எனக்குப் பதிலாக அவளைக் காதலிப்பதற்கு
ஒருவருமில்லை ஆகவே நான் அவளைக் காதலித்தேன்
பாதி தோல் சீவப்பட்ட ஆப்பிளை
அவர்களால் பத்திரப்படுத்த முடியாது
அவளுக்குப் பதிலாக மரிப்பதற்கு
அவளிடத்தில் வேறொருவருமில்லை
அதற்காகவே நான் மரித்துப்போகிறேன்
நான் வாளொன்றையும் எடுத்துச் செல்லவில்லை
குளிர்ந்த சூரியனை நோக்கியே நடந்துபோகிறேன்
புழு துளையிட்ட பழத்தின் விதையாக
நான் நிச்சயம் திரும்பி வருவேன்
காதலித்ததற்காகவும் முத்தமிட்டதற்காகவும்
கொலை செய்யப்பட்ட நான்
நிறையக் கிளைகளையுடைய கனிகளையுடைய
அத்திமரமாய் முளைத்தெழுவதற்கும்
அனேக வாய்ப்பிருக்கிறது
என் கிளைகளை வந்தடையும் பறவைகள்
என் கனிகளைக் கொத்தித் தின்பதைப்போல
எனது கழுத்தறுத்துக் கொன்றவர்களும்கூட
என்னில் வந்து இளைப்பாறலாம்
நிச்சயமாக நிழல் தருவேன் நான்
அணில் குஞ்சுகள் வந்து முத்தமிட்டாலென்ன
நீங்கள் வந்து முத்தமிட்டாலென்ன
மீண்டும் முத்தத்திற்காகவே
முட்டி முளைக்கப்போகும் மரம் நான்
தைரியமாக வந்து என்னை முத்தமிடுங்கள்
அப்படியொரு முத்தத்தில்
நிச்சயம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்
எனக்குப் பதிலாக அவளைக் காதலிப்பதற்கு வேறொருவருமில்லையென்று.