மூன்று நாள்களுக்கு முன் சங்கர் ஆணவக் கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதற்குமுன்… இதே போன்ற ஆணவக்கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட நபருக்குத் தூக்குத்தண்டனை வழங்கியிருக்கிறது நெல்லை மாவட்ட நீதிமன்றம். வழக்கின் சாராம்சம் இதுதான்… 2013 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார் காவிரி. அவர் திருமணத்துக்கு உதவி செய்ததால் கொல்லப்பட்டார் தோழி கல்பனா. கொலை செய்ததாகக் கருதப்பட்ட காவிரியின் பெற்றோருக்கு இந்த வருடத் தொடக்கத்தில் தூக்குத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

உடுமலைப் பேட்டையில் பட்டப்பகலில் சங்கர்-கௌசல்யா வெட்டப்பட்ட சி.சி.டி.வி காட்சிகளைப் பார்த்தவர்களால் அத்தனை எளிதில் மறந்திருக்க முடியாது. அதுவும் அவர்களை வெட்டிவிட்டு அங்கிருந்த அந்தக் கும்பல் தப்பிச்சென்ற விதத்தை இப்போது நினைத்தாலுமே கொஞ்சம் பதற்றமாகத்தான் இருக்கிறது. 2016 ஆண்டு மார்ச் மாதம் நடந்த ஆணவப் படுகொலையில் சங்கர் இறந்துபோனார். கௌசல்யா பலத்த காயங்களுடன் உயிர்பிழைத்தார். அந்தச் சம்பவத்தில் உயிர் பிழைத்து முதல் இன்று தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்திக்கும் வரையிலான கௌசல்யாவின் பயணம் நினைத்துப்பார்க்க முடியாதது.

மனம் விரும்பிய சங்கர் கண்முன் வெட்டப்பட்ட சம்பவத்தால் நிலைகுலைந்த கெளசல்யா தற்கொலைக்கு முயன்றார்.  இன்று தன் கணவரின் கொலைக்குக் காரணமானவர்களுக்கு எதிராகப் போராடி, வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேருக்குத் தூக்குத்தண்டனை வாங்கித் தந்திருக்கும் அவரின் தைரியமும், துணிச்சலும் அசாத்தியம்!

சாக்கடையைச் சுத்தம் செய்யும்போது வரும் நாற்றத்தைப் போல, தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டதிலிருந்து ‘பெத்தவங்களுக்கு தெரியாதா? நான்தான் கௌசல்யா அப்பா பேசுறேன்’ என்று தொடங்கி, கௌசல்யாவை கொச்சைப்படுத்தி வருகிறார்கள் சமூக வலைதளத்தில் வெட்டி பெருமை பேசும் சில ஆண்கள். ‘மதம் மனிதனை மிருகமாக்கும்; ஜாதி மனிதனை சாக்கடையாக்கும்’ என்ற தந்தை பெரியாரின் கூற்று எவ்வளவு உண்மை!

“கௌசல்யா ‘கூத்தடிக்கிறார்’. சந்தோஷமாக இருக்கிறார்”  என்று சங்கரின் தம்பியுடன் கௌசல்யா எடுத்த புகைப்படத்தை கொச்சைப்படுத்தி எழுதிக்கொண்டிருக்கிறார்கள் சில நெட்டிசன்கள். இதைவிடக் மோசமாக எண்ணத் தோன்றுமா? தீர்ப்பின் ஆற்றாமை உங்களை இப்படி பேசவைத்துக்கொண்டிருக்கிறது.

இன்றைக்கு இங்கிருக்கும் பல்வேறு பெண்களுக்கு கெளசல்யா நிச்சயம் ஒரு ரோல் மாடல்தான். பெண்களுக்கு மட்டுமல்ல, ஜாதி ஒழிப்பிற்காகச் செயல்படும் பலருக்கும் கெளசல்யா ரோல் மாடல்தான். ஜாதியையும் ஜாதித் தலைவர்களையோ சமூக வலைதளங்களில் கலாய்த்துவிடுவது போன்றதோ, மேடைகளில் பேசுவது போன்றதோ அல்ல கௌசல்யாவின் பணி. அவர் தன் சொந்த ஜாதியை எதிர்த்து நிற்கிறார். சொந்தக் குடும்பத்தின் ஜாதிவெறியை எதிர்த்து நிற்கிறார். ’உயிருடன் இருக்கும் வரை ஜாதிக்கு எதிரான என்னுடைய போராட்டம் தொடரும்; ஜாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்று தெளிவாகப் பேசுகிறார்.

 

தீர்ப்புக்குப் பிறகான இன்றைய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய கெளசல்யா முகத்தில் கம்பீரம் மட்டுமே குடிகொண்டிருந்தது. அவரைப் பற்றி சமூக வலைதளத்தில் கொச்சையாகப் பேசப்படுவது பற்றிக் கேட்டதும் ‘உங்க பொண்ணுக்கு இப்படி நடந்தா… அப்படி எல்லாம் பேச விருப்பம் இல்லை. இது என்னுடைய விருப்பம். இந்த மாதிரி செய்பவர்கள் எல்லாம் மனநோயாளிகள்’ என்று ஒரே வரியில் முடித்துக்கொண்டார். மிகச் சரியான தெளிவான வார்த்தை. கணவர் இறந்ததும் வெள்ளைப் புடைவையில் அமங்கலமாக இருக்க வேண்டும். ஹேர்கட் செய்துகொண்டு, ஜீன்ஸ் போட்டால் கணவரின் தம்பியோடுகூட இணைத்துப் பேசப்படுவார்கள் என்று காட்டும் ஜாதிய சமூகம் மனநோயாளிச் சமூகமாகத் தானே இருக்க முடியும்? ஒருவர் மேல்; இன்னொருவர் கீழ் என்று யோசிக்கும் புத்தியே ஒரு மனநோயாளியினுடையதாகத் தானே இருக்க முடியும்.

ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஜாதிச் சண்டை போடும் மனநோயாளிகள். மனநோயாளி என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் பிரயோகிப்பதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள். இங்கு  மனநோயாளி என்ற வார்த்தை மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் குறிப்பது கிடையாது. ’கீழானவர்கள்’ என்று திருவள்ளுவர் கீழான செயல்களைச் செய்பவர்களை விளிக்கிறார். அதே போலத்தான், இங்கு மனநோயாளிகளும். நீங்கள் எவ்வளவோ விதவிதமான வாசனை திரவியங்களை அடித்துக்கொண்டாலும், நீங்கள் போர்த்திக் கொண்டிருக்கும் ஜாதியின் போர்வையிலிருந்து வெளிவரும் நாற்றம் உங்களை யார் என்று எங்களுக்கு எளிதாகக் காட்டிக்கொடுக்கிறது.

‘நான் இன்னொரு திருமணம் செய்துகொள்ளமாட்டேன்’ என்று சில நாள்களுக்கு முன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் கெளசல்யா பேசினார். அவர் இன்னொரு திருமணம் செய்துகொள்ளலாம்… செய்துகொள்ளாமலும் போகலாம். அது அவருடைய விருப்பம். சங்கர் மீதான காதலை கௌசல்யா எங்கும் சென்று வாதாடி நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை. ஜாதிவெறி அளித்த வலிகளுக்குத்தானே மருந்திட்டுக்கொண்டு, அவர் செய்துகொண்டிருக்கும் போராட்டமே சாட்சி.

கௌசல்யா சங்கரின் பெயரில் தனிப்பயிற்சி மையம் அமைத்திருக்கிறார். சங்கரின் கனவான வீட்டைக் கட்டி முடித்திருக்கிறார். சங்கரின் தம்பிகளை படிக்கவைக்கிறார். இதைப் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேச எவிடன்ஸ் கதிர் முயலும் போது, ‘அதெல்லாம் எதுக்கு சார்’ என்கிறார் கௌசல்யா. இன்றைக்கு இங்கிருக்கும் பல்வேறு பெண்களுக்கு கெளசல்யா நிச்சயம் ஒரு ரோல் மாடல்தான். பெண்களுக்கு மட்டுமல்ல, ஜாதி ஒழிப்பிற்காகச் செயல்படும் பலருக்கும் கெளசல்யா ரோல் மாடல்தான். ஜாதியையும் ஜாதித் தலைவர்களையோ சமூக வலைதளங்களில் கலாய்த்துவிடுவது போன்றதோ, மேடைகளில் பேசுவது போன்றதோ அல்ல கௌசல்யாவின் பணி. அவர் தன் சொந்த ஜாதியை எதிர்த்து நிற்கிறார். சொந்தக் குடும்பத்தின் ஜாதிவெறியை எதிர்த்து நிற்கிறார். ’உயிருடன் இருக்கும் வரை ஜாதிக்கு எதிரான என்னுடைய போராட்டம் தொடரும்; ஜாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்று தெளிவாகப் பேசுகிறார்.  கௌசல்யாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம்.

கணவரை இழந்த ஒரு பெண், அதுவும் ஜாதிக்காக தன்னுடைய சொந்தக் குடும்பத்தினராலேயே தன்னுடைய கணவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்கிற மன உளைச்சலைத் தாண்டி இன்று ‘தில்’ லாக தன்னுடைய தாயின் பெயரை அல்லது தந்தையின் பெயரை உச்சரிக்கும் போதோ, இன்றைக்கு ‘அவரை என் தந்தை என்று அழைக்காதீர்கள்’ என்று கடிந்துகொள்ளும் போதோ முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் சொல்கிறார். இப்படி கௌசல்யாவின் மன உறுதி ஜாதிய சக்திகளை உழற்றும் அளவிற்கு பலமாக இருக்கிறது. இந்தளவுக்கு கெளசல்யா செயல்பட அவருக்கு உறுதுணையாக நின்ற/நிற்கும் கீதா இளங்கோவன், எவிடன்ஸ் கதிர், முற்போக்கு அமைப்புகளைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

சங்கர் ஆவணக் கொலை வழக்கின் தீர்ப்பு வந்த அடுத்த நாளே காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியின் குழந்தை கள்ளிப்பால் கொடுத்து கொலை என்ற உறுதிப்படுத்தப்படாத செய்தியைப் படிக்க நேர்ந்தது. உறுதிப்படுத்தப்படாதது என்றாலும், கேட்டதும் நம்பி விடும்படியான செய்தியாகத்தான் இருக்கிறது. அதுதான் நாம். அப்படியானதொரு சமூகம்தான் நம்முடையது.

சில வருடங்களுக்கு முன் நீயா நானாவில் ஜாதி மாறி நடைபெறும் திருமணத்தைப் பற்றிய விவாதமொன்றில், ‘வெட்டி வீசுவேன்’ என்றார் ஒரு தந்தை. இந்தத் தீர்ப்பிற்கு இன்னும் மேல் முறையீடுகள் நடைபெறலாம்; தூக்கு கூட ரத்தாகலாம். தூக்குத் தண்டனை குறித்த விவாதம் தனியானது. கௌசல்யாவும் தூக்குத் தண்டனையை எதிர்ப்பவர்தான். ஆனால், கௌசல்யாவின் இந்தப் போராட்டமும், போராட்டத்தின் விளைவான தீர்ப்பும் ‘வெட்டி வீசுவேன்’ என்பதைச் சொல்வதற்கு முன் ஒருவரை 10 விநாடிகளாவது யோசிக்க வைக்கும். கௌசல்யா வெற்றி பெற்றிருக்கிறார்!

–  ரமணி மோகனகிருஷ்ணன்
நன்றி : விகடன்.காம்

 

Load More Related Articles
Load More By sridhar
Load More In கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

அம்பேத்கர் ஏன் வரலாற்றின் தேவையாக இருக்கின்றார்? – நினைவு தினப் பகிர்வு

 சிவ.உறுதிமொழி பள்ளிப் படிப்பில் படுசுட்டி. என்றாலும், வகுப்பில் கடைசி வரிசையில் கோணிப்பைய…