தலைசாய்த்து நீரருந்தும்
சிறு பட்சியைப் போல
வீட்டின் முற்றத்தில்
அமர்ந்திருந்த அப்பாவிடம் கேட்கிறேன்
நீர்நாயின் நனையாத தோலென
மினுமினுக்கின்றன அவர் கண்கள்
உள்ளுக்குள் உடைப்பெடுத்தாலும்
காட்டிக்கொள்ளாமல் நிற்கின்றேன்
உடலின் குப்பியில் விஷத்தை இட்டாற்போல்
வலி பெருகுகிறது
உள்ளங்கையை முறமாக்கி
சலித்தெடுத்த மண்ணை
ருசிபார்த்த காலந்தொட்டே
கேட்டுக் கொண்டிருக்கிறேன்
பதில் சொல்வாரில்லை.
ஒட்டுப்போட்ட சக்கரமென
தும்பியைப் பிடித்துக் களித்த பருவத்திற்கு
உருண்டோடுகிறது அவர் மனம்
வலி பிசகாமல்
அவரும் அவரப்பாவிடம் கேட்டது
நினைவிலாடும் போலிருக்கிறது
அப்பாவும் அழுகிறார் நானும் அழுகிறேன்
இதயத்தின் ஒற்றைக் கப்பியில் கட்டப்பட்ட
கேள்வியின் ஊஞ்சல்
காலத்தின் இருபுறமும் சென்று வருகிறது
பதிலின்றி பதில் சொல்வார் எவருமின்றி
சற்று தொலைவில் சொப்பு வைத்து
தனியே விளையாடும் என் மகள்
உதட்டின் விளிம்புக்குள் துக்கத்தை மடித்து
அதே கேள்வியைக் கேட்கிறாள் என்னிடம்
சேரி ஊராகாதா அம்மா?