Home பௌத்தம் பௌத்த நூல்கள் புத்த பகவான் அருளிய போதனை

புத்த பகவான் அருளிய போதனை

0
3,275
புத்த பகவான் அருளிய போதனை
What The Buddha Taught
வல்பொல சிறி இராகுலர்   Venerable Walpola Rahula
தமிழாக்கம்  : நவாலியூர் சோ. நடராசன்
Tamil Translation : Navaliyur Somasundaram Nadarasa

* * * 

அறவுரை – தம்ம பதம்
(தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)

1

சித்தத்தின் நிலைகளுக்கெல்லாம் மனமே முன்னோடி. அவை மனத்திலிருந்து உண்டானவை. மனமே எல்லாவற்றுக்கும் மேலாக நிற்கிறது. தீய எண்ணத்தோடு ஒருவன் பேசினாலென்ன, செயல்புரிந்தாலென்ன வண்டிச் சக்கரம் மாட்டின் அடியைத் தொடர்ந்து செல்வது போலத் துன்பம் அவனைத் தொடர்ந்து செல்லும்.

2

சித்தத்தின் நிலைகளுக்கெல்லாம் மனமே முன்னோடி. அவை மனத்திலிருந்து உண்டானவை. மனமே எல்லாவற்றுக்கும் மேலாக நிற்கிறது. தூய எண்ணத்தோடு ஒருவன் பேசினாலென்ன, செயல்புரிந்தாலென்ன நிழல் தன்னைத் தொடர்வது போலச் சுகம் அவனைத் தொடரும்.

3

‘அவன் என்னை நிந்தித்தான், அவன் என்னை அடித்தான், அவன் என்னை ஜெயித்தான், அவன் என்னை கொள்ளையடித்தான்’, என்று எவன் எண்ணுகிறானோ அவனிடத்துள்ள துவேஷம் தணிவதில்லை.

5

இவ்வுலகில் எக்காலத்தும் பகைமை பகைமையால் தணிவதில்லை. அன்பினாலேதான் தணியும். இதுவே காலங்கடந்த கோட்பாடு.

24

உற்சாகமும் சாவதானமும் நற்கருமங்களில் நாட்டமும் உடையவனாய், தெரிந்த செயலில் ஈடுபடுபவனாய், புலனடக்கமுள்ளவனாய் அறவாழ்வில் ஈடுபடுபவனுடைய புகழ் உயர்ந்து வளரும்.

25

ஓயாத ஊக்கத்தினாலும், விழிப்பினாலும், ஆர்வத்தினாலும், புலனடக்கத்தினாலும் அறிஞன் வெள்ளத்தில் மூழ்கிவிடாத ஒரு தீவைத் தனக்கு ஆக்கிக் கொள்வானாக.

26

அறிவில்லாத மூடசனங்கள் சோம்பலில் காலங் கழிக்கின்றனர். அறிவாளிகள் விழிப்பாயிருத்தலையே பெரிய தனமாகப் பாதுகாப்பர்.

27

சோம்பலை மேற்கொள்ள வேண்டாம். காம சுகங்களிலே ஈடுபட வேண்டாம். விழிப்பாயிருந்து தியானத்தில் மகிழ்பவன் எல்லையற்ற சுகத்தை அடைவான்.

33

எப்பொழுதும் துடிதுடித்தபடி இருக்கும் கொடிய சித்தத்தை அடக்குவது கஷ்டம். காப்பது கஷ்டம். அம்பு செய்வோன் அம்பை நேராக்குவது போல அறிவாளி சித்தத்தை நேராக்குவான்.

35

அடக்குவதற்கு அரிதானதும், அலைந்து கொண்டு தன்போக்கில் திரிவதுமான சித்தத்தை அடக்குவது நல்லது. அடங்கிய சித்தம் சுகத்தைத் தரும்.

38

நிலையில்லாத சித்தமுடையவனும், நல்லறத்தை அறியாதவனும், உறுதியற்ற சிரத்தையுடையவனுமான ஒருவனுடைய அறிவு ஒருபோதும் பூரணமடையாது.

42

பகைவன் பகைவனுக்குச் செய்யக்கூடிய கெடுதியைக் காட்டிலும், வைரி வைரிக்குச் செய்யக்கூடிய தீமையைக் காட்டிலும், அதிகமான தீமையைத் தவறான வழியிற் செல்லும் சித்தம் ஒருவனுக்குச் செய்யக்கூடும்.

43

தாயோ, தந்தையோ, வேறு சுற்றத்தவரோ, செய்ய முடியாத நன்மையை, நல்லவழியிற் செலுத்தப்படும் மனம் ஒருவனுக்குச் செய்யும்.

47

புலன் இன்பங்களென்ற மலர்களைச் சேகரித்து அவற்றில் மயங்கிக்கிடக்கும் மனத்தினை, உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் கிராமத்தைப் பெரு வெள்ளம் அடித்துக்கொண்டு போவது போல மரணம் அடித்துக்கொண்டு போய் விடுகிறது.

50

ஒருவன் மற்றவருடைய குற்றங்களையும், அவர் செய்த கருமங்கள், செய்யாத கருமங்கள் என்பவற்றையும் ஆராய வேண்டியதில்லை. தான் செய்ததையும் செய்யத் தவறியவற்றையும் நாடவேண்டும்.

51

செயலிற் காட்டாமல் அழகிய பேச்சளவில் நிற்கும் ஒருவனுடைய பேச்சு, அழகும் நிறமும் வாய்ந்த வாசனையற்ற மலர் போன்றதே.

61

வாழ்க்கைப் பிரயாணத்தில் ஒருவன் தனக்குச் சமமான துணைவனையோ, தன்னில் மேலான துணைவனையோ காணாவிட்டால், திடமான தனிவழி செல்வானாக. பேதை அவனுக்குத் துணையாக இருப்பது நன்றன்று.

62

பேதை, எனக்கு மக்களுண்டு, செல்வமுண்டு என்று சொல்லி மனக்கிளர்ச்சியடைகிறான். ஆனால் அவனே அவனுக்குச் சொந்த மில்லாதபோது மக்கள் எங்கே, செல்வமெங்கே?

64

பேதை வாழ்நாள் முழுவதும் அறிவாளியோடு பழகினாலும் ரசத்தின் சுவையை அகப்பை அறியாதவாறுபோல, தருமத்தின் அறிவை அவன் பெறமாட்டான்.

67

எந்தக் கருமத்தைச் செய்தபின் பச்சாத்தாப்பட வேண்டுமோ, எதன் பலனை அழுத வண்ணம் அனுபவிக்க வேண்டுமோ அக்கருமம் நல்லகருமம் அன்று.

69

தான் செய்த பாவம் பயன் கொடுக்காதவரை அது தேனைப் போல இனியது என்று எண்ணுகிறான் பேதை. ஆனால் அது பழுத்துப் பயன் தரும்போது துயரடைகிறான்.

81

பெரும்பாறையைக் காற்றானது எவ்வாறு அசைப்பதில்லையோ அவ்வாறே இகழும், புகழும் நல்லறிஞனை அசைக்கமாட்டா.

82.

ஆழமான ஏரி தெளிவாகவும் அமைதியாகவும் இருப்பது போல, தருமத்தைக் கேட்டறிந்த அறிஞர்கள் அமைதியாயிருப்பர்.

85

மக்களுள் சிலரே அந்தக்கரை அடைவோர். மற்றவரெல்லாம் இந்தக்கரையிலே அங்குமிங்கும் அலைந்து திரிவோரே.

90

சம்சார யாத்திரையை முடித்துக்கொண்டவன் சோகத்தைத் துறந்தவன், சகல பொருள்களிலும் பற்று நீங்கியவன், எல்லாப் பந்தங்களையும்
அறுத்தவன். அத்தகைய  அருகதனுக்கு அவாவினால் வரும் துயர் எது?

94

சாரதியினால் நன்கு அடக்கி ஆளப்பட்ட குதிரைகளைப் போல யார் தன் புலன்களை அடக்கிக் கொள்கிறானோ, அகம்பாவத்தைத் துறந்து ஆசைகளைக் கைவிட்டு எவன் உறுதியுடன் இருக்கிறானோ அவனைத் தேவர்கள் தானும் விரும்புவர்.

96

அவனுடைய மனம் அமைதியானது, அவனுடைய வாக்கும், செயலும் சாந்தமுடையவை. நல்ல ஞானமுடைய அவன் முற்றாக விடுதலை பெற்றவன். உப சாந்த நிலையுடையவன், அவனே பற்றற்றவன்.

97

அனுபவ ஞானத்தைப் பெற்றமையால் கேள்வி ஞானத்தில் நம்பிக்கை அற்றவனாய், (எவராலும்) ஆக்கப்படாத நிர்வாண மோட்சத்தைப்பற்றி அறிவுடையவனாய், பந்தங்களையெல்லாம் அறுத்தவனாய், நன்மை தீமைகளுக்கு அவகாசம் அளியாதவனாய், ஆசைகளொன்றும் இல்லாதவனாயுள்ளவனே உத்தமன்.

103

போர்க்களத்தில் ஆயிரம் மக்களை ஆயிரம்முறை வெற்றி கொள்பவனிலும் பார்க்கத் தனைத்தான் அடக்கி ஆள்பவன் மேலான வெற்றிவீரனாவான்.

104-105

தன்னைத்தான்  வெல்லுதலே மற்றவர்களை வெற்றி கொள்வதிலும் சிறந்தது.தன்னை வென்று தன்னடக்கம் பெற்றவனின் வெற்றியைச் சிதவனோ, கந்தருவனோ, மாரனோ, பிரமனோ கூட மறுபடி எடுத்துக் கொள்ள முடியாது (அந்த வெற்றியைத் தோல்வியாக்க முடியாது).

111

ஞானமில்லாதவனாய்ப் புலனடக்கமில்லாதவனாய் நூறு வருடம் வாழ்வதிலும் அறிவுள்ளவனாய்த் தியான சீலனாய் ஒருநாள் வாழ்வதே மேலானது.

116

நல்லதைச் செய்வதில் தாமதிக்க வேண்டாம். தீவினையிலிருந்து சித்தத்தை விலக்குக. நல்வினை செய்வதில் தாமதித்தால் மனம் தீவினை செய்வதில் களிப்படையும்.

119

தீவினை பயன் தராதவரை தீவினையாளன் தனக்கு நன்மையே வரும் என நினைக்கிறான். ஆனால் அது பக்குவம் அடைந்ததும் தீவினையின்
தீமையைக் காண்பான்.

120

நல்வினை பயன்கொடுக்காதவரை புண்ணியஞ் செய்தவன் தனக்குத் தீமை கிடைக்குமெனவே எண்ணுகிறான். ஆனால் புண்ணியம் பயன்கொடுத்ததும் நல்வினை செய்தவன் நற்பயனைக் காண்பான்.

121

‘என்னை இது அணுகமாட்டாது’, என்று சொல்லித் தீவினையை அலட்சியம் செய்ய வேண்டாம். சொட்டுச் சொட்டாக விழுந்தாலும் நீர் குடத்தை நிரப்புகிறது. அவ்வாறே பேதை சிறிது சிறிதாகத் தீவினையை நிறைத்துக் கொள்ளுகிறான்.

122

‘என்னை இது அணுகமாட்டாது என்று சொல்லி நல்வினையை அலட்சியம் செய்ய வேண்டாம். சொட்டுச் சொட்டாக விழுந்தாலும் நீர் குடத்தை நிரப்புகிறது. அவ்வாறே தீரன் சிறிது  சிறிதாக நல்வினையை நிறைத்துக் கொள்ளுகிறான்.

125

தனக்குத் தீமை செய்யாத ஒருவனும் தூயவனும், குற்றமற்றவனுமான ஒருவனுக்கு எந்தப் பேதை துன்பம் செய்கிறானோ அவனைக் காற்றுக் கெதிராக வீசிய தூசு திரும்பிவந்து சூழ்வது போலத் தீவினையானது சூழும்.

129

ஆயுதத்துக்கு எல்லாரும் பயப்படுகின்றனர். மரணத்துக்கு எல்லாரும் பயந்து நடுங்குகிறார்கள். தன்னை மற்றவனாகப் பாவித்து ஒருவர் மற்ற உயிர்களைக் கொல்லவும் கூடாது, கொல்லுவிக்கவும் கூடாது.

131

சுகத்தில் நாட்டமுள்ள ஒருவர், தம் சுகத்தை நாடும் உயிரினங்களுக்குத்   தண்டத்தினால் இம்சை புரிவானானால் மறுமையில் அவன் சுகத்தைப் பெறமாட்டான்.

152

சொற்பக் கேள்வியுடையவன் (அறிவில்லாதவன்) மாட்டைப் போலவனாவான். அவனுடைய ஊன்தான் வளர்கிறது. அறிவு வளர்வதில்லை.

155

புனித வாழ்வை மேற்கொள்ளாதவர், இளமையில் செல்வத்தைத் தேடாதவர், மீனில்லாத குளத்திலே வாடி நிற்கும் கிழக் கொக்கைப் போலத் தவிப்பர்.

159

மற்றவர்க்குப் போதிப்பதைத் தான் முதலிற் செய்து காட்டவேண்டும். பின்னரே பிறர்க்குப் போதிக்க வேண்டும். தன்னை அடக்கிய பின்னரே மற்றவர்களை அடங்கச் செய்ய வேண்டும். தன்னை அடக்குவதே பெரிய காரியமாகும்.

160

தானே தனக்குப் புரவலன் (சரண்) -வேறு யார் புரவலனாயிருக்க (சரணாயிருக்க) முடியும்? தன்னை நன்கு அடக்கியவன் பெறமுடியாத சரணைப் பெற்றவனாவான்.

165

தானாகவே ஒருவன் பாவம் செய்கிறான். தானாகவே கேட்டை அடைகிறான். தானாகவே தீவினையை விலக்குகிறான். தானாகவே களங்கத்தை நீக்குகிறான். தூய்மையும் களங்கமும் தன்னிலேயே தங்கியுள்ளன. ஒருவன் மற்றவனைத் தூய்மைப்படுத்த முடியாது.

167

இழிவான காரியங்களில் ஈடுபடாதே, எப்பொழுதும் விழிப்பாயிரு தப்பான கொள்கைகளைக் கடைப்பிடியாதே, அப்போது சம்சாரம் நீடிக்காது.

171

வா! இந்த உலகைப் பார். அலங்கரிக்கப்பட்ட அரசத்தேருக்கு ஒப்பானது. இதில் பேதைகள் மூழ்கித் தடுமாறுவர். அறிவாளிகள் பற்றின்றி வாழ்வர்.

178

உலகில் ஏகச் சக்கரவர்த்தியாயிருப்பதைக் காட்டிலும், சுவர்க்கத்துக்குப் போவதைக் காட்டிலும், எல்லா உலகங்களையும் ஆள்வதைக்காட்டிலும், சோதா பத்தி நெறியால் வரும் பயம் மேலானது.

183

எவ்வித பாவங்களையும் செய்யாது விடுதல், நல்வினைகளைச் செய்தல், சித்தத்தைத் தூய்மைப்படுத்தல் இவை தாம் புத்தர்களின் அறிவுரைகள்.

184

அடக்கமும் பொறுமையுமே மேலான தவம். நிர்வாணமே மேலானதென்பர் புத்தர்கள். மற்றவர்க்குத் துன்பம் செய்வோன் துறவியல்லன். மற்றவர்க்கு இன்னல் இழைப்போன் சமணன் அல்லன்.

185

புறங்கூறாமை, பிறர்க்குத் துன்பஞ் செய்யாமை, பிராதி மோட்சம் என்ற அறவழியில் அடங்கி நடத்தல், மிதமான உணவு,ஏகாந்தம், உயர்ந்த சிந்தனையில் லயித்தல், இவைதாம் புத்தர்களுடைய போதனை.

197

பகைவரிடையே நாம் பகையின்றி இன்பமாக வாழ்வோம். துவேஷ முடையவர் மத்தியில் நாம் துவேஷமின்றி வாழ்வோம்.

201

வெற்றி துவேஷத்தை வளர்க்கிறது. தோல்வியடைந்தோர் துயரமடைகின்றனர். சமாதானத்தை விரும்புவோர் வெற்றி தோல்வி இரண்டையும் விட்டுச் சுகமாக வாழ்கின்றனர்.

204

ஆரோக்கியமே மேலான லாபம். போதுமென்ற மனமே பெரும் செல்வம். விசுவாசமுள்ள நண்பனே சிறந்த சுற்றம். நிர்வாணமே மேலான சுகம்.

205

ஏகாந்தமென்னும் சுவையைப் பருகி அமைதியின் இன்பரசத்தை நுகர்ந்தபின் ஒருவன் களங்கமற்றவனாய்ப் பாவமற்றவனாய்த் தருமத்தின் சுவையைப் பருகுவான்.

215

காமத்தினால் சோகமுண்டாகிறது. காமத்தினால் பயமுண்டாகிறது. காமம் இல்லாதவனுக்கு சோகமில்லை. அப்போது பயமெங்கே?

222

வேகமாக ஓடிச்செல்லும் தேர் போலப் பொங்கிவரும் கோபத்தை அடக்குபவனையே சாரதி என நான் கூறுவேன். மற்றவர்களெல்லாம் கடிவாளத்தைக் கையிற் பிடிப்பவர்களே.

223

வெகுளியை அன்பால் வெல்லுக. தீமையை நன்மையால் வெல்க. லோபத்தைக் கொடையால் வெல்க. பொய்யைச் சத்தியத்தால் வெல்க.

231

காயத்தினால் தீமை செய்யாது காக்க வேண்டும். காயத்தை அடக்க வேண்டும். காயத்தினால் செய்யும் கெட்ட கருமங்களைவிட்டு, காயத்தினால்
நற்கருமங்களைச் செய்ய வேண்டும்.

232

வாக்கினால்  தீமை செய்யாது காக்க வேண்டும். நாவை  அடக்க வேண்டும். வாக்கினால் தீமை செய்யாது நன்மையைச் செய்ய வேண்டும்.

233

மனத்தினால் தீவினை செய்யாது காக்க வேண்டும். மனத்தை  அடக்க வேண்டும். மனத்தினால் தீமை செய்யாது மனத்தால் நல்வினை செய்ய வேண்டும்.

234

காயத்தினால் அடக்கமுடையவர் தீரர். வாக்கினாலும், மனத்தினாலும் அடக்கமுடையவர் தீரர். அவர்களே முழுமையான அடக்கமுடையவர்.

239

மேதாவி படிப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக கணத்துக்குக்கணம் களங்கங்களை அகற்ற வேண்டும். தட்டான் வெள்ளியைப் புடம் போடுவது போல.

240

இரும்பில் பிறந்த துரு இரும்பையே கெடுத்துவிடுவது போல நெறிதவறியவன் செய்யும் சொந்தக் கருமங்களே அவனைத் துக்கத்துக்கு இட்டுச் செல்லும்.

248

மானுடனே! இதை அறிவாயாக. பாவங்களைக் கைவிடுதல் கஷ்டம், லோபமும் துவேஷமும் உன்னை நீண்ட துக்கநிலைக்கு இழுத்துச் செல்லா திருப்பதாக.

251

காமத்தைப் போலக் கொடிய நெருப்பு வேறில்லை, துவேஷத்தைப் போன்ற கொடிறு (குறடு) வேறில்லை – மோகம் போன்ற வலை வேறில்லை. வேட்கையைப் போன்ற நதி வேறில்லை.

252

பிறருடைய குற்றத்தைக் காண்பது சுலபம். தன்னுடைய குற்றத்தைக் காண்பது கஷ்டம். பிறர் குற்றங்களை ஒருவன் உமியைப் போலத் தூற்றி விடுகிறான். ஆனால் தந்திரமுள்ள வேடன் தன்னைப் புதரில் மறைப்பது போலத் தன் குற்றத்தை ஒருவன் மூடி மறைக்கிறான்.

267

புண்ணியம், பாவம் இரண்டையும் கடந்து பிரமச்சரியத்தை மேற்கொண்டு எல்லாவற்றையும் அதனதன் நிலையிற் கண்டுணர்ந்து உலகில் நடமாடுபவனே பிக்கு என்று அழைக்கப்படுவான்.

268-269

மூடனும் அறிவில்லாதவனுமாயுள்ளவன் மௌனமாயிருப்பதால் மாத்திரம் முனியாகிவிட முடியாது. எவன் தராசுக் கோலைத் தாங்கி நடுநின்று நல்லதை ஏற்றுக் கெட்டதைத் தவிர்க்கிறானோ அவனே முனி. நல்லதைக் கொண்டு கெட்டதைத் தள்ளுவதால் அவன் முனி. இவ்வுலகில் இரு பக்கத்தையும் அறிந்தவனே முனி என்று சொல்லப்படுகிறான்.

273

மார்க்கங்களுள் அட்டாங்க மார்க்கமே சிறந்தது. வாய்மைகளுள் சிறந்தது நால் வாய்மையே. நிலைகளுள் சிறந்தது பற்றற்ற நிலை. (வைராக்கியம்) மனிதருள் (இருகால் விலங்குகளுள்) சிறந்தவன் ஞானக் கண்ணுடையவனே.

274

ஒரே ஒரு வழி இதுவே. தூய காட்சி பெறுவதற்கு வேறு வழி இல்லை. இவ்வழியையே நீங்கள் பின்பற்றுங்கள். மாரனை மயங்க வைப்பது இஃது ஒன்றே.

275

இந்த வழியைப் பின்பற்றினால் துக்கத்துக்கு முடிவு காண்பீர். துக்க மென்ற கணையைக் களைவதற்கு அறிந்து கொண்டபின் நான் இதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

276

நீயே முயற்சி செய்ய வேண்டும். ததாகதர்கள் மார்க்கத்தை மாத்திரம் உபதேசிப்பர். இந்த வழியிற் செல்லும் தியான சீலர்கள் மாரனுடைய பந்தங்களிலிருந்து விடுதலை அடைவர்.

277

காரணத்தில் தோன்றியவை எல்லாம் அநித்தியமானவை. இதை ஞானத்தால் உணர்ந்தவன் துக்கத்தில் அழுந்துவதில்லை. இதுவே தூய்மையைக் கொடுக்கும் நெறி.

278

காரணத்தில் தோன்றியவை எல்லாம் துக்க மயமானவை. இதை ஞானத்தால் ஒருவன்  உணர்ந்தவன் துக்கத்தில் அழுந்தமாட்டான். இதுவே விசுத்தி மார்க்கம். (தூய்மைக்கு வழி)

279

காரணத்தில் தோன்றியவை எல்லாம் அனாத்மா. இதை அறிவால் உணர்ந்தவன் துக்கத்தில் அழுந்த மாட்டான். இதுவே தூய்மைக்கு வழி.

280

இளமையும் பலமும் இருந்தும் முயல வேண்டிய காலத்தில் முயலாமல் எவன் சோம்பலாயிருக்கிறானோ அவன் ஞானத்துக்கு வழியை அறிந்து கொள்ள மாட்டான்.

281

நாவைக் காத்து மனத்தை அடக்கிக் காயத்தினால் தூய கருமங்களைச் செய்க. கருமஞ் செய்யும் இம்மூன்று வழிகளையும் தூய்மைப்படுத்தி முனிவர்கள் கண்ட வழியை அறிவானாக.

334

விழிப்பின்றி வாழ்வு நடத்தும் மனிதனுடைய அவா மாலுவக்கொடி போல எதேஷ்டமாக வளரும். வனத்திலுள்ள வானரம் பழத்தை விரும்பி இங்கு மங்கும் தாவுவது போல அவனும் பிறவி பிறவியாகத் தாவிப் பாய்கிறான்.

335

இவ்வுலகில் அடங்காத கீழான அவா எவனை ஆட்கொள்ளுகிறதோ அவனுடைய துக்கம் பீரணப்புல் போல எதேஷ்டமாக வளர்ந்துகொண்டே வரும்.

336

அடங்காத கீழான அவாவை எவன் இவ்வுலகில் அடக்கி ஆள்கிறானோ, தாமரை இலையில் நீர்த்துளிபோல அவனுடைய துக்கமெல்லாம் விழுந்து விடும்

338

வேருக்குச் சேதமில்லாதிருந்தால் மரத்தை வெட்டினாலும் அது தழையும். அவ்வாறே, அடங்கிக் கிடக்கும் அவாவை நிர்மூலமாக்காவிட்டால் துக்கம் திரும்பத் திரும்ப உண்டாகும்.

343

வலையில் அகப்பட்ட முயல் போல மக்கள் ஆசையில் சிக்கி அலைகிறார்கள். ஆதலால் விடுதலையை விரும்பும் பிக்கு ஆசையை விட வேண்டும்.

348

போனதை மறந்து விடு, வருவதைப் பற்றி அக்கறை கொள்ளாதே, நிகழ்காலத்தையும் மறந்துவிடு, ஒன்றிலும் பற்றில்லாத சித்தத்தோடு பிறவியின்  அக்கரைக்குச் சென்று விடு. இனி உனக்குப் பிறப்பு இறப்பு இல்லை.

360

கண்ணை அடக்குதல் இனிது.  காதை அடக்குதல் இனிது. மூக்கை அடக்குதல் இனிது. நாக்கை அடக்குதல் இனிது.

361

காயத்தை அடக்குதல் இனிது. வாக்கை அடக்குதல் இனிது. எல்லா இடத்திலும் அடக்கம்  இனிது. எங்கும் அடக்கம் உள்ள பிக்கு துக்கத்திலிருந்து விடுபடுகிறான்.

362

கை அடக்கமுள்ளவன், கால் அடக்கமுள்ளவன், நாவடக்கமுள்ளவன், சித்தத்தை அடக்கியவன் தியானசீலன், நிலை கலங்காதவன், ஏகாந்தத்தை விரும்புகிறவன், போதுமென்ற மனமுடையவன், அவனே பிக்கு என அழைக்கப்படுவான்.

365

பிக்குவானவன் தனக்குக் கிடைத்ததை இகழாதிருப்பானாக. மற்றவர்களுடைய ஆஸ்தியைக் கண்டு அழுக்காறு அடையாதிருப்பானாக. மற்றவர் அடைந்த நலத்தைக் கண்டு அழுக்காறு கொள்ளும் பிக்கு சமாதி நிலை அடைய மாட்டான்.

367

மனம் உடல் (நாமரூப) என்பவை சம்பந்தமாகப் பற்றில்லாதிருப்பவன், தன்னிடம் இல்லையே என்று துயர் அடையாதிருப்பவன், அவனே பிக்கு.

368

கருணை நிறைந்தவனாய், புத்த தர்மத்தில் களிப்படைபவனாய் இருக்கும் பிக்கு கந்தங்களின் சேர்க்கை முடிவடையும் போது சாந்தமான நிர்வாண சுகத்தை அடைவான்.

385

எவனுக்கு இக்கரையுமில்லை அக்கரையுமில்லையோ, எவனுக்கு இக்கரை அக்கரை இரண்டுமில்லையோ, எவனுக்குத் தொல்லையும் பந்தமுமில்லையோ அவனையே அந்தணன் என்று கூறுவேன்.

387

பகலில் சூரியன் பிரகாசிக்கிறான். இரவில் சந்திரன் பிரகாசிக்கிறான். யுத்தசந்நத்தனாய்ச்  சத்திரியன் பிரகாசிக்கிறான். பிராமணன் தியானத்தில் பிரகாசிக்கிறான். ஆனால் இரவும், பகலும் ஒளியுடன் பிரகாசிக்கிறான்.

420

எவனுடைய கதியைத் தேவரும், கந்தருவரும், மனிதரும் அறியமாட்டாரோ, எவன் ஆசவங்களைக் களைந்து அருகத நிலையுடையவனோ அவனே அந்தணன் எனக் கூறுவேன்.

423

முற்பிறப்பை அறிந்தவன், சுவர்க்க நரகங்களை அறிந்தவன், பிறவியை அறுத்தவன், உயர் அறிவால் மெய்ஞ்ஞானம் பெற்றவன், முனிவன், செய்ய வேண்டியவற்றையெல்லாம் செய்து முடித்தவன் அவனே அந்தணன் என்பேன்.

Load More Related Articles
Load More By sridhar
  • புத்தர் பொன்மொழி நூறு

    அன்பினால் சினத்தை வெல்க; அறத்தினால் மறத்தை வெல்க; நன்பினால் பகையை வெல்க; நல்கலால் வறுமை வெ…
  • தம்மபதம்

    தம்ம பதம் தன்னிகரற்ற அழகுடையது; பொருள் நிறைந்த பழமொழிக் களஞ்சியம்; பௌத்த சமயத்தைத் தெரி…
  • கௌதமப் புத்தர் காப்பியம்

      சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில்…
Load More In பௌத்த நூல்கள்

Leave a Reply

Your email address will not be published.