அம்பேத்கரியப் பொருளாதாரம்

இருபதாம் நூற்றாண்டு இந்தியத் துணைக் கண்டத்திற்கு மட்டுமல்ல ஆசியநாடுகள் அனைத்திற்கும் மறுமலர்ச்சி நூற்றாண்டாகும். இந்தியாவை மறுமலர்ச்சி மிக்க நாடாக்குவதில் இருபதாம் நூற்றாண்டில் இணையற்ற பல அறிஞர்கள் தம் பங்களிப்பைச் செலுத்தினர். அந்த இணையற்ற அறிஞர்களில், தலைவர்களில் முதன்மையானவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் என்றால் மிகையில்லை. அவரின் வாழ்வும் போராட்டமும் சிந்தனையும் இந்தியச் சமூகத்தைப் பலதளங்களில் அசைத்துள்ளன. அதற்கான முக்கியக் காரணம் அவரின் சிந்தனையும் செயலும் ஒன்றிணைந்து செயல்பட்ட தன்மையே எனலாம். இங்கு அவரின் பொருளாதாரச் சிந்தனைகள் பற்றிச் சிறிது காண்போம்.

டாக்டர் அம்பேத்கர் அடிப்படையில் பொருளாதார அறிஞர்

  டாக்டர் அம்பேத்கர் அடிப்படையில் பொருளாதார அறிஞர். தனது இரண்டு டாக்டர் பட்டங்களை அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பொருளாதாரத்தில் பெற்றார்.உலகம் கவனிக்கத்தக்கப் பொருளாதார ஆய்வுகளை அவர் எழுதியுள்ளார். எட்வின் கெனான், செலிக்மேன் உள்ளிட்ட மாமேதைகளிடம் பயின்றவர். பெர்ட்பிரண்ட்  ரஸ்ஸல், உள்ளிட்ட பல அறிஞர்களின் நூல்களை விமர்சித்து எழுதியுள்ளார். அவர்களோடு கலந்துரையாடியுள்ளார். இந்தியப் பாராளுமன்ற விவாதங்களில், அவர் உரைகளில் உலகின் பல நாடுகளில் நுட்பமான செய்திகள் மிகச்சாதாரணமாக இடம் பெற்றிருக்கும். அதனால்தான் எதிரிகளாலும் அவரின் அறிவாண்மையும் செயல்பாடுகளும் வியந்து போற்றப்பட்டன. எனவே, டாக்டர் அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனை இந்தியாவை எவ்வாறு மாற்றியமைத்தது? இன்றைக்கும் (உலகமய, தனியார்மய, கணிப்பொறிமய) எவ்வாறு பொருத்தமாக உள்ளது? என்பதையும் காண்பது இந்திய வரலாற்றையே மீண்டும் பார்ப்பதாக அமை யும் என்றால் மிகப் பொருந்தும்.

அம்பேத்கரியப் பொருளாதாரமும் காந்தியப் பொருளாதாரமும்

இந்தியச் சூழலில் டாக்டர் அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனையைப் புரிந்துக் கொள்வதற்குக் காந்தியப் பொருளாதாரத் தோடு ஒப்பிட்டுக் காண்பது மிக எளிதான ஒன்றாக  இருக்கும்.

அம்பேத்கரியப் பொருளாதாரம்

 1. தனிமனித விடுதலை அவரின் உணர்வுகள், வாழ்க்கை, உரிமைகள் மிக முக்கியம்.
 2. பெளத்தத்தில் வேர்கொண்டது.
 3. நகர்மயம், அறிவியல்மயம், தொழில் நுட்ப வளர்ச்சி. (கிராமங்கள் சாதியின் கொடூரப்பிடியில் உள்ளன – டாக்டர் அம்பேத்கர்)

காந்தியப் பொருளாதாரம்

 1. தனிமதர் முக்கியமல்ல; சாதியம், வருணம் முக்கியமானது.
 2. இந்துத்துவத்தில் வேர் கொண்டது
 3. கிராமிய வாழ்முறை வேளாண்மை, கதர் போன்றவை போற்றல்.

(கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு –  அண்ணல் காந்தியார்)

இந்த ஒப்பீடுகள் அறிமுக நிலையில் தான் உள்ளன. ஆழமாக நுணுகிக் கண்டால் இன்னும் பலவற்றை விளக்க முடியும். ஆனால் இம்மூன்று கருத்துக்களும் அடிப்படையானவை; வேறுபடுத்திக் காண இவை போதும். இந்த இருவரின் உடைபற்றிய அரசியலை வைத்தே அவர்களின் பொரு ளாதாரப் பார்வைகளை விளக்க முடியும்.

காந்தியப் பொருளாதாரம் பற்றி டாக்டர் அம்பேத்கர்

“காந்தியப் பொருளாதாரம் மிகவும் தவறானது. எந்திரங்களும் நவீன நாகரிகமும் பலதீமைகளைத் தோற்றுவித்துள்ளன என்பதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால் இந்தத் தீமைகள் அவற்றுக்கு எதிரான வாதமாகாது. ஏனென்றால் இந்தத் தீமைகளுக்கு எந்திரங்களும் நவீன நாகரிகமும் காரணமல்ல. தனிச்சொத்துரிமையும் சொந்த சுயநல ஆதாயங்களில் நாட்டம் கொள்வதையும் புனிதமானவையாக மீறவொண்ணாதவையாக ஆக்கியுள்ள தவறான சமூக அமைப்பே இதற்குக் காரணம்’  (பக்: 455 – தீண்டப் .. கா.கா.என்ன)

மேலும் காந்தியப் பொருளாதாரம் பற்றிய டாக்டர் அம்பேத்கரின் கருத்துக்களை விரிவாகக் காண விரும்புவோர் ‘‘காந்தியம்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள விரிவான ஆய்வு யாவரும் ஆழ்ந்து காணலாம். ஆங்காங்கே அப்பகுதியில் வரும் சிறு சிறு தொடர்கள் இங்கு சுட்டிக்காட்டத்தக்கன.

 • காந்தியத்தில் சாமானிய மனிதனுக்கு எதிர்காலம் ஏதுமில்லை,
 • ரூசோ, ரஸ்கின், டால்ஸ்டாய் போன்றோரின் கருத்துக்களையே காந்தியம் கிளிப் பிள்ளை போல் திரும்பத் திரும்பக் கூறு கிறது.
 • ஜனநாயகத்தைத் தனது குறிக்கோளாக ஏற்றுக்கொள்ளாத ஒரு சமுதாயத்துக்கு வேண்டுமானால் காந்தியம்  பொருத்த மானதாக இருக்கக் கூடும்.
 • சமுதாயத்தின் வர்க்கக் கட்டமைப்பையும் அதேபோல் வருமானக் கட்டமைப் பையும் அது புனிதமானவையாகக் கருதுகிறது; இவற்றின் விளைவாக ஏற்படும் ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் முதலாளி, தொழிலாளி போன்ற  பாகுபாடுகளைச் சமூக ஒழுங்கமைப்பின் நிரந்தர அம்சங்களாகவும் அது பாவிக்கிறது. சமூக விளைவுகள் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது இதைவிடக் கேடுபயக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை என்றே கூறலாம்.
 • காந்தியத்தின் சமூகக் குறிக்கோள் சாதியாகவோ அல்லது வருணமாகவோ இருக்கலாம். இவற்றில் எது அதன் குறிக்கோள் என்று திட்டவட்டமாகக் கூறுவது கடினம். என்றாலும், காந்தியத்தின் சமூகக் குறிக்கோள் ஜனநாயகமில்லை என்பதில் எத்தகைய ஐயப்பாட்டுக்கும் இடமில்லை.

காந்தியம் குறித்து இதே கருத்தினைச் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரும் பெரியார் ஈ.வெ.ராவும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் கொண்டிருந்தனர் என்பது விரிவாக ஆய்வு செய்வோர்க்குப் புலனாகும். காந்தியப் பொருளாதாரம் இந்துத்துவத்தில் வேர் கொண்டு சில வகுப்பினர்க்கே வளமானயாவும் வழங்குகின்றன. ஆனால் அம்பேத்கரியத்தின் பொருளாதாரமே பெளத்தத்தில் வேர்கொண்டு அனைவருக்குமான சமூகமாற்றை முன்மொழிகின்றது.

இந்தியாவில் மதம்பெறும் முக்கிய இடம்

                பொருளியல் பயின்ற பாபாசாகேப், அம்பேத்கர், மார்க்சைப் பயின்ற பாபாசாகேப் அம்பேத்கர் ஏன் மத, சமூகப் புரட்சிகளுக்கும் வர்க்கப் புரட்சிகளை விட ஆழமான இடம் தந்தார்? இது முக்கியமான வினா அவரே கூறுவதாவது:-

‘‘மதம், சமூக அந்தஸ்து, சொத்துடைமை ஆகிய அனைத்தும் ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்திற்கும்  ஆதிக்கத்திற்கும்  அடிப்படைகளாவன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலத்தில் மேலோங்கி நின்று ஒன்றின்மேல் ஒன்று ஆதிக்கம் செலுத்துகின்றன. இவற்றிற்கு இடையிலான அடிப்படை வேறுபாடு இதுதான். சுதந்திரம் என்பதே குறிக்கோள் என்றால், ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் மேல் ஆதிக்கம் செலுத்துவதை ஒழிப்பதே சுதந்திரத்தின் பொருள் என்றால் பொருளாதாரச் சீர் திருத்தம் ஒன்று மட்டும்தான் நாம் மேற்கொள்ளத்தக்க சீர்த்திருத்தம் என்பதை வலியுறுத்த முடியாது. ஒரு சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அதிகாரத்திற்கும்  ஆதிக்கத்திற்கும், மதமும் சமுதாயமும் அடிப்படைகளாக இருந்தால் அந்தக் கட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசியமான சீர்திருத்தம், மதசீர்திருத்தமும் சமுதாய சீர்திருத்தமுமே ஆகும்’’.  (பக்கம்: 41,42 கேள்விகளும் அம்பேத்கரும்) இக்காரணத்தால்தான் புரட்சியாளர் அம்பேத்கர் வழியிலே பெரியார் ஈ.வெ.ரா உட்படச் சில முன்னோடிகள் தங்கள் பயணத்தை வர்க்கப் போராட்டத்தோடு நிறுத்த வில்லை.

ஏழை, பணக்காரன் என்ற வர்க்க உணர்வே இந்தியாவில் இல்லை

   இந்த சமூகத்தில் ஏழை, பணக்காரன் என்ற உணர்வே இன்னும் எழவில்லை. வர்க்க உணர்வற்று சாதிய உணர்வில் மிதக்கும் இந்தியாவில் வர்க்கப் புரட்சி வரவே வாய்ப் பில்லை. அப்படி வரவேண்டுமானால் சாதியம் அழிக்கப்பட வேண்டும். சாதியம் அழிக்கப்படாமல் எந்த மாற்றமும் இந்திய மண்ணில் வராது. இது அம்பேத்கரியப் பொருளாதாரத்தின் மிக ஆழமான ஓர் கருத்தாகும். ‘‘இந்திய நாட்டு பாட்டாளி வர்க்கத்தினர் அதாவது ஏழை எளிய மக்கள் தம்மிடையே ஏழை பணக்காரன் என்ற வேறுபாட்டைத் தவிர வேறெந்த வேறுபாட்டையும் பார்ப்பதில்லையா? இவர்கள் இந்த வேறுபாட்டைப் பார்க்கவே செய்கிறார்கள் என்பது உண்மையயன்றால், அத்தகைய பாட்டாளி மக்கள் பணக்காரர்களுக்கு எதிராக என்ன வகையான ஒன்றுபட்ட அணியாகத் திரள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? பாட்டாளி வர்க்கம் ஒன்றுபட்டு ஓரணியாகத் திரள முடியாத நிலையில் புரட்சி எப்படிச் சாத்தியமாகும்? (பக்: 42,43, கேள்விகளும் அம்பேத்கரும்) இது பாபாசாகேப் எழுப்பும் வினா. இதற்கு அவரே பதிலளிக்கிறார்.

 ‘‘நீங்கள் எந்தத் திக்கில் திரும்பினாலும் சாதி அரக்கன் உங்களை வழிமறிப்பான். அந்த அரக்கனைக் கொன்றொழித்தாலன்றி அரசியல் சீர்திருத்தமோ, பொருளாதாரச் சீர்திருத்தமோ பெற  முடியாது’’  (பக்: 43 அதே நூல்)  மேலும் அவர் கூறுவதாவது,

 “என்னைப் பொறுத்தவரை இந்நாட்டுத் தொழிலாளர்கள் இரண்டு பகைவர்களோடு போராட வேண்டியுள்ளது. ஒன்று – பிராமணியம். இரண்டு – முதலாளித்துவம்; …. பிராமணியம் என்னும்  எதிரியை நாம் சமாளிக்க வேண்டும் என்று சொல்லும்போது என்னைத் தவறாகப் புரிந்துக் கொள்ளக் கூடாது. பிராமணர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில் அதிகாரம், உரிமைகள், நலன்கள் பெறுவதை நான் பிராமணியம் என்று சொல்லவில்லை. அந்த அர்த்தத்தில் நான் பிராமணியம் என்னும் சொல்லைப் பயன்படுத்தவில்லை. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உயிர்ப்புகளின் எதிர்மறைதான் என்று சொல்கிறேன். இந்த எதிர்மறை உணர்வு எல்லா வகுப்பினர்களிடையேயும் உண்டு. பிராமணர்கள் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும் அது எல்லா வகுப்பினர்க்கிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை”. (பக் : 227, 228,தொகுதி – 37 பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும்  எழுத்தும் – தமிழ்) வேறொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையில் “மகர்” என்ற மக்களைப் பார்த்து அவர் விடுக்கும் கருத்தில் சில பகுதிகளை இங்கு காண்போம்.

  “இந்துமதம் உங்களுக்கு நல்ல உடை, உறைவிடம், வாழ்க்கை, பொருளாதாரம் பெற அனுமதிப்பதில்லை. மற்ற சமூகத்தாருக்கு ஏவலாளியாக, அடிமையாக இருக்கக் கற்பிக்கிறது. இப்படிப்பட்ட மதத்திலிருந்து வெளியேறுவது தான் பொருளாதார விடுதலையினும் மிக முக்கியமானது”.

(விரிவாகக் காண விரும்புவோர் பார்க்க: 168 – 170)

(தொகுதி -37 பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும்  எழுத்தும் ‡தமிழ்)

 அம்பேத்கரியப்  பொருளாதாரத்தின் அடிப்படைகள்

 1. அம்பேத்கரியப் பொருளாதாரம் என்பது அறிவியல், பகுத்தறிவு நெறிகளில் அமைந் தது.
 2. மத அடிப்படையில் பெளத்தப் பின் புலத்தில் மக்களின் சமத்துவத்தை நாடுகிறது.
 3. அரசியல் அடிப்படையில் ஜனநாயகத்தை அது கொண்டுள்ளது.
 4. இந்தியச் சமூகத்தைப் பொருத்த மட்டில் பெண்கள் விடுதலைக்கும் ஒடுக்கப்பட்ட, பிற்பட்ட வகுப்பினர்களுக்கும் அம்பேத்கரியத்தைத் தாண்டிய இன்னொரு விடுதலைச் சித்தாந்தம் இன்றுவரை வரவில்லை. காரணம் யாதெனில் சாதி அமைப்பு குறித்தும் அதன் படிப்படியான சமத்துவமின்மை குறித்தும் பேராய்வைச் செய்தவர் பாபா சாகேப் அம்பேத்கர். சாதியஅமைப்பு, வருண அமைப்பு மிகத் தெளிவான திட்டமிட்ட உழைப்புச் சுரண்டலின் வடிவமே என்று ஆய்ந்துரைத்த மேதைமையை வேறு எவரிடமும் காண முடியாது.
 5. வன்முறையற்ற அணுகுமுறையில் சமூக மாற்றத்தை முன்னெடுப்பது அம்பேத்கரிய பொருளாதாரத்தின் அடிப்படையாகும். ஆனால், அதே நேரத்தில் அது பெளத்தப் பார்வையில் தற்காத்துக் கொள்ளவும் பொது நன்மை கருதி ஆயுதம் ஏந்துவதைத் தடைசெய்யவில்லை.
 6. வேளாண்மை, நாணயச்செலாவணி, நிதித்துறை, மக்கள் தொகைக் கட்டுப்பாடு, தொழிலாளர் நலன், பெண்கள் விடுதலை, நதிநீர்ப்பங்கீடு உள்ளிட்டப் பல துறைகளில் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய பணி முன்னோடித் தன்மை வாய்ந்ததாகும்.
 7. சமூகம், அரசியல், பொருளாதாரம், சமயம் ஆகிய துறைகளில் அம்பேத்கரியம் தலைகீழ் மாற்றத்தைக் கொணர்கிறது.
 8. தனிமனித வழிபாட்டையும் கடவுள் வழிபாட்டையும் மறுக்கும் அம்பேத்கரியப் பொருளாதாரம் ‘தம்மம்’என்ற கட்டமைப்பின் கீழ் சமத்துவ வாழ்வியலுக்கான பண்பாட்டுத்தளத்தை உருவாக்குகிறது.

டாக்டர் அம்பேத்கரின் பொருளாதாரம் குறித்த நூல்களும் அதுபற்றிய ஆய்வு நூல்களும்

   டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பொருளாதார ஆய்வு நூல்கள், கட்டுரைகள் பல உள்ளன.பெரும்பாலானவை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன.

  1915 இல் ‘‘கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாகமும் நிதிக்கோட்பாடும்’’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை எம்.ஏ., பட்டத்திற்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கர் அளித்தார்.

 1917 இல் ‘‘பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாண நிதியின் வளர்ச்சிக் கோட்பாடு’’ என்ற ஆய்வுக்கட்டுரை முனைவர் (P.Hd.,) பட்டத்திற்காக கொலம்பியா பல்கலைக் கழகத்தில் டாக்டர் அம்பேத்கர் அளித் தார்.1925 இல் நூலாக வெளியிடப்பட்டது.

  1923 இல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் ‘‘ரூபாயின் சிக்கல்’’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை அறிவியல் டாக்டர் பட்டம் டி.எஸ்.ஸி (DSC) பட்டத்திற்காக டாக்டர் அம்பேத்கர் அளித்தார். பின்னர் இது நூலாக வெளிவந்தது.

இம்மூன்று நூல்களும் டாக்டர் அம்பேத்கரின் பொருளாதார ஆய்வுகளின் அடிப்படை நூல்களாகும்.

1918‡ பெர்டிரண்ட் ரஸ்ஸல் நூலுக்கு எழுதிய விமர்சனக் கட்டுரை,

1918‡ இந்தியாவில் சிறுநிலவுடைமையும் அதற்கான தீர்வுகளும்,

1919‡செளத்பரோ குழுவிடம் அளித்த அறிக்கை.

1925 ‡ ஹில்டன்யஸ் தலைமையிலான இந்திய நாணயக் குழுவிடம் அளித்த அறிக்கை.

1928 ‡ சைமன் குழுவிடம் அளித்த அறிக்கை. என்று ஏராளமான பொருளாதாரம் சார்ந்த கட்டுரைகளையும் பாபாசாகேப் அம்பேத்கர் எழுதினார்.

  இந்தியாவின் அரசியலமைப்புப் சட்டம், சாதி ஒழிப்பு குறித்த ஆய்வுகள், இந்துச்சட்ட மசோதா, சட்டவியல் ஆய்வுகள், பவுத்த ஆய்வுகள் என்று தன் வாழ்நாளில் பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய பலதுறை சார்ந்த நூல்களிலும் கட்டுரைகளிலும் பொருளாதார ஆய்வு விரவிக் கிடக்கின்றது.

  தொழிலாளர் விடுதலை, பெண்விடுதலை, தீண்டப்படாதவர் விடுதலை என்று வரும்போதும், அவைபற்றிய மாநாட்டு உரைகள், பாராளுமன்ற விவாத உரைகள் என யாவற்றிலும் தன் நுண்மான் நுழைபுல ஆற்றலைப் பாபாசாகேப் அம்பேத்கர் அளித்தார். அவையாவற்றிலும் பொருளா தாரப் பார்வைகளை விரிவாக அலசிக் காணலாம். ஆங்கிலத்தில் இப்பார்வையில் பாபாசாகேப் அம்பேத்கரை அணுகிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழில் இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன.

1.டாக்டர் அம்பேத்கர் ஒரு பொருளியல் மேதை  (பேரா. இராமதாஸ், புதுவைப் பல்கலைக் கழகம் 1996) 300 பக்கங்களுக்கு மேல் உள்ள நல்லதொரு முன்னோடி நூல் இது.

 1. டாக்டர் அம்பேத்கரின் பொருளாதாரச் சிந்தனை வரலாறு. (மு.நீலகண்டன். அலைகள் வெளியீட்டகம் 2007‡சென்னை-24, 144 பக்கங்கள் கொண்ட இந்நூலும் நல்லதொரு நூல் ஆகும்.)

சில கட்டுரைகள் கல்விப்புலம் சார்ந்தும் சாராமல் (ஹிலிஐ புஉழிdeதுஷ்) உள்ளவர்களும் எழுதியுள்ளனர். தொழிலாளர்  நெஞ்சில் அம்பேத்கர், இந்தியாவின் மேதினத் தந்தை டாக்டர் அம்பேத்கர் எனச் சிறியதும் பெரியதுமாகச் சில நூல்கள் வந்துள்ளன.

பெளத்தம் ஏழ்மையைப் போற்றவில்லை

     ‘‘ஏழைகள் பேறுபெற்றோர் ஏனெனில் சொர்க்கலோகம் அவர்களுடையது’’ என்றும் இன்னும் பல கதைகளையும் கூறி ஏழ்மையைப் புகழ்கிறது கிறித்துவ மதம். இந்துமதம் திட்டமிட்டுச் சூத்திரர் +தீண்டப்படாதவர்கள்  உள்ளிட்ட 80% மக்களின் உழைப்பைச் •ரண்டி அவர்களை ஒன்றுமற்றவர்களாக்கிச் சக்கைகளாக்கி மேல்வருணத்தாருக்கு உழைப்பதே தருமம் என்றாக்கி சமத்துவமின்மைக்குத் தெய் வீகத்தன்மை அளித்துள்ளது. இன்னும் பல மதங்கள் இப்படியே உள்ளது. பாபா சாகேப் அம்பேத்கர் அரசியல் முறைகளில் ஜனநாயகத்தை இந்திய மண்ணில் விதைத்த பின்னர் மத அமைப்புகளில் பெளத்தத்தை வளர்த்தார். அவர் கட்டியமைத்த பெளத்தம் நவீன மனிதனுக்கும் மானுட சமூகத்திற்கும் ஏற்றதாக அமைந்தது.

பெளத்தத்தைக் காரல்மார்க்•டன் ஒப்பிட்டு பல வியத்தகு செய்திகளைப் பாபாசாகேப் அளித்தார். ‘‘புத்தரா கார்ல்மார்க்சா’’ என்ற தலைப்பில் அவர் அளித்த உரையும் கட்டுரையும் மிகச்சிறந்தவை. மேலும் அவர் எழுதிய ‘‘புத்தரும் அவர் தம்மமும்’’ நூலில் ஒருவன் ஏன் செல்வம் சேர்க்க வேண்டும் என்பதற்குப் புத்தர் ஐந்து காரணங்களைக் கூறுகிறார்.

 1. நேரிய வழியில் பெறப்பட்ட செல்வம் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் மகிழ்வளிக் கிறது.
 1. நண்பர்களை, உற்றார்களைச் செல்வத்தால் காக்கிறார்.

3.செல்வத்தைப் பாதுகாக்கிறார் (இயற்கை, செயற்கைச் சீற்றங்களில் இருந்து)

 1. உற்றார், உறவோர்,விருந்தினர், பெற்றோர், அரசர், அறவோர்க்கு அளித்து மகிழ்கிறார்.

5.சான்றோர்க்குச் செல்வம் அளிக்கப் படுவதால்  தான்பெறும் பேறுவகை.

  இவ்வாறு புத்தர் செல்வத்தைப் போற்றியதைப் பதிவுசெய்யும் பாபாசாகேப் அம்பேத்கர் பல இடங்களில் ஒடுக்கப்பட்டோர் வறிய நிலைக்கு அவர்களின் இந்து மதமே இதற்குக் காரணம் என்று விரிவாக எழுதியுள்ளார். பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய, காட்டிய இவ்விடயங்கள் இன்றுவரை பொருத்தமோடு உள்ளன. ஒடுக்கப்பட்ட சமூகங்கள் பொருளாதார மேம்பாடு அடையும் போது வேறு யாரையும் விட இந்துக்கள் பெரும் சீற்றம் கொள்கின்றனர். மனுதருமத் திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் கிராமச் சட்டங்கள் வரை யாவும் ஒடுக்கப்பட்டோர் பொருளா தார மேம்பாடு பெறுவதைத் தடை செய் கின்றன. உணர்ச்சிகரமான ஓர் உரையில் பாபாசாகேப் (1956 அக்டோபர் 15 மதமாற்ற உரை) இப்படிக் கூறுகிறார்:‡

 ‘‘ இந்து மதத்தில் இருப்பதன் மூலம் எவரும் எவ்வகையிலும் வளமுற இயலாது, நலமுற முடியாது. இந்து மதத்தில் அடுக்கமைவு முறை நடைமுறையில் இருந்து வருவதால் உயர் வருணத்தவர்களும் சாதியினரும்தான் நலமுறுகின்றனர், வளம் பெறுகின்றனர், ஆனால் மற்றவர்களின் நிலைஎன்ன? கதி என்ன? ஒரு பிராமணப் பெண், குழந்தை பெற்ற கணமே அவருடைய கண்கள் உயர்நீதிமன்ற நீதிபதி பதவி எங்கு காலியாக இருக்கிறது என்று சல்லடைப் போட்டு துலாவுகின்றன. இதற்கு மாறாக, நமது தோட்டிப் பெண் ஒரு குழந்தையை ஈணும் போது எங்கு தோட்டி வேலை காலி யாக இருக்கிறது என்றுதான் அவருடைய கண்கள் தேடுகின்றன. இத் தகைய ஒரு விசித்திரமான, வேதனையான, வாதனையான அமைப்பு முறை  நிலவு வதற்கு இந்து மதத்தின் வருண‡அமைப்பு முறையே காரணம். இதிலிருந்து எந்த முன்னேற்றத்தை நாம் காணமுடியும்? புத்த மதத்தில்தான் வாழ்வு வளத்தையும் நலத்தை யும் எய்த முடியும்’’. (பக் : 691, 692‡தொகுதி ‡37 பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் ‡தமிழ்)

இன்றைய சூழலில் அம்பேத்கரியப் பொருளாதாரத் தேவைகள்

 1. இந்தியாவில் சாதியம் உள்ளவரை பாபாசாகேப் அம்பேத்கரின் சிந்தனை வாழும். அவரின் போர்த் தந்திரங்களே தக்கத் தீர்வாக அமையும்.
 2. நதி நீர்ச்சிக்கல் குறித்து ஆழமான பலக்கருத்துகளை இவர் வெளியிட்டார். நதிநீரைச் சேமிக்கவும் இணைக்கவும் பல திட்டங்களை அளித்துள்ளார்.
 3. மொழிவாரிச் சிக்கல், (தேசியச்சிக்கல்) இந்தியாவில் இன்றைக்கும் இச்சிக்கல் நீடிக்கிறது. இதுபற்றி பல தெளிவான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
 4. ஏழைகளின் நிலம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து இவர் கூறியுள்ளவை இன்றும் பொருந்துவன.
 5. மக்கள் தொகைக் கட்டுப்பாடு சிந்தனை ‡ முன்னோடித் தன்மை வாய்ந்ததாகும்.
 6. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டம் (2009). 1928 ‡லேயே புரோகிதச் சடங்கு சட்டத்தின்கீழ்க் கொண்டுவரப்பட வேண்டும்.
 7. ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள சவால் ‡

  அம்பேத்கர் முற்கூட்டி உரைத்ததே.

 1. இந்திய விவசாயிகள் எழுச்சிக்குப் பாபா சாகேப்பின் பங்களிப்பை, முன்னோடிப் பணியை நாடு பின்பற்றாமல் விவசாயிகள் வீழ்ச்சிக்குத் தற்கொலைக்கு வித்திட்டு வருகின்றன. (பார்க்க : பக்:45 ‡ மார்க்சியப் பார்வையில் டாக்டர் அம்பேத்கர் பி.பி.சான்ஸ்கிரி)

9.உலகமயச் சூழலுக்கேற்ப தம்மை உருவாக் கல், ஆற்றலை வளர்த்தல், போராடுதல், நிறுவனங்கள் உருவாக்குதல் என்பன அவர் வாழ்க்கை தரும் செய்திகளாகும்.

 1. மார்க்சிய இயக்கங்கள் அம்பேத் கரியத்தைத் தேடி வருகின்றன. அவர் வழியின் சிறப்பை அங்கீகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முடிவுரை:

   இக்கட்டுரை மிக அடிப்படையான ஓர் அறிமுகக் கட்டுரையே. இக்கட்டுரையைப் பின்வரும் கருத்துக்களோடு ஆழ்ந்து பார்த்து முடிக்கலாம்.

பி.பி. சான்ஸ்கிரி கூறுகிறார்: ‡ (பக்: 48,49)

   “வன்முறை மற்றும் சர்வாதிகாரம்  ஆகியவற்றின் அடிப்படையில் மார்க்சியத் தத்துவத்தை அம்பேத்கர் விமர்சிப்பது என்பது பல்வேறு முதலாளித்துவ ஜனநாயக வாதிகளும், சோசிலிஸ்டுகளும்  செய்த விமர்சனத்தைப் போன்றதே ஆகும்.  அதே நேரத்தில் இந்திய சமூகத்தில் மிகவும் புறக்கணிக் கப்பட்ட சுரண்டப்பட்ட பிரிவோடு அவர் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டிருந்ததால் முதலாளித்துவ சனநாயகம் மற்றும் சந்தைப் பொருளாதாரம் ஆகியவற்றின் பாரம்பரியமான வழிகளை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாராளு மன்ற அமைப்புகளின் மூலம் பெரும் பான்மையோரின் ஆட்சியை அவர்  தரித்த போதிலும், இந்திய நிலைமைகளின்படி பெரும்பான்மை என்பது வகுப்புவாதம் நிரம்பியதாகவும் உயர் சாதிப் பெரும்பான்மை கொண்டதாகவும் இருக்கும் என்று உணர்ந்திருந்ததால் அவர்களின் சக்தியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று விரும்பினார். எனவேதான் அரசிய லமைப்புச் சட்டத்தில் இருந்த சோசிலிச அம்சங்களையும், சிறுபான்மையோரின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் திருத்து வதற்கான உரிமை பராளுமன்றத்திற்கு வழங்கப்படக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார். வர்க்கச் சுரண்டல் மற்றும் வர்க்கப் போராட்டம் ஆகியவற்றின் யதார்த்ததை அவர் ஏற்றுக்கொண்ட போதி லும் அதன் புரட்சிகர அரசியல் தாக்கங் களை அவரால் ஒப்புக்கொள்ள முடிய வில்லை. எனவேதான் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற புத்தரின் கொள்கைகளின் பக்கம் அவர் சார்ந்திருந்ததோடு, நவீன கால வர்க்க யதார்த்தங்களுக்குப் பொருந்தும் வகையில் புத்தரின் உபதேசங் களை வழங்குவதற்கும் அவர் முயற்சித் தார்”. (மு.பா.எழிலரசு எம். தங்கராஜ், ஆர்.பார்த்த சாரதி, தியாகு, உள்ளிட்ட பலர் டாக்டர் அம்பேத்கரின் பொருளாதார ஆய் வுப் போக்குகள், முன்னோடித் தன்மைகள் குறித்துத் தமிழில் ஓரளவு எழுதியுள் ளனர்)

   இவ்வகையில் இன்னும் பல கருத்துகளைப் பலர் வைத்துள்ளனர். இவைகள் விரிவாக ஆராயப்பட வேண்டும். அப்போதுதான் பொருளாதாரச் சமத்துவம் விரைவில் மலரும்.

Load More Related Articles
Load More By sridhar
Load More In அலசல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

சிந்தப்பட்ட பின்னும் கொப்பளிக்கும் இரத்தம்!

கொடிய இடைநிலைச் சாதியம் கொடிகட்டிப் பறக்கும் – தமிழகத்தின் மிகப்பெரும் கிராமமான மதுர…