Home கலை இலக்கியம் மாற்றுப்பாதை மாற்றுப்பாதை – யாழினி முனுசாமி

மாற்றுப்பாதை – யாழினி முனுசாமி

0
0

பூந்தோட்டம் வளர்த்த என்னை

பெருங்காட்டில் தள்ளிப் போகிறீர்கள்

ஞானம் பெற்றுத் திரும்புவேன்

அப்பெருங்காட்டிலிருந்து

பவுத்தக் கூறின் தொன்மையுடன் மிளிரும் இந்தக்கவிதை, வாசகனுக்குப் பல சாளரங்களைத் திறக்கிறது. எளிமையான சொற்களாலான, பல்வேறு பரிமாணங்களைத் தரக் கூடிய இக்கவிதையை எழுதியவர் யாழினி முனுசாமி. வாழ்வின் அடர்ந்த இருளிலிருந்து வெளியேறி, வெளிச்சங்களை விழிகள் சுவைக்கும் ஒரு தலித் வாழ்வின் மனவெளியை அப்படியே பதிவு செய்வது, யாழினி முனுசாமியின் கைவண்ணம். அவருடைய முதல் தொகுப்பு “உதிரும் இலை.’ கவிஞர், கட்டுரையாளர், கலை இலக்கிய விமர்சகர், பதிப்பாளர் என்ற அடையாளங்களுடன் தமிழ்த்துறை பேராசிரியராகவும் பணிபுரியும் இவர், “முரண்களரி’ என்ற இலக்கிய அமைப்பை நடத்தி வருகிறார்.

கிராமத்து வாழ்விலிருந்து புலம் பெயர்ந்து, நகர வாழ்க்கைக்கு வரும் மக்களுக்கு எத்தனையோ இடர்ப்பாடுகள் இருக்கின்றன. கிராமத்திலிருந்ததைப் போன்ற அகன்ற வாசல்களோ, இயற்கை தரும் தூய்மையான காற்றோ நகரத்தில் இல்லை. ஆனால் மிக முக்கியமான பயன் ஒன்று இருக்கிறது. அதைத் தன் கவிதையில் மிக லாவகமாகப் பதிவாக்குவார் யாழினி முனுசாமி. நகரத்தின் மீது பிறர் சுமத்தும் குற்றச்சாட்டுகளையெல்லாம் அடுக்கிக் கொண்டே வந்து, கடைசியில் “ஊருக்கு வெளியே/எங்களை ஒதுக்கி வைத்திருக்கும்/உங்கள் கிராமங்களைவிட/அன்பானதாய் இருக்கிறது இந்நகரம்” என்று முடிப்பார்.

செய்யாறு வட்டம் மோரணம் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் யாழினி முனுசாமி. நாடகத்திற்குப் பெயர் பெற்ற ஊர் செய்யாறு. அங்கு நடந்த நாடகங்கள், கலைத்தன்மை மிளிரும் பொய்க்கால் குதிரை போன்ற நடனங்கள் திருவிழாக்காலங்களில் காணக் கிடைக்கும் இன்னபிற கலைவடிவங்களை இளம் வயதிலேயே மனதில் பதிய வைத்ததும், சிறு வயதில் அவருடைய பாட்டி சொன்ன கதைகள் அவருள் ஆழப்பதிந்ததும் கலைமேல் தனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது என்று சொல்கிறார்.

தொண்ணூறுகளில் சென்னையில் முதுகலை படிக்க வந்தவர், நிறைய இலக்கியக் கூட்டங்களில் பார்வையாளராகப் பங்கேற்று வந்திருக்கிறார். சிற்றிதழ்களை வாசித்திருக்கிறார். அப்போது வெளிவந்த “பழையன கழிதலும்’ என்ற சிவகாமியின் நாவல், அவரை நவீன இலக்கியத்தின் பக்கமும் தலித் இலக்கியத்தின் பக்கமும் திருப்பியிருக்கிறது. மார்க்சியவாதிகளுடனான நட்பும் வாசிப்பும் அவரை மார்க்சியத்தில் பற்றுடையவராக மாற்றி விட்டது.

“கொள்கையில் நேர்மையாக இருக்கின்ற சிலரைத் தவிர, மேம்போக்காக மார்க்சியம் பேசுபவர்கள் சாதியவாதிகளாகவே இருக்கிறார்கள். தலித் தோழர், வன்னிய தோழர் என்று பிரித்துப் பேசுவார்கள். நாம் மார்க்சியவாதிகளாக இருந்தாலும் நம்மை அவர்கள் மார்க்சியவாதிகளாகப் பார்ப்பதில்லை. எப்படியாவது நம் சாதியை கண்டுபிடித்து விடுவார்கள். மதம் மாறினால் சாதி ஒழிந்துவிடும் என்று நம்பிப் போனால், அங்கே சாதி கிறித்துவத்தை விழுங்கி ஏப்பம் விட்டு தலித் கிறித்துவர், நாடார் கிறித்துவர் என்று பிரிக்கிறது.  இருப்பினும் மார்க்சிய கொள்கையில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு” என்கிறார் யாழினி முனுசாமி.

தலித்துகளிலும் இடஒதுக்கீட்டின் மூலம் படித்துவிட்டு இடஒதுக்கீட்டின் வேலையையும் பெற்றுக் கொண்டு, இறுதியில் தன் மக்களையும் அவர்களின் வாழ்வியல் துன்பங்களையும் அப்படியே விட்டுவிட்டு, மூன்றாந்தரப் பார்ப்பனர்களாக மாறிவிடுகின்ற படித்த தலித்துகளை கவிதைக்கான செறிவோடும் அளவோடும் விமர்சிக்கிறார் யாழினி முனுசாமி.

“ஒல்லியாய் இருந்தவன்/தொப்பைப் போட்டிருந்தான்/திருமணத்திற்குப் பிறகு/குடும்பத்துடன் ஒட்டுறவு குறைந்துவிட்டதாம்/நண்பர்களுடன் வைராக்கியமாம்/உயர்ந்து காட்டணுமாம்/தங்கியிருக்கும் வீட்டிற்கழைத்தவன்/அங்கவந்து சாதி பத்திப் பேசக்கூடாது என்றான்/குடும்பம் நண்பர்கள்/நலம் விசாரிப்பு முடிந்து/உபசரிக்கும்போது/காதுபடக் கிசுகிசுத்தான்/”அதைத்’ தலமுழுகி/ரொம்ப நாளாச்சி/இப்பல்லாம் ஒன்லி மட்டன் சிக்கன்தான்.”

கவிதையின் பகடியும் அதன் மூலம் பதிவாகும் சமூக எதார்த்தமும் குறிப்பிடத்தக்கவை. ஆக்கங்களைத் தருபவராக மட்டுமின்றி, தன்னை ஒரு சிறந்த விமர்சகராகவும் தகவமைத்துக் கொண்டிருப்பது, யாழினி முனுசாமியின் அடையாளம். விமர்சனம் என்பது தனி அளவுகோலுடன் இயங்கக்கூடியது. அதற்கு சாதியும் ஒரு முக்கியமான அளவுகோல். ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டதும் சுஜாதாவுக்கு அனுப்பிவிட்டுதான் மறுவேலை பார்த்த கவிஞர்கள் நிறைய பேருண்டு. அவர் வாயால் அல்லது கையால் கவிதைகளை விமர்சித்துவிட மாட்டாரா என ஏங்கியவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள். அவர்களெல்லாம் இப்போது யாருக்கு அனுப்புவார்களோ தெரியவில்லை!

தீவிர இலக்கியத் தளத்தில் இயங்குபவர்களுக்கு வெங்கட் சாமிநாதன் சொல்லே “சொர்க்கம்’. நவீன கவிஞர்களுக்கு ஞானக் கூத்தன்தான் ஒட்டக்கூத்தன். இப்படி இவர்கள் பரப்பிய விமர்சன வெளியில் தனக்கென்று ஓரி டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் யாழினி முனுசாமி. இவருடைய “தலித் இலக்கியமும் அரசியலும்’ என்னும் விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு, தலித் இலக்கியத்தில் முக்கியப் பங்காற்றக் கூடியது. பதினாறு கட்டுரைகள் கொண்ட அந்த நூல், தலித் எழுத்தாளர்களின் அனைத்து வகைமைகள் குறித்தும் பேசுகிறது.

முன்னணி தலித் எழுத்தாளர்கள் என்று அறியப்பட்ட அனைவரது எழுத்துகளையும் அவர் சரியான விமர்சனப் பார்வை கொண்டு எழுதியிருப்பதாகவே வாசிப்பாளனுக்குத் தோன்றும். தலித் இலக்கியம் உருவாகும் தருணம், அதன் வேர் பிடிப்பு, அது பரப்பும் இலக்கிய ஆளுமை, தமிழ் இலக்கியத்தில் அதன் தேவை, தலித் இலக்கியம் நடத்தும் அரசியல் இவை அனைத்தும் அதில் அலசப்படுகின்றன.

யாழினி முனுசாமியின் இன்னொரு முகம் அவர் ஓர் ஆவணப்படக்காரர். அவருடைய “தொழுப்பேடு’ ஆவணப்படத்தில், செய்யாறு வட்டத்திலுள்ள தொழுப்பேடு என்ற ஊரில் நடைபெற்ற சாதிய வன்கொடுமையினை ஆவணமாக்கியுள்ளார். 140 தலித் குடும்பங்களும் 500 சாதி இந்து குடும்பங்களும் அருகருகே வாழ்ந்திருக்கும் இடம்தான் தொழுப்பேடு. தலித்துகள் வாழ்கின்ற பகுதிக்கு வரும் மின்சாரத்தைத் துண்டித்து, இருட்டில் சாதி இந்துக்கள் புகுந்து தலித்துகளை தாக்குவார்களாம். இந்த நிகழ்ச்சி அடிக்கடி அங்கு நடக்கும். ஒவ்வொரு முறையும் திடீரென்று தாக்குதல் நடத்தப்படுவதால், என்ன செய்வதென்றே தெரியாமல் தலித்துகள் அடி வாங்குவார்களாம்!

பிறகு வேறு வழியே இல்லாமல் தாங்கள் வாழ்ந்திருந்த குடியிருப்புப் பகுதியில் தங்கள் வீடுகளையெல்லாம் விட்டுவிட்டு, கொஞ்சம் தொலைவிலிருந்த ஏரியில் சென்று குடியேறிவிட்டனர். முன்பிருந்த வீடுகள் எல்லாம் குட்டிச் சுவர்களாக நிற்கின்றன. அதை அப்படியே படம் பிடித்து ஆவணப்படுத்தியிருக்கிறார் யாழினி முனுசாமி. இது மிக முக்கியமான பதிவாக இருப்பினும், பரவலாக கண்டு கொள்ளப்படவில்லை.

வலிகளிலிருந்து வரும் கவிதைகள் தன்னைப் பெரிதும் ஈர்ப்பதாகச் சொல்லும் முனுசாமி ஈழக் கவிதைகளை, பெண்ணியக் கவிதைகளை, போர்ச்சூழலிலிருந்து வரும் கவிதைகளைப் பெரிதும் விரும்பி வாசிக்கிறார். அந்தக் கவிதைகள் குறித்த விமர்சனங் களும் தொகுப்பும் நூலாக வெளிவந்திருக்கிறது. “பின்நவீனத்துவச் சூழலில் புலம் பெயர்ந்தோர் கவிதைகளும் பெண்ணியக் கவிதைகளும்’ என்றநூல், அவருடைய சிறந்த விமர் சனங்கள் அடங்கிய தொகுப்பாகும்.

இலக்கியத்தில் பன்முகத்தன்மையுடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் இவர், “முரண்களரி’ என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு தன் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும் என்னும் பேரவா அவர் உள்ளத்தில் நீறு பூத்த நெருப்பாக இருப்பதே அவரை இத்தகைய ஆளுமை கொண்டவராக மாற்றியிருக்கிறது.

தலித் இலக்கியம் தேங்கி விட்டது என்று சொல்பவர்கள் அதன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் பேசுகிறார்கள் என்று சினந்தெழும் அவர், தலித் தளத்தில் எழுத வரும் புதியவர்களை மிகச் சரியாக அடையாளப்படுத்த வேண்டும் என்றும், அவர்களின் எழுத்துகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.

இன்னும் நிறைய தலித் சிற்றிதழ்கள் தொடங்கப்பட்டு நடத்தப்பட வேண்டும். தலித் இயக்கங்கள் தங்கள் தொண்டர்களை வெறும் தொண்டர்களாகவே வைத்திருக்கின்றன. அவர்களை வாசிப்பாளர்களாகவும் மாற்ற வேண்டும். நம்மைப் பற்றியும் இலக்கியங்கள் எழுதப்பட்டிருக்கின்றன என்பதை தலித் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது தெரியாமலேயே இருக்கும் “படித்த’ தலித்துகள் அதிகம். இவ்வாறு செய்வதால் தலித் இலக்கியம் தலித்துகளிடையே மேலும் பரவலாக்கப்படும். தலித் அரசியலும் கோட்பாட்டளவில் இன்னும் கெட்டிப்படும் என்று உறுதியாகக் கூறும் யாழினி முனுசாமி, தலித் இலக்கிய உலகின் முக்கியப் புள்ளி.

-யாழன் ஆதி

யாழினிமுனுசாமியை தொடர்பு கொள்ள : 98413 74809

Load More Related Articles
Load More By யாழன் ஆதி
Load More In மாற்றுப்பாதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

மாற்றுப்பாதை – கரன்கார்க்கி

நான் புலி; என்னோட நகத்தையும் பல்லையும் புடுங்கிட்டு என்னை பூனையாக்கிட முடியுமா உங்களால்? ப…