நூற்றாண்டு பெருமை கொள்ளும் திராவிட அரசியலின் தோற்றுவாய்க்கும், காங்கிரஸ் – பொதுவுடைமை மற்றும் இன்ன பிற கட்சிகளின் சமூக – அரசியல் வளர்த்தெடுப்புக்கும் கடந்தகால தலித் தலைவர்கள் புடமிட்ட தலித் அரசியல் ஒரு காரணம் என்பதை பண்டிதர் அயோத்திதாசர் நினைவு நூற்றாண்டில் மீளாய்வு செய்ய வேண்டிய தருணம் இது.

இன்றைய தமிழ்த் தேசிய  – திராவிட அரசியலின் கருத்தியல் வளர்ச்சிக்கு பண்டிதர் அயோத்திதாசர், எம்.சி. ராஜா, சத்தியவாணிமுத்து போன்றோர் செய்த பங்களிப்பை திராவிட அரசியல் வரலாறு இருட்டடிப்பு செய்த போதிலும் தலித் எழுச்சியானது அதனை சுட்டிக்காட்டத் தவறியதில்லை. எனினும் இதுகாறும் வரலாற்றின் ஊடாக கட்டியெழுப்பபட்ட தலித் அரசியலின் இலக்குகள் தேர்தல் களத்தில் திராவிட அரசியலால் வீழ்த்தப்படுவதைக் காணும்போது சமகால தலித் அரசியல் வார்த்தெடுப்புகளின் ஒரு அங்கமான தலித் கட்சிகளின் “அரசியல் அதிகாரம் கோறும் நிலை” கடந்த காலத்தில் களமாடிய  தலித் அரசியல் போராட்டங்களை கேலிக்கூத்தாக்குகிறது.

தமிழைக் காட்டியும், சாதிவாரி தொகுப்பை முன் நிறுத்தியும் மிகு சிறுபாண்மையிலிருந்து எண்ணிக்கைப் பெரும்பாண்மைக்குள் தன்னைத்தானே வலுப்படுத்திக் கொண்ட திராவிட அரசியலுக்கும் – சாதி ஒழிப்பை முன் நிறுத்தும் தலித் அரசியலுக்குமான முரண் அவ்வளவு எளிதில் தீர்வு காணக்கூடியதல்ல‌. எனினும்  அத்தகைய திராவிடக் கட்சிகளோடு கூட்டணி என்கிற பெயரில் தலித் அரசியலை வார்த்தெடுக்க விரும்பும் தலித் கட்சிகள் இது வரை சாதித்தது என்ன என்பது 2014 மக்களவைத் தேர்தலின் தொகுதிப் பங்கீடுகளில் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன. தலித் கட்சிகளை காலந்தோறும் “எடுப்பார் கைப்புள்ள” கட்சிகளாக மட்டுமே எண்ணி அரசியல் பண்ணுவதில் காங்கிரசை விஞ்சிய சாணக்யர்கள் திராவிடக் கட்சிகள். வெறும் வாக்கு வங்கிக்காகவும், தங்களின் ஏக – போக அரசியல் நலனுக்காக மட்டுமே தலித் கட்சிகளை பயன்படுத்தி வருவதாகக் கருதியது தவறு. அதிலிருந்து ஒரு படி கடந்து தலித் கட்சிகளின் வெகு மக்கள் திரட்சியை மறுதலித்து, ஒற்றைத் தலைவரை வளர்த்தெடுக்கும் கழக விசுவாச சூக்குமத்தையும் பாவிக்கின்றது.

Se.ku.thaதிராவிடக் கட்சிகளின் இத்தகைய கழகப் பொது மன நீரோட்டத்தில் இன்றைய தலித் கட்சிகளும் அதன் தலைவர்களும் இளகித் திளைத்தாலும் திராவிட அரசியலால் வீழ்ந்த அன்றைய தலித் தலைவர்கள் எச்சரிக்கையாகவே இவர்களுடன் அரசியல் செய்துள்ளனர். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் பெரியாருக்கும் – அண்ணாவுக்கும் இடையிலான திராவிட அரசியல் மறுமலர்ச்சியில் நாவலர் நெடுஞ்செழியன் போன்றோருக்கு கொடுத்த அங்கீகாரத்தை சத்தியவாணிமுத்துவுக்கு தர மறுத்த திமுக -வையோ அல்லது பெருந்தலைவர் காமராஜர் போன்றோருக்கு கொடுத்த முக்கியத்துவத்தை எல். இளையபெருமாள், தியாகி இம்மானுவேல் சேகரன், பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி போன்றோருக்கு தர மறுத்த காங்கிரசையோ நம்பியதில் பயனெதுவும் இல்லை என்பதையும் நன்கு உணர்ந்திருந்தனர். இந்த படிப்பினை இருந்ததாலேயே தேசிய அளவில் அகில இந்திய ஷெட்யூல்டு இனப்பேரவையிலும் (SCF), இந்திய குடியரசுக்கட்சிகளுக்கு (RPI) உள்ளேயும் – வெளியேயும் நின்று திராவிட – காங்கிரஸ் கட்சிகளை தவிர்த்த தலித் அரசியல் தேவை எனக் கருதினர். அரசியலில் சாதி நீங்கலான கூட்டாட்சித் தத்துவம் வலிமையாக ஒலிக்காத காலமாக அது இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலின்போதும் கிடைத்த வஞ்சிக்கப்பட்ட விழுப்புண்களுக்கு தலித் தலைவர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தவறியதில்லை.

இந்த அனுபவம் புரட்சியாளர் அம்பேத்கரின் நூற்றாண்டுக்கு முன்பே 1985 -வாக்கில் தமிழக அரசியலில் “ஷெட்யூல்டு இன விடுதலை இயக்கம் – (Scheduled Caste Liberation Movement – SCALM)” என்று ஒன்று உருவாக திராவிட – காங்கிரஸ் தலைமையையும், அதன் கூட்டணியையும் புறக்கணித்த தலித் கட்சிகளின் அரசியல் எழுச்சி காரணமாக இருந்தது. காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய எல். இளையபெருமாள், திமுக -விலிருந்து வெளியேறிய வை. பாலசுந்தரம், பெரியாரை கடுமையாக விமர்சித்த ஆ. சக்திதாசன் போன்றோர் ஒருங்கிணைத்து உருவாக்கிய அரசியல் இயக்கம் அது. 1989 -ல் நிகழ்ந்த பொதுத் தேர்தலில் பிற கட்சிகளைச் சாராமல் அனைத்து தனித் தொகுதிகளிலும் தலித் கட்சிகளின் உறுப்பினர்களே போட்டியிட வேண்டுமென கன்ஷிராம் தலைமையில் உறுதிமொழி எடுத்தனர். அத‌ன்படி அருந்ததியர் – பறையர் – தேவேந்திரர் என்கிற அடையாளங்களைக் கடந்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால் வழக்கம்போல இத்தகைய முயற்சியை முறியடிக்க திமுக -வின் சார்பில் செ. குப்புசாமியும், காங்கிரஸ் சார்பில் வாழப்பாடி ராமமூர்த்தியும் தலித் தலைவர்களை தங்களின் கட்சிகளுக்கே தேர்தல் வேலை செய்ய அழைப்பு விடுத்தனர். தலித் அரசியலை தனித்த அடையாளத்துடன் வென்றெடுக்க முற்பட்ட தலித் கட்சிகளின் திரட்சி, குறுகிய காலத்தில் எதிர்பாராத திசைகளில் சிதறடிக்கப்பட்டது. அதன் பின்னர் இறுதி வரையிலும் அந்தந்த கட்சிகளின் விசுவாசிகளாக நடந்து கொள்ள கொடுக்கப்பட்ட விளம்பரம் தலித் தலைவர்களுக்கு நேர்ந்த ஒரு சாபக்கேடு.

Thiruma - 190 -களுக்கு பிறகு இடிமுழக்கமாக எழுந்த விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், புரட்சி பாரதம் போன்ற கட்சிகளிடமாவது ஒரு தலைகீழ் மாற்றம் ஏற்படாதா என்று கணிக்கப்பட்ட எதிர்பார்ப்புகளும் நடப்பு தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டு  நடவடிக்கைகளைக் காணும்போது தலித் அரசியல் எழுச்சிக்கு நம்பிக்கையூட்டுவதாக அமையவில்லை. இதன் விளைவு திராவிடக் கட்சிகளால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறோம் என சொல்லிக் கொண்டே யாரிடமும் சொல்ல‌ முடியாமல் கூட்டணியாகப் புலம்பித்தவிக்கும் கையறு நிலை.

2001 அக்டோபரில் புதுச்சேரி மையக்குழுவில் ஏன் திராவிடக் கட்சிகளை ஏற்கிறோம் – நிராகரிக்கிறோம் என விடுதலைச் சிறுத்தைகள் வரையறுத்த நீண்ட நெடிய கூட்டாட்சிக் கொள்கையும், 2002 செப்டம்பரில் நெல்லை மாநாட்டில் திராவிடக் கட்சிகளுடன் ஒருபோதும் கூட்டு இல்லை என பிரகடனப்படுத்திய புதிய தமிழகத்தின் புரட்சிகர அரசியல் முடிவும், இந்திய குடியரசுக் கட்சியின் இறுதி நிலவரங்களும் வெகு மக்களைக் கொண்ட தலித் கட்சிகளின் தலித் அரசியல் எழுச்சிக்கும் அதன் தார்ப்பரியங்களுக்கும் வலு சேர்ப்பதாக அமையவில்லை என்பதை அந்தந்த தலைவர்களே பலமுறை கூறியிருக்கின்றனர். இன்றைக்கு மீண்டும் அதே புலம்பலை தலித் மக்களிடம் எந்த முகம் கொண்டு சொல்வது என்கிற தயக்கம் இருக்கிற காரண‌த்தால் திமுக -வுக்கு ஒரு திருமாவளவன், அதிமுக -வுக்கு ஒரு செ.கு. தமிழரசன், இரண்டுக்கும் ஊடாக டாக்டர் கிருஷ்ணசாமி, பூவை. ஜெகன் போன்ற ஒற்றை ஆண் தலைவர்களே அந்தந்த கட்சிகளின் நிரந்தர கூட்டாளர்களாகி விடுகின்றனர். தேர்தலுக்குப் பிந்தைய ஒவ்வொரு காலச்சூழலும் ஐந்தாண்டுகளையும், பத்தாண்டுகளையும் கண் எதிரே பறித்துக் கொள்கிறது. அதற்குள் ஒரு கட்சி புதிதாகத் தோன்றி, இன்னொரு தலித் கட்சியை வெளியேற்றுவதில் களமிறங்கி விடுகிறது. இதில் தலித் பெண்களின் தலைமையைக் கொண்ட தலித் அரசியலுக்கான சிந்தனை அறவே இல்லை.

Thiruma -2மிகக் குறுகிய காலத்தில் வளர்ச்சியடைந்த இன்ன பிற கட்சிகளின் அமைப்புகள் 8 சீட்டுகள் வாதாடிப் பெறும் ஸ்திரத்தன்மையை ஒப்பீட்டளவில் பார்க்கும்போது இந்த உணர்தல் இல்லாததாலேயே திமுக -வுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய கட்சி என சொல்லப்படும் விடுதலைச்சிறுத்தைகள், தென்மாவட்டங்களின் தேசியம் என சொல்லப்படும் புதிய தமிழகம் ஆகிய கூட்டணி தலித் கட்சிகளை வெறும் ஒன்னறை சதவீத வாக்களர் கொண்ட கட்சிகள் என கணக்கிட்டு ‘ஒரேயொரு சீட்’ முறையை தொடர்ந்து திராவிடக் கட்சிகள் கையளித்துள்ளன. தமிழகத்தின்பிரதான தலித் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைக்கு வழக்கம்போல சிதம்பரம் தனித் தொகுதியும், புதிய தமிழகத்துக்கு தென்காசி தனித் தொகுதியும் கிடைத்துள்ளது. அதாவது சட்ட மன்ற உறுப்பினராக இருக்கும் டாக்டர். கிருஷ்ண்சாமியை நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆசைப்பட்டு, கட்சியை வளர்க்காமல் தன்னந்தனி தலைவராய் இருந்து டெல்லியிலே முடங்கிக் கிட என்றும், தொல். திருமாவளவனை இருப்பதையாயது தக்க வைத்துக்கொள் என்றும் சூசகமாக சொல்வதை விட வேறென்ன. அதிமுக -வோ மருந்துக்கு கூட தலித் கட்சிகளின் ஆதரவை எதிர் பார்க்கவில்லை. மும்முனைப்போட்டிகளின் தளகர்த்தாக்களான பாஜக – தேமுதிக போன்ற கட்சிகள் அங்கீகரிக்கப்படாத தலித் கட்சிகளை அடையாளம் காணும் என்கிற எதிர்பார்ப்பு கூட “இருந்துட்டு போகட்டும்” என்பதாக இருக்கிறது. குறைந்த பட்சம் இடதுசாரி கட்சிகளைப்போல எதிர்ப்பை கூட பதிவு செய்ய முடியவில்லை. அல்லது அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைக்க எது தடையாக இருக்கிறது என்பது தெரியவில்லை. 1977 -ல் எம்.ஜி.ஆரிடம் மண்டியிட்டு பெற்ற “ஒற்றை சீட் முறை” எனும் “ஒத்தைக்கு ஒத்த நோயை” தமிழக தலித் கட்சிகளும் இன்று வைரஸாக்கிக் கொண்டன.

Krishnasamyஅடிப்படையில் ஐந்தில் ஒரு பங்கு இருக்கும் தலித்துகளின் ஒட்டு மொத்த வாக்கு வங்கிகளையும் கணக்கில் கொண்டால் எந்த தனித் தொகுதிகளிலும் பிற கட்சி வேட்பாளர்களை நிறுத்தாமல் அவற்றை தங்களுக்கு ஒதுக்க தலித் கட்சிகள் கோரியிருக்க வேண்டும். திராவிடக் கட்சிகளும் இக்கருத்தை ஆதரித்து, தங்களிடம் 10 ஆண்டுகளுக்கு மேல் பயிற்சி எடுத்துக் கொண்டதால் குறைந்த பட்சம் மும்மூன்று தொகுதிகளாவது ஒதுக்குகிறோம் என அறிவித்திருக்க‌ வேண்டும். இல்லையேல் தனித்து போட்டியிட்டாவது நாங்கள் ஒன்னரை சதவிகித வாக்கு வங்கியாளர்கள் இல்லை என்கிற முயற்சியை எடுத்திருக்கலாம். அப்படியொன்று இங்கே நிகழவில்லை. காரணம் இந்த தேர்தல் அமைப்பு முறையில் ஒவ்வொரு தலித் கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சிக்குள் அடைக்கலமாகி ஆங்காங்கே ஆளுக்கு ஒரு சீட்டை தக்க வைத்து தான் 20 சதவிகித வாக்கு வங்கி தலித் அரசியல் விகிதாசாரத்தைக் கூ(கா)ட்டமுடியும் என கணித்திருக்கலாம். தன்னைத் தானே தேற்றிக் கொள்ள வேண்டுமானால் இந்த கணிப்புகள் பயனளிக்கும்.  மேலும் கிடைக்கிற ஒரு சீட்டை செயலாக்க மனோபவம் கொண்ட இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கு கொடுத்து விட்டு முதன்மைத் தலைவர்கள் கட்சியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதும் இத்தகைய ஒற்றை சீட் முறையால் தடைபடுகிறது. அதற்கு பேசாமல் அந்தந்த தலித் கட்சிகளைக் கலைத்து விட்டு நேரடியாகவே கழகங்களில் கரைந்திருந்தால் கூட தலித் ஆளுமைகளில் செறிவு கொண்ட உறுப்பினர்கள் பிற கட்சிகளுக்குள் ஊடுறுவி 10 தனித் தொகுதி இடங்களையாவது கைப்பற்றியிருக்கக்கூடும் என்பதும் ஒரு வகை ஆவேசம் தான்.

Krishna - 1மற்றபடி திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் தலித் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்டித்தும், கடந்த காலங்களில் தலித் கட்சிகள் வெளியிட்ட‌ கூட்டணி தேர்தல் அறிக்கையை நிறைவேற்றக் கோரியும் கடந்த பத்தாண்டுகளில் தலித் கட்சிகள் போராடியிருக்க வேண்டும். எதிர்பார்த்த வகையில் நம்பிக்கையளிக்கும் பெரிய சாதனைகள் எதுவும் நிகழவில்லை. மாறாக  தங்கள் கோரிக்கைகளுக்கு அப்பாற்பட்ட கோஷங்களில் நேரம் செலவிடுவதும், ஒரு கட்டத்துக்கு மேல் திராவிடக் கட்சிகளின் அன்றாட நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் போராளிகளாகவும், தேர்தல் இடைத்தூதுவர்களாகவும் மாறியது தான் ஊடகத்தில் மிச்சம்.

அரசியல் ஆடுகளத்தில் திராவிடக் கட்சிகள் தங்களின் நீட்சியை ஒற்றைத் தலைவர், ஒற்றை கட்சி, ஒற்றை வளர்ச்சி என்பதிலிருந்து விடுபட்டு பல்லாண்டு கடந்தும் பன்மை அரசியல் பண்ண முடிவதால் தான் ஒரு தலைமையோடு, ஒரு கட்சியோடு அதன் அரசியல் முற்று பெறாமல் தொடர் ஓட்டத்தில் வெல்ல முடிகின்றது. ஆனால் தலித் அரசியல் வரலாற்றில் தோன்றி மறைகிற ஒவ்வொரு தலித் தலைவரின் ஆயுளோடு ஒரு தலித் கட்சியின் ஆயுளும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயமாக நிறைவு பெறுவதற்கு காரணம் ஒருசீட் பெறும் ஒத்தைக்கு ஒத்த நோய் தான். அம்பேதகருக்கும் பொருந்திய இந்த விமர்சனத்தை என்றைக்கு தலித் கட்சிகள் முறியடிக்கப்போகின்றன?

Ambedஎனவே எதிர்காலத்தில் அரசியல் அதிகாரம் கிடைத்த பின்னர் தான் இவற்றையெல்லாம் சுதந்திரமாகச் செயல்படுத்த முடியும் என்கிற மன நிலையிலிருந்து விடுபட்டு குறைந்த பட்சம் தலித் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையில் சொன்ன “தனித் தொகுதியை மாற்றி இரட்டை வாக்குரிமையுடன் கூடிய தனி வாக்களர் தொகுதி முறை, புதிய நிலப்பகிர்வுச் சட்டம்,  தலித் சிறுபாண்மையினர் இட இதுக்கீடு, தனியார் துறையில் இட ஒதுக்கீடு, மாநில வரவு – செலவுத் திட்டத்தில் 18 % தலித் மக்களின் சிறப்பு உட்கூறுக்கு வழங்குவது, பெண்களுக்கான பண்பாட்டுரிமை, பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவது” போன்ற எளிமையான கோரிக்கைகளில் ஒன்றையாவது சாதிக்க திராவிட – காங்கிரஸ் – பாஜக கட்சிகளை நிர்ப்பந்திக்க வேண்டும். கூட்டணி திராவிடக் கட்சிகளுடனான சமரச நல்லிணக்கம் ஓரளவு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், காலந்தோறும் பிரிந்தே கிடக்காமல் ஒன்று சேர்வதற்கான பல பண்பாட்டுக் காரணங்கள் இருந்தும் பிற தலித் அமைப்புகளைக் கூட்டிச் சேர்த்து தலித் அரசியலை வென்றெடுக்க முடியாத தலித் பகைமையை கழகங்கள் நன்கறிந்து கொண்ட‌ன. இதனை முறியடிக்க‌ தனித் தொகுதிகளில் தலித் கட்சி வேட்பளர்களை ஆதரிக்கும் பண்பாட்டுப் புரிதலையாவது ஏற்படுத்த வேண்டும். இவைகளுக்கு சாத்தியமில்லையெனில் தார்மீக எல்லை கடந்த “கூட்டாட்சி தத்துவம் – கூட்டணி தர்மம்” எது என்கிற கழக விசுவாசத்தை தேர்தலுக்கு பிறகாவது மறு பரிசீலனை செய்ய வேண்டும். இதற்கும் வாய்ப்பில்லையெனில் புரட்சியாளர் அம்பேத்கர் சொல்வதைப்போல கூட்டணி விசுவாசத்துக்கு பலியாகாமல் எந்தக் கட்சியில் இருந்தாலும் கல்லைப்போல் கரையாமலாவது இருந்து தலித் அரசியலை தொடர் ஓட்டத்துக்கு கொண்டு செல்வது ஒன்றே விலை மதிப்பற்ற தலித் வாக்குகள் கோறுவதை தலித் கட்சிகளின் எதிர்கால வளர்ச்சி அர்த்தப்படுத்தும்.

– அன்புசெல்வம் anbuselvam6@gmail.com

Load More Related Articles
Load More By sridhar
Load More In கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

சமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் – II

சாதி ஒழிப்பிலிருந்தே அம்பேத்கரியல் என்கிற மானுட சமத்துவத்திற்கான தத்துவம் உருப்பெறுகிறது.இ…