Home கலை இலக்கியம் நோயுற்ற இந்தியாவை அம்பலப்படுத்தும் ‘பன்றி’

நோயுற்ற இந்தியாவை அம்பலப்படுத்தும் ‘பன்றி’

0
0

ஒரு படைப்பாளியின் மெல்லிய உணர்வுகள் சுற்றிலும் நடைபெறும் அநீதிகளின் வன்முறையால் எல்லா திசைகளிலிருந்தும் தாக்கப்படுகின்றன. நியாயமற்ற சமூகத்தினால் குத்திக் கிழிக்கப்பட்ட அந்த “ஆன்மா’ தன் வலியை இந்த உலகத்திற்கு உணர்த்த படைப்பை நாடுகிறது.

தான் அடைந்த வன்மத்தின் வேதனையை அடுத்தவருக்குக் கடத்திச் செல்லும் படைப்பை எல்லோராலும் உருவாக்கிவிட முடியாது. “தகுதி’யும், “திறமை’யும் மட்டுமே கொண்டு – வலியை உணர்ந்தே இராத பல படைப்பாளிகளால் – தலை சிலுப்பி ஆட்டமிடும் சமூகத்தின் ஒரு மயிர்க் காலைக்கூட அசைத்துப் பார்க்க இயலாது. பசியை உணர்ந்தறியாத எந்தக் கரங்களாலும் இங்கே தண்ணீரைத் திராட்சை ரசமாக்கும் அதிசயத்தை நிகழ்த்த முடியாது.

இந்த மண்ணிலிருந்து கடத்தப்படவேண்டிய கதைகள் ஏராளம் உண்டு. இதுவரை சொல்லப்படாத, சொன்னால் கூட உலகம் நம்ப மறுக்கும் கதைகள் உள்ளன. “பீ’ (shit) என்ற சொல் இன்றளவும் அனைத்து நாடுகளிலும் மக்கள் மன்றங்களில் உச்சரிக்கப்படக் கூடாத (unparliamentary) சொல்லாகத்தான் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் ஜாதியின் பெயரால் மலத்தைக் கையால் அள்ளுவதும் வாயில் திணிப்பதும் இங்கே நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகள். இது எத்தனை திரைப்படங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன? அதுவும் வண்ணப்படங்களின் வருகைக்குப்பின் – வன்புணரப்பட்ட தலித் பெண்ணின் ரத்தச் சிவப்பும் அறுக்கப்பட்ட கூந்தல் கறுப்பும் அள்ளப்படும் மலத்தின் நிறமும் – இன்னும் அப்பட்டமாகப் பதியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவுமே நடக்கவில்லை.

ஜாதியைப் பற்றிய உரையாடல் எந்தத் திரைப்படத்திலும் பதிவு செய்யப்படவேயில்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும் பெரும்பாலான படங்களில் அம்ஜத்கான், ஓம்பூரி,

நம்பியார் போன்றே ஜாதியும் ஒரு வில்லன் அவ்வளவே. கதையின் ஓட்டத்தை உந்திச் செலுத்தக் கூடிய ஒரு பாத்திரம். ஜாதியின் வேர்வரை போய்ச் செய்யப்படும் ஆய்வுகளாக இல்லாவிட்டாலும் பார்வையாளனை குற்ற உணர்ச்சிக்கு உட்படுத்தி, அவன் இதுவரை கட்டியமைத்திருக்கும் விழுமியங்களை கவிழ்த்துப் போட்டு, அதிர்ச்சிக்கு உள்ளாக்கக்கூடிய படைப்புகள் இங்கே எப்போதாவதுதான் வெளிவருகின்றன.

சத்யஜித்ரே பதிவு செய்தது விளைவுகளைத் (Effects) தானே ஒழிய காரணங்களை (causes) அல்ல. அவர் உலகத்திற்குக் காட்டியது உயிர்ப்பற்ற இந்தியாவின் வெளித்தோற்றத்தை (anatomical) மட்டுமே. ஆனால் வெளிப்படுத்தப்பட வேண்டியது, தன் ஒவ்வொரு உயிரணுவின் உட்கருவிலும் ஜாதியைத் தக்க வைத்துக் கொண்டு, அதைத் தலைமுறை தலைமுறையாகக் கடத்தும் நோயுற்ற (pathological) இந்தியாவை. அந்தப் பதிவையும், அதிர்ச்சியையும் தன்னகத்தே உள்ளடக்கிய ஒரு படைப்பாக வெளிவந்திருக்கிறது – “பன்றி’ (fandry).

இன்றைக்கும் ஜாதியையும் சனாதன இந்து தர்மத்தையும் உருக்குலையாமல் கட்டிக் காப்பதில் இந்தியா முழுமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்திருக்கும் “பன்றி’ எந்த ஓர் அடையாள அரசியலையும் வெளிப்படையாகப் பேசவில்லை. ஆனாலும் ஜாதிய அடுக்குமுறையின் விளைவுகள் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தலித்துகள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளை அப்பட்டமாகக் காட்சிப்படுத்துவதன் மூலமாகக் கூட படத்தில் ஜாதி அடையாளப்படுத்தப்படவில்லை. ஆனால் எளிமையான, நாம் எல்லோரும் கடந்து வந்திருக்கக்கூடிய, அன்றாடம் நம்மைக் கடந்து போகக் கூடிய – இயல்பான – அதே நேரத்தில் ஜாதியின் மூர்க்கமான தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய ஒரு விடலைப்பருவத்து ஈர்ப்பின் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது.

“காதல்’ என்ற சொல் கவனமாகத் தவிர்க்கப்பட்டே, “ஈர்ப்பு’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. காதலைப் பற்றி இதுவரை பார்த்த திரைப்படங்கள், நமக்குள் கட்டியமைத்திருக்கும் போலியான ஒரு சட்டகத்திற்குள் இந்தப் படத்தையும் நிறுத்திவிடும் ஆபத்து அதில் இருக்கிறது. “பன்றி’யைப் பற்றி எழுதப்பட்ட பெரும்பாலான கட்டுரைகளும் இணையதளத் திறனாய்வுகளும் அதை ஓர் “இளம் பருவத்து காதல் கதை’ யாகவும் அதற்கு ஜாதி தடையாக இருப்பதைச் சித்தரிப்பதாகவுமே சொல்லியிருக்கின்றன.

இது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு பார்வை. உண்மையில் “பன்றி’ காதலின் “மகோன்னதத்தையோ’, “புனிதத்தையோ’ விதந்து பேச வந்த ஒரு படைப்பு அல்ல. வெளிப்படையாகச் சொன்னால் இது “காதல்’ படமே அல்ல. சிறுவயது முதல் தன்னோடு படித்த சக மாணவரை, பதின்ம வயதில் உடலில் சுரக்கும் சில மாற்றங்கள், முதன் முறையாக எதிர்ப்பாலினராகப் பார்க்க வைக்கும் ஈர்ப்பே (Infatuation)  படத்தில் சொல்லப்படுகிறது. படத்தில் முக்கியப் பாத்திரமாக வரும் சிறுவனைத்தவிர அவனோடு படிக்கும் இன்னும் இரண்டு மூன்று சிறுவர்கள் கூட, அது போன்றதொரு உணர்வுக்கு ஆட்படுகிறார்கள். அந்த எளிமையான கபடமில்லாத உணர்வின் பின்புலத்திலேயே “ஒளிரும் இந்தியா’வின் இருண்ட ஜாதிய முகத்தை உலகத்திற்குக் காட்டுகிறது “பன்றி.’

ஆகுல்நேர் – மராட்டிய மாநிலத்தின் அகமது நகருக்கு அருகிலிருக்கும் சிற்×ர். இந்தியாவின் அனைத்து ஊர்களிலும் கிராமங்களிலும் நிலவும் “இரட்டைக்குணம்’ அந்த ஊருக்கும் உண்டு. நடுவில் ஊர்; ஊருக்கு வெளியே சேரி. ஒரு புறம் கைபேசி, முகநூல், அய்.பி.எல். கிரிக்கெட் என எல்லாம்…

ஆனால் பொதுக் கழிவறைகள் கிடையாது. தண்ணீர் வாளியைத் தூக்கிக் கொண்டு மறைவிடம் தேட வேண்டும். ஊர் மற்றும் சேரியையும் கடந்து, அவர்கள் மீது பட்ட காற்றுகூட தொட்டுவிட முடியாத தூரத்தில், சுற்றிலும் ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு மலையடிவாரத்தில் தனியாய் வாழ்கிறது அக்குடும்பம். அவர்கள் “கைக்காடி’கள் என்று அழைக்கப்படும் தீண்டத்தகாத மக்கள்.

ஆகுல் நேருக்குள் கைக்காடி மொழி பேசும் இனத்தின் ஒரே குடும்பம் அவர்களுடையது. குடும்பத்தின் தலைவர் நடுத்தர வயதுக்கு மீறிய தளர்ச்சியோடும் கடந்த காலத்தின் கசப்பையும் எதிர்காலத்தின் கேள்விக்குறியையும் ஒரு சேர தன்முகத்தில் தேக்கி வைத்திருக்கும் கச்ருமானே; உடன் அவரின் மனைவி, அவர்களோடே தங்கிவிட்ட திருமணமான மூத்தபெண், திருமணத்திற்கு காத்திருக்கும் இளைய பெண், ஏழாவது படிக்கும் “ஜப்யா’ என்று அழைக்கப்படும் மகன்.

கூடை பின்னுவது, கட்டட வேலை செய்வது, சுள்ளி பொறுக்குவது போன்ற உதிரி வேலைகள் செய்து பிழைத்தாலும் ஜாதி அவர்கள் மீது இறுக்கிப்பிணைத்த தொழில் – பன்றி பிடிப்பது. “பேன்ட்ரி’ என்றால் கைக்காடி மொழியில் பன்றி என்று பொருள். பன்றியை “தீட்டு’ என்ற குறியீட்டோடு பார்த்து – பள்ளியில் விளையாடும் போது குறுக்கே வந்த பன்றி உரசிவிட்டதால், அந்தத் தீட்டை வீட்டுக்குப் போய் கழித்து விட்டு வர அனுமதி வழங்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தீட்டுப்பட்ட பெண்ணை குளிக்க வைத்து, அவள் மீதும் அவளைத் தொட்டு வீட்டுக்கு அழைத்து வந்த தோழியின் மீதும் மாட்டு மூத்திரம் தெளித்து தீட்டுக்கழிக்கும் தாயும் உள்ள ஓர் ஊரில் – காட்டில் மலம் கழிக்க வருபவர்களைக் கடிக்கும், ஊருக்குள் புகுந்துவிடும், தண்ணீர் குட்டைக்குள் விழுந்து விடும் பன்றிகளைப் பிடிப்பதே அந்தக் கைக்காடிக் குடும்பத்தின் முக்கியப் பணி. பன்றிகளோடு இணைத்தே அவர்கள் பார்க்கப்படுகிறார்கள்.

சொல்லப்போனால், பன்றி வளர்ப்பது அவர்கள் தொழில் இல்லை. ஒரு பன்றி கூட அவர்களுச்குச் சொந்தமுமில்லை. ஆனாலும் படத்தின் ஒரு காட்சியில், ஊர்திருவிழாவுக்குள் புகுந்து விட்ட பன்றியைப் பற்றி கச்ருமானேவிடம் பேசும் ஊர் தலைவர், “உன்” பன்றிகள் ஊருக்குள் புகுந்துவிட்டன என்கிறார்.

shaul- 350மராட்டியத்தில் அம்பேத்கர், புலே போன்றவர்களால் ஏற்பட்ட சமூக விழிப்புணர்வாலும் அரசியல் உரிமைகளாலும் மகன் ஜப்யா பள்ளிக்கு (பள்ளியின் மற்றும் வகுப்பறையின் சுவர்களிலெல்லாம் அம்பேத்கர் படம் தவறாமல் இடம்பெற்றிருக்கிறது) அனுப்பப்பட்டாலும் சமூகம் அவனையும் அவன் குடும்பத்தையும் ஜாதியையும் “வைக்க வேண்டிய’ இடத்திலேயே வைத்திருக்கிறது.

அம்பேத்கர் படம் மாட்டப்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்தின் உள்ளே நடைபெறும் ஜாதி இந்துக்களின் கூட்டத்தில் அவர்களுக்கு தேநீர் கொடுத்துவிட்டு, அவர்களின் செருப்புக்குப் பாதுகாப்பாக வெளியே வந்து நின்று கொள்கிறார் ஜப்யாவின் அப்பா கச்ருமானே.

இரண்டு நாட்கள் பள்ளிக்குப் போகாததால், வீட்டுப்பாடம் என்னவென்று தெரிந்து கொள்ள ஜப்யா தன் பார்ப்பன வகுப்புத் தோழனை பார்க்கப் போகும்போது, “வேதாந்த்… உன்னைத் தேடி கைக்காடியின் மகன் வந்திருக்கிறான்…” என்று அவன் தாயால் ஜப்யா வாசலிலேயே நிறுத்தப்படுகிறான். தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்த பன்றிக் குட்டியை, பள்ளிக்குப் போய்க் கொண்டிருக்கும் ஜப்யாவைக் கூப்பிட்டு எடுக்கச் சொல்கிறான் ஒரு ஜாதி இந்து. ஜப்யா மறுக்கிறான்.

ஜாதி அவன் மீது அள்ளிப் பூசும் அத்தனை சேற்றையும் பலம்கொண்ட மட்டும் தன் நகத்தைக் கொண்டு கீறி எறிய எத்தனிக்கிறான் ஜப்யா. பள்ளிக்கு அருகில் சுள்ளி பொறுக்க வரும் தன் தாய் வகுப்பறைக்கு வந்து எட்டிப்பார்ப்பதைக் கண்டு கிண்டலாய்ச் சிரிக்கும் மாணவர்களை முறைக்கிறான். இனி அந்தப் பக்கம் வராதே என்று தன் தாயோடு கோபித்துக் கொள்கிறான். தன் கறுப்பு நிறத்தையும் ஜாதியையும் சேர்த்து அடையாளப்படுத்தப்படுவதை வெறுத்து, பவுடரை அள்ளி முகத்தில் அப்பி வெள்ளையாக்க முயல்கிறான்.

குடும்பத்தோடு தான் கூலி வேலை செய்து விட்டு வரும் வழியில் எதிர்ப்படும் நண்பர்களிடமிருந்து தன்னை ஒளித்துக் கொள்கிறான். உழைப்பே உயர்வு தரும் என்றும் எல்லோரும் சமம் என்றும் உபதேசிக்கும் சமூகம், பள்ளிக்குப் போகும் வயதில் தன்னை மட்டுமே ஏன் உழைக்கச் சொல்கிறது; ஜாதியைச் சொல்லி ஏன் தூக்கி எறிகிறது என்ற ஆவேசமும் கோபமும் அவனுடைய ஒவ்வொரு உடல்மொழியிலும் வெளிப்படுகிறது.

அந்த வயதுக்கே உரிய மாற்றம் ஜப்யாவிடமும் ஏற்படுகிறது. தன்னுடன் படிக்கும் ஜாதி இந்து பெண்ணான ஷாலுவின் மீது அவனுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. அதைக் காதலாக வரித்துக் கொள்கிறான். பிறப்பும் ஜாதியும் வறுமையும் தன் மீது சுமத்திய அசிங்கமான வெறுமையை அந்த இளம் பெண்ணின் அழகான முகம் கொண்டு நிரப்ப முயல்கிறான்.

வகுப்பறையில் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறான். அவளைக் கவரவும் அவளிடம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவும் எல்லா வகையிலும் முயல்கிறான். தன் வகுப்பில் அப்படி ஒரு பையன் இருப்பதாகவோ, தன்னை அவன் பார்த்துக் கொண்டிருப்பதாகவோ, தன்னை அவன் விரும்புகிறான் என்பதை நினைத்துப் பார்க்கவோ எந்த ஓர் அறிகுறியும் இல்லாத பெண்ணாக இருக்கிறாள் ஷாலு. ஒன்று, அவளுக்கும் அவனுக்கு உண்டான உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள் இன்னும் ஏற்படாமல் இருக்கலாம் அல்லது கைக்காடி ஒருவனது இருத்தலையே உணர்ந்து கொள்ளத் தேவையில்லாத உணர்வை அவளுடைய ஜாதி இந்து தன்மை அவளுக்கு வழங்கியிருக்கலாம்.

அந்த ஊரில் சைக்கிள் கடை வைத்திருக்கிறான் சங்கியா. பெரும்பாலும் நண்பர்களோடு உட்கார்ந்து கேரம் போர்டு ஆடிக்கொண்டிருப்பவன். ஊரைப் பொருத்தவரை குடிகாரன், உதவாக்கரை. புனேயிலிருந்து தான் காதலித்து திருமணம் செய்து அழைத்து வந்த அழகான மனைவியோடு வாழ்ந்து கொண்டிருந்தவன்.

ஒரு நாள் அவளுடைய ஜாதி இந்து அண்ணன்கள் சங்கியாவை நாயைப் போல அடித்து உதைத்து, அவன் மனைவியை தூக்கிக் கொண்டு போய்விடுகிறார்கள். அன்றிலிருந்து அவன் குடிக்கத் தொடங்கி, மந்திரம், மாந்திரீகம், பூசாரிகள் என்று ஏதாவது தன் மனைவியை தன்னோடு சேர்த்துவிடாதா என அவற்றின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறான். ஜப்யாவின் மீது அவனுக்கு தனிப்பிரியம். தன்னுடைய மறு பிரதியாக அவனைப் பார்ப்பதாலோ என்னவோ அவனுக்கு ஷாலுவைக் கவர மாந்தரீக யோசனைகளைச் சொல்கிறான் (அவன் கூறும் அந்த யோசனை தான் படத்தின் மிகக் கவித்துவமான பகுதி).

ஷாலுவுக்கு தன்னுடைய அழகான கையெழுத்தில் ஜப்யா கடிதம் ஒன்று எழுதுகிறான்: “உன் மீதான அன்பை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. உன்னைத் தவிர இந்த உலகில் எதன் மீதும் எனக்கு அக்கறை இல்லை” என்று இதை மேலோட்டமாகப் பார்க்கையில் ஒரு விடலைப் பையனின் முதிர்ச்சியற்ற வார்த்தைகள் போலத் தோன்றினாலும் பன்றிகளோடு வைத்துப் பேசப்படும் இனத்தில் பிறந்த ஒரு சிறுவனின், “வெள்ளைப் பெண்’ ஒருத்தியின் மீதான ஈர்ப்பு சமூக உளவியலாக கடிதத்தில் வெளிப்படுகிறது. என்னதான் காதலின் ஆர்வத்தில் “எல்லோரையும்’ போலக் கடிதம் எழுதிவிட்டாலும் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட ஆழ் மனமெங்கும் தேங்கிக் கிடக்கும் பயமும் ஏமாற்றமும் வேதனையும் வெளிப்பட கடிதத்தை முடிக்கிறான். “உனக்கு என்னைப் பிடிக்கவில்லையென்றால் கடிதத்தைத் தூக்கி எறிந்து விடு. நான் புரிந்து கொள்கிறேன். தயவு செய்து உன் பெற்றோர்களிடம் மட்டும் சொல்லிவிடாதே. வேறு யாருக்கும் தெரியப்படுத்தி என்னை கூனிக் குறுக வைத்து விடாதே…”

தன் மீது கட்டப்பட்ட ஜாதிய கட்டுகளை அவிழ்த்தெறிய எத்தனிக்கும் ஜப்யாவின் ஆவேசம், கல்வி தன்னை விடுதலை செய்யும் என்ற அவனது நம்பிக்கை, தன்னுடைய காதல், ஜாதி அடக்குமுறைகளுக்குள் சிக்கிவிடாது என்ற எதிர்பார்ப்பு என எல்லாவற்றையும் ஒரு நமட்டுச் சிரிப்போடு வேடிக்கை பார்க்கும் இந்தச் சமூகம், ஒரு தேர்ந்த அறுவைச் சிகிச்சை நிபுணரைப் போல, அடுக்கடுக்காக அவனது கனவுகளையும் ஆசைகளையும் நிதானமாக வெட்டி… ஒரு கட்டத்தில் வெடிச்சிரிப்போடு – ஒரே நொடியில் – கண்டந் துண்டமாக வெட்டித் தூக்கி எறிகிறது.

இரண்டு பாத்திரப் படைப்புகளை குறிப்பிட்டுச்சொல்ல வேண்டும். அவை படத்தில் வருவது ஓரிரு நிமிடங்கள்தான். ஆனால் அவை இயக்குநரால் மிக நுட்பமாக உருவாக்கப்பட்ட பாத்திரங்கள். ஜப்யா, பறவை ஒன்றைப் பிடிப்பதற்காக மரத்தின் உச்சிக் கொம்பில் அமர்ந்திருக்கிறான். அவனுடைய நண்பன் அடிக்கிளையில் நின்று கொண்டிருக்கிறான். அப்போது அந்த வழியே ஒரு வயதான கிழவி வருகிறாள். மரத்தை நிமிர்ந்து ஜப்யாவைப் பார்த்துக் கேட்கிறாள் :

“அங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க….?” “பறவை பிடிக்கப் போறேன்” கிழவி சொல்கிறார்: “பறவைங்கிறது பிராமண ஜாதிடா. நீ அதைத் தொட்டுட்டா பிறகு மத்த பறவைகளெல்லாம் அத தங்களோட சேர்த்துக்காது; கொத்தியே கொன்னுடும்…” “பஞ்சபட்சி’க் கதைகள் என்று காக்கை, நரி, முயல், ஆமையை வைத்து நீதிக்கதைகள் சொல்லப்படுவது எல்லாம் இங்கே ஜாதி இந்துக் குழந்தைகளுக்குத்தான். அதே போன்ற பஞ்சபட்சிக் கதை ஒரு கைக்காடிச் சிறுவனுக்கு அவனுக்கு “ஏற்றமாதிரி’ சொல்லப்படுகிறது. இந்தக்காட்சி இதோடு முடிக்கப்பட்டிருக்காது. அந்தக் கிழவி கீழே நின்று கொண்டிருக்கும் ஜப்யாவின் நண்பனான சிறுவனைப் பார்த்தும் சொல்வார்:

“உனக்கு வேறு தனியாகச் சொல்லவேண்டுமா.. போடா…”

படத்தின் தொடக்கத்திலிருந்தே ஜப்யாவோடு வந்து கொண்டிருக்கும் அந்தச் சிறுவனின் ஜாதி வேறு எந்த இடத்திலும் சொல்லப்பட்டிருக்காது “உனக்கு வேறு தனியா’ என்பதன் மூலம் அவன் யார் என்பதை இயக்குநர் புரிய வைக்கிறார்.

திருவிழாவிற்கு புதுச்சட்டை எடுப்பதற்காக ஜப்யாவைக் கூட்டிக்கொண்டு அவன் அப்பா கச்ருமானே துணிக்கடைக்குச் செல்லும் காட்சி ஒன்று வருகிறது. மிகச் சிறிய கடைக்குள் கடைக்காரன் உட்கார்ந்து நாலைந்து பெண்களுக்கு அக்கறையோடு சேலைகளைக்காட்டிக் கொண்டிருக்கிறான். கச்ருமானே மகனோடு கடை வாசலில் வந்து நிற்கிறார். எதுவும் பேசாமல், நிமிர்ந்து, கண்களாலேயே “என்ன வேணும்’ என்று கேட்கிறான் கடைக்காரன்.

விலை குறைந்த சட்டை வேண்டும் என்று கச்ருமானே கேட்க, ஒரு பார்வை பார்த்துக் கொண்டே இரண்டு சட்டையை எடுத்து நீட்டுகிறான். வேறு எந்த உரையாடலும் இல்லாவிட்டாலும் அந்தக் கடைக்காரனின் பார்வையும் அவனுடைய உடல்மொழியும் அவன் சொல்ல விரும்பியதைச் சொல்லிவிடுகிறது.

படத்தின் இறுதிக்காட்சியைப் பற்றி பேச வேண்டும். ஏறத்தாழ 20 நிமிட நிகழ்வு அது. இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் எல்லோராலும் விதந்து பேசப்பட்ட காட்சி. திரைமொழியைச் சரியான புரிதலோடு உள்வாங்கிக் கொண்ட இயக்குநர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசைச்சேர்ப்பாளர் ஆகியோரால் மட்டுமே அப்படிப்பட்ட நிகழ்வைச் செம்மையாகக் காட்சிப்படுத்த முடியும். இல்லையென்றால், தொழில்நுட்ப ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் அதை நினைத்தபடி வெளிக்கொணர்வது மிகவும் கடினம்.

இருபது நிமிடங்களும் ஒரே நிகழ்வைத் தான் சொல்கிறது என்றாலும் அதற்குள் துண்டு துண்டான பல காட்சிகள். கையில் காமிராவை பிடித்துக் கொண்டு எடுக்கப்பட்டக் காட்சிகள் மூலம் விக்ரம்குமார் அம்லாடியால் திறமையாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. சந்தன் அரோராவால் நேர்த்தியாக திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

பின்னணியில் இசைக்கருவிகளை மவுனமாக்கி, பன்றியின் உறுமல், மூச்சு இரைக்கும் சத்தம், மனிதக் கூச்சல் – இவை மட்டுமே அந்தக் காட்சிக்கான ஒலிகள்; தவிர கதாபாத்திரங்களின் உயிரோட்டமான அசைவுகளும் அந்தக் காட்சியை உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது.

இறுதிக்காட்சியில் பன்றி ஒன்று துரத்தப்படுகிறது. அது தப்பித்து ஓட ஓட துரத்துகிறார்கள். திடீரென்று அருகில் இருக்கும் பள்ளியில் தேசிய கீதம் ஒலிக்கப்படுகிறது. தேசிய கீதம் பாடினால் அசையக்கூடாதே! அட்டென்ஷனில் நின்றாக வேண்டுமே! வேறு வழியின்றி துரத்துவதை கைவிட்டு எல்லோரும் நிற்கிறார்கள். பன்றி மட்டும் எந்தக் கவலையோ “தேசபக்தியோ’ இன்றி சுதந்திரமாய் அங்குமிங்கும் ஓடுகிறது.

kashuman 350ஏற்றத் தாழ்வுகளையே அடித்தளமாகக் கொண்ட, நாற்றமடிக்கும் இந்தச் சமூகச் சாக்கடையிலேயே மூழ்கிக்கிடந்தாலும், அதை நறுமணம் என்று புகழ்ந்து பாட வேண்டிய – அர்த்தம் புரியாவிட்டாலும் பாட வேண்டிய நிலைமையை – உண்மையான தேசப் பற்றிற்கும் வெறித்தனமும் போலித்தனமும் மிக்க அதன் வெளிப்பாடுகளுக்கும் இடையிலான வேறுபாட்டை பன்றி அழகாக எள்ளி நகையாடி உணர்த்திவிடுகிறது.

அந்தப் பன்றியைத் தூக்கிக்கொண்டுபோகும்போது சுவற்றில் வரையப்பட்டிருக்கும் சில படங்கள் தென்படும் – டாக்டர் அம்பேத்கர், சாகு மகராஜ், சாவித்திரிபாய் புலே, காட்கே பாபா. ஆனால் படத்தோடு இணைத்துப்பார்க்கையில் அவை வெறும் படங்கள் அல்ல; அசையும் பாத்திரங்களாகவே தோன்றும்.

அழுத்தமான இந்த இருபது நிமிட இறுதிக்காட்சிக்கு முன்னால் வரும் இரண்டு நிமிட காட்சிகள்தான் மிக ஆழமானவை. மரத்தின் நிழலில் சாய்ந்து காதலியை நெஞ்சில் அணைத்திருப்பதாகக் கனவு காணும் ஜப்யா, ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் தாய், மறுநாள் நடக்கப் போகும் திருமணத்திற்காக இரவில் தன் கையில் வைத்த மருதாணி நன்றாகச் சிவந்திருப்பதாக கண்விழித்தவுடன் மகிழும் சகோதரி, கையில் எண்ணெய் பூசினால் இன்னும் நன்றாகச் சிவக்கும் என்று யோசனை சொல்லும் இன்னொரு சகோதரி – இப்படி அத்தனை பேரையும் பாதித் தூக்கத்தில் எழுப்பி அழைத்துக் கொண்டு விடியாத கருக்கலில், காலில் செருப்பில்லாமல், கையில் குச்சியும் கயிறுமாக – பன்றி பிடிப்பதற்காக கச்ருமானே நடந்து போகும் காட்சி உலுக்கிவிடக்கூடியது.

மூச்சுக்காற்றைப் போல கண்ணுக்குத்தெரியாமல் ஆனால் படத்தைச் சீராக இயங்க வைக்கும் மற்றொரு அங்கம் அலோக்கனந்தா தாஸ்குப்தாவின் பின்னணி இசை. படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை பின்னணி இசையில் தோலிசைக் கருவிகள் முற்றிலும் தவிர்க்கப்பட்டு, நரம்பு வாத்தியக் கருவிகளான ஆப்பிரிக்கப்பழங்குடியினரால் இசைக்கப்படும் ஊத் (OUD) மற்றும் செல்லோ, மாண்டலின் போன்றவை மட்டுமே ஒலிக்கின்றன.

அற்புதமான இசைத்துணுக்குகள். பல இடங்களில் மேற்கத்திய இசையின் “கவுன்ட்டர் பாயிண்ட்’ உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, லாரி ஏற்றி நசுங்கிப்போன தன் சைக்கிளை நினைத்து ஜப்யா அழும்போது, ஒற்றை வயலினின் மெலடியோடு தொடங்கும் பின்னணி இசை, அவனையும் அடிபட்ட அவன் சைக்கிளையும் ஜப்யாவின் நண்பனான சிறுவன் தன்னுடைய சைக்கிளில் வைத்து ஓட்டிவரும் போது மெதுவாக செல்லோவின் மெலடியும் இணைந்து கொள்வது – அழகான கவிதை.

படம் முழுக்கவே பின்னணியில் தோலிசை இல்லைதான். ஆனால் படத்தின் இறுதியில், சீற்றத்தின் உச்சத்தில், இந்தப் பூமி முழுவதையும் அழித்துவிடும் ஆவேசத்தோடு, தன்னை இகழ்ந்து பேசிய ஜாதி இந்து ஒருவன் மீது ஜப்யா, ஏதோ ஒரு மராட்டிய கெட்ட வார்த்தையை உரத்துச் சொல்லிக் கொண்டே கல்லை வீசி எறிகிறான். திரை இருட்டாகிறது. அரை நொடி அமைதிக்குப்பின் வானம் கிழியப் பறை அதிர்கிறது.

இறுதிச் செய்தியாக இதைக் குறிப்பிட்டாக வேண்டும். இக்கட்டுரையில் “பன்றி’யின் கதையோ, திரைக்கதையோ, நுட்பங்களோ கூடுமான வரை தவிர்க்கப்பட்டுள்ளன. படத்தின் உயிரோட்டமான கதையும் திரைக்கதையும் கவித்துவமான காட்சியமைப்புகளும் எல்லாவற்றிற்கும் மேல் படம் நம்மை உள்ளாக்கும் அதிர்ச்சியும் எழுத்துக்குள் சிக்காதவை.

இந்தக் கட்டுரை படம் பார்ப்பதற்கான ஒரு முன் தயாரிப்பு. படம் வெளிவருவதற்கு முன்பு, சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, ரிலையன்ஸ் நிறுவனமும் ஜீ டிவி நிறுவனமும் இதன் வெளியீட்டு உரிமையை வாங்கி, காதல் முத்திரை குத்தி, அதை “காதலர் தின’த்தன்று வெளியிட்டிருக்கிறார்கள் என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய செய்தி.

பின் குறிப்பு:

ஜாதியின் பெயரால் பல நூறு ஆண்டுகளாக நடத்தப்படும் மனிதவதை பற்றிப் பேசும் படத்தில் எந்த ஒரு மிருகவதையும் இடம் பெறவில்லை. எல்லாமே “கிராபிக்ஸ்’ என்ற முன்னறிவிப்போடு தான் படம் தொடங்குகிறது. நம்முடைய ஜீவகாருண்யச் சித்தர்களும் கோமாதா பக்தர்களும் கூட எந்தவிதத் தயக்கமுமின்றி படத்தை ரசிக்கலாம். தள்ளியோ, ஏற்றியோ கொன்றாலும் எந்த “இளவரசனு’க்கு என்ன ஆனால் என்ன, ரயிலுக்கு எந்த சேதமும் ஏற்பட்டு விடக்கூடாது இல்லையா!

‘கைக்காடி’ மொழி

தெலங்கானா பகுதியிலி ருந்து இடம் பெயர்ந்து நாடோடிகளாகச் சுற்றித் திரிந்த கைக்காடிகள், இப்போது மராட்டிய மாநிலத்தின் விதர்பா பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். கூடை பின்னுவது அவர்களின் அடிப்படைத் தொழில். தவிர, கழுதைகளின் மீது செங்கல், ஜல்லி சுமப்பது, பன்றிகளை விரட்டுவது போன்ற உதிரி வேலைகளையும் செய்கிறார்கள். அவர்கள் தமிழும் தெலுங்கும் கலந்த திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த கைக்காடி மொழியைப் பேசுகின்றனர். கைக்காடி என்ற பெயர், கையால் கூடை (காடி) பின்னுபவர் என்பதிலிருந்தே வந்திருக்கிறது. தற்பொழுது மராட்டியத்திலேயே வாழ்வதால் பெரும்பாலானவர்கள் மராட்டிய மொழியே பேசுகிறார்கள்.

வீட்டுக்குள் தங்காமல் திறந்த வெளிகளில் திரிந்து கொண்டு, பன்றிகளையும் முயல்களையும் விரட்டிப் பிடிக்கும் ஒரு வகை நாய் இனத்திற்கு மராட்டியத்தில் “கைக்காடி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்!

  • தாயப்பன் அழகிரிசாமி
Load More Related Articles
Load More By sridhar
  • எல்லோரும் சமமென்கிறாய்

    ‘எல்லோரும் மனிதர்கள் தான்எல்லோரும் சமமென்கிறாய்என்னய்யாவின் பெயருக்குப்பின்வெற்றிடமிருக்கஉ…
  • நீயும் நானும் ‘இந்து’

    மூங்கில் குழாய் வழியேகொட்டாங்குச்சியில்தேநீர் தந்தவன்;சானிப்பால் குடிக்கச் செய்துசவுக்கால்…
  • மிக மிகச் சாதாரணமானவை

    மேலவளவில் படுகொலை செய்யப்பட்ட என் அண்ணன்களுக்கு வீர வணக்கம். அகன்ற நிழல்பரப்பி உயர்ந்திருக…
Load More In கலை இலக்கியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

எல்லோரும் சமமென்கிறாய்

‘எல்லோரும் மனிதர்கள் தான்எல்லோரும் சமமென்கிறாய்என்னய்யாவின் பெயருக்குப்பின்வெற்றிடமிருக்கஉ…