சாதி களங்கப்பட்டுவிடக் கூடாது என்ற நினைப்பில், இன்னொரு சாதியில் திருமணம் முடித்த தன் சொந்த மகளை அல்லது அவரின் கணவனைத் தேடிப்பிடித்துக் கொலை செய்யும் ஆணவக்காரர்களிடமிருந்து அந்த மணமக்களைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்டநாள்களாக முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கும், கலப்புத் திருமணம் செய்பவர்களைப் பாதுகாப்பதற்கும் உயர் நீதிமன்றக் மதுரைக் கிளை தனிச்சட்டம் இயற்றியிருக்கிறது. மேலும், ஆணவக்கொலைகளைத் தடுக்க சிறப்புத் தனிப்பிரிவும் தொடங்கப்பட்டிருக்கிறது. ஆணவக்கொலைகள் நடப்பதற்கான அரசியல் மற்றும் சமூக உளவியல் காரணங்களை ஆராய்ந்துவருபவரும் எழுத்தாளருமான பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கத்திடம் பேசினோம்…
“சாதி ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவந்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“என்ன மாதிரியான வேறுபாடுகள், சிக்கல்கள் என்பதைத் தெளிவுபடுத்தலாமே?”
“ஒரு தலித் ஆண், தலித் அல்லாத பெண் இருவரும் காதலிக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். ஒரு தலித் ஆண் கொல்லப்பட்டால், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்படுகிறது. அதுவே, அந்த தலித் அல்லாத பெண் கொலைசெய்யப்பட்டால், அவள் கொலை வன்கொடுமைச் சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்கப்படுவதில்லை. அந்தப் பெண் எஸ்.சி/எஸ்.டி இல்லையென்றாலும், அவள் கொல்லப்படுவதற்கும் சாதிதானே காரணமாக இருக்கிறது. அறிவித்திருக்கும் புதிய சட்டம் இதை எந்த வகையில் கையாளப்போகிறது என்கிற கேள்வி எழுகிறது”
“அந்தப் பெண்ணின் கொலையும் ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்தில் கொண்டுவரும் என்றபட்சத்தில் வரவேற்கத்தக்கதுதானே?”
“இல்லை. அப்படி திருப்தி அடைந்துவிட முடியாது. எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் இருக்கும் கடுமையான சட்டதிட்டங்கள், அதிலுள்ள தீவிரம், பாதுகாப்பு, நிவாரணம் போன்றவை எஸ்.சி/எஸ்.டி இல்லாதிருந்தாலும் பாதிக்கப்பட்ட பெண், அவரது குடும்பம் என்றபட்சத்தில் அவர்களுக்கும் கிடைக்குமா என்ற விவரங்கள் இந்தச் சட்டத்தில் இல்லை. அது இருக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.”
“எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமைச் சட்டத்தை, தலித்துகள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுகிறதே?”
“எஸ்.சி/எஸ்.டி சட்டம் மட்டும் அல்ல, எல்லா சட்டங்களும் எங்கோ யாரோ ஒருவரால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், எஸ்.சி/எஸ்.டி சட்டத்தை அவ்வளவு எளிதில் யாராலும் தவறாகப் பயன்படுத்திவிட முடியாது. அதில் நிறைய கெடுபிடிகள் இருக்கின்றன. தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற வாதத்துடன் ஒப்பிடுகையில், அந்தச் சட்டத்தின் மூலம் கிடைத்திருக்கும் நிவாரணங்களும் தீர்வுகளும் மிகக் குறைவே. காரணம், எஸ்.சி/எஸ்.டி-கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு காவல்நிலையத்துக்குப் புகார் அளிக்கச் செல்வதிலிருந்து தீர்வு கிடைக்கும் வரை அதற்கொரு நீண்ட போராட்டம் நிகழ்த்த வேண்டும். தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற வாதத்தை மேலோட்டமாகச் சொல்பவர்களின் அரசியல் நோக்கங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.”
“புதிதாகக் கொண்டு வந்திருக்கும் ஆணவக்கொலை தடுப்புச் சட்டம் எந்த வகையில் முழுமையடையும் என நினைக்கிறீர்கள்?”
“சமூகத்தில் நடக்கும் அவலங்களை, சட்டத்தினால் மட்டுமே களைய முடியும் என்பது நிரந்தரத் தீர்வாக இருக்காது. சட்டம், ஒரு பகுதி மட்டுமே. சட்டத்தைத் தாண்டி அரசியல் தளத்தில் இந்தப் பிரச்னையைப் பேசக்கூடிய வாய்ப்பு உருவாகாமல் நம் அரசியல் தலைவர்கள் பாதுகாத்துவருகிறார்கள். தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு காந்தி, பெரியாரைப் போன்று தலித் அல்லாத தலைவர் ஒருவர் ஆணவக்கொலைகள் விஷயத்தில் குரல்கொடுத்து மக்களை ஒன்றிணைக்கக்கூடிய நிலை இங்கே இல்லை. அவர்களைப் போன்ற தலைவர்களும் இல்லை. தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் சரி, தங்களுடைய தேர்தல் அறிக்கையில் கலப்புத் திருமணம் செய்வர்களுக்குக் குறிப்பிட்ட தொகை தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் எந்த முன்னெடுப்பையும் அவர்கள் செய்யவில்லை. காரணம், வாக்குவங்கி குறித்த அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.
ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்காக நீதிமன்றம் கொண்டுவந்த இந்தப் புதிய சட்டத்தைப் பற்றி, அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் விளம்பரங்களில் பெருமையாக சொல்லிக் கொள்ள வேண்டும். ஆனால், நிச்சயம் சொல்ல மாட்டார்கள். இந்நிலையில், வெறும் சட்டத்தை வைத்துக்கொண்டு ஏதும் செய்துவிட முடியாது. இன்னொரு விதத்தில் இந்தச் சட்டம் ஆணவக்காரர்களைக் கூர்மைப்படுத்தக்கூடிய அபாயங்களும் இருக்கின்றன. எஸ்.சி/ எஸ்.டி சட்டம் வந்ததிலிருந்து அந்த மக்களுக்கு நியாயம் கிடைத்ததா என்பதைவிட, அவர்களுக்கு எனத் தனியாக ஒரு சட்டம் இயற்றப்பட்டது குறித்து அவர்கள் மீது கோபம்தான் மற்ற சமூகத்தினருக்கு அதிகரித்திருக்கிறது. அது இந்தப் புதிய சட்டத்தை முன்வைத்தும் நிகழலாம். திரும்பவும் சொல்கிறேன், இந்தச் சட்டம் ஒரு சிறிய வெளிச்சத்தை அளித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இளைஞர்கள் மத்தியில் இந்தச் சட்டம் குறித்த மேலதிக விவரங்களை, விழிப்புஉணர்வை, இதிலுள்ள பாதுகாப்பு அம்சங்களை அரசு மற்றும் அரசு சாரா அமைப்பினர் தெளிவுப்படுத்த வேண்டும். மற்றவற்றை, கலப்புத் திருமணம் செய்யவிருக்கும் இளைஞர்களும் அவர்களை ஆதரிக்கும் பெற்றோர்களும் பார்த்துக்கொள்வார்கள்.”
Source : Vikatan