மேலவளவு

0
0

இனப் படுகொலைக்கு இணையான மதுரை – மேலவளவுப் படுகொலை நாட்டையே உலுக்கிய நிகழ் வாகும். சமூக நடைமுறைகளைச் சாதாரணமாகக் கவனித்து வரும் எவரும், மேலவளவுப் படுகொலை யின் பின்னணியைப் புரிந்து கொண்டிருப்பர். நீண்ட காலமாகத் தாங்கள் அனுபவித்து வந்த மேலவளவுப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், சாதி வெறியுணர்வடைந்த மேலவளவு கள்ளர்கள்,  30.6.1997 அன்று பஞ்சாயத்துத் தலைவர் முருகேசன் உட்பட ஆறு தலித்துகளை சென்னகரம்பட்டிப் படுகொலை ‘பாணி’யிலேயே பயணம் செய்த பேருந்தை வழிமறித்து, வெட்டிப் படுகொலை செய்தனர். முருகேசனை பேருந்திற் குள்ளேயே வைத்து தலை வேறு உடல் வேறாக வெட்டிப் படுகொலை செய்தனர். தலையை எடுத்துக் கொண்டு போய் படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து இரண்டு  ‘பர்லாங்’ தொலைவிலிருந்த கிணற்றில் வீசினார்கள். கள்ளர் சாதி படுகொலை யாளர்கள். நாட்டில் உள்ள அனைத்து சமூக நலச் சிந்தனையாளர்கள் பேரதிர்ச்சியில் உறைந்தனர். மேலவளவு கிராமத்தில் வசித்த வந்த அத்தனை தலித் மக்கள் கொலை பீதியில் ஊரைவிட்டே வெளியேறினர்.

பத்தாண்டு கழித்து எண்ணிப் பார்த்தாலும் பெரும் அதிர்ச்சியையும் கொதிப்பையும் உருவாக்கும் மேலவளவு படுகொலை வழக்கை தமிழக ஆட்சியாளர்களும் காவல்துறை அதிகாரிகளும் நீதிபதிகளும் கையாண்ட விதத்தை அறிந்தவர்கள் வேதனையில் துடித்திருப்பார்கள் என்று சொல்ல வேண்டும். படுகொலையைவிட வழக்கு கையாளப்பட்ட விதம் பெரும் கொடுமையானது. கொந்தளிப்பை உருவாக்கக் கூடியது. ‘இரட்டை இலை’ ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி அப்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது. கள்ளர் சாதியினரின் கைப்பிடியில் இருக்கும் கட்சி அது என்பதால் அரசு அதிகாரிகளும் காவல் துறையினரும் நீதிபதிகளும் கொலையாளிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே செயல்பட்டனர்.

41 கள்ளர் சாதி இந்துக்கள் மீது குற்றப் பதிவு செய்யப்பட்டது. அதற்கு முன்னதாகவே வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய நிபந்தனையற்ற பிணையில் வெளிவந்து சுதந்திரமாக சுற்றித் திரிந்தனர். பலர் மேலவளவு கிராமத்திலேயே தங்கினர். பிணையை ரத்து செய்ய வழக்கறிஞர் ரத்தினம் தலைமையில் 75 வழக்கறிஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து முறையிட்டும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் முடிவில் பிடிவாதமாக இருந்தனர். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் வழக்கறிஞர்கள். உயர்நீதி மன்ற நீதிபதிகளின் முடிவு தவறானது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் அடங்கிய ‘பெஞ்ச்’ தீர்ப்பளித்தது. ஆனாலும் பிணையை ரத்து செய்ய வில்லை. பிணையை ரத்து செய்யவே உச்சநீதிமன்றம்வரை செல்ல வேண்டிய நிலையை ஜெயலலிதா அரசு உருவாக்கியது.

இந்நிலையில் நேர்மையாக வழக்கு விசாரணை நடைபெறாது என்பதை அறிந்த வழக்கறிஞர்கள், வழக்கை சென்னை நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஆனால் நீதிபதிகள் வழக்கை சேலத்திற்கு மாற்றி உத்தரவிட்டனர். பல்வேறு கொலை மிரட்டல்களைச் சந்தித்த வழக்கறிஞர்களும் சாட்சிகளும், மன உறுதியோடு நின்றனர். வழக்கறிஞர் ரத்தினம் ஆவேசத்துடன் போராடினர். இறுதியில் 26.7.2001 அன்று 17 பேருக்கு ஆயுட்காலச் சிறை தண்டனையும், 23 பேரை விடுதலை செய்தும், சேலம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலவளவுப் படுகொலை வழக்கிலும் கூட, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பிரிவுகள் நிரூபிக்கப்படவில்லை என நீதிபதி தீர்ப்பளித்தார். ஆயுள் தண்டனை பெற்ற 17 பேருக்கு சென்னை உயர்நீதி மன்றம் பிணை வழங்கியது. தாழ்த்தப்பட்ட மக்களை மிக பயங்கரமான முறையில் படுகொலை செய்த கள்ளர் சாதி வெறியர்களுக்கு  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நெறிகெட்ட முறையில் பிணை வழங்கியபோது, தமிழக அரசு வழக்கறிஞர் தீவிர எதிர்ப்பை வெளிப்படுத்த வில்லை. பின்னர், ரத்தினம் தலைமையிலான சமூக நீதி வழக்கறிஞர்கள்,  பிணையை ரத்து செய்ய உச்சநீதி மன்றத்தில் முறையிட்டனர். கடுமையான கொலைமிரட்டல்கள் வந்த போதும் மனம் தளராமல் வழக்கை நடத்தினர். உச்சநீதி மன்றம் பிணையை ரத்து செய்து 17 ஆயுட் சிறை குற்றவாளிகளை சிறையிலடைக்க உத்தரவிட்டது.

தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெறுவதனாலேயே மாறி மாறி ஆட்சிக்கு வரும் ஜெயலலிதாவும், கருணாநிதியும், சேலம் விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்த 23 பேர்களைத் தண்டிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை.  தண்டிக்கப்பட்ட 17 குற்றவாளிகள் தங்களை விடுதலை செய்யும்படி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், தண்டனையை உறுதி செய்து கடந்த 19.4.2006 அன்று தீர்ப்பளித்தது. விடுதலை செய்யப்பட்ட 23 பேர்கள் மீதும் குற்ற ஆதாரங்கள் இருந்தாலும் தமிழக அரசு மேல் முறையீடு செய்யாததால் நாங்கள் எதுவும் செய்ய இயலாது என்று கூறி கை கழுவினர் நீதிபதிகள். மேலவளவு மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது. வழக்கை ஒன்றுமில்லாமல் செய்து குற்றவாளிகளைத் தப்பிக்க செய்ய அனைத்து முயற்சிகளையும் ஜெயலலிதா அரசு செய்தது.

நன்றி : முற்றுகை (இதழ் 2)

 

Load More Related Articles
Load More By sridhar
Load More In சமூக வன்கொடுமைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

சாகடிக்கும் சாதி… எப்போது கிடைக்கும் நீதி? – நந்தீஷ் – சுவாதி படுகொலை…

இவர்களுக்கு எங்கே வலிக்கிறது… இல்லை, எங்கே நோகிறது என்று புரியவில்லை. இன்னும் எத்தனை…