இவர்களுக்கு எங்கே வலிக்கிறது… இல்லை, எங்கே நோகிறது என்று புரியவில்லை. இன்னும் எத்தனைக் காலம்தான் இப்படிக் காதல் மணம் புரிந்தவர்களைக் படுகொலை செய்து தங்களின் ஆதிக்கச் சாதியின் ‘பெருமை’யை நிலைநாட்டுவார்கள் என்பதும் தெரியவில்லை. அள்ளி அணைத்து, ஆசை ஆசையாய் முத்தமிட்டு, தோளிலிலும் மாரிலும் சீராட்டி வளர்த்த பிள்ளையையே கொடூரமாகக் கொலை செய்ய வைக்கிறது சுய சாதிப் பெருமை. இளவரசன், கோகுல்ராஜ், சங்கர், கெவின் ஜோசப் வரிசையில் சாதியத்துக்கு இரையாகியுள்ளனர் ஓசூரைச் சேர்ந்த இளம் தம்பதியர் நந்தீஷ் – சுவாதி. பெண்ணின் தந்தையும் உறவினர்களுமே இந்த ஆணவக் கொலையைச் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சூடகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தீஷ். இவர், பட்டியலினத்தைச் சேர்ந்தவர். அதே கிராமத்தைச் சேர்ந்த சுவாதி, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த நந்தீஷ், சுவாதி இருவரும் காதலித் துள்ளனர். இவர்களின் காதலுக்கு சுவாதியின் வீட்டினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறியவர்கள், செப்டம்பர் 4-ம் தேதி சூளகிரி பதிவு அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். ஊருக்குத் திரும்பினால் பிரச்னை வரும் என்பதால், ஓசூரில் ரகசியமாக வாடகை வீட்டில் குடியேறினர். இவர்களைத் தேடிப்பிடித்துக் கொலை செய்திருக்கிறார்கள்.
நம்மிடம் பேசிய நந்தீஷின் நண்பர் ஒருவர், “தீபாவளிக்கு முன்பாக, இவர்களின் வீட்டுக்கு வந்த சுவாதியின் உறவினர் கிருஷ்ணன் என்பவர், சமாதானம் பேசித் தலைத் தீபாவளிக்கு சுவாதியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவருக்கும் விருந்து கொடுத்துள்ளனர். நந்தீஷுக்கு அரை பவுன் தங்க மோதிரமும் போட்டனர். இடைப்பட்ட நாள்களில் ஏதோ நடந்துள்ளது. நவம்பர் 10-ம் தேதி நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சி ஓசூரில் நடந்தது. அதற்கு இருவரும் சென்றபோது, அங்கு வந்த சுவாதியின் தந்தை சீனிவாசன், உறவினர்கள் கிருஷ்ணன், வெங்கட்ராஜ் உட்படச் சிலர் இவர்களிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அப்போது சீனிவாசன், “ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்துடுங்க” என்று கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அதை நம்பிய இருவரும் காரில் ஏறினர். அதன் பின்பு அவர்களைப் பிணமாகத்தான் பார்த்தோம்” என்றார் கண்கலங்கியபடி.
சுவாதியின் உறவினர்கள் தங்களைக் கடத்திச் சென்றபோது, ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த நந்தீஷ், தன் கடை உரிமை யாளர் சஞ்சைக்கு, ‘சுவாதியின் உறவினர்கள் என்னைக் கடத்திச்செல்கின்றனர்’ என மெசேஜ் அனுப்பியுள்ளார். இதை அவர் ஓசூர் போலீஸில் சொல்லியும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. சஞ்சய் தரப்பில் பேசியபோது. “போலீஸில் சஞ்சய் புகார் கொடுத்தும், போலீஸ் விசாரணை செய்யவில்லை. மாறாக சஞ்சய்யை சிலர் மிரட்டி வருகின்றனர். இதனால் பயந்துபோன அவர், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்றனர்.
நவம்பர் 11-ம் தேதி நந்தீஷ் சகோதரர் சங்கரும், போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் மீதும் எஃப்.ஐ.ஆர் போடப்படவில்லை. இதற்கிடையே தான், நந்தீஷ் மற்றும் சுவாதியின் அழுகிய உடல்களை நவம்பர் 13-ம் தேதி கர்நாடகா போலீஸார் கண்டுபிடித்தனர். நந்தீஷ் அணிந்திருந்த டி- ஷர்ட் அடையாளத்தை வைத்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதன் பின் நவம்பர் 14-ம் தேதிதான் ஓசூர் டவுன் போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். சுவாதியின் தந்தை சீனிவாசன், அவரின் உறவினர்கள் வெங்கடேஷ், கிருஷ்ணன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நந்தீஷ் தாயார் திம்மக்கா பேசும் சக்தியற்ற நிலையிலும் “அவனுங்க சகவாசம் வேணாம் வேணாம்னு சொன்னேன்… பாவி மகன் கேட்கலை. இப்படி அநியாயமா கொன்னுப் போட்டானுங்களே” என்று கதறி அழுகிறார்.
நந்தீஷின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற வந்த சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இயக்குநர் பா.ரஞ்சித், ஆணவக் கொலையால் கணவர் சங்கரை இழந்த கௌசல்யா ஆகியோர், “நந்தீஷ், சுவாதி கொலையை ஆணவக் கொலை என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். ஆணவக் கொலை என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும்” என்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி மகேஷ்குமார், “கடத்தப்பட்ட நந்தீஷின் செல்போன் எண்ணை வைத்து டிரேஸ் செய்ய முயற்சி செய்தோம். ஆனால், இப்படி நடந்துவிட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தமிழகத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட சாதி ஆணவப் படுகொலைகள் நிகழ்ந்திருப்பதாகப் புள்ளிவிவரம் தருகிறார்கள் சமூகச் செயற் பாட்டாளர்கள். ஆனால், தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகளே நடக்கவில்லை என்று மறுப்பதுடன், சாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்குத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு கண்டுகொள்ள வில்லை. வழக்கம்போல, பெரிய கட்சிகள் அனைத்தும் ‘ஓட்டுக்காக’ மெளனம் காக்கின்றன.
– எம்.வடிவேல்
படங்கள்: வ.யஷ்வந்த்
Courtesy : Vikatan