அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே! நான், பஞ்சாப் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்பே எண்ணியிருந்தேன். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது… நான் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அனைவரிடம் பேச வேண்டும் என்று, இந்தியா முழுவதும் உள்ள தீண்டத்தகாத மக்கள் விரும்புகிறார்கள். இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய துணைக் கண்டத்தில் ஒரு தனி மனிதரால் இரண்டு ஆண்டுகளில் கூட, நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்துவிட முடியாது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே, மக்களின் விருப்பங்களை நிறைவு செய்ய அவர்கள் அழைக்கும் போது என்னால் வர இயலவில்லை. எனவே, நீங்கள் உங்கள் சொந்தக்காலில் நிற்கப் பழகுங்கள். என்னுடைய உதவியின்றி, என்னை அதிகம் சார்ந்து நிற்காமல், நீங்கள் சந்திக்கும் நெருக்கடிகளைச் சமாளிக்க, ஒருங்கிணைந்து செயல்படுங்கள்.
ஒரு மனிதன் 52 ஆவது வயதில் அரசியலைவிட்டு விலகிவிட வேண்டும். ஆனால், தற்காலத்தில் உள்ள அரசியல்வாதிகள், 55 வயதுக்குப் பிறகுதான் தங்களுடைய அரசியல் பணியைத் தொடங்குகிறார்கள்; அதற்குப் பிறகு அரசியல் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்தலாம் என்று நினைக்கின்றனர். அவர்களுடைய ஒரே நோக்கம், தங்களின் சுயநலன்களுக்காக அரசியலில் இருந்து எதையாவது பெற முடியுமா என்பதுதான்.
ஒரு மனிதன் 52 ஆவது வயதில் அரசியலைவிட்டு விலகிவிட வேண்டும். ஆனால், தற்காலத்தில் உள்ள அரசியல்வாதிகள், 55 வயதுக்குப் பிறகுதான் தங்களுடைய அரசியல் பணியைத் தொடங்குகிறார்கள்; அதற்குப் பிறகு அரசியல் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்தலாம் என்று நினைக்கின்றனர். அவர்களுடைய ஒரே நோக்கம், தங்களின் சுயநலன்களுக்காக அரசியலில் இருந்து எதையாவது பெற முடியுமா என்பதுதான். எனக்கு எவ்வித சுயநல எண்ணங்களும் இல்லை. நான் என்னுடைய சமூகத்தின் நலன்களுக்காகவே அரசியலில் இருக்கிறேன். நான் 1920 இல் அரசியல் வாழ்க்கையில் நுழைந்து, இன்றுவரை அதில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன். என்னுடைய வாழ்க்கையில் என் சமூகத்திற்காக 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். அரசியலிலிருந்து விடுபட விரும்பினாலும், என்னுடைய சமூகத்தை ஒன்றிணைப்பதற்கானத் தேவை என்னை அரசியலில் இருக்க கட்டாயப்படுத்துகிறது.
இந்த முப்பது ஆண்டுகளில், எட்டு ஆண்டுகள் நான் அரசாங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். இவ்வளவு நீண்ட நாட்கள் தொடர்ச்சியாக யாரும் அரசியலில் இருந்திருப்பார்களா என்று எனக்குத் தெயவில்லை. நான் விரும்பியிருந்தால், கடைசிவரை அரசாங்கத்தின் பொறுப்பில் நீடித்திருக்க முடியும். நான் இதைப் பெருமைக்காகச் சொல்லவில்லை. எனக்கு இருந்த தகுதிகளுக்கு, நான் அங்கேயே இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தால் என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இருந்திருக்கவில்லை. என்னுடைய சமூகத்தின் நலன்களுக்காகவே நான் காங்கிரஸ் அரசில் இருந்து விலகும் தேவை ஏற்பட்டது. நான் எங்கு சென்றாலும், என்னுடைய சமூகத்தின் நலன்களுக்காகப் பணியாற்றும் எண்ணத்தில் உறுதியாக இருப்பேன் என்று உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நான் தத்துவ இயலில் முனைவர் பட்டம் பெற்று, இங்கிலாந்திலிருந்து திரும்பினேன். அப்போது இந்தியாவில் யாருமே அந்த கல்வித் தகுதியைப் பெற்றிருக்கவில்லை. நான் பம்பாய் சென்று ஒரு குக்கிராமத்தில் தங்கியிருந்த போது, யாருக்குமே நான் இருக்கும் இடம் தெரிந்திருக்கவில்லை. இருப்பினும், பம்பாய் அரசு கடும் முயற்சிக்குப் பிறகு என்னுடைய இடத்தைக் கண்டுபிடித்து, அரசியல் பொருளாதாரத் துறையின் பேராசியர் பதவியை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என என்னை அணுகியது. நான் இந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டேன். நான் அந்த வேலையை ஏற்றிருந்தால், குறைந்தது இயக்குநராகவாவது ஆகியிருப்பேன். ஒரு மாதத்திற்குக் குறைந்தது மூன்று அல்லது நான்கு ஆயிரம் ரூபாய்களாவது எனக்கு ஊதியம் கிடைத்திருக்கும்.
என்னுடைய சமூகத்திற்காகப் பணியாற்ற வேண்டும் என்ற மாபெரும் உணர்வுதான் நான் அந்தப் பணியை ஏற்காததற்குக் காரணம். நான் இந்தப் பணியில் இருந்திருந்தால், சமூகப் பணியாற்றியிருக்க முடியாது. ஓர் அரசுப் பணியாளர், அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப நடந்து அதன் கொள்கைகளைப் பின்பற்ற முடியுமே தவிர, தன்னுடைய சமூகத்திற்காகப் பணியாற்றிவிட முடியாது.
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் சிறிது பணத்தை சம்பாதித்துவிட்டு, நான் மீண்டும் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்று “பாஸ்டர்’ ஆகத் திரும்பினேன். நான் பம்பாய்க்குத் திரும்பியதும், மீண்டும் பம்பாய் அரசு மாவட்ட நீதிபதி பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தது. எனக்கு மாத ஊதியமாக 2,000 ரூபாய் அளித்து, சில காலங்கள் கழித்து என்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக்குவதாகவும் உறுதியளித்தது. ஆனால், நான் அதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிற வருமானங்கள் மூலம் என்னுடைய வருவாய் அப்போது 200 ரூபாயாக இருப்பினும், நான் இப்பணியை ஏற்கவில்லை.
1942 இல் என் முன்பு இரண்டு கேள்விகள் எழுந்தன. ஒன்று, நான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுவது; மற்றொன்று, இந்திய அரசின் “வைசிராய் நிர்வாகக் குழு’வில் உறுப்பினராக இணைந்து பணியாற்றுவது. நான் உயர் நீதிமன்றத்தில் சேர்ந்திருந்தால், ஒரு மாதத்திற்கு 5000 ரூபாய் ஊதியமாகவும், ஓய்வு பெற்ற பிறகு 1000 ரூபாய் ஓய்வூதியமாகவும் பெற்றிருப்பேன். ஆனால், நான் அதைச் செய்யவில்லை. அதற்கு பதில் அரசியலில் நுழைந்தேன். நான் தீண்டத்தகாத சமூகத்தில் பிறந்தேன். அந்தச் சமூகத்திற்காகவே சாவேன். என்னுடைய சமூகத்தின் நலனே வேறு எதைக் காட்டிலும் எனக்கு உயர்ந்ததாகும். நான் எந்தக் கட்சியிலும் எந்தஓர் அமைப்பிலும் சேரவில்லை. காங்கிரஸ் அரசிலும் நான் யாரையும் சார்ந்திராமல் இருந்தேன்; என்னுடைய மக்களுக்கு நான் நேர்மையாக இருந்தேன்.
(27.10.1951 அன்று, ஜலந்தரில் ஆற்றிய உரை)
1 Comment
Dear Sridhar, Thanks for sharing this kind of rare speeches of Dr. Ambedkar,, more imporantly in Tamil. It feels like he is talking to us today. Please continue the great work.