கொங்கு நாட்டுச் சிங்கம்

தளபதி ஆர். வீரையன்

பார்ப்பனியப் பயங்கரவாதத்தால் பன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்டு வந்த தலித் மக்களின் பறிகொடுக்கப்பட்ட “தன்னிலையை’ மீட்டெடுத்து, மறுக்கப்பட்ட அவர்களுடைய மனித இருப்பை – வாழ்வை மீட்கப் போராடிய வெற்றி மனிதர் கொங்கு நாட்டுச் சிங்கம் தளபதி  ஆர். வீரையன், 1882 இல் கோவை மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்தார்.

சாதிய கோணத்தின் சாதகமற்ற சூழல் பாதகங்களே நித்தமும் அடிபணிய வைக்கும் வேளையில்,  மன உறுதியுடன் சமராடியே உயர் கல்வியைப் பெற்றார். தனது வைராக்கியத்தின் வெளிப்பாடாய் ஆங்கில மொழியிலும் தேர்ந்தவர் ஆனார். நீதிகளாலும், அறங்களாலும், பண்பாடுகளாலும் நிறைந்து போயிருந்த சொந்த சமூகம், பார்ப்பனியத்தால் பாழ்பட்டுப்போனதை உணர்ந்து சமூக மனிதரானார்.  தனது சமூகப் போராட்டத்தின் முதற்குறியாகக் கல்வியைக் கணக்கில் கொண்டார்.

தலித் மக்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டிருந்த அக்காலத்தில், தம்மக்கள் சுதந்திரமாய் சிந்திக்கும் உரிமையைப் பெறவும், நாகரிக வாழ்க்கையை அடையவும் முனைந்த தளபதி வீரையன் அவர்கள், முதற்கட்டமாக வீட்டுத் திண்ணைகளிலும் மரத்தடி நிழல்களிலும் சிறு பள்ளிகளைத் தொடங்கினார். அதையடுத்து ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் வாதாடி, போராடி தலித் மக்களுக்கு என அரசுப் பள்ளிகளை ஏற்படுத்தினார். நாளடைவில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும் தொகுப்பு நிதியாலும் அறக்கொடையாலும் நடந்த வந்த பள்ளிகளிலும் தலித் மாணவர்களை கல்வி கற்கச் செய்தார.

நான் எப்படி வாழ வேண்டும் என்பதைவிட எப்படிச் சாக வேண்டும் என்பது தான் எனக்கு முக்கியம்’

தம் மக்களைச் செப்பனிடும் அமைப்பு மூலம் செயலாற்ற வேண்டி, ” சென்னை மாகாண ஆதி திராவிட மகா ஜன சபா’வில் அய்க்கியமானார். வாழ்வில் மதிப்பீடுகளை சமூகப் பாட்டாளி வர்க்கத்தைக் கொண்டு நிர்ணயிக்கும் ஒரு சமூக மனிதனின் பார்வையில், அவர் விரிவடைந்ததால், காலமும் தேவையும் அவரைத் தலைவராக்கிக் கொண்டது.

அந்தந்த கணங்களைக் கடந்து செல்வதற்கான மனத் தயாரிப்போடு, தனது திறமைகளைத் துல்லியப்படுத்தும் ஓர்மைப் பாய்ச்சலில் – தன் சமூகக் குழுவைப் பேணுவதற்கான தொடர் நடவடிக்கைகளில் இறங்கிய தளபதி வீரையன், தலித் விடுதலைக்கு முன் நிபந்தனைகளாக அறிவையும் – மண்ணையும் – ஆயுதத்தையும் வரையறுத்தார். நாம் பறிகொடுத்த இம்மூன்று  “முதல்’களையும் பறிமுதல் செய்தால்தான், நாம் சுயமரியாதையையும், சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் அடைய முடியும் என்று பிரகடனம் செய்தார்.

அன்று வாலாஜாபாத், பல கிராமங்களுக்கு மய்யமாக அமைந்திருந்த இடம். அங்குள்ள அஞ்சலகத்தில்தான் சுற்றுப்புற கிராம மக்கள் சென்று தபால் வில்லைகளும், கார்டு– கவர்களும் வாங்க வேண்டும். ஆனால், தலித் மக்கள் ஊருக்கு வெளியே இருந்து கொண்டு சாதி இந்துக்களின் தயவில் தான் அவற்றை வாங்க முடியும். சாதியச் சமூக பொதுப் புத்தி சார்ந்த சமூக விழுமியங்களுக்கு ஆட்படுவதில் அரசு அலுவலகமும் அன்று விதிவிலக்கில்லாமல் இருந்தது. இக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க தலைவர் வீரையன் நேரடியாகவே களத்தில் இறங்கினார்.

சாதிய நச்சுக் கழிவாகிப் போன சமூகப் பிரதிபலிப்பாய் தன் சமூகத்தை பாதித்ததற்கான அளவீடான அஞ்சலகம் சென்று கார்டு – கவர்களை வாங்கினார். சாதி மனிதர்களின் புழுக்கச் சூழலுக்கு அவருடைய வெள்ளுடையும் கோட்டும், தலைப்பாகையும், செருப்பும் சாதிமானின் அடையாளமாகவே பட்டது. பிரச்சனை கட்டாயம் அஞ்சலகத்திற்குள்ளேயே வரும் என்று எதிர்பார்த்துச் சென்ற அவருக்குப் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டுவிட்டது.

ஆனாலும், அவரது திட்டமிட்ட “அஞ்சலகப் பிரவேசம்’ ஊருக்குத்  தெரிந்துவிட்டது. ஆதிக்கச் சாதியினர் கைகளில் கம்பும், கத்தியுமாக ஒன்றுதிரண்டு தலைவர் வீரையனைச் சுற்றி வளைத்தனர். இச்சம்பவம் காட்டுத் தீ போல் பரவவே, ஆதிக்கச் சாதியினரின் கொட்டத்தை அடக்குவதற்கு ஒரு நாளை எதிர்பார்த்திருந்த தலித் மக்கள், சுற்றுப்புற கிராமங்களிலிருந்து திரண்டு வந்து கம்புகளோடும் கத்திகளோடும் ஆதிக்கச் சாதியினரை சுற்றி வளைத்து நின்றனர். ஒரு சாரார் தலைவர் வீரையனின் பக்கம் வந்து சேர்ந்தனர்.

எந்த மக்களுக்காக விடுதலைப் போர் நடக்கிறதோ, அந்த மக்களின் பேராதரவும் அந்த மக்களிடமிருந்தே போர்ப்படையும் உருவாவதுதான் சரியானதாகும். தலைவர் வீரையன்  அவர்கள் தானே முன்  உதாரணமாய் தனிநபர்  ராணுவமானார். மனதில் பொறுமையிழந்த உணர்வும், எதிரிக்கு நாம் யார் என்று காட்ட வேண்டும் என்ற ஓர்மமும் கொண்டவராய், வீழ்ந்த வம்சத்தை உயிர் கொடுத்து நிமிர்த்தும் போராளியானார்.

“நான் எப்படி வாழ வேண்டும் என்பதைவிட எப்படிச் சாக வேண்டும் என்பது தான் எனக்கு முக்கியம்’ என்று கூக்குரலிட்டபடியே – எதற்கும் தயாராக வந்த நிலையில் தன் கத்தியை வெளியே எடுத்து நீட்டியபடியே ஆதிக்கச் சாதியினரை நோக்கி முன்நகர்ந்தார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத சாதிமிருகக் கூட்டத்திற்கு சண்டையும் வரவில்லை, சமாதானத்திற்கான வழியும் தெரியவில்லை. ஆனாலும் சூழ்நிலைமை விபரீதமாகவே மாறியது.

ஊர்க்கோடியில் இருந்த மக்கள் தங்கள் தலைவரைக் காப்பாற்றத் துணிந்து ஆதிக்கச் சாதியினரை நெருங்கினர். கற்களையும், கம்புகளையும் சரமாரியாக சாதி வெறியர்கள் மீது வீசி எறிந்தனர். சாதி சழக்கர் கூட்டம் நிலை தடுமாறியது;  சிதறி ஓட்டம் பிடித்தது. தம் மக்களின் ஒற்றுமையையும் வீரத்தையும் கண்டு புளகாங்கிதமடைந்த தலைவர் வீரையன், “நாம் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று எதிரிதான் தீர்மானிக்கிறான்’ என்றார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதான் வாலாஜாபாத்தில் மட்டுமல்ல, பிற இடங்களிலும் தலித் மக்கள் அஞ்சலகத்தை நேரடியாகப் பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டது. இது போன்ற வெற்றியை இந்தியத் துணைக் கட்டத்திலேயே முதன்முதலில் கண்டவர் தலைவர் வீரையன் அவர்கள்தான். இவ்வெற்றி, இன்றைக்கு 92 ஆண்டுகளுக்கு முன் பெற்ற வெற்றியாகும்.

எங்கெங்கு தலித் மக்கள் ஒடுக்கப்பட்டார்களோ, ஒதுக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் கலகத்தை ஏற்படுத்தி  வழி பிறக்கச் செய்தவர் தலைவர் வீரையன் அவர்கள். “திருச்சி புனித அன்னாள் கைம்பெண் விடுதலை’யில் தலித் பெண்ணைச் சேர்க்க மறுத்த போதும் திருச்சி மாவட்டம் பெரம்பலூர் வட்டம் குறும்பலூர் யூனியன் போர்டு உறுப்பினர் காத்தான் அவர்களையும், சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுக்கா போர்டு உறுப்பினர் முத்தன் அவர்களையும் போர்டு கூட்டங்களில், ஆதிக்கச் சாதியினர் சமமாக உட்கா வைக்காமல் வெளியே நிற்க வைத்து கூட்டம் நடத்தியதற்காகவும், திருவண்ணாமலை கீழாத்தூர் ஆரம்ப பாடசாலையில் தலித் மாணவர்களை அனுமதிக்க மறுத்தபோதும், ஜோலார்பேட்டையில் தலித் மக்களின் கிணற்றை சாதி இந்துக்கள் பாழ்படுத்திய போதும் எழுந்த கலகங்களில் – தலைவர் வீரையன் அவர்களின் தலையீடு வெற்றிமேல் வெற்றி பெற்றவையாகும்.

அந்நாளில் படித்த பூர்வீகத் தமிழர்களைக் காட்டிலும் அவர்களுக்குக் குறைவாகப் படித்த உயர்த்தப்பட்ட சாதியினருக்கே ஒரே பதவியில் இருந்தாலும் அதிக ஊதியம் கிடைக்கச் செய்வது வழமையாக இருந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வேங்கைக் குறிச்சி என்ற கிராமத்தில், பள்ளி இறுதி வகுப்பு வரை படித்து ஆசிரியர் பணிக்கு வந்த தலித் ஒருவருக்கு  ஊதியம் ரூ.15 தரப்பட்டு, அவர் நாற்காலி மீது அமர்ந்து பாடம் சொல்லித் தரக்கூடாது என்கிற நிபந்தனையும் இருந்தது. ஆனால், நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு ஆசிரியர் பணிக்கு வந்த சாதி இந்துக்கு ஊதியம் ரூ.22 கொடுக்கப்பட்டது. இதுபோன்ற இந்து காழ்ப்புணர்வு எங்கு நிகழ்ந்தாலும் தட்டிக் கேட்டு, ஒரு பதவிக்கு ஒரே மாதிரியான ஊதியம் என்பதை நிலை நாட்டினார் வீரையன்.

எந்த ஆதிக்கச் சாதியினரிடமும் அடிபணிந்து போகாமல் மானுடத்தின் உண்மையின் பக்கமும், நீதியின் பக்கமும் நின்றவாறு அடக்கி ஒடுக்கப்படும் மக்களின் குரலாக, இயக்கமாக உருவானதால் தலைவர் வீரையன் மீது பல வழக்குகள் ஜோடிக்கப்படடன. தலைவர் வீரையன் தலித் மக்களிடம் பேராதரவைப் பெற்றவர் என்றாலும், அவர் சுட்டிக் காட்டும் திசையை நோக்கிச் சென்றிட மக்கள் அணியமாக இருந்தாலும், எதைக் கேட்டாலும் தந்திட மக்கள் தயாராக இருந்தாலும் தனக்காகவும், தன் மீதுள்ள வழக்குகளுக்காகவும் தன் மக்கள் செலவிட அவர் ஒரு போது அனுமதித்ததில்லை.

தலைவர் வீரையன் மனித நேசிப்புக்கும் கருத்து மோதலுக்கும் பின் வாங்காதவர். ஆதலால், “ஆதி திராவிடக் காவலன்’ எனும் ஏட்டினை வெளியிட்டார். சிலுசிலுத்தோடும் அவரின் எழுத்தோட்டம், மக்கள் உணர்வலையில் சேகரித்த அனுபவப் படிமங்கள் ஆகும். அதுதான் அவரின் காரியமாற்றலுக்கு விசாலமாகவும், மக்கள் மீது கொண்ட கரிசனமாகவும் அனுசரணையாகவும் மிகுந்த நேசப் பெருக்காகவும் இருந்தது. தலித் மக்களின் விடுதலைக்கான கருத்தியல் ஆதாரத்தை அழுத்தமாக உருவாக்கியதில், “ஆதி திராவிடக் காவலன்’ தலித் மக்களின் போர் முரசாகத் தடித்தது. இது, தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்தது.

அன்றைய ஆங்கிலேயே அரசு ஒடுக்கப்பட்ட மக்களிடத்தில் இருந்து பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்த பொறுக்கு மணிகளில் ஒருவர் தலைவர் வீரையன். அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாகிவிட்டால் கிடைக்கவிருக்கும் உயர்மதிப்பிற்கும், ஆதிக்கபுரியினர் நண்பர் களானால் கிடைக்கப் பெறும் செல்வாக்கிற்கும் ஆட்படாமல் – பிறந்த சமுதாயத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்.

1920லிருந்து 1926 வரை சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகப் பணியாற்றிய தலைவர் வீரையன், அவையில் எழுப்பிய கேள்விகள் நூற்றுக்கும் மேற்பட்டவை ஆகும். அவை அனைத்தும் ஒடுக்கப்பட்ட சமுதாயம் வாழ – வளர வேண்டும் என்பதற்காகவும்,  மற்றவர்களுக்கு சமமாக உயர வேண்டும் என்பதற்காகவும் ஆளுவோரைத் துருவித் துருவி தொடுத்த கேள்விக் கணைகளாகும்.

சட்ட மேலவையில், சட்டங்கள் தலித்துகளுக்கு சாதகமான

வையாக, அவர்களது உரிமைகளுக்கு உத்திரவாதம் தருபவையாக அமைய வேண்டுமானால், அச்சட்டங்களை தலித் மக்களின் பிரதிநிதிகளே உருவாக்க வேண்டும் என்றார். “சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற கவர்ச்சிகரமான அரசின் முழக்கத்திற்கு அர்த்தம் உண்டென்றால், அரசு ஏற்கனவே பிறப்பித்த சட்டங்களுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்றார்.

தலித் மக்களின் முன்னேற்றத்தைக் கண்டு பொறுக்காத ஆதிக்க சாதியினரின் நடவடிக்கைகளைத் தடுக்க, 1845ஆம்ஆண்டு லெக்ஸ்லோசி என்பவரால் கொண்டு வரப்பட்ட வரைவுச் சட்டத்தினையும், சாதிய முட்டுப்பாடுகள் நீக்கச் சட்டத்தினையும் நிறைவேற்ற, 1891ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட   சட்டத்தின்படி, பஞ்சமி நிலங்கள் வழங்கக் கோரியும் தனி நபர் தீர்மானங்களைக் கொண்டு வந்தார்.

பின்னாளில் வந்த குடியுரிமைகள் பாதுகாப்புச் சட்டத்திற்கும், தற்போதைய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத்தடுப்புச் சட்டமும் காலப்போக்கில் வர அந்நாளில் அச்சாரம் போட்ட அவர், சமூகத்தில் மிகப் பின்னடைவில் இருக்கும் சமூகக் குழுக்களை அரசு வரையறை செய்யக் கோரினார்.

16.5.1926இல் நடைபெற்ற சென்னை மாகாண ஆதிதிராவிடர் மாநாட்டில், “நாம் இந்நாள் வரையில் புறக்கணிக்கப்பட்ட வகுப்பினர்களாகவே இருந்து வருகிறோம். நாம் இனிமேல் ராஜாங்க சம்பந்தமான காரியங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் எந்தக் கட்சிக்காரர்களிடமும் கூட்டுச் சேர வேண்டியதில்லை. மக்களுக்கான நலனில் உங்களுடைய மனதிற்கு எது சரியென்றும் நியாயம் என்றும் தோன்றுகிறதோ அதன்படி செயல்படுங்கள். நாம் பிறரை நம்பக்கூடாது; அந்நியர்களுடைய வார்த்தை ஜாலங்களுக்கு செவிசாய்க்கக்கூடாது’ என்று கேட்டுக் கொண்டார்.

சுதந்திர சமத்துவ வெளியில் மானமும் – அறிவும் – பொலிவும் உள்ளவர்களாகத் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற வேட்கையோடு தம் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டிய தலைவர் வீரையன் அவர்கள், 1928ஆம் ஆண்டு தலித் விடுதலையின் விதையாகவே இம்மண்ணுக்குள் புதைக்கப்பட்டார். தலித் மக்களின் உயிர்கொப்பளிப்பான தலைவர் வீரையன் அவர்கள், தன் தனிப்பட்ட எந்த சுகத்துக்கும் சொரிதலுக்கும் தம் மக்களின் நலனை விற்றுக் கொண்டதில்லை. எந்த ஆதிக்கக் குழுவின் நிழலிலும் ஒதுங்கவோ, சீமான்கள், பூமான்களிடம் ஒட்டவோ ஒருபோதும் நினைத்ததில்லை.

தன்னுடைய வாழ்வின் தனிப்பட்ட ஆசாபாசங்களினாலோ, தன் கைங்காரத்தின் திரையிலோ தன்னைக் குறைத்துக் கொள்ளாத அவருடைய சமூக நீதியுணர்வே அவருடைய ஆளுமையின் மய்யமாகும்.

“தலித் முரசு’ –  நவம்பர் 2002

Load More Related Articles
Load More By sridhar
  • பேராசிரியர் லக்ஷ்மிநரசு

    உலக கவி ரவீந்திரநாத் தாகூர், விஞ்ஞானிகள் சர் ஜே. சி. போஸ், பி சி ரே போன்ற புகழ்பெற்ற மேதைக…
  • பண்டிதமணி க. அப்பாதுரையார்

    பண்டிதமணி க. அப்பாதுரையார் ஆசிரியர்: தமிழன் (கோலார்) 1890 – 1962   இலக்கியத்தில…
  • ரவிதாஸ்

    “ரவிதாஸ் ஆகிய நான், வேதங்கள் அனைத்தும் பயனற்றவை என்று பிரகடனப்படுத்துகிறேன்’’ தீண்டத…
Load More In வாழ்க்கைக் குறிப்புக்கள்

Leave a Reply

Your email address will not be published.