Home கலை இலக்கியம் நூல்கள் - வெளியீடுகள் “இடஒதுக்கீடு என்பது சலுகையல்ல… நமது உரிமை!” – எழுத்தாளர் பாமா

“இடஒதுக்கீடு என்பது சலுகையல்ல… நமது உரிமை!” – எழுத்தாளர் பாமா

0
0

“நான் முதன்முதலா புக் எழுதினப்ப, என்னோட மக்களே என்னைப் புரிஞ்சுக்காம, சண்டைக்கு வந்தாங்க. ஆனா, இன்னைக்கு அவங்களே எனக்கு பாராட்டு விழா நடத்தி ஆடி, பாடிக் கொண்டாடுறாங்க” என, கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் பேசினார் எழுத்தாளர் பாமா.

இவரது முதல் நாவலான `கருக்கு’ வெளிவந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி நடைபெற்ற பாராட்டு விழா, மிக உணர்ச்சிபூர்வமானதாக இருந்தது. இந்த விழா, மாற்று ஊடக மற்றும் பத்திரிகையாளர் மையம் சார்பில் சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதில் எழுத்தாளர் பிரபஞ்சன், எழுத்தாளர் மற்றும் நாடகவியலாளர் அ.மங்கை, இயக்குநர் பா.இரஞ்சித், ஆங்கில மொழிபெயர்ப்பாளர் மாலினி சேஷாத்திரி, பதிப்பாளர் மினி கிருஷ்ணன், லயோலா கல்லூரியின் அதிபர் தந்தை ஜெயபதி, எழுத்தாளர் மாற்கு, யாக்கன் ஆகியோர் கலந்துகொண்டனர். இங்கு, பாமாவின் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பான `Just One Word’ நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

பாமா

உலகில் அடக்குமுறைக்கு எதிராக புரட்சி ஏற்பட்ட அனைத்து நாடுகளிலும், புரட்சியின் ஒரு வடிவமாக பாதிக்கப்பட்டவர்களின் தரப்பிலிருந்து வெளியாகும் கலைப் படைப்புகள் இருந்துள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்ச் சூழலில் மூடநம்பிக்கைக்கு எதிராக, முதலாளித்துவத்துக்கு எதிராக, பெண் விடுதலைக்காக என ஒவ்வொரு காலகட்டத்திலும் இலக்கிய வகைமைகள் வௌிவந்துள்ளன. 1991-ல் அம்பேத்கர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழில் தலித் இலக்கியங்கள் வர ஆரம்பித்தன. அதற்கு முன்பும் `பிறகு’ போன்ற சில நாவல்கள் வெளிவந்துள்ளன என்றாலும் காத்திரமாக முழுவிச்சில் படைப்புகள் வெளிவரத் தொடங்கியது 90-களில்தான். அந்த வகையில் ஒரு பெண்ணின் தன் வரலாற்று நூலாக வெளிவந்த `பாமா’ மிகப்பெரிய அதிர்வலைகளை தமிழ் இலக்கியச் சூழலில் ஏற்படுத்தின. ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வை அவர்களின் குரலிலேயே பதிவுசெய்த படைப்புகள் மிக வீரியத்துடன் தனது தரப்பு அவசியத்தைப் பேசின. சாதியப் பாகுபாடுளை ஒழித்திட, பெரும்விவாதங்களை சமூகத்தில் உண்டாக்கின. அந்தக் காலகட்டத்தில் சுஜாதா, பிரபஞ்சன், கோமல் சுவாமிநாதன் போன்றோர் `கருக்கு’ நாவலின் முக்கியத்துவம் குறித்து எழுதியிருந்தனர். தன் முதல் நாவலிலேயே கவனிக்கப்பெற்ற பாமா, தொடர்ந்து சங்கவி, தவுட்டுக் குருவி உள்ளிட்ட படைப்புகளை எழுதினார்.

 

ஏற்கெனவே அவரது நாவல்களான கருக்கு, சங்கதி உள்ளிட்டவை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவரது சிறுகதைகளும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. அந்த விழாவில் பேசிய எழுத்தாளர் பிரபஞ்சன், “பல வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் மாற்கு என்னிடம், `நீங்கள் எங்கள் பகுதியைச் சேர்ந்த சிலருக்கு எப்படி எழுதுவது எனச் சொல்லித்தர வேண்டும்’ என்றார். நானும் அவர்களிடம் சென்று `முதல் வரியைச் சொல்வேன். அதை முழுக்கதையாக நீங்கள் எழுதி முடிக்க வேண்டும்’ என்றேன். அதில் ஒருவர்தான் பாமா. இன்று இலக்கியங்கள் குறித்து என்னென்னவோ கோட்பாடுகள் சொல்லப்படுகின்றன. ஆனால், எல்லோராலும் எழுத முடியும். எல்லோருக்குள்ளும் கதை உண்டு. எழுத்துக்கு உண்மையாக இருக்கும்போது நல்ல கதை  உருவாகும். எழுத்து, மிக முக்கியமான கலை. எழுத்துதான் அனைத்தையுமே உருவாக்குகிறது. எனவே இளைஞர்கள் நிறைய எழுதுங்கள்” என்றார்.

எழுத்தாளர் பிரபஞ்சன்

“ `கருக்கு’ நாவலை நான் கல்லூரிக் காலங்களில் படித்துச் சிலாகித்துள்ளேன். அதைப் பாராட்டிப் பேசுவேன் என எதிர்பார்க்கவில்லை” எனப் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், “இன்று ஒவ்வொரு தனி மனிதனுமே சாதியாக பிளவுபட்டுக் கிடக்கின்றான். ஐந்து நண்பர்கள் இருக்கும் இடத்தில் அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சாதியின் அங்கமாகவே உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு நாவல் இன்றும் படிக்கப்படுகிறது என்றால், அதன் தேவை இன்றும் இருக்கிறது என்றே அர்த்தம். என்ன காரணத்துக்காக நாவல் எழுதப்பட்டதோ, அந்தக் காரணம் முழுமைபெறவில்லை என்பதையே இது காட்டுகிறது. சமத்துவமான நிலை உருவாக, ஒடுக்குமுறையால் பாதிக்கப்படும் அத்தனை பேரும் இணைந்து போராட வேண்டும். ஒருவன் தனது வாழ்வையும் கொண்டாட்டத்தையும் அவன் மொழியில்தான் பதிவுசெய்ய முடியும். அதுதான் இலக்கியம் .  உண்மையான கலைஞனாக இருப்பவன், படைப்பின் உண்மைத்தன்மை குறித்தும், அதன் கொண்டாட்டம் குறித்தும் புரிந்துகொள்வான்” என்றார்.

பா.ரஞ்சித்

நிறைவாகப் பேசிய எழுத்தாளர் பாமா, “சின்ன வயசுல எல்லார் மாதிரியும் நானும் ரொம்ப பயந்து, எழுதத் தயங்கினேன். கல்லூரிகளில், பள்ளிகளில் ஸ்காலெர்ஷிப்புக்காக பெயர் வாசிக்கப்படும்போது தாழ்த்தபட்ட மாணவர்கள் எழுந்து நிப்பாங்க. அப்போ அவங்களை எல்லாரும் கிண்டலா பார்க்க, எந்திரிச்சு நிக்கிற பசங்க குற்றவுணர்குள்ளாவாங்க. அது ரொம்ப மோசமான விஷயம். `இடஒதுக்கீடுல படிச்சவன்’னு யாராவது கிண்டல் பண்ணினா, `அது சலுகையில்ல… உரிமை’னு சொல்லுங்க. நம்ம வாழ்க்கை என்பது, கொண்டாட்டங்களால் ஆனது. நாம சோர்ந்துபோகாம சந்தோஷமா இருக்கணும். அதான் முக்கியம். என்னோட ஊர் மக்கள்தான் என்னோட பலமே. அவங்ககிட்ட இருந்துதான் நான் தைரியத்தைக் கத்துக்கிட்டேன். எந்தச் சூழல் வந்தாலும் பயப்படாம நம்ம வாழ்க்கையைத் துணிச்சலா  எதிர்கொள்ளணும். என்னோட நாவல், சிறுகதைகளை தொடர்ந்து மொழிபெயர்த்து வெளியிட்டு வருபவர்களுக்கு நன்றி” என்றார்.

 

 சக்தி தமிழ்ச்செல்வன்,  க.பாலாஜி

Courtesy : Vikatan

Load More Related Articles
Load More By sridhar
Load More In நூல்கள் - வெளியீடுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

வேர்களைத் தேடுவதல்ல, புரிந்துகொள்ளல். – ஸ்டாலின் ராஜாங்கம்

தமிழில் புனைவுகளுக்கு இணையாகக் குறிப்பிடத்தக்க அளவில் அ-புனைவுகள் வெளியாகிவருகின்றன. அவை க…