மகளிரும்
எதிர்ப்புரட்சியும்
டாக்டர் அம்பேத்கர்
……………..மநு, சூத்திரர்களைவிட மகளிரிடம் அதிக அன்புகாட்டியவர் என்று சொல்லவிட முடியாது. பெண்களைப் பற்றி மிக மோசமான கருத்துடன் மநு தொடங்கு கிறார். அவர் கூறுகிறார்.
2.213 இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவேதான் பெண்களிடம் பழகும்பொழுது விவேகிகள் எப்போதும் விழிப்புடனிருக்கிறார்கள்.
2.214 இந்த உலகில் முட்டாளை மட்டுமின்றி அறிவாளியையும் தவறான வழிக்கு இட்டுச் செல்வதுடன், ஆசைக்கும், கோபத்திற்கும் அவர்களை அடிமையாக்குவதில் வல்ல வர்கள் பெண்கள்.
2.215 தாய், மகள், சகோதரி எப்பெண்ணுடனும் தனியிடத்தில் அமர்தல் கூடாது. புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை, அறிவாளியையும் வெற்றி கொள்ளும்.
9.14. பெண்கள் அழகைப் பற்றிக் கவலைப்படு வதில்லை, வயதைப் பற்றியும் அக்கறை கொள்வதில்லை.ஆணாக இருந்தால் போதும் அழகாக இருப்பினும், அசிங்க மாக இருப்பினும் உடலுறவு கொள்ளத் தயங்கார்.
9:15 ஆடவருடன் உறவுகொள்ளத் துடிக்கும் மோகத்தால், சலன புத்தியால், இயல்பாக அமைந்த ஈவிரக்கமற்ற தன்மையால் கண வர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தா லும் பெண்கள் துரோகிகளாகிவிடுவர்.
9:16 படைப்பிலேயே கடவுள் பெண்களுக்கு அமைத்துள்ள இயல்பை அறிந்து ஒவ் வொரு மனிதனும் பெருமுயற்சி செய்து பெண்களைக் காத்துவரல் வேண்டும்.
9:17 படைப்பிலேயே மநு பெண்களுக்கு ஒதுக்கியுள்ள குணங்கள், படுக்கை, மோகம், பதவித்தாகம், ஆபரண ஆசை, கேடான ஆசைகள், கோபம், நேர்மை யின்மை, வஞ்சகம், தீய நடத்தை ஆகியவை மனு, பெண்கள் பற்றி வகுத்துள்ள சட்டங் கள் இக்கருத்துகளின் அடிப்படையி லேயே அமைந்துள்ளன. எச்சூழ்நிலையி லும், பெண்கள் சுதந்திரமாக இருத்தல் கூடாது என்பது மநுவின் கருத்து.
9:2 இரவும் பகலும் பெண்களை அவர்தம் குடும்பத்து ஆடவர் தம் அதிகாரத்தின் கீழ் வைத்திருத்தல் வேண்டும்.உடலுறவை நாடும் பெண்களை ஒருவர் கட்டுக்குள் வைத்தல் வேண்டும்.
9:3 குழந்தைப் பருவத்தில் தந்தையின் பாது காப்பிலும், இளமையில் கணவன் பாதுகாப்பிலும், முதுமையில் மகன்களின் பாதுகாப்பிலும் பெண்கள் இருத்தல் வேண்டும். பெண் எப்பொழுதும் சுதந்திர மாக இருப்பதற்குக் தகுதியற்றவள்.
9:5 எவ்வளவு அற்பமாகத் தோன்றினாலும் பெண்களிடம் தீயக்குணங்கள் தோன்றி வளர்வதைத் தடுத்தல் வேண்டும். பாதுகாக் காவிட்டால் இரு குடும்பத்திற்கும் துயரத்தை வருவிப்பார்கள். எல்லாச் சாதி யினருக்கும் விதிக்கப்பட்டுள்ள உயர் கடமை கருதி, வலுவற்ற கணவர்கள் கூடத் தம் மனைவியரைக் காக்க வேண்டும்.
4:147 சிறுமியாயினும், இளம் பெண்ணாயினும், ஏன் முதியவளாயினும் தம்வீட்டில் கூடத் சுதந்திரமாக எதையும் செய்திட அனு மதித்தல் கூடாது.
5:148 குழந்தைப் பருவத்தில் தந்தையின் கட்டு பாட்டுக்குள்ளும் இளமையில் கணவனின் காவலிலும்,கணவன் இறந்தபின் மகன் களின் காவலிலும் பெண்கள் இருத்தல் வேண் டும். ஒரு பெண் எப்போதும் சுதந்திரமாக இருத்தல் கூடாது.
5:149 தந்தையிடமிருந்தோ, கணவனிட மிருந்தோ, மகன்களிடமிருந்தோ ஒரு பெண் பிரியக் கூடாது. பிரித்தால் பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பழியை ஏற்படுத்துவாள்.பெண்களுக்கு விவா கரத்து உரிமை கிடையாது.
11:45. கணவனும் மனைவியும் ஒன்றெனக் கூறப்படுவதன் பொருள் திருமணத்திற் குப் பின் மணமுறிவு, பிரிவு என்பதே கிடையாது. பல இந்துக்கள் இத்துடன் நிறுத்தித் திருப்திப்பட்டுக் கொள்கின்றனர். மனு திருமணத்தைப் புனிதமானதாகக் கருதியதால் விவாகரத்தை மறுத்தார் என்றும், விவாகரத்து மறுத்த மநுவின் நியதியைப் போற்றிப் புகழ்ந்து தம் மனசாட்சியைத் தேற்றிக் கொள்கின்றனர். இது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. விவாகரத்திற்கு எதிரான அவர் வீதி வேறொரு உள்நோக்கம் கொண்டது. ஒரு ஆணைப் பெண்ணுடன் கட்டிப் போடு வது அவர்தம் நோக்கமன்று, பெண்ணை ஆணுடன் கட்டிப் போட்டுவிட்டு ஆணைச் சுதந்திரமாக உலவவிடுவதே அவரது நோக்கமாகும்.
கணவன் மனைவியைக் கைவிடுவதை மநு தடுக்கவில்லை. மனைவியைக் கை விட்டு விடுவதை மட்டுமன்று, கணவன் மனைவியை விற்றுவிடுவதைக் கூட மநு அனு மதிக்கிறார். ஆனால் விவாகபந்தத் திலிருந்து மனைவி விடுபடுவதைத் தடுக்கிறார்.
9:46 விற்றுவிட்டாலும், கைவிட்டாலும், கணவனின் பந்தத்திலிருந்து மனைவி விடுபட முடியாது. இதன் பொருள் யாதெனில், கணவன் மனைவியை விற்று விட்ட பிறகு, அவளை வாங்கியவரோ அல்லது அவளை ஆதரிப்போரோ சட்டப் படி அவளுக்கு மறு கணவனாக முடியாது. இதைவிட அரக்கத்தனம் இருக்க முடியுமா? மநு தம் சட்டத்தின் நீதி அல்லது அநீதியைப் பற்றிக் கவலைப்படவில்லை. புத்தமத ஆட்சியில் மகளிர் பெற்ற சுதந் திரத்தை அவர் பறிக்க விரும்புகிறார். தன் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அல்லது சூத்திரனை மணக்க விரும்பும் பெண்ணால் வருண தர்மத்தின் அடிப் படை தகர்ந்து விடும் என்று கூறுகிறார். இத்தகைய சுதந்திரத்தால் ஆத்திரமடைந்த மநு அதைப் பறிக்க விரும்புகிறார். சொத்துரிமைப் பற்றிய விஷயத்தில் பெண்ணை அடிமையாக மாற்றுகிறார் மநு.
9:416. மனைவி, மகன், அடிமை இம்மூவரும் சொத்துரிமைக்கு அருகதையற்றவர், அவர்கள் ஈட்டும் செல்வம், அவர்களை உடையவருக்கே போய்ச் சேரும்.
ஒரு பெண் விதவையானால் கணவன் கூட்டுக் குடும்பத்தவன் என்றால் ஜீவனாம் சத்திற்கு உரியவள், குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக் குடும்பமாக வாழ்ந்து வந்தால், கணவன் சொத்தில் ஜீவனாம்ச உரிமை உண்டு. ஆனால் சொத்தை ஆளுகிற உரிமை அவளுக்கு என்றும் கிடையாது என்கிறார் மநு. மநு நீதிச் சட்டங்களின்படி கணவன் அவளது உடலுக்கு ஊறு செய்யும் தண்டனை விதிக்கலாம். கணவனுக்கு மனைவியை அடிக்கும் உரிமையையும் மனு வழங்கி யுள்ளார்.
8:299 மனைவி, மகன், அடிமை, மாணவன், இளைய சகோதரன் ஆகியோர் தவறு செய்யின் கயிறு அல்லது மூங்கில் கழி யால் அடிக்கலாம். மற்ற விஷயங்களிலும் பெண்ணைச் சூத்திரன் நிலைக்குத் தள்ளியுள்ளார் மநு.
2:66 பெண்களுக்குக் கூட சம்ஸ்காரங்கள் அவசியம். அவற்றை ஆற்றுதல் வேண்டும். ஆனால் வேதமந்திரங்களை ஓதாமல், அவற்றை ஆற்றுதல் வேண்டும்.
9:18வேதங்களைப் பயிலும் உரிமை பெண் களுக்கு இல்லை. ஆகவேதான் அவர்களின் சம்ஸ் காரங்கள் வேத மந்திரங்கள் ஓதாமல் ஆற்றப்படுகின்றன. வேதங்களைப் படிக்கும் உரிமை மறுக்கப்பட்டதால் பெண்களுக்குச் சமய ஞானம் இல்லை. பாவத்தைப் போக்குவதற்கு வேத மந்திரங் களை ஓதுதல் முக்கியமானது. பெண்கள் வேதமந்திரங்களை உச்சாடனம் செய்ய இயலாது. ஆதலின் பெண்கள் அசத்தி யத்தைப் போலவே தூய்மையற்றவர்கள்.
யக்ஞங்களில் ஆகுதி வழங்கல் பிரா மனியத்தின் அடிப்படை சமயக் கோட் பாடு. மநு அவ்வுரிமையை மகளிருக்கு மறுக்கிறார். மநு பின்வருமாறு கட்டளை யிடுகிறார்.
9:36 வேதங்களில் சொல்லப்பட்ட தினசரி வேள்வி நியமங்களைப் பெண் ஆற்றுதல் கூடாது. அவள் அவ்வாறு செய்தால், நரகத்திற்குப் போவாள்.
4.205 ஒரு பெண் ஆற்றிடும் வேள்வியில், பிராமணன் உண்ணக்கூடாது.
4:206 பெண்கள் இயற்றும் வேள்விகள் அமங்கல மானவை. தெய்வ சம்மதமற்றவை. அவற் றைப் பிராமணர்கள் தவிர்த்தல் வேண்டும்.
அறிவார்ந்த பணியில் பெண்கள் ஈடுபட லாகாது. சுதந்திர சிந்தனையையும் சுய முடிவு எடுக்கும் உரிமையையும் பெண் களுக்கு மநு மறுக்கிறார். பௌத்தம் போன்ற பிற சமயப் பிரிவுகளிலும் பெண்கள் சேருதல் கூடாது. மரணம் வரை அவ்வாறு புறசமயத்தைத் தொடர்ந்து ஆதரித்து வந்தால், இறந்தவர்களுக்கு இறைக்கும் எள்ளும் தண்ணீரும் அவளுக்குக் கிடையாது.
இறுதியாகப் பெண்களுக்கு இருக்க வேண்டிய வாழ்க்கை இலட்சியத்தைப் பற்றிக் குறிப்பிட வேண்டும். அதை மநுவின் மொழியிலேயே சொல்வது நல்லது.
5:151 தன் தந்தை யாருக்கு மணம் செய்து கொடுக்கிறாரோ அல்லது தந்தை இசைவுடன் சகோதரன் தன்னை யாருக்கும் மணம் செய்து கொடுக்கிறாரோ அக்கணவனுக்கு வாழ்நாள்வரை அவள் கீழ்ப்படிதல் வேண்டும். இறந்தபிறகும் கணவன் நினைவைப் பழித்தலாகாது.
5:154. அறநெறி பிறழ்ந்தவனாயினும், வேறொருத் தியிடம் இன்பம் கொள்பவனாயினும், நல்ல குணங்கள் இல்லாதவனாயினும் விசுவாசமுள்ள மனைவி கணவனை எந்நேரமும் தெய்வமாக வழிபடுதல் வேண்டும்.
5:155 கணவன் இல்லாமல் வேள்வியோ, விரதமோ, நோன்போ எதையும் பெண்கள் இயற்றுதல் கூடாது. கணவனுக்குக் கீழ்ப் படிந்து நடந்தாலே மனைவிக்குச் சொர்க் கத்தில் உயர்பதவி கிடைக்கும்.
5:153 புனித மந்திர முழக்கங்களிடையே அவளை மணந்த கணவன் தான் எப்பொழுதும் இன்பம் தருபவன். இவ்வுலகிலும் ஏன் அவ்வுலகிலும் கூட அவ்வண்ணமே.
5:150. அவள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருத்தல் வேண்டும். வீட்டுக் காரியங் களைத் திறம்பட ஆற்றுதல் வேண்டும். பாத்திரங்களைக் கவனமாகக் கழுவி வைத்தல் வேண்டும். செலவில் சிக்கனத் தைக் கடைப்பிடித்தல் வேண்டும். இதைப் பெண்களுக்குரிய மிக உன்னத இலட்சிய மாக இந்துக்கள் கருதுகிறார்கள். இதை மநுவின் காலத்திற்கு முன்பு பெண்கள் இருந்த நிலையுடன் ஒப்பிடுக.
பிரமச்சரியத்தை முடித்தபின் ஒரு பெண் திருமணத்திற்குத் தகுதியுடையவள் ஆகிறாள். எனினும் அதர்வவேதக் கூற்று பெண்களுக்கு உப நயனம் செய்யும் உரிமையிருந்ததைக் காட்டு கிறது. சிரௌத்த சூத்திரங்கள் கூறுவதிலிருந்து பெண்கள் வேத மந்திரங்களைப் பயிலலா மென்றும், பெண்களுக்கு வேதக்கல்வி புகட்டப்பட்டதென்றும் அறிகிறோம். பாணி னியின் ‘அஷ்டாத்யாயி’ மூலம் பெண் கள் குரு குலத்தில் பயின்றனர் என்பதற்கும் சான்றுகள் கிட்டியுள்ளன. பதஞ்சலியின் மகாபாஷ யத்தில் பெண்கள் வேதம் பயிற்றுவிக்கும் ஆசிரியராகிச் சிறுமியருக்குக் கற்பித்து வந்தனர் என்றும் அறிகி றோம். சமயம், தத்துவம் மெய்யியல் போன்ற நுண் பொருள் பற்றிய பொதுமன்ற விவாதங்களில் பெண்கள் ஆண்களுடன் ஈடுபட்டனர் என்றும் அறிகிறோம். ஜனகருக்கும் கல்பாவுக்கும் இடை யேயும் யாக்ஞவல்கியருக்கும் கார்க்கிக்கும் இடை யேயும் சங்கராச்சாரியருக்கும் வித்யாதரிக்கும் இடையேயும் யாக்ஞவல்கியருக்கும் மைத்ரேயிக் கும் இடையேயும் நிகழ்ந்த விவாதம் மநுவிற்கு முந்திய காலத்தில், மகளிர் கல்வியிலும் ஆய் விலும் உயர் நிலை அடைந்திருந்தனர் என்பதைக் காட்டுகின்றன.
மநுவிற்கு முந்திய காலத்தில் மகளிருக்கு மரியாதை இருந்ததை மறுக்க முடியாது. பழங்கால இந்தியாவில், அரசனின் முடிசூட்டு விழாவில் சிறப்பாகப் பங்கேற்ற முதன்மை யானவர்களில் அரசியும் முக்கியமானவர். ஏனைய பெரியோருக்கு மரியாதை செலுத்தியது போலவே, அரசன் அரசிக்கும் காணிக்கை வழங்கி னான். அரசிக்கு மட்டு மல்லாமல் கீழ்ச்சாதியைச் சேர்ந்த மனைவிகளுக்கும் அரசன் மரியாதை செலுத்தினான். அதுபோலவே தலைமை வழிகாட்டு அலுவலரின் மனைவியருக்கும் அரசன் மரியாதை செலுத்தினான்.
கௌடில்யரின் காலத்தில் ஆடவர் 16 வயதிலும் மகளிர் 12 வயதிலும் வயது வந்தவர் களாகக் கருதப்பட்டனர். திருமணம் வயதும் வயதுக்கு வந்த நிலையும் ஒன்றெனக் கருதப் பட்டது. பௌதாயணரின் கிருஹ்ய சூத்திரங் களிலிருந்து தெரியவருவது பருவம் எய்திய பின்னரே திருமணம் நிகழ்த்தப்பட்டது என்ப தாகும். திருமண காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால் அதற்கென ஒரு பரிகாரச் சடங்கு கிருஹ்ய சூத்திரத்தில் விதிக்கப்பட்டுள்ளது.
இசைவு தெரிவிப்பதற்குரிய வயது பற்றிய குறிப்பு எதுவும் கௌடில்யரின் சட்டங்களில் இல்லை. பருவம் எய்தியபின் திருமணங்கள் நடை பெற்றதால், அதுபற்றிய குறிப்பு எதுவுமில்லை. மேலும் கௌடில்யர், ஏற்கனவே திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டதை மணமகன் அல்லது மணமகள் மறைத்துத் திருணம் செய்து கொள்வது பற்றியும், மாதவிடாய்க் காலத்தில் உடலுறவு கொண்ட பெண்களைப் பற்றியும், அதிகக் கவனம் செலுத்துகிறார். முன்னைய சிக்கல் பற்றி, கௌடில்யர் கூறுகிறார்.
“ஏற்கனவே வேறொருவருடன் உடலுறவு கொண்டதை மறைத்துத் திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு அபராதம் விதித்த லுடன், சுல்கம்(பரிசும்) சீதனம் ஆகியவற்றைத் திரும்பத் தருதல் வேண்டுமென்றும் விதிக்கப் படுகிறது. மணமகனின் ஒழுக்கக் கேடுகளை மறைத்துத் திருமணம் செய்துகொண்டால் இரண்டு மடங்கு அபராதம் செலுத்த வேண்டும். அவன் மணமகளுக்குக் கொடுத்த சுல்கம்(பரிசும்) சீதனம் இரண்டையும் இழந்துவிடுவான்” இரண் டாம் சிக்கலைப் பற்றிக் கௌடில்யர் கூறுகிறார்.
முதலில் மாதவிடாய் ஆனதிலிருந்து மூன்று வருடங்கள் கழிந்தபின், தனது சாதியை யும் அந்தஸ்தையும் சேர்ந்த ஓர் ஆடவனுடன் ஒரு பெண் உடலுறவு கொள்வது தவறாகாது. வேறு சாதியைச் சார்ந்த ஆடவன் என்றாலும், முதலில் மாதவிடாய்க்கு மூன்று ஆண்டுகள் கழிந்தபின் ஒரு பெண் அணிகலன்களை அணிந் திருக்கவில்லை என்றால் அத்தயைவளுடன் உடலுறவு கொள்வதும் தவறாகாது.
மனுவைப் போலன்றிக் கௌடில்யரின் கருத்து ஒருதார மணமாகும். சில குறித்த சூழ் நிலைகளில் மட்டுமமே, ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியை மணப்பது அனுமதிக்கப்பட்டது. அச்சூழ்நிலை களைக் கௌடில்யர் பின்வருமாறு கூறுகிறார்.
“ஒரு பெண்ணுக்கு (உயிருடன்) குழந்தை பிறக்கவில்லை என்றாலும், ஆண் குழந்தை இல்லை என்றாலும், மலடி என்றாலும் மறு மணம் செய்து கொள்வதற்கு ஒரு ஆண் எட் டாண்டுகள் காத்திருக்க வேண்டும். ஒரு பெண் இறந்த குழந்தையை மட்டுமே பெற்றால் மறுமணம் செய்து கொள்வதற்குக் கணவன் பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டும். பெண் குழந்தைகளே தொடர்ந்து பெற்றுக் கொண் டிருந்தால் பன்னிரெண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். பின் புதல்வரைப் பெற கணவன் விரும்பினால் மறு மணம் செய்துகொள்ளலாம். இவ்விதியை மீறினால் கல்கத்தையும் (பரிசும்) சீதனத்தையும் திருப்பிக் கொடுப்பதுடன் போதிய நட்ட ஈடும் தருதல் வேண்டும் அரசாங்கத்திற்கு அபராதப் பணமாக 24 பணம் கொடுத்தல் வேண்டும். திருமண காலத்தில் சுல்கமும் (பரிசும்) சீதனமும் பெறாத பெண்களுக்குக் கூட, அவற்றைக் கொடுத்து, போதிய நட்ட ஈடும் வாழ்க்கைப் பணமும் தந்த பின்னர் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துக் கொள்ளலாம். ஏனெனில் புதல்வரைப் பெறுவதற்காகவே பெண் படைக்கப்பட்டிருக் கிறாள்”.
மநுவைப் போலன்றி, கௌடில்யர் காலத்தில், பரஸ்பரபகை வெறுப்பு காரணமாக ஒரு பெண் விவாகரத்து கோரலாம்.
“கணவனை வெறுக்கும் மனைவி அவன் விருப்பத்திற்கு மாறாகத் திருமண முறிவு செய்தல் முடியாது. அவ்வாறே கணவனும் மனைவியின் விருப்பத்திற்கு மாறாக மணமுறிவு செய்தல் கூடாது. ஆனால் பரஸ்பர பகை காரணமாக விவா கரத்து பெறலாம். துன் மனைவி அபாயகர மானவள் என்று விவாகரத்து கோருபவன் திருமண காலத்தில் அவளுக்குக் கொடுக்கப் பட்ட அனைத்தையும் திருப்பிக் கொடுத்தல் வேண்டும். ஆனால் கணவன் அபாயமானவன் என்று மனைவி விவாகரத்து கோரினால் தன் சீதனச் சொத்துரிமையை அவள் இழந்து விடுவாள்.
தீய நடத்தையுள்ள கணவனை ஒரு மனைவி விட்டு நீங்கலாம்.
“காலவரையற்ற ஜீவனாம்சம் பெறும் தகுதி யுடைய பெண்ணுக்குத் தேவையான உணவு, உடை முதலியனவும், ஜீவனாம்சம் தர வேண்டியவனின் வருவாய்க்கு ஏற்பத் தாராளமாக வாழ்க்கைப் பூராவும் பெற உரிமை உண்டு. உணவு, உடை முதலியவற்றுக்குரிய தொகை அதில் பத்திலொரு பங்கு கூடுதல் தொகையுடன் அளிக்க வேண்டிய காலம் வரையறைக்குட்பட்டதாயின், ஜீவனாம்சம் தர வேண்டியவனின் வருவாய்க் கேற்ப ஒரு குறித்த தொகையும் அளித்தல் வேண்டும். தன் கணவன் மறுமணம் செய்து கொள்வதற்கு அனுமதித் தமைக் காகத் தனக்குத்தரப்பட வேண்டிய சுல்கம், சீதனம், நட்ட ஈடு பெறவில்லை என்றா லும் மேற்கூறிய படியே ஜீவனாம்சம் அளிக்கப் படுதல் வேண்டும். மாமனாரின் குடும்பத்தைச் சார்ந்த ஒருவரின் பாதுகாப்பில் அவள் வாழ்ந்து வந்தாலும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருந் தாலும் அவள் கணவனிடம் ஜீவனாம்சம் கோருதல் இயலாது. ஜீவனாம்சம் பற்றிய தீர்வுகள் இவ்வாறு கூறப்பட்டுள்ளன. கௌடில் யரின் காலத்தில், ஒரு பெண் அல்லது விதவை மறுமணம் செய்து கொள்ளத்தடை ஏதுமில்லை.
“கணவன் இறந்தவுடன், மனைவி தூய தனி வாழ்க்கை வாழ விரும்பினால் அவளுடைய நகைகள், சீதனம் மட்டுமின்றிச் சுல்கத்தின் எஞ்சிய பகுதியையும் உடன் பெறுவதற்கு அவள் உரிமையுடையவள். இவற்றைப் பெற்றபின் மறுமணம் கொண்டால், வட்டியுடன் அவற் றைத் திருப்பிக் கொடுத்தல் வேண்டும். ஒரு பெண் மறுமணம் செய்து கொள்ள விரும்பினால் மறுமணம் செய்யும் நேரத்தில் மாமனாரோ, கணவனோ இருவருமோ கொடுத்த பொருள்கள் அவளுக்குத் தரப்பெறுதல் வேண்டும். அவள் தான் மறுமணம் செய்ய அனுமதிக்கப்படும் காலம் பற்றி நீண்ட காலம் பிரிந்திருக்கும் கண வனைப் பற்றிய பகுதியில் கூறப்படும். மாமனாரின் தெரிந்தெடுத்த நபரையன்றிப் பிறிதொருவரை ஒரு விதவை மறுமணம் புரிந்தால், மாமனாரும் கணவனும் அவளுக்குக் கொடுத்த பொருள்களை இழந்து விடுவாள். உறவினரைத் திருமணம் செய்யும் பொழுது எடுத்துச் சென்ற சொத்தை அப்பெண்ணின் உறவினர்கள் பழைய மாமனாருக்குத் திரும்பக் கொடுத்தல் வேண்டும். தம் பாதுகாப்பில் நியாய மான முறையில் ஒரு பெண்ணை வைத்துக் கொள்பவர் அவள் சொத்தையும் பாதுகாக்க வேண்டும். மறுமணம் செய்தபின் இறந்த கணவனின் சொத்துக்களில் மனைவி உரிமை கொண்டாடுதல் இயலாது.
“தூய தனி வாழ்வு வாழ்ந்திட்டால், கணவன் சொத்தை மனைவி அனுபவிக்கலாம். மகன் அல்லது மகள்களை உடைய பெண், மறுமணம் செய்தபின், தன் சீதனச் சொத்தைக் கூட விருப்பம் போல் பயன் படுத்த முடியாது. அவளது அச்சொத்தைப் புதல்வர் களே பெறுதற்குரியர்.
“மறுமணம் செய்துகொண்டபின், முன் னைய கணவனின் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டும் என்று காரணம் காட்டி, தன் சொத்தை அனுபவிக்க முற்படின் அச்சொத்தை அவர்கள் பேருக்கு மாற்றிடல் வேண்டும். பல கணவருடன் பல புத்திரர்களைப் பெற்றவளாயின் கணவர்களிடமிருந்து பெற்ற அதே நிலையில் சொத்துக்களைப் பராமரித்து வருதல் வேண்டும். சர்வ சுதந்திர பாத்தியத்தை உடன் அனு பவிக்கு மாறு அளிக்கப்பட்ட சொத்துக்களைக் கூட மறுமணம் செய்து கொண்ட ஒரு பெண் தன் மகன்கள் பெயருக்கு மாற்றிடல் வேண்டும்.
“மாண்ட கணவனுக்கு விசுவாசமாகத் தூய வாழ்வு நடத்தும் விதவை, தன் ஆசானின் பாது காப்பில், தான் வாழ்நாள்வரை அச்சொத்தை அனு பவித்து வரலாம். ஏனென்றால் அவளுக்கு எத்தகைய இடர்களும் நேரிடக்கூலீது என்பதற் காகவே இந்தச் சொத்து அவளுக்கு உரிமையாக் கப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்குப் பின் அச்சொத்து அவரது தாயாதிகளைச் சேரும். கணவன் உயிருடனிந்து மனைவி இறந்து விட்டால், அவளது புதல்வர்கள், புதல்விகளுக்கு இடையே அவளது சொத்து பகுத்து வழங்கப் படுதல் வேண்டும். புதல்வர்கள் இல்லையென் றால் சொத்து புதல்விகளைச் சேரும். மகளும் இல்லையென்றால் கணவன் அவளுக்குச் கொடுத்த பரிசத் தொகையை அச்சொத்திலிருந்து எடுத்துக்கொள்வான், அவளது உறவினர் தாம் அவளுக்குக் கொடுத்த சீதனங்களையும் பரிசு களையும் திருப்பி எடுத்துக்கொள்ளலாம். இவ் வாறு பெண்ணின் சொத்துரிமைகள் நிர்வகிக்கப் படுகிறது.
“சூத்திர, வைசிய, ஷத்திரிய, பிராமண வர்க்கத்தைச் சார்ந்த மனைவிகள், குழந்தைகள் பெறவில்லை என்றால் முறையே ஒன்று இரண்டு, மூன்று, நான்கு ஆண்டுகள் வரை, குறுகிய காலம் பிரிந்து சென்ற கணவர் வருகைக்காகக் காத் திருத்தல் வேண்டும். குழந்தை பெற்றவராயின் பிரிந்து சென்ற கணவர் வருகைக்காக ஓராண்டுக் காலத்திற்கு மேல் காத்திருக்க வேண்டும். அவளது வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்படுமானால், மேலே குறிப்பிட்ட காலத்தைப் போல் இரண்டு மடங்கு காலம் காத்திருக்க வேண்டும். இத்தகைய வாழ்க்கை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றால் பொருள் வசதியுள்ள அவர்களுடைய உறவினர் கள் அவர்களை நான்கு முதல் எட்டாண்டுகள் வரை பாதுகாத்தல் வேண்டும். பிறகு அவர்கள் அந்தப் பெண்களுக்குத் தாங்கள் அனைத்துப் பொருள்களையும் திரும்ப எடுத்துக் கொண்டு அவர்களை மறுமணம் செய்து கொள்ளவிட்டு விட வேண்டும். அயல்நாட்டில் கல்வி கற்கும் பிராமணக் கணவனென்றால், குழந்தை பெறாத மனைவி அவன் வருகைக்காகப் பத்தாண்டு கள் காத்திருத்தல் வேண்டும். குழந்தை பெற்ற வளாயின் பன்னிரண்டு ஆண்டுகள் காத்திருத்தல் வேண்டும். கணவன் அரசு ஊழியனாயின் மனைவி அவனுக்காகச் சாகும் வரை காத்திருத் தல் வேண்டும். இனவிருத்தியைக் கருத்தில் கொண்டு கணவனுடைய கோத்திரத்தைச் சேர்ந்த வேறொருவனுக்குக் குழந்தைகள் பெற்றாலும், அவளை வெறுத்தலாகாது. தலத்தில் இல்லாத கணவன் ஜீவனாம்சம் தரவில்லை என்றாலும், அவளைப் பாதுகாக்கக்கூடிய உறவினர்கள் இல்லை என்றாலும், தன்னைப் பாதுகாத்துத் துயர்தீர்க்கும் வேறொருவனை அவள் மறுமணம் செய்து கொள்ளலாம்.
மநுவைப் போலன்றி, மணமான பெண் களுக்குப் பொருளாதார சுதந்திரம் வழங்குவதில் கௌடில்யத்தில் பெரிதும் கவனம் செலுத்தப் பட்டது. மனைவியின் சொத்து, ஜீவனாம்சம் பற்றி, கௌடில்யரின் அர்த்த சாத்திரம் தெளி வாகக் கூறுகிறது. ஜீவனாம்ச வழிவகை ஆபரணங் கள் ஆகியவை ஒரு பெண்ணுக்குரிய சொத்துக்க ளாகும். ஈராயிரம் பணத்திற்கு மேல் மதிப்புள்ள ஜீவனாம்சச் சொத்து அவள் பெயரில் எழுதப் பெறுதல் வேண்டும். ஆபரணங்களுக்கு இவ்வரை யறை ஏதுமில்லை. தலத்தில் இல்லாத கணவன் ஜீவனாம்சத்திற்கு ஏற்பாடு செய்யவில்லை என்றால் தனக்கும் மகன், மருமகள் ஆகியோருக் கும் ஆகும் வாழ்க்கைச் செலவுக்கு அச்சொத் தைப் பயன்படுத்தல் தவறாகாது. இயற்கைப் பேரிடர்கள் நேரும் பொழுது, பஞ்சமும் நோயும் மிகும்பொழுது ஆபத்துக்களைத் தவிர்த்திட அறச்செயலாகக் கணவனும் கூட அதனைப் பயன்படுத்தலாம். இரட்டைக் குழந்தை பெற்ற தம்பதியினரும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் இச்சொத்தைப் பயன்படுத்தத் தடை ஏதுவு மில்லை. முதல் நான்குவகைத் திருமண மரபுகளின்படி திருமணமாகி மூன்றாண்டுகள் கழிந்த தம்பதியர் இச்சொத்தைப் பயன்படுத்துதல் குற்றமன்று. ஆனால் கந்தருவ, அசுரத் திருமண முறைப்படி மணம் செய்து கொள்ளும் தம்பதியர் இதைப் பயன்படுத்தினால் வட்டியுடன் திருப்பிக் கொடுத்தல் வேண்டும். ராட்சச, பைசாச முறைத் திருமணமாயின் இச்சொத்தைப் பயன்படுத்தல் திருட்டு எனக்கருதப்படும். திருமண பற்றிய கடமைகள் இவ்வாறு வரையறுக்கப்படுகின்றன”.
“காலவரையற்ற ஜீவனாம்சம் தகுதியுடை யவர்களுக்குத் தேவையான உணவு, உடை முதலியனவும், ஜீவனாம்சம் தரவேண்டியவனின் வருவாய்க்கேற்ற வாழ்க்கைப் பணமும் பெறும் உரிமை உண்டு. உணவு, உடை முதலியவற்றிற் குரிய தொகை, அதில் பத்திலொரு பங்கு கூடுதல் தொகை யுடன் அளிக்க வேண்டிய காலம் வரையறைக் குட்பட்டதாயின் ஜீவனாம்சம் தரவேண்டியவனின் வருவாய்க்கேற்ற ஒரு குறித்த தொகையும் அளித்தல் வேண்டும். தன் கணவன் மறுமணம் செய்து கொள்வதற்காக, அனுமதிக்கப் பட்ட சுல்கம், சீதனம், நட்டஈடு பெறவில்லை என்றாலும், மேற்கூறிய படியே ஜீவனாம்சம் அளிக்கப்பெறுதல் வேண்டும். மாமனாரின் குடும்பத்தைச் சார்ந்த ஒருவரின் பாதுகாப்பில் அவள் வாழ்ந்து வந்தால் கணவனிடம் ஜீவனாம் சம் கோருதல் இயலாது – ஜீவனாம்சம் பற்றிய தீர்வுகள் இவ்வாறு கூறப்பட்டுள்ளன”.
தாக்குதலுக்கோ, அவதூறுக்கோ உள்ளான ஒரு மனைவி கணவன் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாமென்னும் கௌடில்யர் காலத்து விதி வியப்பாக இருக்கிறதன்றோ! சுருங்கக் கூறின், மநுவிற்கு முந்தைய நாட்களில், பெண் சுதந்திர மான ஆடவனுக்கு நிகரான பங்காளியாயிருந் தாள். மநு ஏன் பெண்ணைத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளினார்?