Home மாற்றுப்பாதை மாற்றுப்பாதை – சி. முத்துக்கந்தன்

மாற்றுப்பாதை – சி. முத்துக்கந்தன்

0
0

வாழ்க்கையை அதன் போக்கில் பார்ப்பதைக் காட்டிலும் தன் வாழ்வை எதார்த்தமாய் மாற்றி, அதிலிருந்து தன் இலக்கியத்தைக் கட்டமைக்கிறார் சி. முத்துக்கந்தன். “செந்தலைக் குருவி’ என்ற கலை இலக்கியக் காலாண்டிதழை தமிழ் மக்களுக்கென இவர் வெளியிட்டு தமிழ்த் தொண்டாற்றுகிறார். தலித் இலக்கியத்தின் அரசியல் என்பது அதிகாரத்தின் வழிநடைக் குறிப்புகளாய்ப்போகிற சூழ்நிலையில் சி. முத்துக்கந்தனின் கவிதைகள் வந்துத் தெறிக்கிற இடங்கள் எல்லாம் சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கையாகிவிடுகின்றன. அவர் உருவாக்கும் படிமங்களும் சொற்கட்டுகளும் பாசாங்கில்லாத பாமர மொழியிலானவை.

இனியும்
இப்படி இருக்க முடியாது
கவனி
கூர்முனைக் காட்டி
தலைகீழாய் நிற்கிறது பம்பரம்
சிதறுகின்றன குத்தும் பம்பரங்கள்!

பம்பரத்தைப் படிமமாக்கி அவர் காட்டும் வாழ்வியல் தலித் வாழ்க்கையின் இன்றைய தேவையாக இருக்கிறது. நடிகையின் தொப்புளில் பம்பரம் விட்டு காசு பார்த்து கட்சி கட்டியவர்களிடையே முத்துக்கந்தனின் பம்பரம், தனது ஆணியை நிமிர்த்தி தாக்குதலுக்குத் தயாராய் நிற்கிறது. தாக்க வரும் பம்பரங்கள் அனைத்தும் பிளந்து சிதறுகின்றன. குத்து வாங்குவதற்கு கவிழ்ந்திருக்கும் பம்பரங்களாய் இதுவரை இருந்தது போதும். இப்போது கற்றுக்கொள்வதற்கான நேரம். எனவே கூர்தீட்டி காத்திருக்கச் சொல்கிறார். எளிய வார்த்தைகளால் ஒரு சமூகத்தின் போக்கையே மாற்றிவிடும் வலிமைமிக்க வரிகளை உருவாக்கும் முத்துக்கந்தன், தன்னை ஒரு தலித் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்திக்கொள்ள என்றுமே தயங்கியதில்லை.

காஞ்சிபுரம் மாவட்டம் வேட்டமங்கலம் கிராமத்தைத் தன் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் மந்திய அரசு ஊழியராகத் தந்தை இருந்ததால் அய்ந்தாறு ஊர்களில் வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வாழ்வின் நிர்பந்தமே அவரின் ஆக்கங்களின் அனுபவங்களாக மாறியிருக்கின்றன. அவருடைய எழுத்துகளில் பொதிந்திருக்கும் பெரும்பான்மை மக்கள் அனைவரும் இத்தகைய ஊர் மாற்றங்களால் அவருக்குக் கிடைத்தவர்களே! சென்னை தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை தமிழிலக்கியம் படித்த அவர் தனது ஆய்வு படிப்புகளைச் சென்னை பல்கலைக் கழகத்தில் முடித்திருக்கிறார்.

கிறித்துவக் கல்லூரியில் படிக்கும்போது நடைபெற்ற “வனம்’ கவிதை வாசிப்பு நிகழ்ச்சியே அவருடைய எழுத்தின் நுழைவாயில். அங்கே பேராசிரியர்களாக இருந்த பாலுச்சாமியும் ஜார்ஜும் அவரை தொடர்ந்து ஊக்கப்படுத்தினர். அப்போதுதான் அவருடைய முதல் கவிதைத் தொகுப்பான “உதடுகள்’ வெளிவந்தது. அவருக்கான கவிதை மொழி அமைந்ததே ஒரு கலகச் செயல்பாடுதான். வனம் நிகழ்வில் கவிதையை வாசிக்கும்போது ஒரு சந்த நயத்தோடு கவிதையை மக்கள் மொழியில் வாசிக்க, அது பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறது. அத்தகைய கவிதைகளையே அவர் தொடர்ந்து எழுத, அது தலித் தன்மையிலான கவிதைகள் என கேலி செய்யப்பட்டிருக்கின்றன. அப்படியென்றால் “இதுதான் என் கவிதை மொழி’ என அவர் மக்கள் மொழியில் எழுதுவதையே தன் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

தலித் வாழ்வின் மீறல்களைத் தன் கவிதைகளில் தொடர்ந்து எழுதுகிற முத்துக்கந்தன், இவ்வாறாகத் தன் கவிதையில் நக்கல்களுக்கும் கிண்டல்களுக்கும் அம்பேத்கர்தான் காரணம் என்கிறார். வசந்த் மூன் எழுதிய அம்பேத்கர் தொடர்பான நூல் ஒன்றை வாசிக்கும்போது “எந்தக்கலை இலக்கியம் நக்கல் தொனியில் இருக்கிறதோ அது எதிரிகளை வீழ்த்தும்’ என்று அம்பேத்கர் சொன்ன வரிகளே தன் எழுத்துப் போக்கினை மாற்றியது என்கிறார் முத்துக்கந்தன்.

தன் இலக்கிய வாழ்வின் திசை மாற்றமாக ஓவியர் சந்ரு அவர்களின் சந்திப்பைக் கூறும் முத்துக்கந்தன், சந்ருவுடனான பதினான்கு ஆண்டுகள் நட்பு அவருடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திருப்பதாக நன்றிப் பெருக்குடன் கூறுகிறார். சந்ருவின் நான்கு நூல்களுக்குத் தொகுப்பாசிரியராக இருந்ததைப் பெருமிதமாகக் கொண்டாடுகிறார். அதேபோல, பேராசிரியர் தயானந்தன் அவர்களின் உதவியும் தன் வாழ்வில் பெரும் பங்களிப்பை நல்கியதாகக் கூறி மகிழ்கிறார்.

தலித் இலக்கியம் என்பது தனிமைப்பட்டுவிடும் பேராபத்து இருக்கிறது என்று கூறும் முத்துக்கந்தன், புதுமைப்பித்தனையும் ராஜம் கிருஷ்ணனையும் கொண்டாடுபவர்கள் பாமா போன்றவர்களைக் கொண்டாடுவதில்லை; அவர்கள் தலித் இலக்கியவாதிகள் எனப் புறந்தள்ளப்படுகின்றனர் என்கிறார். இத்தகைய தலித் எழுத்தாளர்களின் எழுத்துகள் பாடங்களாக வரும் போது மாணவர்கள் அவற்றைக் கண்டு கொள்ளாத சூழ்நிலை நிலவுவதாகவே அவர் தெரிவிக்கிறார்.

தலித் இலக்கியவாதிகள் பொது இலக்கியவாதிகளுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்லர். தலித் எழுத்துகள் உண்மையானவையாக இருந்தபோதும் அவை தலித் எழுத்து என்பதால் புறக்கணிக்கப்படுகிறது. தலித் அரசியலும் அப்படித்தான். வைகோ, சீமான் போன்றவர்களைவிட மிகச்சிறப்பாகச் செயல்பட்டாலும் திருமாவளவன் தலித் தலைவர் என்றே சõதி இந்துக்களால் மிக எளிதாகப் புறந்தள்ளப்படுகிறார். மாணவர்கள் கூட தமிழ்சார்ந்த பிரச்சனைகளில் திருமாவளவனைப் புறந்தள்ளிவிடுகின்றனர். எனவே தலித் இலக்கியமும் தலித் அரசியலும் பொதுவானதாக இருக்க வேண்டும்; பொதுவெளியில் இயங்க வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார்.

“செந்தலைக்குருவி’ காலாண்டிதழின் ஆசிரியரான முத்துக்கந்தன், சிறுபத்திரிகைகளின் புனிதங்களைக் கிண்டலடிப்பதற்காகவே இதை நடத்துவதாகக் கூறுகிறார். பல சிறு பத்திரிகைகள் பெரிய ஆய்வாளர்களைக் கொண்டு தங்கள் பக்கங்களை நிரப்பிக் கொண்டிருக்கும்போது, சாதாரண மக்களைப் பற்றிய ஆய்வுகளை தன்னுடைய மாணவர்களை வைத்து நடத்த வைத்து, அவர்கள் எழுதுவதற்கான களமாகவும் செந்தலைக் குருவியை அவர் உருவாக்கியிருக்கிறார். இதனால் பல மாணவர்கள் எழுத்தாளர்களாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். “செந்தலைக் குருவி’யின் பல ஆக்கங்கள் முதன் முதலாக எழுதுபவர்

களாலேயே எழுதப்பட்டவை என்பது மிகுந்த கவனத்திற்குரியது.

முத்துக்கந்தனின் “வாய்பூட்டிய உதடுகள்’ தொகுப்பு அதன் உள்ளடக்கத்தால் முக்கியத்துவம் பெறுகிறது. தலித்தியம், பெண்ணியம், மூடநம்பிக்கை எதிர்ப்பு, சூழலியல் என அவருடைய கவிதைகள் வாசகர் தளத்தை மிக எளிதாக அடைந்து விடுகின்றன.

ஒருமுறை கூட
அவன் வீட்டில்
சாப்பிட்டதேயில்லை
என்வீட்டில்
ஒருமுறைகூட
அவன் சாப்பிடாமல்
போனதேயில்லை
தண்ணீரைக் கூட
தூக்கியே குடிக்கச் சொல்வார்
அவன் அம்மா

“புள்ள பாதி சோத்த அப்புடியே வெச்சிடுச்சே’
என்னுடைய பாதித் தட்டுச் சோறு
அவனுடைய பாதித் தட்டுச் சோறு
சேர்த்தே சாப்பிடுவார்
என் அம்மா

இருவரும்
பள்ளி, கல்லூரிகளில் ஒன்றாகவே படித்தோம்.

“உயிருக்குயிராய்க் காதலிக்கிறேன்
நட்பைவிட அதிகமாகவே நேசிக்கிறேன்’

அய்ந்தாண்டு
காதலுக்குப்பின்
இப்படிச் சொல்லித்தான் அறிமுகம் செய்தான்.
நலம்விசாரிப்புகள் ஏதுமின்றி
அந்தப்பெண்

வெடுக்கெனக் கேட்டாள்
“உங்களுக்கெல்லாம்
கோட்டாவுல ஈசியா கெடச்சிடும்ல’

இதுதான் தலித் வாழ்க்கைக்கும் சாதி இந்துக்களின் வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடு. வேறுபாடுகள் பார்க்காமல் நட்பையும் அன்பையும் மட்டுமே மூலமாகக் கொண்டதுதான் தலித் வாழ்க்கை. எத்தகைய சூழலிலும் தன் சாதியை சதா நினைத்துக் கொண்டே இருப்பதுதான் சாதி இந்துக்களின் வாழ்க்கை. பல பக்கங்களில் பேச வேண்டிய செய்திகளை சில வரிகளில் சொல்லி முடித்திருக்கிற முத்துக்கந்தனின் கவிதை மொழி ஆற்றலுடன் சமூகத்தையும் பண்படுத்துவதாக இருக்கிறது.

முத்துக்கந்தனை தொடர்புகொள்ள: 99414 71824

– யாழன் ஆதி

Load More Related Articles
 • மாற்றுப்பாதை – கு.உமாதேவி

  “பறையதிர்வில் கனன்றெரியும் தோள்களைப் போல் வீங்கித் தவிக்கிறது மனசு” விதை வாசிக்கப்பட…
 • மாற்றுப்பாதை – கம்பீரன்

  இயற்கைச் சூழலும், தாத்தா – பாட்டிகளும் சூழ்ந்த ஒரு கதை வாழ்வியல் கம்பீரனுக்கு. அவருடைய கதை…
 • மாற்றுப்பாதை – இசையரசு

  தலித்துக்கள் தங்கள் மீது திணிக்கப்பட்ட சாதி இழிவைப் போக்கிக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்…
Load More By யாழன் ஆதி
 • மாற்றுப்பாதை – கு.உமாதேவி

  “பறையதிர்வில் கனன்றெரியும் தோள்களைப் போல் வீங்கித் தவிக்கிறது மனசு” விதை வாசிக்கப்பட…
 • மாற்றுப்பாதை – கம்பீரன்

  இயற்கைச் சூழலும், தாத்தா – பாட்டிகளும் சூழ்ந்த ஒரு கதை வாழ்வியல் கம்பீரனுக்கு. அவருடைய கதை…
 • மாற்றுப்பாதை – இசையரசு

  தலித்துக்கள் தங்கள் மீது திணிக்கப்பட்ட சாதி இழிவைப் போக்கிக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்…
Load More In மாற்றுப்பாதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

மாற்றுப்பாதை – கு.உமாதேவி

“பறையதிர்வில் கனன்றெரியும் தோள்களைப் போல் வீங்கித் தவிக்கிறது மனசு” விதை வாசிக்கப்பட…