பெரும்போரின் நடுவேயும்
அமைதி குறித்த ஓர் உணர்வு
தோட்டாக்கள் அதன் இலக்குகளைக் கண்டு கொண்டபோது
காலம் அதைத் தானாக நிறுத்தியது.
பீரங்கிகளிலிருந்து வெடித்தெழும்பிய முழக்குகள் காற்றை நிறைத்து
மௌனத்திற்கு அப்பால் அவற்றை எதிரொலித்தன.
பெருங்கதறல்கள் நம்பிக்கையழிந்து வெளிப்பட்ட போது
உண்மையையும் வழிகாட்டலையும் நாங்கள் தேடினோம்
இவையனைத்தும் நடந்த போது அந்த நாள் கடந்து போனது
அதுவே தீமைகள் அழிந்த நாள்.
பேரச்சத்தினூடான பெருந்துணிவில் எப்படியோ நாங்கள்
பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தோம்.
மீண்டுமொருமுறை பாதுகாப்பை யாசித்த தருணத்தில்
எமது நன்னம்பிக்கைகள் மறைந்து போயின.
உயிரழிந்து ஆன்மா மரணித்தது எங்களது உடலில்
ஆயினும் எங்களுக்கான வாக்குறுதிகள் அதில் பொதியப்பட்டன
நிகழ்காலத்தை கடந்து செல்ல நாங்கள் இறைஞ்சிய பின்
கண்மூடி நாங்கள் உறங்கப் போனோம்.
இவையனைத்தும் நடந்த போது அந்த நாள் கடந்து போனது
அதுவே தீமைகள் அழிந்த நாள்.
பணக்காரர்களின் எல்லா வேண்டுதல்களையும் ஏழைகள் நிறைவேற்றிய போது
எங்கள் இதயம் விம்ம ஆரம்பித்தது.
உண்மைகளின் சன்னிதானத்தில் பொய்கள் சொல்லப்பட்டபோது
தோல்வியின் முன் எங்கள் ஞானம் சுருண்டது.
அன்பை வீழ்த்திய இடத்தில் கண்ணீர் மட்டுமே இருந்தது
அவையும் வெம்மையில் கரைந்து போயின
எங்களால் மறக்க முடியாத எல்லா மன்னிப்புகளையும்
எவரொருவரும் நினைவு கூர்வதில்லை.
இவையனைத்தும் நடந்த போது அந்த நாள் கடந்து போனது
அதுவே தீமைகள் அழிந்த நாள்.

T.V. Lewis
தமிழில்: காளிங்கராயன்

வெள்ளைகுதிரை முதல் இதழில் வெளிவந்த கவிதை

Load More Related Articles
Load More By sridhar
Load More In கலை இலக்கியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

அம்பேத்கர் ஏன் வரலாற்றின் தேவையாக இருக்கின்றார்? – நினைவு தினப் பகிர்வு

 சிவ.உறுதிமொழி பள்ளிப் படிப்பில் படுசுட்டி. என்றாலும், வகுப்பில் கடைசி வரிசையில் கோணிப்பைய…