதிமன்றத்தில் 31.8.2007 அன்று வழக்கு எண் வழங்கப்பட்டு விசாரணை தொடங்கியது.

12 மாதங்களாக கடந்த விசாரணையை அடுத்து கடந்த 2008 ஆகஸ்ட் 4 – ஆம் நாளன்று கரூர் அமர்வு நீதிமன்ற நீதிபதி அய்யப்பன் தீர்ப்பு வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட 26 எதிரிகளுக்கும் ஆயுட்காலச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார். ஆனாலும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்புக் கூறி, அந்த பிரிவுகளிலிருந்து குற்றவாளி களுக்கு விடுதலை அளித்தார்.

தங்களை எதிர்த்து குத்தகை ஏலத்தில் கலந்து கொண்டதால், தாழ்த்தப்பட்ட மக்களை ஊரைவிட்டு விலக்கம் செய்து, அவர்களின் சொத்துக்களைச் சூறை யாடி, அழித்தொழித்து, பத்துக்கும் மேற்பட்டோரை கொலை செய்ய முயற்சித்து, சதி செய்து திட்டமிட்டு கூட்டாக இருவரைப் படுகொலை செய்த குற்ற வாளிகள் மீது, அந்தக் குற்றங்களுக்காக மதுரை மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் கணேச பெருமாள்  வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யாமல், சாதிப் பெயரைச் சொல் லித் திட்டிய குற்றத்தை மட்டும் வன்கொடுமைச் சட் டத்தின் கீழ் பதிவு செய்தார். வழக்கு குறித்து அடிப் படை புரிதல்கூட இல்லாமல், அந்தக் குற்றச் சாட்டை யும் கரூர் அமர்வு நீதிமன்ற நீதிபதி அய்யப்பன், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என தள்ளுபடி செய்தார்.

காவல்துறையினரும், நீதிபதிகளும் தாழ்த்தப்பட் டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முற்றாக முடக்கி வைக்கும் திட்டத்தோடு செயல்பட்டு வருகிறார்கள் என்பதை, சென்னகரம்பட்டி கொலை வழக்குத் தெள்ளத் தெளிவாக நிரூபிக்கிறது. மேலும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கை மறுவிசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில்தான், மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வழக்கு விசாரணையை மேற்கொண்டு குற்ற அறிக்கையைத் தாக்கல் செய்தார். ஆனால், உயர்நீதிமன்றம் மாவட்ட கண்காணிப் பாளருக்குத்தான் உத்தரவு அளித்தது என்றும், மாவட் டக் கண்காணிப்பாளரின் எழுத்துப்பூர்வ ஆணை இல்லாமல் துணைக் கண்காணிப்பாளர் விசாரணை செய்ததை ஏற்க முடியாது என்றும் கூறி, வன்கொடு மைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் செய்த விசாரணையை முற்றிலுமாக நிராகரித்தது கரூர் அமர்வு நீதிமன்றம்.

இவ்வாறாக எந்தெந்த வழிகளிலெல்லாம் வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முடக்க முடியுமோ அந்த வழிகளில் எல்லாம் முழு அரசு ஒத்துழைப்புடன் சாதி வெறியுணர்வு உடையவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

Load More Related Articles
Load More By sridhar
Load More In சமூக வன்கொடுமைகள்

Leave a Reply

Your email address will not be published.