Home சிறப்புப் பக்கம் விரட்டும் சாதி வெறி…

விரட்டும் சாதி வெறி…

0
0

“தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்தால், அதையும் எதிர்த்து வழக்காடுவேன். அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா மூவரது விடுதலையையும் எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்’’ –  உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதும், அப்பா, அம்மா, மாமன் என்ற எந்த உறவுப் பெயரையும் குறிப்பிடாமல், தீர்க்கமான குரலில் கெளசல்யா பேசிய வார்த்தைகள் இவை.

 

ஆறு பேருக்குத் தூக்குத்தண்டனை, ஒருவருக்கு இரட்டை ஆயுள்தண்டனை, மற்றொருவருக்கு ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை என்ற நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, `சாதிவெறி ஆணவக்கொலைகள் நிகழாமல் தடுத்து நிறுத்துமா? ஆணவக்கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம் இயற்றப்படுமா? தனிச்சட்டத்தால் மாற்றம் வருமா?’ எனும் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கேள்விகளுக்கான விடைகளை பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தே தேடினோம்.

 

அபிராமி – மாரிமுத்துவைத் தெரியுமா உங்களுக்கு? தஞ்சை, சூரக்கோட்டையைச் சேர்ந்தவர் மாரிமுத்து. ஆதிக்கச் சாதியில் பிறந்துவிட்ட ‘குற்றத்துக்காக’க் காதல் கணவரைப் பறிகொடுத்துவிட்டு, மகள் செளந்தர்யாவுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் அபிராமியைச் சந்தித்தேன்.

“டிவி-யில பார்த்தேன். என்ன மாதிரியே ஒரு பொண்ணுக்கு நல்ல தீர்ப்பு குடுத்திருக்காங்க. என்னா துணிச்சலா பேசுச்சு அந்தப் பொண்ணு. பெருமையாயிருந்துச்சு’’ என்றார். சிறிது நேர மெளனத்துக்குப் பிறகு, தன் மனதை தினமும் அறுத்துக் கொண்டிருக்கும் நிகழ்வுகளைச் சொல்லத் தொடங்கினார். “ப்ளஸ் டூ முடிச்சு டீச்சர் டிரெய்னிங் படிக்கப் போயிட்டிருந்தேன். அவங்க பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி முடிச்சுட்டு, வோடபோன் சேல்ஸ் கம்பெனியில வேலையில இருந்தாங்க. பஸ்லதான் பழக்கம். ரொம்பப் பிடிச்சிருந்தது. வீட்டுக்குத் தெரியவந்ததும் ஏகப்பட்ட ஏச்சு. என்னைப் படிக்கவிடல. கும்பகோணத்துல பதிவுத்திருமணம் பண்ணிக்கிட்டு, மகளிர் காவல் நிலையத்துல பாதுகாப்பு கேட்டோம். இங்கே இருந்தா பிரச்னைன்னு சென்னைக்குப் போய், அம்பத்தூர்ல தங்கி இருந்தோம். சின்னச் சின்ன வேலைக்குப் போயிட்டிருந்தார். வேலை சரியா அமையலை. அந்த நேரத்துல மக பொறந்தா. எனக்கு மூத்தது மகளிர் காவல் நிலையத்துல போய், அவரோட நம்பரை வாங்கி, எங்க ரெண்டு பேருகிட்டயும் போன்ல பேசுச்சு. எல்லாம் சரியாகிடுச்சு, ராசியாகிட்டாங்கன்னு நினைச்சோமே… அதுதான் பெரிய தப்பு’’ – தளும்பிய கண்ணீரை அடக்கிக்கொள்ளப் போராடித் தோற்கிறார்.

“ `ஊருக்கே போயிடலாம் அபி’னு எங்கிட்ட சொன்னார். வாடகை, வசதின்னு சென்னையில எங்களுக்கு எதுவும் சுகப்படலை. ஊருக்கு வந்துட்டோம். அண்ணனும் அவரும் மாமன், மச்சான்னு ஒறவுமுறையோடு பேசிக்குவாங்க. `புள்ளைக்குப் பொறந்த நாள் வருது. ஆத்தங்கரைக்கு வந்து பவுனு, துணிமணி எல்லாம் வாங்கிட்டுப் போயிரு’னு அன்னிக்கு ராத்திரி போன் வந்துச்சு. ஆசையா கிளம்பிப் போனவர்தான். அத்தோடு போச்சு.  குரல்வளைய அறுத்து, கையை வெட்டி, ஆண்குறியையும் அறுத்துக் கொன்னிருக்காங்க. எங்க அப்பாவும் அண்ணனும் கொலை பண்ணிட்டு, சரண்டர் ஆகிட்டாங்க. அப்புறம், ஜாமீன்ல வெளியே வந்தப்போ ஊரே மரியாதை கொடுத்துச்சு. எங்க அப்பாவுக்கு சாதி மானம், சாதி மானம்னு வெறியூட்டியது ஊர்க்காரங்கதான்” – உடைந்து அழுகிறார். அரசு வேலை வேண்டி ஆறு வருடங்களாக ஆட்சியர் அலுவலகத்துக்கு மனுக்கள் எழுதிக்கொண்டிருக்கிறார் அபிராமி.

“இந்தியச் சட்டத்தின் ஆட்சி சுமுகமான முறையில் நடக்கவேண்டும் என்றால், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சாதியை ஒழித்துவிடுவது நல்லது’’ என்று டிசம்பர் 4, 2009-ம் ஆண்டு வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்ற நீதிபதி தல்வீர் சிங் தீர்ப்பில் குறிப்பிட்டார்! நீதியரசர் தல்வீர் சிங்கின் தீர்ப்பை உண்மையாக்கும் விதமாக, மேஜரான ஆணும் பெண்ணும் சுய விருப்பத்தின் அடிப்படையில் திருமணம் செய்வதை சாதியவாதிகள் பிரிக்க நினைக்கும்போது, சட்டத்தின் படி ஆட்சி நடப்பதை உறுதி செய்யவேண்டிய காவல் துறையினரே அவர்களைக் காட்டிக்கொடுத்து, கொலைக்கு உடந்தையாக இருக்கின்றனர்.

சரணடைபவர்களையே பலிகொடுக்க ஒத்துழைக்கும் சில காவலர்களால் வாழ்க்கையைப் பறிகொடுத்தவர்கள் விமலாதேவி திலீப்குமார்.

விமலாதேவி கொல்லப்பட்ட உசிலம்பட்டியை விட்டு வந்து சென்னையில் வசிக்கும் திலீப்குமாரைச் சந்தித்தபோது, “விமலாதான் முதல்ல என்னை விரும்புச்சு. ஆரம்பத்துல, அவங்க சாதிக்காரங்களுக்கு பயந்து நான் ஒப்புக்கலை. பூச்சிமருந்து குடிச்சிடுச்சு. வம்பா காதலிச்சுது. அப்புறம் அதுதான் என் வாழ்க்கைன்னு முடிவுபண்ணிட்டேன். 2014 ஜூலை 22-ம் தேதி விருத்தாசலத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டு, கேரளா போயிட்டோம். உசிலம்பட்டி போலீஸ் கேரளாவுக்கு வந்து, `ஒண்ணா சேர்த்துவைக்கிறோம்’னு நம்பவெச்சுக் கூட்டிட்டுப் போனாங்க. கோர்ட்டுக்குக் கூட்டிட்டுப் போனப்பவும் என்கூடதான் வருவேன்னு உறுதியா சொல்லுச்சு. போலீஸ் துணையோடு கூட்டிட்டுப் போய்க் கொன்னு, என் கண்ல காட்டாம எரிச்சுட்டாங்க. `விமலாவைக் கொல்லப் போறாங்க’னு, தீண்டாமை ஒழிப்பு முன்னணிப் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், ஒரு வாரத்துக்கு முந்தியே மதுரை எஸ்.பி விஜயேந்திர பிதாரிக்கு இமெயில், ஃபேக்ஸ், போஸ்ட்னு அனுப்பினார். என் மனைவி சாக போலீஸும்தான் காரணம். கொன்னுபோட்ட யாருக்கும் இன்னும் தண்டனை கிடைக்கலை. வெத்துக்கு நானும் வாழுறேன்” என்றார்.

ஆதிக்க சாதிவெறி அரசியலின் கோரப் பசிக்கு இரையான தருமபுரி நாயக்கன்கொட்டாய் நினைவில் இருக்கலாம். தன் மகனுக்காக நீதி கேட்டு வழக்கைத் தொடர்ந்துகொண்டிருக்கும் இளவரசனின் தாயார் கிருஷ்ணவேணியைச் சந்தித்தோம். இளவரசனின் மரணத்துக்குப் பிறகான இந்த நான்கு வருடங்கள் குறித்துப் பேசினார் அவர்.

“இன்னும் கோர்ட்டுல வழக்கு நடக்குதும்மா. எதுவும் மாறல. எம்புள்ள போலீஸாகியிருப்பான். சிசிடிவி-க்கு முன்னாடி செத்திருந்தா, தீர்ப்பு கிடைச்சிருக்குமா?’’ என்றவர், திவ்யா – இளவரசன் பதிவுத் திருமணம் செய்துகொண்டதற்குப் பின்னான நாள்களைப் பற்றிப் பேசினார். “ரொம்ப உறுதியா இருந்தா திவ்யா. தாலி கட்டி முடிச்சு, அவங்க ரெண்டு பேரும் அவங்களைக் காப்பாத்திக்க ஊரூரா போய் மறைஞ்சு இருந்தாங்க. திவ்யாவோட அப்பா நாகராஜ் தூக்கு மாட்டிக்கிட்டாருங்கிறதே உண்மையில்லை. அவரோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை ஏன் யாருகிட்டயும் காட்டலை? திவ்யாவைக் கடத்திட்டாங்கன்னு புகார் பண்ணிட்டாங்க. அவங்க பேசறதெல்லாம் பொய்னு காட்ட, கோர்ட்டுல ரெண்டு பேரும் வந்து நின்னாங்களே, அப்பவே அரசியல் பண்ண முடிவெடுத்துட்டானுக. பேசிப் பேசி அந்த வூட்டையும் வெஷமாக்கி, எம்மருமவளக் கூட்டிட்டுப் போய் வெச்சுக்கிட்டாங்க. அவ, நல்லா இருக்கணும்னுதான் இப்பவும் நினைக்கிறேன். எம் மவனும் அப்படித்தான் நினைச்சிருப்பான்.

எம் மவன் தற்கொலை பண்ணிக்கலை. அன்னிக்கு அவன் வேலைக்காக சித்தூரு போகவேண்டியது. இருக்கிற ஆதாரத்தை எல்லாம் வெச்சு, என் உசுரு இருக்கிற வரைக்கும் போராடுவேன். கெளசல்யா வந்து என்னைப் பார்த்துச்சு. ரொம்ப ஆறுதலாப் பேசுச்சு. சின்னப் பொண்ணு, அடமா நின்னு சாதிச்சிருக்கு. என் தங்கத்துக்கு நியாயம் கிடைக்காம நான் இன்னும் பொழச்சுக்கெடக்கிறேன். மூணு வீடு தள்ளித்தான் அவனைப் புதைச்சிருக்கோம். எங்க வருஷா வருஷம் அஞ்சலி செலுத்த வந்துடுவாங்களோன்னு, சமாதி மேல திண்ண கட்டக்கூட விடலை” என்று இளவரசனின் சமாதிக்கு அழைத்துப்போனவர், “எம்மவ (திவ்யா) வாய அடச்சுட்டாங்க. அவ பேசினாத்தான் நியாயம் கிடைக்கும்” என்று உடல் அதிர அழுதார்.

கடந்த 10 வருடங்களில் மட்டும், தமிழகத்தில் 247 ஆணவக்கொலைகள் நடந்திருப்பதாகப் புள்ளிவிவரம் தருகிறது எவிடென்ஸ் அமைப்பு. ஆணவக்கொலைகள் தடுக்கப்படுவதற்குத் தனிச்சட்டமே தீர்வு என வலியுறுத்தும் எவிடென்ஸ் அமைப்பின் நிறுவனர் கதிர், “ஆணவக் கொலைகளுக்கு சாதிதான் பிரதான காரணம். தலித் வீட்டில் தன் மகள் வாழ்வதையோ, வாரிசுகள் பிறப்பதையோ, சாதி இந்துப் பெற்றோர் ஏற்றுக்கொள்வதில்லை. கொலைக் குற்றங்களைக் குடும்ப உறுப்பினர்களே செய்கிறார்கள். தனிச்சட்டம் இயற்றப்பட்டுச் செயல்படுத்தப்பட்டால்தான் தீர்வு கிடைக்கும்’’ என்று உறுதியாகத் தெரிவிக்கிறார்.

தனிச்சட்டத்துக்காக வலுக்கும் கோரிக்கை குறித்து, கொங்கு நாடு தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரனைக் கேட்டபோது, “இந்தக் கொலைகள் எல்லாம் சாதியால நடக்குதுன்னு சொல்றதே தப்பு. எந்தச் சாதிச் சங்கமும் பெத்த புள்ளைங்களைக் கொல்லுங்கன்னு சொல்றதில்லை. ஆணவக்கொலைங்கிற பேர்ல ரெண்டு சாதிகளுக்கு நடுவுல சண்டையை மூட்டிவிடுறதுக்கு சதி நடக்குது. பாசத்தைக் கொட்டி வளத்தவங்க, தன்னோட பிள்ளைங்க இப்படித் தவறான வழியில போறாங்களேங்கிற கோபத்துல செஞ்சுடுறாங்க. குழந்தைங்க, கலாசாரத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கணும். எல்லோரும் 18 வயசுல முதல்வரைத் தேர்ந்தெடுக்குறாங்கன்னு சமூக ஆர்வலர்கள் குதர்க்கமாப் பேசறாங்க. பிடிக்கலைன்னா, முதல்வரை மாத்திக்கலாம், கல்யாணம் பண்ணுன கணவரை மாத்திக்க முடியுமா?’’ என்றார்.

சாதி ஆணவக்கொலைகள் குறித்துத் தொடர்ச்சியாக நிறையவே எழுதிவரும் ஸ்டாலின் ராஜாங்கம், “ஆணவக் கொலைகளைத் தடுப்பது என்பது வெறும் சட்டம் சார்ந்த நடவடிக்கைகளின் மூலமே முடங்கிவிடுவதல்ல. 50 வருடங்களுக்கு முன்பிருந்த சமூகநீதி சார்ந்து சிந்திக்கும் தலைவர்கள் தற்போது இல்லை. இப்போது சாதி, நவீன வடிவத்தில் நுட்பமாக இறுகிவருவதைப் பார்க்க முடிகிறது. இருக்கும் சமூக இயக்கங்கள் மிகத் தீவிரமாகச் செயலாற்ற வேண்டும். பல சமூக இயக்கங்கள் உருவாக வேண்டும்.  அதை உருவாக்குவதில் ஊடகத்துக்கு, கலைஞர்களுக்கு, சமூகத்துக்கு என எல்லோருக்குமே பங்கிருக்கிறது. தனிச்சட்டத்தைப் பொறுத்தவரை, ஆணவக்கொலைகளுக்கும் சாதி வன்முறைக்கும் எதிராகக் களப்பணியாற்றும் பல இயக்கங்களையும் அழைத்துப் பேசி, சட்ட வரைவு உருவாக்கப்பட வேண்டும். தனிச்சட்டம் என்பது மிகத் தட்டையாக உருவாக்கப் படாமல், ஆணவக்கொலைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவியல் ஆலோசனைகள், படிப்பு, வேலை, மறுமணம் சார்ந்த உதவிகள் எனப் பலவிதமானவற்றையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டியது மிக அவசியமானது” என்றார்.

சங்கர்-கௌசல்யா வழக்கில் தீர்ப்பு சொல்லப்பட்டுக்கொண்டிருந்த அதே நேரத்தில், புதுக்கோட்டையில் தடுக்கப்பட்டிருக்கிறது ஓர் ஆணவக் கொலை. மனிதநேயம் என்பவர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். சுவிதா சாதி இந்து. இருவரும் கல்லூரித் தோழர்கள். பிறகு காதலர்கள். சுவிதா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு வலுத்தபோது, இருவரும் திருமணம் செய்துகொண்டு மறைந்து வாழ்ந்திருக்கிறார்கள். வழக்கமான ஆட்கொணர்வு மனு போடப்பட்டதால், நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகி, இணைந்து வாழ விரும்புவதாகத் தெரிவித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள்.  வழியில் சுவிதாவின் உறவினர்கள் பேருந்தை மறித்து, சுவிதாவைக் கடத்தியிருக்கிறார்கள். கடத்தல் வாகனத்தின் எண்ணைக்  குறித்துக்கொண்ட மனிதநேயம், உடனடியாக புதுக்கோட்டை மாவட்ட மார்க்ஸிஸ்ட் செயலாளர் கவிவர்மனுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.  ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் உ.வாசுகி உள்ளிட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தவர்கள் விருதுநகர் எஸ்.பி-யிடம் இதன் தீவிரத்தை விவரித்ததால், சுவிதா மீட்கப்பட்டிருக்கிறார். மீட்கப்பட்ட சுவிதாவிடம் பேசியபோது, “எதிர்ப்பு வரும்னு தெரியும். கடத்திக்கொண்டு போகுற அளவுக்கு என் அப்பா போவாருன்னு நான் எதிர்பார்க்கலை. என்னைவிடவா அவங்களுக்கு சாதி முக்கியம்? எவ்வளவு கெஞ்சியும் மனசு மாறாம நின்னாங்க. இன்னும் பயமாத்தான் இருக்கு’’ என்றார். இப்போது, மனிதநேயமும் சுவிதாவும் ரகசியமான இடத்தில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.

`வெறுக்க வேண்டியவற்றை வெறுக்க வேண்டிய அளவுக்கு வெறுக்க வில்லையென்றால், விரும்ப வேண்டிய அன்பான ஒன்றை, உங்களால் விரும்பவோ அன்பு செலுத்தவோ முடியாது’ – பாப்லோ நெருதாவின் வார்த்தைகள் இவை. சாதி என்னும் மனிதவிரோதத்தை வெறுக்க வேண்டிய அளவுக்கு வெறுக்கவில்லையென்றால், அன்பு எது என்பதை இந்தச் சமூகத்தால் உணரவே முடியாது. அதை வெறும் சட்டங்களால் மட்டுமே உருவாக்கிவிட முடியாதுதான். இருந்தும் அது அவசரசிகிச்சைக்கு உதவக்கூடியது. உயிர்காக்க வல்லது!

 

ம.குணவதி

படங்கள்: கே.குணசீலன், க.மணிவண்ணன், ஓவியம்: ஹாசிப்கான்

 

Courtesy :

Load More Related Articles
Load More By sridhar
Load More In சிறப்புப் பக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

புரட்சியாளர் அம்பேத்கர் மறைந்தபோது அவரைப்பற்றி பல்வேறு நாளேடுகள் வெளியிட்ட புகழுரைகள்

 “டைம்ஸ் ஆப் இந்தியா” அம்பேட்கர் ஆற்றல் மிககக, அருந்திறன் வாய்க்கப்பெற்ற பல்துறை வல்லுனராக…