Home சிறப்புப் பக்கம் இந்திய கிரிக்கெட்டில் இட ஒதுக்கீடு முறை தேவை?

இந்திய கிரிக்கெட்டில் இட ஒதுக்கீடு முறை தேவை?

0
0

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டில் நிறவெறி ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்ட கறுப்பர் இனத்தைச் சார்ந்த லுங்கி இங்கிடியின் எழுச்சி மற்றும் வருகை இன மற்றும் சாதி அடக்குமுறையிலான பிற விளையாட்டுத் தேசங்களுக்கு ஒரு சிறந்த பாடம். தென் ஆப்பிரிக்க விளையாட்டுத் துறையில் நலிவடைந்தப் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு முறை கடுமையான சமூக சமத்துவமின்மைகளையும் பாகுபாடுகளையும் இடைவெளிகளையும் கொண்டுள்ள இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டான கிரிக்கெட்டுக்கு கண்ணாடி காட்டியுள்ளது.

இந்திய விளையாடும் 11 வீரர்களில் தலித்துகள், ஆதிவாசிகள் சுத்தமாக இல்லாதது அனைவரும் அறிந்ததே. இத்தனைக்கும் இந்திய மக்கள் தொகையில் அவர்கள் 25% உள்ளது குறிப்பிடத்தக்கது.

கண்ணுக்குப் புலப்படாமை:

ரிசர்வேஷன் அல்லது இட ஒதுக்கீடு என்றாலே வன்முறையான உணர்ச்சிகளைத் தூண்டும் ஒரு நாட்டில் விளையாட்டுத் துறையில் இட ஒதுக்கீட்டின் நன்மைகளைப் பற்றி பேச வேண்டியது அவசியமாகிறது. சுதந்திரம் வாங்கி இத்தனை ஆண்ட்களாகியும் விளையாட்டில் வாய்ப்புகளில் சமத்துவம் வழங்குவதில் தோல்வி அடைந்திருக்கிறோம்.

அரசுப் பள்ளிகள் என்ற அமைப்பு முறை அறுந்து தொங்கும் ஒரு நாட்டில் விளையாட்டு சார்ந்த வசதி வாய்ப்புகளின் தரம் பற்றி கற்பனைதான் செய்ய முடியும். ஆனால் பெரும்பாலான தலித்துகள், ஆதிவாசிகளுக்கு இத்தகைய அரசுப் பள்ளிகளுக்கு மேல் செல்ல முடியாத ஏழ்மை நிலை.

எனவே இந்திய கிரிக்கெட்டில் தலித் மற்றும் ஆதிவாசி சமூகத்தினர் இடம்பெறாததற்குக் காரணம் சமூக-பொருளாதார பாகுபாடும், இதன் உச்சமான இயக்கமற்ற, மாறாத சாதி அமைப்பு முறையும் வர்க்க புறந்தள்ளுதலுமேயாகும். ஹாக்கி, இது தேசிய விளையாட்டு, கால்பந்து பெரும்பாலானவர்கள் ரசிப்பது இந்த இரண்டையும் ஒப்பிடும் போது கிரிக்கெட் ஒரு மேட்டுக்குடி விளையாட்டே. 1950 முதல் 1990கள் வரை கிரிக்கெட்டில் மேல்சாதி பிராமண ஆதிக்கமே கோலோச்சியது.

மேலும் இது பெருநகரங்களிலிருந்து வரும் வீரர்களின் ஆதிக்கமுமாகும். ராஜ்தீப் சர்தேசாய் தனது Democracy’s XI என்ற புத்தகத்தில் இந்திய கிரிக்கெட்டின் முதல் 50 ஆண்டுகால வரலாற்றில் 7 வீரர்கள் மட்டுமே கிராமப்புறத்திலிருந்து வந்தவர்கள். ஆகவே தலித்துகளும், ஆதிவாசிகளும் கிரிக்கெட் திறமைகளை வளர்த்தெடுத்துக் கொள்ள முடியாதவர்கள் அல்ல என்பது உறுதியாகிறது. அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. கால்பந்து, ஹாக்கி, தடகளம் ஆகியவற்றில் இவர்களது இருப்பும் பங்களிப்பும் பிற விளையாட்டுகளிலும் ஆதரவு இருந்தால் பிரகாசிக்கவே செய்வார்கள்.

கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா கடைபிடிக்கும் இட ஒதுக்கீடு முறை பரிசீலிக்கத்தக்க ஒரு மாதிரிதான். இந்த இட ஒதுக்கீடு முறை அங்கு இல்லையெனில் பல கருப்பரின கிரிக்கெட் வீர்ர்களுடன் ஹஷிம் ஆம்லாவையும் கிரிக்கெட் உலகம் இழந்திருக்கும். இவர் இந்திய வம்சாவளி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர், அனைத்து கால சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதைக் கூறத் தேவையில்லை. கிரிக்கெட், மற்றும் பிற விளையாட்டுகளில் உள்ள சமத்துவமின்மையைப் போக்க இட ஒதுக்கீடு முறை போன்ற மருந்து வேறில்லை.

ஆம்லாவே ஒரு முறை, “உலகில் பிற நாடுகள் நிற/இனவெறி மற்றும் அடக்கு முறையை, அப்படி ஒன்று இல்லை என்பதாக மூடி மறைக்கும், ஆனால் தென் ஆப்பிரிக்கா இதனை வெளிப்படையாகக் காட்டுகிறது. அதனால்தான் இத்தகைய விவகாரங்களுக்கு நாங்கள் உணர்வுபூர்வமாக இருக்கிறோம்” என்றார்.

கிரிக்கெட் தென் ஆப்பிரிக்காவின் தற்போதைய இட ஒதுக்கீடு கொள்கையின் படி 11 வீர்ர்களில் குறைந்தது 6 வீரர்கள் வெள்ளையர் அல்லாதவர்கள், குறைந்தது 2 கருப்பரின ஆப்பிரிக்க வீரர்கள் இருந்தாக வேண்டும் இது கிரிக்கெட்டை அங்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஜனநாயகப்படுத்தியுள்ளது. (இந்த முறையை ஒவ்வொரு போட்டியிலும் கடைபிடிக்கத் தேவையில்லை. ஒரு சீசனுக்கு இந்த முறை கடைபிடிக்கப்பட வேண்டும்).

‘திறமை’ எனும் புரட்டு

இந்தியாவில் வாய்ப்பு வசதி படைத்தவர்களின் மனநிலை எப்படியென்றால் சாதிப்பாகுபாடு என்ற ஒன்றே கிடையாது என்பது போல் உள்ளது. கொடூரமான வரலாற்று புறந்தள்ளுதல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஒரு முகமூடியாக திறமை என்ற வார்த்தைப் பயன்பட்டு வந்துள்ளது.

உலகிலேயே அதிக அளவில் வீரர்களைக் கொண்ட இந்திய அணி அயல்நாட்டுத் தொடர்களில் தொடர்ந்து மோசமாக ஆடிவரும் நிலையில் திறமை என்னவானது? அது எங்கு இருந்தது? மாறாக தென் ஆப்பிரிக்கா இந்திய அமைப்பில் வேண்டா வெறுப்பாகக் கருதப்படும் இட ஒதுக்கீடு முறையைக் கடைபிடித்து அனைத்து நாடுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இட ஒதுக்கீடு முறையினால் கெவின் பீட்டர்சன் உள்ளிட்ட சில வெள்ளை வீரர்கள் தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறியுள்ளனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் நிறவெறி அடக்குமுறைக்கு பிந்தைய தென் ஆப்பிரிக்காவில் இட ஒதுக்கீடு என்பது இன்னும் பரந்துபட்ட வரலாற்று இயக்கமாகும், கிரிக்கெட் என்பதை வெற்றிடத்திலிருந்து புரிந்து கொள்ளாமல் ஒரு சமூக அமைப்பின் அங்கமாகப் புரிந்து கொண்டால் தென் ஆப்பிரிக்காவின் இட ஒதுக்கீடு முறையைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.

எனவே இந்தியச் சூழலில் திறமை என்னும் மாயை அடித்து நொறுக்கி சமவாய்ப்புகள் வழங்கும் இட ஒதுக்கீடு முறையைப் பரிசீலிக்கும் விவாதங்கள் முக்கியம். இந்தக் கொள்கையின் உருவரைகள் கவனத்துடன் அலசி ஆராயப்பட வேண்டும். இதனை உடனடியாக மட்டையடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அமல் படுத்த முடியாது, கீழ்நிலைகளில் பள்ளி மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் செயல்படுத்த வேண்டும்.

இட ஒதுக்கீடு என்றாலே குலைநடுங்குபவர்கள் பணமழை ஐபிஎல் கிரிக்கெட்டிலும் ஒருவகையில் இட ஒதுக்கீடு வடிவம் கடைபிடிக்கப்படுகிறது என்பதை உணர வேண்டும். அயல்நாட்டு வீரர்களைக் குறைத்து உள்நாட்டு, விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதைப் பார்க்கலாம். இதன் பலனை நாம் நேரடியாகப் பார்க்கலாம் ரஞ்சி கிரிக்கெட் ஆடாத வீரர்கள் கூட கிரிக்கெட் லெஜண்ட்களுடன் சேர்ந்து ஆட வாய்ப்பு கிடைத்துள்ளது, இதனால் புதிய திறமைகள் கண்டுபிடிக்கப்படுகிறது என்பதற்கும் மேலாக ஏற்கெனவே வணிகமயமாக்கப்பட்ட இந்தக் கிரிக்கெட் வகை கிராமப்புறங்களுக்கும் பரவியுள்ளது. ஆனாலும் சமூகப் பரவல் மிகப்பெரிய பற்றாக்குறையாகத்தான் இருக்கிறது.

கிரிக்கெட்டில் உள்ள சமத்துவமின்மைக்கு இட ஒதுக்கீடு லட்சியார்த்த தீர்வாகாது. ஆனாலும் சமமான கல்வி, சமமான வாய்ப்புகள் வழங்கப்படாத ஒரு சமூகத்தில் இட ஒதுக்கீட்டில்தான் தஞ்சமடைய வேண்டியுள்ளது. வளர்ந்த ஜனநாயக நாடுகள் ஒவ்வொரு துறையிலும் பரவலாக்கத்தை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் இது வெறுப்பூட்டும் ஒரு விஷயமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

(நிசிம் மனத்துக்காரென் என்ற இந்த எழுத்தாளர் கனடாவில் டல்ஹவுசி பல்கலைக் கழகத்தில் பன்னாட்டு மேம்பாட்டு ஆய்வுத்துறை தலைவராக பணியாற்றுகிறார். )

Courtesy : Tamil Hindu

Load More Related Articles
Load More By sridhar
Load More In சிறப்புப் பக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

புரட்சியாளர் அம்பேத்கர் மறைந்தபோது அவரைப்பற்றி பல்வேறு நாளேடுகள் வெளியிட்ட புகழுரைகள்

 “டைம்ஸ் ஆப் இந்தியா” அம்பேட்கர் ஆற்றல் மிககக, அருந்திறன் வாய்க்கப்பெற்ற பல்துறை வல்லுனராக…