Home வன்கொடுமைப் பதிவுகள் சாவு ருசிகண்ட சாதி வெறி!

சாவு ருசிகண்ட சாதி வெறி!

0
0

சாதிவெறி என்பது இந்தியாவின் தேசிய நோய் என்பதை நிரூபித்திருக்கிறது கேரளமும்.

காதலித்தவரையே கரம் பிடித்த மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்த நீனுவின் சந்தோஷம், கல்யாணம் முடிந்த மூன்றாவது நாளே தொலைந்துவிட்டது. கணவர் கெவின் ஜோசப் ஆணவக்கொலைக்குப் பலியாக, கதறித் துடித்துக்கொண்டிருக்கிறார் நீனு.

கோட்டயம் அருகே உள்ள நட்டாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கெவின் ஜோசப்புக்கும் நீனுவுக்கும் கல்லூரியில் படிக்கும்போது காதல் மலர்ந்துள்ளது. தென்மலையைச் சேர்ந்த நீனு, கோட்டயத்தில் உள்ள ஹாஸ்டலில் தங்கிப் படித்தார். கோட்டயம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மே 25-ம் தேதி நண்பர்கள் உதவியுடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த நீனு, தலித் இளைஞரை மணந்தது நீனுவின் தந்தை ஜான் சாக்கோவுக்குப் பிடிக்கவில்லை. மகளை கெவினிடமிருந்து பிரிக்க, கெவின் ஜோசப்பின் தந்தை ராஜனிடம் `உங்கள் மகன் என் மகளை மறந்துவிட்டால், ஏராளமான  பணம் தருகிறேன்’ என பேரம் பேசினார். ராஜனோ கைவிரித்துவிட, கோட்டயம் காந்திநகர் காவல் நிலையத்தில் `மகளைக் காணவில்லை’ எனப் புகார் அளித்தார் ஜான் சாக்கோ. காவல்துறை ஆய்வாளர் சிபு, சாக்கோவின் சொற்பேச்சுப்படி நடந்தார் என்றும் பணம்தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

திருமணம் முடித்த ஆவணங்கள் பக்காவாக இருந்ததால் சிபுவால் கெவின் ஜோசப்பை சட்டப்படி எதுவும் செய்யமுடியவில்லை. தந்தையுடன் செல்ல மறுத்த நீனுவை, நீதிபதியின் முன் போலீஸ் ஆஜர்படுத்தியது. கெவினுடன் வாழ விரும்புவதாக நீதிபதியிடம் நீனு உறுதியாகக் கூறிவிட்டார்.  கோபத்தில் கண்கள் சிவந்த ஜான் சாக்கோ `அவனுடன் எப்படி வாழ்ந்துவிடுகிறாய் எனப் பார்க்கிறேன்’ என்று கத்திவிட்டு அங்கிருந்து கோபமாகச் சென்றார். `தந்தையின் கோபம் வற்றிவிடும்’ எனக் கணக்குபோட்டார்  நீனு. ஆனால்…

ஜான் சாக்கோவின் கோபம் உயிரைப் பறிக்கும் அளவுக்கு வன்மமாக வளர்ந்தது. உடனடியாக வளைகுடா நாட்டில் வேலைபார்த்து வந்த மகன் ஷானுவுக்குத்  தங்கையின் காதல் திருமணம் குறித்து போனில் தகவல் கூறினார் சாக்கோ. அடுத்த நாளே கோட்டயம் திரும்பிய ஷானு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த ரியாஸை அணுகி, விஷயத்தைக் கூறித் தேவையான பணத்தையும் கொடுத்துள்ளார். ரியாஸ் கும்பல், கெவின் ஜோசப்பின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆரம்பித்தது.

மே 28-ம் தேதி நள்ளிரவு 2 மணியளவில், மன்னம் என்ற பகுதியில் நண்பர் அனீஷுடன் கெவின் ஜோசப் பேசிக்கொண்டிருந்தார். இந்த அனீஷ்தான் கெவின் ஜோசப் நீனுவைத் திருமணம் செய்துகொள்ள எல்லாவிதங்களிலும் உதவியாக இருந்தவர். இருவரையும் மோப்பம்பிடித்த ரியாஸ் கும்பல், மூன்று கார்களில் வந்து  கண் இமைக்கும் நேரத்தில் இருவரையும் காருக்குள் அள்ளிப்போட்டது. காரைத் தென்மலை நோக்கி ஓட்டியுள்ளனர்.

 

காலையில் அழுதபடி காவல் நிலையத்துக்கு ஓடிய நீனு, கணவரைக் கடத்திவிட்டதாக ஆய்வாளர் சிபுவிடம் புகார் அளித்திருக்கிறார். ஏற்கெனவே கெவின்-நீனு மீது கடுங்கோபத்தில் இருந்த ஆய்வாளர், `முதலமைச்சர் பினராயி விஜயன் நிகழ்ச்சி கோட்டயத்தில் நடப்பதால் அவருக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியுள்ளது. முதலமைச்சர் இங்கிருந்து சென்ற பிறகுதான் எதுவும் செய்ய முடியும்’ என்று நீனுவையும் அவரின் புகாரையும் அலட்சியப்படுத்தி னார். கோட்டயத்திலிருந்து பினராயி விஜயன் சென்ற பிறகு, 28-ம் தேதி இரவுதான் கடத்தப்பட்ட கெவினைத் தேடும் படலத்தை ஆய்வாளர் சிபு குழு தொடங்கியது.

கெவினைக் கடத்திக்கொண்டு போனபோது, ஷானு சென்ற கார் டிராஃபிக் போலீஸிடம்  பிடிபட்டுள்ளது. காரில் இருந்த அனை வரும் குடிபோதையில் இருந்துள்ளனர். போலீஸுக்கு 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து ஷானு கும்பல் தப்பித்துள்ளது. கோட்டயத்துக்கும் தென்மலைக்கும் 100 கிலோமீட்டர் தொலைவு. இடையில் எட்டு காவல் நிலையங்கள் உள்ளன. கடத்தல் சம்பவம்குறித்து கோட்டயம் போலீஸார் பிற காவல் நிலையங்க ளுக்குத் தகவல் கொடுத்திருந்தால் ஷானு, ரியாஸ் கும்பல் பிடிப்பட்டி ருக்கும். ஆனால் காவல்துறையின் அலட்சியம் ஆணவக்கொலைக்கு உதவியிருக்கிறது.

கடைசியில் கெவின் உடல் தென்மலை அருகே உள்ள சாலியாற்றுக் கரையில் மே 29-ம் தேதி கண்டெடுக்கப்பட்டது.  உடல் முழுவதும் ரத்தக்காயங்கள். ஒருகட்டத்தில் கொலைகாரக் கும்பலிடம் இருந்து  தப்பிய ஓடிய கெவின், சாலியாற்றில் விழுந்து பரிதாபமாக இறந்துள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், தண்ணீரில் மூழ்கி கெவின் இறந்துவிட்டதாக பதிவிடப்பட்டுள்ளது. கெவின் கொலை சம்பவம் கேரளச் சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. முதலமைச்சர்  பினராயி விஜயனோ, `கொலையில் தொடர்புடைய  ஜான் சாக்கோ, அவரின் மனைவி ரெஹனா, சயானு சாக்கோ மூன்று பேருமே காங்கிரஸ் கட்சிக்காரர்கள்’ என்று குற்றச்சாட்டை மறுக்கிறார்.

சமீபத்தில் தலித் இளைஞரைக் காதலித்த இளம்பெண் ஆதிரா, திருமணத்துக்கு ஒருநாள் முன்னதாக தந்தை மூலம் கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட வடு ஆறுவதற்குள், கேரளாவில் நடந்த அடுத்த ஆணவக்கொலை இது. கெவின் ஜோசப்பின் குடும்பத்தினரைச் சந்திக்க கோட்டயம் சென்றோம்.

வீட்டில் சோகம் அப்பிக்கிடந்தது. கெவின் ஜோசப்பின் தந்தை ராஜன், “எனக்கு ஒரு மகள், ஒரு மகன்தான். ஒற்றை மகனை இழந்துவிட்டேன். என் மனைவி சாப்பிடக்கூட  இயலாமல் அரற்றிக்கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் அந்தப் பொண்ணு கண்ணீரும் கம்பலையுமாகக் கிடக்கிறாள். என்னால் யாருக்கும் ஆறுதல் கூறித் தேற்ற முடியவில்லை. கடைசியாக என் மகன் தன் அம்மா மேரி கையால் சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றான். அதற்குப் பிறகு அவனை  சடலமாகத்தான் பார்த்தோம். என் மகனைக் கொலைசெய்த ஜான் சாக்கோகூட காதல் திருமணம் செய்தவர்தான். இவரின் மனைவி ரெஹானா இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். மதத்தை ஏற்றுக்கொள்பவர்களால்கூட தலித்துகளைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. இந்தப் பொண்ணோட வாழ்க்கை இனி என்ன ஆகுமோ! கடவுளே… இந்தத் துயரத்தைத் தாங்கும் சக்தியை என் மருமகளுக்குக் கொடு’’ என்றார் வேதனையுடன்.

உயிரற்றுக் கிடந்த கெவினின் கையைப் பிடித்து, `எந்தச் சூழலிலும் என் தந்தையின் முகத்தில் இனிமேல் விழிக்க மாட்டேன்.  உன் வீட்டில்தான் இறுதிவரை வாழ்வேன்’ என்று நீனு சத்தியம் செய்ததாக கெவின் ஜோசப் வீட்டில் இருந்த நீனுவின் தோழிகள் நம்மிடம் கூறினர்.

இன்னொரு கௌசல்யாவை உருவாக்கியுள்ளது இந்தச் சமூகம்!

 

Source : Ananda Vikatan, 14/06/2018

Load More Related Articles
Load More By sridhar
Load More In வன்கொடுமைப் பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

`கணவரின் ஆணவக்கொலைக்கு நீதி வேண்டும்’ – பிரனய் மனைவி அம்ருதா உருக்கம் #JusticeForPranay

தெலங்கானாவில் 2 நாள்களுக்கு முன்னால், கர்ப்பிணி மனைவி (அம்ருதா)யின் கண்ணெதிரே கணவனை ஆணவக்க…