கீழ்வெண்மணி அளவிற்கு அரசியல் சொல்லாடல்களில் ‘வன்முறை தொன்மமாக’ வேறெந்தச் சமூக வன்முறையும் இடம் பெற்றதில்லை. அந்த வகையில் இச்சொல்லாடல்களில் அது என்னவாக
வெல்லாம் பிரதிபலித்திருக்கின்றது என்று பார்ப்பது தமிழ்ச் சமூகத்தின் வெண்மணி பற்றிய இன்றைய நினைவுகளைப் புரிந்துகொள்ள உதவலாம். அரசியல் ரீதியாகப் பல இயக்கங்களிடையே உரிமை கோரல்களையும் விவாதங்களையும் அப்பிரச்னை உண்டுபண்ணியபடியே இருந்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்பு கம்யூனிஸ்ட் கட்சிகள் செல்வாக்கு பெறுவது பற்றியும் அதன் தலைமையிலான தஞ்சை வட்டார விவசாய உரிமைப் போராட்டங்களைப் பற்றியும் ராஜாஜிக்கு முற்றிலும் எதிர்மறையான பார்வை இருந்தது. அதற்கேற்ப உள்ளூர் அளவில் நிலவுடைமையாளார்களின் பதுங்குகுழியாக காங்கிரஸ் மாறியிருந்தது. இக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே அரசியல் முரண்பாடுகள் இருந்து வந்தன. அடுத்து 1967-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வருவதற்கு முன் அக்கட்சி பேசிவந்த தமிழ்ப் பொற்காலப் புனைவுகள் மங்கி, சமூக யதார்த்தங்கள் வெளிப்படுவன போன்று அடுத்த ஆண்டே (1968) இந்த வெண்மணிக் கொடூரம் நடந்தது.  இதற்குப் பிறகு, தி.மு.க அரசு மற்றும் கட்சியின் தலையீடு தொடர்பாக  கம்யூனிஸ்ட்டுகளுக்கும் தி.மு.க-வுக்கும் இடையே பரவலான விவாதங்கள் எதிரொலித்து வந்தன.  இதனிடையே ஆட்சிக்கு வந்திருந்த தி.மு.க. மீதும் பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதும் நம்பிக்கை இழந்திருந்த இளைஞர்களிடையே நக்சல்பாரி அரசியல் புதிய ஈர்ப்பை ஏற்படுத்தியது. வர்க்க எதிரிகளை ஆயுதமேந்தி அழித்தொழிப்பதே தீர்வு என்று நம்பிய நக்சல்பாரிகளுக்கு வெண்மணிச் சம்பவம் அதற்கான நியாயத்தை வழங்கியது. பின்னால், காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க தவிர்த்த முற்போக்கு இயக்கங்களின் மேடைகளில் இப்பிரச்னை திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு அதற்கோர் சொல்லாடல் மதிப்பு ஏற்பட்டது. அதேவேளையில் இத்தகையப் புரிதல்கள், தரவுகள் சார்ந்து அமைந்ததை விட  44 பேர் கொல்லப்பட்டனர் என்ற அனுதாபம் அல்லது ஆவேசம் சார்ந்தே உள்வாங்கிக்கொள்ளப்பட்டது என்பதும் உண்மை.

1990-களுக்குப் பின் நடந்த புதிய வகை தலித் இயக்கங்களின் எழுச்சியை ஒட்டி வேறொரு வகையில் ‘வெண்மணி’ விவாதத்திற்கு வந்தது.  தங்கள் மேடைகளிலும், எழுத்துகளிலும் தலித் தரப்பு இதனை நினைவுகூர ஆரம்பித்தது. இதன் தொடர்ச்சியாகவே ‘விடுதலைச் சிறுத்தைகள்’ கட்சி, திருமாவளவன் தலைமையில் திரட்சியாக வெண்மணி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்தச் சென்றது. ஆனால், உள்ளூர் கம்யூனிஸ்ட் கட்சியினரால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.  ‘பொதுவுடைமை பேசும் கட்சி, வெண்மணியைச் சுற்றி வேலி போட்டுத் தனியுடைமை ஆக்குவதா?”  என்று இதைத் திருமாவளவன் சாடினார்.  இரு கட்சி மோதல் போன்று அது வெளிப்பட்டிருந்தாலும், நம் சமூகத்தின் அடிப்படை முரண் சாதியா, வர்க்கமா என்ற விவாதத்தின் தொடர்ச்சியில்தான் இதன் அடிப்படை உருவானது.  1990-களின் தலித் எழுச்சி, ‘சமூகத்தின் பிரதான முரண்பாடு சாதியே’ என்ற கண்ணோட்டத்திற்கு வலுசேர்த்திருந்தது.  இதன் தொடர்ச்சியில் இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகளில் செயல்பட்ட தலித்துகள் வெளியேறி, சாதி முரண்பாட்டை முதன்மையாகப் பேசும் தலித் அமைப்புகளில் சேரவும் தலைபட்டிருந்தனர்.  ‘வர்க்கம்தான் பிரதான முரண்பாடு எனில், வெண்மணியில் இறந்த எல்லோரும் ஏன் தலித்துகளாக இருந்தனர்?’ என்ற கேள்வி தலித் மேடைகளில் ஒலித்தபடியே இருந்தது.  இவ்வாறு உருவாகி வந்த கருத்தியல் அழுத்தங்களெல்லாம் சேர்ந்துதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை வெண்மணிக்குச் செல்ல உந்தியிருந்தன.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேறுவிதச் சிக்கல்கள் இருந்தன.  வர்க்கமே முதன்மையான முரண் அல்லது வர்க்கமும் சாதியும் கலந்த முரண் என்ற கட்சியின் நிலைபாட்டைத் தக்கவைக்க வேண்டிய நிலை அவர்களுக்கு இருந்தது. அடுத்து 1940-களிலிருந்து தஞ்சை வட்டாரத்தில் செயல்பட்டும் வெண்மணிக்கு முன்னும் பின்னுமாகப் போராடியும் வந்த நிலையில் வெண்மணி சார்ந்த உரிமை கோரலைத் தக்கவைக்க வேண்டிய நிலையும் இருந்தது.  நினைவிடம் மீதான உரிமையை இழப்பது தங்களின் அதுவரையிலான போராட்ட வரலாற்றை இழப்பதாகிவிடும் என்கிற பதட்டம் அவர்களுக்கிருந்தது. தேர்தல் உள்ளிட்ட அரசியல் களங்களில் அவ்விரண்டு கட்சிகளும் ஒன்றாகச் செயல்பட வேண்டிய தேவை எழுந்துவிட்ட இன்றையச் சூழலில் இதுபோன்ற கடந்தகாலக் கசப்புகள் பேசப்படாமலேயே முடிவுக்கு வந்துவிட்டன.

தஞ்சை வட்டார நிலவுடைமை எதிர்ப்புப் போராட்டத்திலும் வெண்மணி நிகழ்விலும் கட்சிப் பங்களிப்பை ஆவணப்படுத்தும் பணி இத்தொடர்ச்சியில் துரிதப்படுத்தப்பட்டன.  வெண்மணியைப் பற்றிய பாரதி கிருஷ்ணகுமாரின் ‘ராமையாவின் குடிசை’ ஆவணப்படம் (2005), வெண்மணி வழக்கின் தீர்ப்புகளின் தொகுப்பாக மயிலை பாலுவின் மொழிபெயர்ப்பிலான ‘நின்று கெடுத்த நீதி’ நூல் (2009), சுமதி என்பவரால் முனைவர் பட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருந்த வெண்மணி பற்றிய கலை இலக்கியப் பதிவுகளைக்கொண்ட ‘வெண்மணி படுகொலைகள்: வரலாறும் கலை இலக்கியப் பதிவுகளும்’ என்ற நூல் (2008), தஞ்சை மாவட்ட தலித் விவசாயத் தொழிலாளர் போராட்டங்களின் வாய்மொழி வரலாறு என்கிற பெயரில் அப்பணசாமி தொகுத்த ‘தென்பரை முதல் வெண்மணி வரை’ நூல் (2004), இதன் தொடர்ச்சியாக இயக்கச் செயற்பாட்டாளர்களை நேர்காணல் செய்து சோலை சுந்தரபெருமாள் தொகுத்த  ‘வெண்மணியிலிருந்து…’ நூல் (2010) போன்றவை பத்தாண்டு என்ற கணக்கில் வெண்மணியை மையப்படுத்தியே வெளிக்கொணரப்பட்டிருக்கின்றன.

‘வெண்மணிச் சம்பவத்திற்குப் பின் வெண்மணி’ என்ற தலைப்பில் உ.ரா. வரதராஜன் எழுதிய நூல் தொடங்கி, முகில் எழுதிய ராமையாவின் குடிசை (நாடகம்) வழியாக, சோலை சுந்தர பெருமாளின் ‘செந்நெல்’ (1999) வரையிலுமாகப் பார்த்தாலும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தரப்பே வெண்மணி பற்றி எழுதிவந்திருக்கின்றனர் என்பதை அறிய முடியும். ஆனால், இவற்றிற்கும் 2000-த்திற்குப் பிந்தைய மேற்கண்ட வெளியீடுகளுக்கும் அடிப்படையான வேறுபாடு இருக்கிறது.  முன்பு வெளியானவை வெண்மணியின் கொடூரத்தையும் நிலவுடைமை எதிர்ப்பின் நியாயத்தையும் அழுத்தமாகக்கொண்டிருக்க, 2000-த்திற்குப் பிந்தைய வெளியீடுகள், கம்யூனிஸ்ட் கட்சியின் வெண்மணி மீதான உரிமைக் கோரல்தான் அதிக அழுத்தம் பெற்றிருந்ததைப் பார்க்க முடிகிறது.

வெண்மணி போன்ற கொடூரமான வன்முறையின்போது பெரியார் அழுத்தமான எதிர்வினையை மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு முன் இத்தகையத் தரவுகள் பலவீனமானவையாகவே உள்ளன.  தமிழ்நாட்டு சாதி எதிர்ப்பு வரலாற்றின் பிரதான செயற்பாட்டாளர் என்ற இடத்தை எந்தவிதச் சலுகையும் இல்லாமல் பெற்றுவிடும் பெரியாரை மறுதளத்தில் விமர்சனம் அற்றவராகக் காட்டும் எத்தனங்களே இத்தருணங்களில் வெளிப்படுகின்றன. அவரை விமர்சனப்பூர்வமாக மீட்டெடுக்க இப்போக்கு உதவாது.

தற்காலத்தில் வெண்மணிப் பிரச்னை, முற்றிலும் மாறுபட்ட விவாதம் ஒன்றில் ஒரு தரவாக எழுத்தாளப்படுகிறது. அதாவது 1990-களின் இறுதியில் தலித் தரப்பிலிருந்து திராவிட இயக்கம் மீது, குறிப்பாகப் பெரியார் மீது விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. இந்த விமர்சனங்களும் எதிர்கொள்ளல்களும் பெரியாரை முற்றிலும் நிராகரித்தல் அல்லது முற்றிலும் நியாயப்படுத்துதல் என்கிற எதிரெதிர் நிலைகளிலே நிலைகொண்டிருப்பது கெடுவாய்ப்பே. தொடர்ச்சியாக இந்த விவாதங்களில், வெண்மணிப் பிரச்னையில் பெரியார் எடுத்திருந்த நிலைப்பாடு பற்றி இப்போது பேசப்படுகிறது. அதில், தஞ்சை வட்டாரத்தில் பெரியாரிய நோக்கோடும் இடது சார்புத்தன்மையோடும் செயல்பட்ட ஏ.ஜி.கஸ்தூரிரங்கன் பற்றி பசு.கவுதமன் தொகுத்த நினைவலைகளில், வெண்மணிக் குற்றவாளியான  கோபாலகிருஷ்ண நாயுடு பெரியாரைச் சந்திக்க முற்பட்டபோது பெரியார் புறக்கணித்தார் என்ற செய்தி முக்கியத் தரவாக  எடுத்துக்காட்டப்படுகிறது.  ஆனால், வெண்மணி போன்ற கொடூரமான வன்முறையின்போது பெரியார் அழுத்தமான எதிர்வினையை மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு முன் இத்தகையத் தரவுகள் பலவீனமானவையாகவே உள்ளன.  தமிழ்நாட்டு சாதி எதிர்ப்பு வரலாற்றின் பிரதான செயற்பாட்டாளர் என்ற இடத்தை எந்தவிதச் சலுகையும் இல்லாமல் பெற்றுவிடும் பெரியாரை மறுதளத்தில் விமர்சனம் அற்றவராகக் காட்டும் எத்தனங்களே இத்தருணங்களில் வெளிப்படுகின்றன. அவரை விமர்சனப்பூர்வமாக மீட்டெடுக்க இப்போக்கு உதவாது. இத்தளத்தில் பெரியாரிய இளம் ஆய்வாளர் சுகுணா திவாகர் மட்டுமே இவற்றை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்று விளக்கிவிட்டு, வெண்மணிப் பிரச்னையில் பெரியாரின் நிலைப்பாடு முக்கியமான விடுபடலே என்று கூறியிருப்பது ஒரு விதிவிலக்காக இருக்கிறது.

இவ்வாறு, வெண்மணிப் பிரச்னை அரசியல் தளத்தில் விவாதத்திற்கான தரவாக இருந்து வந்திருக்கும் அதேவேளையில், கலை இலக்கியத் தளத்தையும் பாதித்தே வந்திருக்கிறது என்பதையும் பார்க்க முடிகிறது. இதன் தொடக்கமாக 1975-ம் ஆண்டு இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘குருதிப்புனல்’ நாவலைக் குறிப்பிடலாம். நிலவுடைமை ஆதிக்கத்தைவிடவும் பண்ணையாரின் உளவியலுக்கு இந்நாவல் தந்த அழுத்தம் பற்றித் தமிழில் விரிவான விமர்சனங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. ஏறக்குறைய இதே காலத்தில் கீழ்வெண்மணி என்ற தலைப்பில் ஞானக்கூத்தனும் ஒரு கவிதை எழுதினார்.

இடதுசாரி அரசியலுணர்வைப் பிரதிபலித்த கவிதைகளில் முழுமையாகவோ தகவல் அளவிலோ வெண்மணிப் பிரச்னை தொடர்ந்து இடம்பிடித்து வந்தது. இதில் நவகவி வெளியிட்ட வெண்மணி (1993) என்ற தொகுப்பைக் குறிப்பிடலாம்.  ஈரோடு தமிழன்பனும் ‘அந்த நந்தனை எரிச்ச நெருப்பின் மிச்சம்’ (1994) கவிதையை எழுதினார். ‘தீக்குளியல்’ என்ற பெயரிடப்படாத கவிதை, வெண்மணி பற்றிய கவிதை வடிவிலான ஆவணம்.  கவிஞர் இன்குலாப், தம் கவிதைகளில் வெண்மணியைப் பரவலாகக் கையாண்டிருக்கிறார். குறிப்பாக அவருடைய ‘மனுசங்கடா நாங்க மனுசங்கடா’ என்ற புகழ்பெற்ற கவிதையில் சாதி வன்முறைகளை அடுக்கி வரும்போது ‘சதையும் எலும்பும் நீங்க வெச்ச தீயிலே வேகுதே – ஒங்க சர்க்காரும் கோர்ட்டும் அதிலே எண்ணெயை ஊத்துதே’  என்ற வரிகள் வெண்மணியையே குறித்தன. பின்னாளில் தலித் பண்பாட்டுப் பேரவையை ஆரம்பித்த உஞ்சைராசன் இதன் தாக்கத்திலேயே தான் தொடங்கிய இதழின் பெயரை ‘மனுசங்க’ என்று சூட்டினார். இப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தலித் பிரச்னைகளுக்காக நடத்தும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கொண்டுவரும் இதழின் பெயரை ‘அணையா வெண்மணி’ என்றே சூட்டிக்கொண்டிருக் கிறது. வெண்மணி தொடர்புடையதாகக் கடந்த 15 ஆண்டுகளுக்குள் வெளியான மூன்று நாவல்கள் குறிப்பிடத்தக்கன.  சோலை சுந்தரபெருமாளின் ‘செந்நெல்’ (1999), வெண்மணிக்குப் பிந்தைய பிரச்னைகளைப் பேசும் பாட்டாளி எழுதிய ‘கீழைத்தீ’, மீனா கந்தசாமி ஆங்கிலத்தில் எழுதி தமிழில் பிரேம் மொழிபெயர்ப்பாக வெளியாகியிருக்கும் ‘குறத்தியம்மன்’ நாவல் (2016) ஆகியவை.

திரைப்படங்களிலும் வெண்மணிச் சம்பவம் நேரடியாகவும் மறைமுகமாகவும் வெளிப்பட்டிருக்கின்றன. வெண்மணிச் சம்பவத்திற்குப் பிறகு ஏழாண்டுகள் வரை திரைப்படங்களில் ஏழைப் பங்காளனாக நடித்துவந்த எம்.ஜி.ஆரின் படங்களில் இதன் தாக்கம் எந்தவிதத்திலும் இருந்திருக்கவில்லை.  இதன் முக்கிய வெளிப்பாடாக 1983-ல் ஸ்ரீதர்ராஜன் இயக்கத்தில் வெளியான ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ என்ற படத்தைக் கூறலாம். வெண்மணிச் சம்பவத்தை நேரடியாகப் பிரதிபலித்த இப்படம், இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘குருதிப்புனல்’ நாவலின் தழுவலாகவே இருந்தது. பின்பு, ‘அலையோசை’, ‘சிவந்த கண்கள்’, ‘சிவப்புமல்லி’ போன்ற படங்களின் கதையாடல்களிலும் பாடல்களிலும் வசனங்களிலும் வெண்மணிப் பிரச்னையின் சாயல் பிரதிபலித்தது. 1980-களின் இடதுசாரிக் கதையாடலின் சாயலைக் கொண்டிருந்த படங்களின் சிவப்பு என்னும் குறியீடு வெண்மணியை நினைவுக்குக் கொணர்ந்தன. 2000-த்தில் வெளியான ‘அரவிந்தன்’, ‘சிட்டிசன்’ ஆகிய இரண்டு படங்கள் வெண்மணிப் பிரச்னையை அல்லாமல் அதன் பின்புலச் சட்டகத்தை மட்டுமே எடுத்தாண்டிருந்தன.  வெண்மணி அரசியலைவிடவும் புதிய வித்தியாசமான கதைக்களம் என்கிற அளவிலே இப்படங்களில் இப்பிரச்சனை தழுவப்பட்டிருந்தது.

இவை எல்லாவற்றுக்குப் பின்னாலும் நமக்குக் கிடைக்கும் செய்திகள் பல, வெண்மணிப் பிரச்னை ஒரு சம்பவமாக நம்மைப் பாதித்த அளவிற்கு அரசியல் மற்றும் கருத்தியல் அளவில் ‘பார்வை மாற்றம்’ என்ற அளவில் பாதிக்கவில்லை.  அரசியல் தளத்தில் மட்டுமல்லாது ஆய்வுத்தளத்திலும் குறிப்பிடும்படியான விரிவான பார்வைகள் வெளிப்படவில்லை.  நிலம் பறிக்கப்பட்டிருப்பதற்கும் சாதியின் நிலைத்தத் தன்மைக்கும் தொடர்பிருப்பதைப் புரிந்துகொண்டிருக்கும் நாம், அது தொடர்ச்சியான பண்பாட்டு மோதல்களோடும் தொடர்பு பெற்றிருப்பதைக் காணத் தவறியிருக்கிறோம் என்று தோன்றுகிறது. நிலம், சாதி, பண்பாடு என்ற நெடிய ஆய்வுகளைத் தொடர வேண்டும். அத்தகைய ஆய்வுகள் இன்னும் தொடங்கவில்லை. அதுவரை வெண்மணி ஓர் அரசியல் அடையாளமாக மட்டுமே நமக்குப் பயன்படும்.

நன்றி : விகடன் தடம்., டிசம்பர் 2017

 

Load More Related Articles
Load More By sridhar
Load More In கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

அம்பேத்கர் ஏன் வரலாற்றின் தேவையாக இருக்கின்றார்? – நினைவு தினப் பகிர்வு

 சிவ.உறுதிமொழி பள்ளிப் படிப்பில் படுசுட்டி. என்றாலும், வகுப்பில் கடைசி வரிசையில் கோணிப்பைய…