கயர்லாஞ்சி

0
2,650

அரிதினும் அரிதாகக் கருதப்பட்ட கயர்லாஞ்சிப் படுகொலை வழக்கில், பந்தாரா மாவட்ட நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பு, உண்மையில் வரலாற்றுச் சிறப்புடையதுதானா? நாடு முழுவதிலும் உள்ள விசாரணை நீதிமன்றங்கள் பிற தலித் வன்கொடுமை வழக்குகளில் அளித்துவரும் தீர்ப்புகளிலிருந்து கயர்லாஞ்சிப் படுகொலை வழக்குத் தீர்ப்பு மாறு பட்டதுதானா? இந்தியா முழுவதிலும் நீக்கமற நிறைந்த கிடக்கும் சாதிவெறியர்களுக்கு அதிர்ச்சி யளிக்கக் கூடியதுதானா? நீண்ட நெடுங்காலமாக தாங்கள் சந்தித்து வரும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான நீதியைப் பெற்றுத்தரும் வலிமை இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு உண்டு என்ற நம்பிக் கையை தாழ்த்தப்பட்ட மக்களிடையே உருவாக்கும் திறன் கொண்டதுதானா அந்தத் தீர்ப்பு? கயர்லாஞ்சி யில் நடந்த படுகொலை சாதியக் கண்ணோட்டத்து டன் நடத்தப்பட்ட பெருங்குற்றம் என்பதால்தான் பந்தாரா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி மரண தண்டனை அளித்தாரா? இனிமேல் சாதிப் பின்புலத்துடன் நடைபெறும் படுகொலைகளுக்கு இத்தகையத் தீர்ப்பை நாம் பிற நீதிபதிகளிடமும் எதிர்பார்க்கும் வாதத்துடன்தான் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளதா? போன்ற கேள்விகள் எழும்புகின்றன.

 

உண்மையில், தாழ்த்தப்பட்ட மக்கள், தனித்தனி யாகவோ, கும்பலாகவோ, தாக்கப்படும்போது, இழிவுக்குள்ளாக்கப்படும்போது, வாய்ப்புகள் மறுக்கப்படும்போது, குற்றமிழைப்பவரின் உள்உணர் விலும், சமூகப்பின்புலத்திலும் சாதி அதிகாரமே தீவிர வினையாற்றுகிறது என்பதை ஏற்றுக்கொள்ள, இந்திய நீதித்துறையினரும், காவல்துறையினரும் பிடிவாத மாக மறுத்துவருகிறார்கள். கயர்லாஞ்சிப் படுகொலை வழக்கில் வழங்கப்பட்டுள்ள மரணதண்டனைத் தீர்ப்பிலும் அதுதான் வெளிப்பட்டுள்ளது. அதைப் புரிந்துகொள்ள கயர்லாஞ்சிப் படுகொலையின் பின்னணியைப் அறிந்து கொள்வது நமக்குப் பலனளிக்கும்.

 

பய்யலால் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த விவசாயி கயர்லாஞ்சியில் கொஞ்சம் நிலபுலன்களுடன் இருப்பதைக் கண்டு புழுங்கிய கயர்லாஞ்சி கிராமத்தின் இடைநிலைச் சாதி சமூக ஊர்த்தலைவர், பய்யலாலின் நிலங்களை அபகரிக்க முயற்சித்துள் ளார். அதை எதிர்த்துப் போராடிய பய்யலாலுவுக்கும் அவரது துணைவியார் சுரேகாவுக்கும் அருகில் உள்ள கிராமத்தைச் சார்ந்த சித்தார்த் உதவியுள்ளார். அதனால், ஆத்திரமுற்ற கயர்லாஞ்சி ஊர்த்தலைவர் தனது அடியாட்களுடன் சென்று சித்தார்த்தை கடுமையாகத் தாக்கியுள்ளார். அத்தாக்குதல் குறித்து பய்யலாலும் அவரது துணைவியாரும் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். காவல்துறையினர், கயர்லாஞ்சி கிராமத்தின் சாதி இந்து ஊர்த்தலைவரையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

சிறிது நாட்களுக்குப் பின்னர் பிணையில் வெளிவந்த ஊர்த்தலைவர், அவரது கூட்டாளிகளுடனும் கயர்லாஞ்சி கிராம சாதி இந்துக்களுடனும் திரண்டு சென்று, பய்யலாலின் துணைவியார் சுரேகாவையும், அவரது மகள் பிரியங்காவையும் இழுத்து வந்து ஊர்  பொது இடத்தில் ஆடைகளைக் கழற்றி நிர்வாண மாக்கி அடித்து, வதைத்து, பாலியல் வல்லுறவு செய்து பின்னர் படுகொலை செய்தனர். பய்யலாலின் பார்வையற்ற 21 வயது மகன் சுதிரையும் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மூத்த மகன் ரோஷனையும் அடித்து வதைத்து மயக்கமடையச் செய்தனர். மயக்க நிலையில் இருந்த இரண்டு இளைஞர்களையும், பலமுறை மேலே தூக்கியெறிந்து கீழே தரையில் விழச்செய்து படுகொலை செய்தனர். ஆடைகளின்றி பிணமாகக் கிடந்த சுரேகாவையும் பிரியங்காவையும் கட்டை மாட்டு வண்டியில் ஏற்றி ஊருக்கு வெளியே ஓடிய கால்வாயில் வீசிவிட்டுத் திரும்பிய பின்னர் தான் சாதி இந்துக் கும்பலின் சாதிவெறி தணிந்திருக் கிறது. படுகொலை நடந்தபோதும், பாலியல் வல்லுறவு நடந்தபோதும் கயர்லாஞ்சி கிராமத்தில் உள்ள சாதி இந்து சமூகப் பெண்களும் முதியவர்களும் கூட தாக்குதலில் ஈடுபட்டனர்.

 

பய்யலால் கொடுத்த புகாரின் பேரில் மூன்று நாட்களுக்குப் பிறகு 35 பேரைக் கைது செய்தது காவல்துறை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் – 1989-ன் கீழ் வழக்கைப் பதிய மறுத்ததும் காவல் துறையினர் சாட்சியங்களையும் அழிக்கத் தொடங்கி யதும், மகாராஷ்டிரா மாநில தாழ்த்தப்பட்ட மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாகபுரியிலும் மேலும் பல நகரங்களிலும் பெரும் கலவரம் மூண்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் வீதியில் திரண்டு போராடினர். வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றும்படி கோரிக்கை வைத்தனர். மக்களின் எழுச்சிமிக்க போராட்டத்தைக் கண்டு,அப்போது ஆட்சியலிருந்த விலாஸ்ராவ் தேஷ்முக், மத்தியக் குற்றப்புலனாய்வுத் துறைக்கு, கயர்லாஞ்சிப் படுகொலை வழக்கை விசாரிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுத்துறை ஏற்றுக்கொண்டது. கைது செய்யப்பட்டிருந்த 35 குற்றவாளிகளில், 24 பேரை வழக்கிலிருந்து அதிரடியாக விடுவித்தது மத்திய குற்றப் புலனாய்வுத்துறை. மிகப்பலவீனமான முறையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து 11 பேரை குற்றவாளிகளாகச் சேர்த்தது.

 

அவற்றையெல்லாம் விட, பய்யலாலின் துணைவி யாரும் இளவயது மகளும் பாலியல் வல்லுறவு செய்யப்படவில்லை என்று புலனாய்வுத்துறை விசாரணை அதிகாரி தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்தார். முன்னதாக வழக்கை விசாரித்த, மாநில குற்றப்புலனாய்வு விசாரணை அதிகாரி பாலியல் வல்லுறவு- நடந்திருப்பதாக மாநில அரசுக்கு அறிக்கை அளித்திருந்தார். ஆனாலும் மத்திய புலனாய்வு நிறுவன விசாரணை அதிகாரி அதை மறுத்து குற்ற அறிக்கையை சமர்பித்தார். பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து இரண்டாண்டுகள் நடை பெற்ற வழக்கு விசாரணையில் இறுதியில், குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் ஆறு பேர்களுக்கு மரண தண்டனையும், இருவருக்கு ஆயுள் சிறைத் தண் டனையும், அளித்துத் தீர்ப்பளித்து சிறப்பு நீதிமன்றம் மூவரை வழக்கிலிருந்து விடுதலை செய்தது.

 

தீர்ப்பில் மிக கவனமாக பார்க்க வேண்டியது எதுவெனில், படுகொலை செய்யப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தும், நாட்டின் மிக உயர்ந்த புலன்விசாரணை அமைப்பு வழக்கை விசாரித்தும்கூட, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி கூறியிருப்பதுதான். இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ்தான் தண்டனைகளை வழங்கியுள்ளார் நீதிபதி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் நீருபிக்கப்படாததால்தான் மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என நீதிபதி கூறியுள்ளார்.

 

மேலும், பய்யலாலின் குடும்பமே படுகொலை செய்யட்டதற்குக்  காரணம், சாதி இந்துக்களின் பழிவாங்கும் நோக்கம்தான் என்றும், நிலபுலன் களோடு தற்சார்பாக தன்மானத்துடன் வாழ்ந்த பய்யலாலின் மீது கொண்ட சாதிவெறியுணர்வு அல்ல என்றும் நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார். கொலை யாளிகளின் சாதிப் ஆதிக்கப் பின்புலம் தீர்ப்பெழுதும் போதும், ஏன் விசாரணையின் போதும் கூட கவனத் தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதனடிப்படை யில் பார்த்தால், கயர்லாஞ்சிப் படுகொலை வழக்கு ஒரு சாதாரண கொலை வழக்காகவே கையாளப் பட்டிருப்பது புரியும். பாதிக்கப்பட்டவரின் சமூகப் புலமும், குற்றவாளிகளின் சாதி ஆதிக்கமும்தான் குற்றம் நடப்பதற்கான அடிப்படைக் காரணிகள் என்பதை நீதிபதி ஏற்க மறுத்ததினால்தான், சாதி உணர்வோடு கயர்லாஞ்சி கிராமவாசிகள் கொலை செய்யவில்லை என்று நீதிபதியால் தீர்ப்பெழுத முடிகிறது. மேலும், நீதிபதி குற்றம் நடப்பதற்கான சமூகக் காரணிகளைக் கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பாரானால், வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்தான் தீர்ப் பெழுதி இருப்பார். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீர்ப்பளிக்கப்பட்டிருக்குமேயானால், நிச்சயம் கயர்லாஞ்சித் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக இருந்திருக்கும்.

 

பந்தாரா மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி வழங்கியிருக்கும் தீர்ப்பு இறுதியானதல்ல என்றும், வழங்கப்பட்டுள்ள தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்த பின்னரே தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேல்முறையீட்டின்போது, உயர்நீதிமன்றத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். குற்றம் சாட்டப் பட்ட அனைவரும் விடுதலையானாலும் வியப்பதற் கில்லை. தண்டனை உறுதிசெய்யப்பட்டா லும் கூட, உச்சநீதிமன்ற மேல்முறையீடு, கருணை மனுக்கள் போன்றவைகளும் இருக்கின்றன. மரண தண்டனை, ஆயுட்காலச் சிறைத்தண்டனையாகக் குறைக்கப்பட அதிகபட்ச வாய்ப்பிருக்கிறது. இச்சூழலில், கயர் லாஞ்சிப் படுகொலைத் தீர்ப்பு, சமூகத்தின் தீண் டாமைக் கண்ணோட்டத்திற்கு எதிராக தீவிரமான விளைவுகள் எதையும் உருவாக்கப் போவதில்லை.

Load More Related Articles
Load More By sridhar
Load More In சமூக வன்கொடுமைகள்

Leave a Reply

Your email address will not be published.