பேரன்பின் பாபாசாகேப் அவர்களுக்கு,

வணக்கம். ஊர் தனியாகவும், சேரி தனியாகவும் இன்றுவரை பிரிக்கப்பட்டு கிடக்கும் ‘அகண்ட பாரதத்தில்’ இருந்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் இறந்த ஆண்டில் இருந்து ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்தைக் கடந்துவிட்டோம். உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஒழிக்க நினைத்த ‘சாதி’, காலம் கடந்து இன்னும் உயிர்ப்புடன் இருந்து வருகிறது.

’இப்ப எல்லாம் யாரு சாதி பார்க்குறாங்க?’ என்ற கேள்வியை எப்போதும் முன்வைக்கும் தலைமுறையில் பிறந்தவர்கள் நாங்கள். ‘இட ஒதுக்கீடு தான் சாதியை நீடிக்கச் செய்கிறது’ என வாதம் செய்யவும் எங்கள் தலைமுறையில் பலர் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுவிட்டனர். மக்களின் பொதுப்புத்தியில் உருவாக்கப்படும் இத்தகைய சாதிக்கு ஆதரவான கருத்துகள் இன்று உச்ச நீதிமன்றம் வரை சென்று சேர்ந்துவிட்டன.

நீங்கள் அனுபவித்து, ஒழிக்க நினைத்த தீண்டாமையைக் குற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எழுதி இந்தியாவின் உழைக்கும் மக்களின் மாண்பை மீட்டெடுக்க முயற்சி செய்தீர்கள். வருடங்கள் கடந்தாலும் வன்முறைகள் குறையவில்லை என்பதால், பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. சட்டத்தில் இயற்றப்பட்டாலும், நடைமுறையில் பல சமயங்களில் செயல்படாத சட்டமாகவே அது இயங்கி வந்தது.

அந்த சட்டம் ’அப்பாவிகளைப் பழிவாங்குகிறது’ எனவும், ‘சாதியை நிலைத்திருக்கச் செய்கிறது’ எனவும் கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சாதி நிலைத்திருப்பதால் தான் வன்கொடுமைகள் நிகழ்கின்றன என்னும் அடிப்படைத் தன்மையை உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை போலும். தங்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க, எழுத்தளவிலேனும் இருக்கும் ஒரே சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பட்டியல் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 தலித் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். அப்போது, நாங்களோ இறந்தவர்களின் உடல்களை எண்ணி, அடையாளப் போராட்டங்களை ஆங்காங்கே நடத்திக்கொண்டிருந்தோம்.

 

 

இன்றைய இளைஞர்களாக இருக்கும் நாங்கள் பெரும்பாலும் முதல் முறை வாக்காளர்களாக இருக்கிறோம். கல்வித்துறையில் உள்ள சாதியைப் பற்றியும், வன்கொடுமைகளைப் பற்றியும் எங்கள் தலைமுறையில் நெருப்பை விதைத்தவன் ரோஹித் வெமுலா. அந்த ஒற்றை மனிதனின் இறுதிக் கடிதம் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிய தன்மையைக் காட்டியது. ரோஹித் தனது ஆதர்ச நாயகனாக உங்களை மனதில் ஏந்தி, உங்கள் பெயரில் மாணவர் அமைப்பை ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நடத்திவந்தார்.

“ஒரு மனிதனின் மதிப்பு அவனின் உடனடியாக அவனைச் சுட்டும் அடையாளமாகவும், அதனோடு நெருங்கும் சாத்தியக்கூறாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனிதனின் மதிப்பு ஒரு வாக்காக, எண்ணாக, பொருளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது’ என்ற ரோஹித் வெமுலாவின் இறுதிக் கடிதத்தின் வரிகள் எங்களை சாதி ஒழிப்பை நோக்கித் தள்ளின. சில மாதங்கள் கழித்து, நாங்கள் ரோஹித்தை இழந்ததைப் போலவே, ஜே.என்.யூ மாணவர் முத்துகிருஷ்ணனையும் இழந்தோம்.

ரோஹித் சொன்னதுபோல, இந்தியாவில் அடித்தட்டு மக்களின் மதிப்பு இங்கு இருக்கும் அரசியல் கட்சிகளால் வாக்குகளாக மட்டுமே எண்ணப்படுகிறது. மானுடவியல் ரீதியாக இந்து மதத்தில் நிலவும் சாதிய அடுக்குகளுக்கு எதிராக போராடிய உங்களை, ‘இந்து ராஜ்ஜியம் அமைப்போம்’ என்ற கனவோடு முழக்கமிடும் கட்சிகள் பயன்படுத்தும் நோக்கம் வாக்கு வங்கியை நிரப்புவதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

’சாதியை அழித்தொழிக்க அக மணமுறையைக் கைவிட வேண்டும்’ என நீங்கள் சொன்ன வழியை எங்கள் தலைமுறையினர் பின்பற்றத் தொடங்கினோம். சக மனிதர்களாக எங்களுக்குள் எழும் காதல் உறவைத் துண்டிக்க ஆயுதங்களுடனும் ‘கெளரவம்’ என்ற பட்டத்துடன் கிளம்பியது சாதி. நாடு முழுவதும் ’கெளவரவத்துக்காக’ கொல்லப்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் கணக்கு இல்லை. பட்டப்பகலில் வீதியில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட சங்கரும், ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் பிணமாகக் கிடந்த இளவரசன், கோகுல்ராஜ் முதலானோரும் சமீபத்திய உதாரணங்கள்.

இளவரசன் எழுதிய கடிதத்தில் ‘இன்னொரு ஜென்மம் இருந்தா நீயும் நானும் ஒரே சாதியில பொறந்து பெத்தவங்க சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசையா இருக்குடா திவ்யா’ என்று எழுதியது இந்த சாதிய சமூகத்தின் கெளவரத்தைப் பற்றித்தான்.

இவர்களின் ‘கெளரவம்’ நாங்கள் உங்களைப் பின்பற்றி பீமா கோரிகானில் கூடினால் கோபித்துக் கொள்கிறது; சஹரன்பூரில் சந்திரசேகர் ஆசாத் இராவணன் தலைமையில் பீம் ராணுவத்தைக் கட்டமைத்தாலும் கோபித்துக் கொள்கிறது. அந்த கெளரவம் தான் அரசு உதவியுடன் பீமா கோரிகானில் அமைதியாகக் கூடிய மக்கள் மீது தாக்குதல் தொடுக்கிறது; தலித் குழந்தைகளுக்கு கல்வியைக் கற்றுத்தரும் சந்திரசேகர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனையைத் தருகிறது.

அம்பேத்கர்

நீங்கள் எங்கள் போராட்டங்களை ஆராய்ந்து பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரியும். நாங்கள் சாதிக்கு எதிரான போரில் யாராவது இறந்தால்தான் போராட்டமே நடத்துகிறோம். சமூக நீதியை ‘நீட்’ வென்றபோது, அனிதா இறந்தாள்; நாங்கள் போராடினோம். கல்வி நிறுவனங்களில் அரசியல் பேசும் மாணவர்களின் கழுத்தில் சாதி தூக்குக் கயிறாக இறுகினால், நாங்கள் போராடுகிறோம். தனக்கு விருப்பப்பட்டவர்களை திருமணம் செய்துகொள்வதை, சாதி விரும்பாமல் கொலை செய்தால், நாங்கள் போராடுகிறோம். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைக் காப்பாற்றக் கோரி சாதியின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியானால் நாங்கள் போராடுகிறோம்.
எங்கள் போராட்டங்கள் பிணங்களின் மீது நடக்கின்றன. ’நமது போராட்டம் தண்ணீருக்கானது அல்ல; மனித உரிமைகளுக்கானது’ என்ற உங்கள் கூற்றை இன்று நாங்கள் நினைத்துப் பார்க்கிறோம்.

உங்கள் காலத்தில் சனாதனிகள் ‘இந்தியாவின் தலையாய பிரச்னை வெள்ளை அரசு’ என்றார்கள்; எங்கள் காலத்தின் சனாதனிகள் ‘இந்தியாவின் தலையாய பிரச்னை ஊழல்’ என்கிறார்கள். இந்தியாவின் தலையாய பிரச்னையான சாதியின் இரும்புக்கர கொடுமைகளை அனுபவித்தவர்களும், அதை உணர்ந்தவர்களும் சாதிக்கு எதிராக குரல் கொடுத்து வரும் சூழலில், இன்றைய பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களும் பல்வேறு சமரசங்களுக்குத் தள்ளப்படுகின்றனர்.

எங்கள் தலைமுறை இளைஞர்களுக்கு நீங்கள் ‘இந்திய அரசியல் சாசனத்தை எழுதியவர்’ என்றும், ‘தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடிய சாதித் தலைவர்’ என்றளவில் மட்டும் தான் அறிய வைக்கப்பட்டு இருக்கிறீர்கள். இந்தியாவின் மாபெரும் பொருளாதார மேதை, இந்தியாவின் பெண்களின் சம உரிமைக்காக சட்டம் உருவாக்கியவர், நதிநீர் மேலாண்மைக்கான வழியைக் கூறியவர், இந்தியாவின் தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தந்தவர், இதழியலாளர் முதலான உங்கள் பரிமாணங்கள் எங்கள் தலைமுறையினரிடம் மறைக்கப்படுகின்றன.

அடுத்து வரும் தலைமுறையினருக்காக, உங்களைத் தயார் செய்யும் பணியை தற்போதுள்ள தேசிய கட்சி ஒன்று தொடங்கியுள்ளது. உங்கள் பெயருக்கு முன்னாள் ‘இராம்ஜி’ என்ற உங்கள் தந்தையின் பெயரைச் சேர்த்ததோடு, உங்கள் சிலைக்கு காவி நிறத்தையும் பூசியுள்ளது உத்தரப்பிரதேசத்தின் ஆதித்யநாத் அரசு. அது மட்டுமல்ல, உங்களையும் உங்களைப் போன்றே தீவிரமாக சாதியை எதிர்த்துப் போராடிய உங்கள் நண்பர் பெரியாரையும் பிரிக்கும் முயற்சியை இவர்கள் செய்துவருகிறார்கள்.

அதே உத்தரப்பிரதேச ஆதித்யநாத் அரசில் சாதியப் பாகுபாடு நிலவுவதாக ஐந்து தலித் பாராளுமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். அவர்கள் ஒரு ராம்நாத் கோவிந்தை குடியரசு தலைவராக்கி விட்டு, பல கோடி ராம்நாத் கோவிந்த்களின் மீது பாகுபாடுகளைச் சுழற்றுகின்றனர்.

தண்டவாளத்தில் இறந்துகிடந்த இளவரசனின் ஆன்மாவும், உங்கள் படத்துடன், பெரியார், பூலே ஆகியோர் படங்களின் முன்பாகவும் தூக்குக் கயிறைக் கழுத்தில் ஏந்திய ரோஹித் வெமுலாவின் ஆன்மாவும், சமூக நீதியைக் கண்ணில் காட்டாத சமூகத்தின் அநீதிக்கு பலியான அனிதாவின் ஆன்மாவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைக் காக்க, சாலையோரத்தில் குண்டடிபட்டு, ரத்த வெள்ளத்தில் உங்கள் முகம் பதிந்த டீ-ஷர்ட் அணிந்திருந்த அந்த இளைஞனின் ஆன்மாவும் எங்களுக்குத் துணை நிற்கும் என நம்புகிறோம்.

நீங்கள் சொன்னதுபோல, நாங்கள் கற்பித்துக்கொண்டிருக்கிறோம்; ஒன்று சேர்ந்துகொண்டிருக்கிறோம்; நிச்சயம் புரட்சி செய்வோம். ஆனால், எங்களை இந்த கட்டமைப்பில் இருந்து மீட்க பாடுபட்ட உங்களை இந்த நேரத்தில் நாங்கள் நினைவுகூருகிறோம். We are because you were.

வி மிஸ் யூ பாபாசாகேப் அவர்களே!

இப்படிக்கு,
ஒரு சாமான்ய இளைஞன்.

Load More Related Articles
Load More By sridhar
Load More In சிறப்பு கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

சிந்தப்பட்ட பின்னும் கொப்பளிக்கும் இரத்தம்!

கொடிய இடைநிலைச் சாதியம் கொடிகட்டிப் பறக்கும் – தமிழகத்தின் மிகப்பெரும் கிராமமான மதுர…