Home சிறப்புப் பக்கம் சிறப்பு கட்டுரைகள் அம்பேத்கர்: எல்லாக் காலங்களுக்கும் ஏற்றவர்

அம்பேத்கர்: எல்லாக் காலங்களுக்கும் ஏற்றவர்

Comments Off on அம்பேத்கர்: எல்லாக் காலங்களுக்கும் ஏற்றவர்
0

அம்பேத்கர்: எல்லாக் காலங்களுக்கும் ஏற்றவர்

– கோபால்கிருஷ்ண காந்தி
தமிழில்: பி.ஏ. கிருஷ்ணன்.

அவர் ஒப்பற்றவர், அவர் நினைத்ததைப் பேசுவதற்குத் தயங்கவில்லை.

இந்திய தேசீய காங்கிரஸால் அவரைப் புறக்கணிக்கவும் முடியவில்லை, இயக்கத்தில் ஒருவராகக் கொள்ளவும் முடியவில்லை.

ஆனால், காலம் காங்கிரஸ் கட்சிக்கு இந்தச் சலுகையையாவது அளிக்கும். இந்திய விடுதலைப் போரை பல அங்கங்கள் கொண்ட, வெற்றியடைந்த துன்பியற் பெருநாடகம் என்று அழைக்கலாம். ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் வரும் சிக்கலான பாத்திரங்களுக்கு ஒப்பானவர்களைக் கொண்ட அது மூன்று காட்சிகளோடு முடிந்தது -திருப்பங்கள் நிறைந்த காட்சிகள்.

முதலாவது காங்கிரஸின் உந்துதலால் மகத்தான எழுச்சியுற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம். சந்தேகத்திற்கே இடமில்லாமல் இந்திய மக்கள் வெள்ளை ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதில் உறுதியாக இருந்தார்கள் என்பதைக் காட்டியது. அடுத்தது, இரண்டாவது உலகப் போர் பிரித்தானியப் பேரரசைக் கழிந்துபோனதாக ஆக்கிவிட்டது. அதன் தோழமை நாடுகளான அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் இந்தியா விடுதலை அடைவதையே ஆதரித்தன. கடைசியாக அட்லியின் தலைமையில் லண்டனில் அமைந்த தொழிற்கட்சி அரசு, பிரிட்டன் இந்தியாவின் மீது ஆட்சி செலுத்துவதை வெட்ககரமான செயலாக நினைத்தது; விட்டுவிடுவதைத் தவிர வேறு வழியில்லை

காலத்தின் கட்டாயம் அது. அன்று உலக அரங்கில் இருந்த அனைவரும் – இந்தியர்கள் அவர்களில் முதலானவர்கள் – பெரிதினையே நினைத்து, செல்லும் வழியைச் சீராக்க விழைந்தார்கள். எனவே காங்கிரஸ் கட்சி சிறுமையோடு இயங்கவில்லை அல்லது குறுகிய மனப்பான்மையோடு இயங்கவில்லை. அதற்கு வரலாற்றை இந்திய மண்ணில் படைப்பதில் தனக்குத் தனியுரிமை இல்லை என்பது தெரியும். இந்திய அரசியல் நிலப்பரப்பும், அதில் வாழும் மக்களும் முழுவதுமாகத் தங்கள் வசம் இல்லை என்பதும் தெரியும். இந்திரபிரஸ்தம், தேவர்கள் மட்டும் வாழ்ந்த இடம் அல்ல; வாழும் இடமும் அல்ல. எந்த சுரனும் தனக்கு இணையான அசுரன் இல்லாமல் வந்ததேயில்லை. இதைவிட அதிசயமானது, வானத்திலும் பாதாளத்திலும் பிறந்த இந்த இருவரும் முழுவதுமாகவும் வழக்கமாகவும் ஒருவருக்குள்ளேயே மாற்றிமாற்றி இருப்பார்கள் என்பதுதான். இந்திய அரசியல்வாதியின் குணாதிசயங்கள் வானத்தைப்போல, நாளின் நேரத்தைப் பொறுத்து, வருடத்தின் மாதத்தைப் பொறுத்து மாறுபவை. காங்கிரஸுக்கு தனது அரசியல் சிந்தனை வறட்சியையும் வழிந்து வெள்ளமாக ஓடும் பெருமிதத்தையும் சமாளிக்க வேண்டும் என்பது தெரியும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அதற்கு இந்தியாவில் சிதறிக்கிடக்கும் எல்லா வளங்களையும் தேடியெடுத்து தனது பல வளக்குறைவுகளைச் சீராக்கப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

அரசியல் சட்ட நிர்ணய சபையைக் கூட்ட வேண்டிய தேவை வரப்போகும் இந்தியாவிற்கு, புதிய இந்தியாவிற்கு, போராட்டக் கனவுகளின் இந்தியாவிற்கு வந்தபோதே, காங்கிரஸ் விடுதலைப் போராட்டத்தை விட இந்தியா மிகப் பெரியது என்பதை உணர்ந்தது. அது பல சிக்கல்களைக் கொண்டது என்பதை உணர்ந்தது. அரசியல், அரசியல் கட்சிகளை விடப் பெரியது என்பதையும், இந்திய அரசியல் சட்டத்தைக் காங்கிரஸ் கட்சியின் செயல்குழுவைப் பெரிதுபடுத்தி எழுத முடியாது என்பதையும் உணர்ந்தது. அதற்குத் தேவையான அறிவும் ஊக்கமும் கொண்டவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களோடு சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதையும் கட்சி உணர்ந்தது. இவ்வாறு உணர்ந்தது அதற்கிருந்த முதிர்ச்சியாலும் விவேகத்தாலும் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஈடில்லா ஒரு மனிதரிடம் திறமை அதிசயிக்கத்தக்க அளவில் செறிந்திருந்தது. அறிவின் வசீகரமும் அரசியல் மேதைமையும் கொண்டவர் அவர். சாதாரண தேவர்களும் அசுரர்களும் அவரை நெருங்க விரும்பவில்லை. அவரும் இந்தப் புராணப் புதைவுகளிலிருந்து வந்தவர்களை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. ஒரு கையசைப்பில் அவர்களை ஒதுக்கிவிட்டார்.

டாக்டர் அம்பேத்கர் ஒரு பட்டமல்ல, மூன்று முனைவர் பட்டம் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பெற்றவர். முறையாகச் சட்டம் பயின்றவர். இந்த உண்மைகள் காங்கிரஸ் தலைமையில் இருந்த அரசியல் மேதைகளுக்கும் அறிஞர்களுக்கும் சட்டம் பயின்றவர்களுக்கும் ‘காந்தி, நேரு, படேல், ராஜாஜி, ராஜேந்திர பிரசாத் போன்றவர்கள்’ தெரியாமல் இல்லை. இவரிடமிருந்த அருமையான புத்தகங்கள் லண்டனிலிருந்து இந்தியாவிற்குக் கப்பலில் வரும் போது ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பலின் தாக்குதலால் கடலுக்கு அடியில் போய்விட்டன என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் அவர் இந்த இழப்பை ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக்கொண்டார் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஏனென்றால், அலெக்ஸாண்டிரியாவின் புகழ்பெற்ற நூலகத்தில் இருந்த மொத்தப் புத்தகங்களுக்கு இணையான அரசியல், பொருளாதாரம், இலக்கியம், சட்டம் சார்ந்த நூலகமே அவரது மூளையில் இருந்தது.

அவர்களுக்கு இன்னொன்றும் தெரியும். அம்பேத்கர் மூளையில் மற்றொன்றும் இருந்தது. அது அவர்களின் (காங்கிரஸ்காரர்களின்) வரலாற்று அணுகுமுறைக்கு நேர் இணையானது – இந்தியச் சமூகப் பாகுபாடுகளின் வேதியல் எங்கிருந்து துவங்கியது, அதன் விளைவுகள்

என்ன என்பதைப் பற்றியது. அவருக்குள் ஓர் உந்துதலும் இருந்தது – அவர்களுடையதிலிருந்து வேறுபட்டது, ஆனால் அதே வீரியம் கொண்டது. பழைய தேவதைகளை நினைவு கூறாத அற உணர்வையும் புதியவற்றை உருவாக்காத தேசீயத்தையும் சார்ந்தது. இந்தியாவின் தவறுகளை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்த அற உணர்வைப் பற்றியது. அவர் தனது அரசியல் நம்பிக்கைகளுக்குப் பழைய பஞ்சாங்கங்களைச் சார்ந்து இருக்கவில்லை. மாறாக, பசப்புகள் இல்லாத ஒரு சூழலியலை நம்பினார். அது கற்கள் நிரம்பிய பள்ளத்தாக்குகளையும் முள்ளடர்ந்த மேடுகளையும் கொண்ட இந்திய வாழ்க்கை சார்ந்தது. ஒவ்வொரு நாளும் வாழப்படுவது.

மேலும் அவரைப் போன்று உலகின் கருத்துகளையும் பன்னாட்டுத் தத்துவப் போக்குகளையும் சட்டவியல் பரிணாமங்களையும் இந்தியாவின் நிலைமையோடு பொருத்திப் பார்த்தவர் எவரும் இல்லை. காந்திக்கு டால்ஸ்டாய், தோரோ, ரஸ்கின் போன்றவர்கள் வாழும் முறைக்கு வழிகாட்டும் நட்சத்திரங்களாக இருந்தனர். நேருவிற்கு ஃபேபியஸ் மேக்ஸிமஸ், மார்க்ஸ் லாஸ்கி போன்றவர்கள் அரசியல் உத்வேகத்தை அளித்தனர். ஆனால் அம்பேத்கருக்கு ஜெஃபர்ஸன், லிங்கன், ப்ரைஸ் போன்றோர் இருந்தனர். அயர்லாந்து, பிரிட்டன், அமெரிக்க நாடுகளைச் சார்ந்த வழிகாட்டிகளும் இருந்தனர். ஆன்மாவிற்கோ உணர்வுகளுக்கோ உணவாக அல்ல, அரசியல் உந்துதலுக்காக அல்ல. நாட்டின் கட்ட மைப்பிற்குத் தேவையான செங்கல்களாக, காரையாக.

தரையோடு தரையாகத் தேய்க்கப்படாத வேளைகளில், ஒடுக்கப்பட்டவர்கள் மேலாண்மைப்படுத்தப்படுகிறார்கள் அல்லது மேல்மட்டக் குழுக்களில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். யாருக்கும் இந்த முறைகளை அம்பேத்கரிடம் பரிட்சை செய்ய தைரியம் வரவில்லை. எனவே அரசியல் சட்ட நிர்ணய சபையின் வரைவுக் குழுவிற்குத் தலைமை தாங்க, வேறு வழியே இல்லாமல், அவர் அழைக்கப்பட்டார்; வற்புறுத்தப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் வரைவு வல்லுனர்களுக்கும் எழுத்துத் தச்சர்களுக்கும் தட்டுப்பாடா? இல்லை. அல்லது இவற்றில் விருப்பமிருப்பவர்களுக்குத் தட்டுப்பாடா? தலைமைப் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தால், நெரிசல் இல்லாவிட்டாலும் போட்டி ஏற்பட்டிருக்கும் என்பது உறுதி.

ஆனால் கல்வியின் உச்சத்தையும், இழப்பின் அனுபவங்களையுமே வாழ்க்கையாகக் கொண்டிருப் பதையும் ஒன்று சேரப் பெற்றவர் கிடைப்பது எங்கே? பருந்து பறக்கும் பெருவெளிகளைப் பற்றியும் பாம்பின் நச்சுப்பற்கள் பதியும் இடங்களைப் பற்றியும் தெரிந்த அறிவுக் கலவை வேறு யாரிடமாவது இருந்ததா? சிலருக்கு மற்றைய அரசியல் சட்டங்களைப் பற்றிய ஒரு தெளிவற்ற புரிதல் இருந்தது. அவற்றின் சமூகக் குறிக்கோள்களைப் பற்றியும் ஒரு குழப்பமான அணுகுமுறை இருந்தது. அது காங்கிரஸ் துருவ நட்சத்திரங்களின் முரண்பட்ட அணுகுமுறைகளின் விளைவு – காந்தியின் சர்வோதயம், நேருவின் சோஷலிசம், வலுவான மையம் வேண்டும் என்ற படேலின் நம்பிக்கை மற்றும் மாநிலங்களுக்கு அதிகாரங்களும் நிதிவளங்களின் பங்குகளும் அதிகம் வேண்டும் என்ற காங்கிரஸ் முதலமைச்சர்களின் விருப்பம் போன்றவற்றின் விளைவு.

அம்பேத்கர் தனிக்கொள்கைச் சிறையிலோ அல்லது தனிக்குழுச் சிறையிலோ அடைபடாதவர் என்பதைக் காங்கிரஸ் உணர்ந்திருந்தது. குழுக்களின் பிடிக்குள் வராமல், நாட்டின் வேறுபட்ட தேவைகளையும் உணர்வுகளையும் இலக்குகளையும் சமநிலையில் அணுகும் ஆவணம் ஒன்றை நோக்கி அரசியல் சட்ட அமைப்புச் சபையை வழிநடத்துவார் என்பதையும் அது உணர்ந்திருந்தது. குடியரசுத் தலைவரின் அதிகாரங்களையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களையும் சீரமைத்தல், அரசியல் சட்டத்தில் ஒன்றிய மற்றும் கூட்டாட்சியின் கூறுபாடுகளை ஒருங்கமைத்தல், ஒன்றிய, மாநில மற்றும் பொது அட்டவணைகளை வடிவமைத்தல் போன்றவற்றிற்கு அவருக்குப் பிறவியிலேயே அமைந்திருந்த பாரபட்சமற்ற அணுகுமுறை இன்றியமையாததாக, ஈடு செய்யமுடியாததாக இருந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக சமூகநீதி என்ற இலக்கைப் பற்றிய தெளிவான புரிதலை அவர் கொண்டிருந்தார். மற்றவர்கள் அந்த நீதியின் தேவையை உணர்ந்தவர்கள் என்றால் அவர் அனுபவித்தவர்; மற்றவர்கள் பார்த்தார்கள் என்றால், அவர் உதிரநாளங்களில் அறிந்தவர். காங்கிரஸ் தலைவர்களும் மற்றைய கட்சிகளைச் சார்ந்தவர்களும், இந்தியாவினால் ஒதுக்கப்பட்டவர்கள் என்றும் தொடக்கூடாதவர்கள் என்றும் அழைக்கப்பட்டவர்களின், ஏழைகளின், உழைக்கும் மக்களின் காயங்களுக்காக வருத்தப்பட்டார்கள் என்றால், அவருக்கு அந்தத் தேவை இருக்கவில்லை. சொல்லப்போனால், அக்காயங் களின் உருவே அவர்தான். அதே நேரத்தில், சொந்தக் காயங்களுக்கு அப்பால், நாட்டின் வறுமைகள் மீதும் பற்றாக்குறைகள் மீதும் தனது பார்வையைச் செலுத்தும் திறமை கொண்டவர். முஸ்லிம் லீக் ஆதரவில் வங்காளத்திலிருந்து அரசியல் சட்ட நிர்ணய சபைக்கு அனுப்பப்பட்ட அம்பேத்கர், அதைப் புறக்கணிக்க மறுத்தபோது, 3 பெப்ருவரி 1947 அன்று அவரை, இந்திய மக்களின் சார்பில் காந்தி பாராட்டிப் பேசினார்.

அம்பேத்கருக்கு இந்தப் பங்கைக் கொடுத்ததற்காகப் பழம்பெரும் (காங்கிரஸ்)கட்சியைப் பாராட்டுவதில் நாம் தயக்கம் காட்டக் கூடாது. அம்பேத்கரும் காங்கிரஸ் கட்சியினரும் வெவ்வேறு பக்கங்களில் இருந்தனர். கட்சியில் இல்லாத ஒருவரிடம் இந்தப் பணியை ஒப்படைக்க வேண்டும் என்று எந்த அரசியல் ஒழுங்குமுறையும் சொல்லவில்லை. பொறுப்புகளைப் பகிர்வது அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட பின்பும் தொடர்ந்தது. நேரு, டாக்டர் அம்பேத்கரை இந்தியாவின் முதல் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகப் பணியாற்ற அழைத்தார். ஆனால் இந்த மரியாதை -அல்லது விவேகம்- அற்பாயுளைக் கொண்டிருந்தது.

தாம் சகித்துக் கொள்ளப்படுகிறோம் என்றும், வேண்டாத விருந்தாளியாக இருக்கிறோம் என்றும் அவர் உணரத் தூண்டப்பட்டார் எனக் கருதுவது தவறல்ல என்று நான் நினைக்கிறேன். இந்துச் சட்ட முன்வரைவு விவகாரத்தில் அவர் பதவி துறந்தது, சுயமரியாதை உள்ள எவரும் செய்யக் கூடியது. காங்கிரஸ் அவரைத் தடையேதும் செய்யாமல் வெளியேற அனுமதித்தது. இதை விட ஆயிரம் மடங்கு மோசமானது, அவர் வட பம்பாயில் 1952ஆம் ஆண்டு முதன்முதலாகத் தேர்தலில் நின்றபோது அவரை எதிர்த்தது. காங்கிரஸ் காங்கிரஸாக இருந்ததால் அவரைத் தோற்கடிக்க முடிந்தது. இது போதாதென்று 1954ல் நடந்த பாந்திரா இடைத்தேர்தலில் அவரை மறுபடியும் எதிர்த்து காங்கிரஸ் தோற்கடித்தது.

ஒரு கடந்தகாலக் கனவை இங்கு பகிர விரும்புகிறேன்: காங்கிரஸ் அம்பேத்கரை அமைச்சரவையிலிருந்து வெளியேற அனுமதித்திருக்கக் கூடாது என்பது மட்டும் அல்ல, அது அவருக்கு 1952ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட குடியரசுத் துணைத்தலைவர் பதவியையும் அளித்திருக்க வேண்டும். அரசியல் சட்ட நிர்ணய சபையின் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவரானது இயல்பாக நடந்தது. ஆனால் அரசியல் சட்டத்தின் சிற்பி என்று எல்லோராலும் சொல்லப்பட்ட அரசியல் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் குடியரசின் துணைத்தலைவராக ஆகியிருக்க வேண்டாமா? தத்துவ அறிஞர் – அரசியல் மெய்ஞ்ஞானி ராதாகிருஷ்ணனை விட அந்தப் பதவியை அடையத் தகுதியானவர், பதவிக்கு மதிப்பும் மேன்மையும் கொண்டு வரக் கூடிய ஒருவர் அம்பேத்கர் மட்டும்தான். அம்பேத்கரை அன்று குடியரசின் துணைத் தலைவராக ஆக்கியிருந்தால், சமூக நீதியையும் ஒடுக்கப் பட்டவர்களுக்குப் பலனளிக்கும் கொள்கைகளையும் நிறைவேற்றுவதில் இருந்த ஆர்வம், வேகம் போன்றவற்றில் பெரிய வித்தியாசம் ஏற்பட்டிருக்கும். கடந்தகால விருப்பம் அல்லது கனவு என்பதை அதற்கு அன்றைய நடைமுறைச் சாத்தியங்களுடன் தொடர்பு இருந்தால் மட்டுமே ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளலாம்.

எனவே இன்று காங்கிரஸ் அம்பேத்கரின் 125ஆம் பிறந்த ஆண்டைக் கொண்டாடுவதை முன்மதியுடைய, விவேகமான செயலாக நினைக்கிறது என்றால், அது பிறந்த நாட் சூரிய ஒளியின் கீழ் சிறிது நேரம் புகழ் பெற விழைகிறது என்ற காழ்ப்பை நாம் கொள்ள வேண்டாம். ஆனால் அம்பேத்கர் போட்டியிட்ட இரு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் அவரை எதிர்க்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட பழைய முடிவைக் குறித்துக் கட்சி வருத்தம் தெரிவித்தால் மறைவிற்குப்பின் நடைபெறும் இந்தத்துதி இன்னும் கொஞ்சம் உண்மையாக ஒலிக்கும். இந்த நேர்த்தியான செயலைச் செய்ய காங்கிரஸ் முன்வராவிட்டாலும் 1952, 54ஆம் ஆண்டுகளில் கைவிட்டுப்போன வாய்ப்புகளை நாடு மறந்துவிடவில்லை என்பது பற்றிய விழிப்புணர்வாவது அதற்கு இருக்க வேண்டும். நமக்கு ஞாபகம் குறைவாக இருக்கலாம். ஆனால் முழுவதும் இல்லாமல் போய்விடவில்லை.

புகழோடு இறந்தவர்களின் செல்வாக்கை சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது ஒரு தனிக் கட்சிக்கு மட்டும் இருக்கும் ஏகபோக உரிமை அல்ல; அது நாடு முழுவதும் நடைபெறும் பொழுதுபோக்கு. தங்களையே முன்னால் நிறுத்திக்கொள்ள நினைப்பவர்களுக்கு அம்பேத்கர் என்ற பெயர் வற்றாமல் பால் சுரக்கும் காமதேனுவாகப் பயன்படுகிறது. அவரது ஒரு பார்வையால் விரட்டப்படக் கூடியவர்கள் இன்று அவரது திருவுருவப் படங்களின் முன்னால் மாலையோடு வந்து முறுவலிக்கிறார்கள். இதைத் திமிர் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்? இவர்களில் சிலர் வலதுசாரியினர். அரசியல் சட்ட நிர்ணய சபையில் தீவிர வலதுசாரிகள் ‘இந்தியா அதாவது பாரதம்’ என்ற சொற்களுக்குப் பதிலாக ‘பாரதம் அதாவது இந்தியா’ என்ற சொற்களோடு நமது அரசியல் சட்டம் தொடங்க வேண்டும் என்று முடிவேயில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தனர். அம்பேத்கர் பொறுமையிழந்து “ தலைவர் அவர்களே, இது எத்தனை காலம் நீடிக்கும்? செய்ய வேண்டிய வேலை இருக்கிறது” என்றார். இதேபோன்று, மதம், குழு, பொருளாதாரம் சார்ந்த கொள்கைகளில் வலதுபுறம் நிற்பவர்கள் இன்று நம்மோடு போட்டிபோட்டுக் கொண்டு அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதை அம்பேத்கார் பார்த் திருந்தால், “இந்தக் கேலிக்கூத்தை நிறுத்துங்கள். செய்ய வேண்டிய வேலை இருக்கிறது” என்று கூறியிருப்பார். ஆனால் நமது துரதிருஷ்டம் அவர் உயிரோடு இல்லை. அம்பேத்கர் ஜெயந்தி என்ற பெயரில் அபத்த நாடகங்கள் அரங்கேற்றப்படுவதை நாம் பார்க்கிறோம். வலது சாரிகள், நான் வலதுசாரிகள் என்று கட்சிகளையோ தனிப்பட்ட நபர்களையோ குறிப்பிடவில்லை, பொதுவாக மதங்களை மீட்டுயிர்க்க விழைபவர்களையும், சமூகமாற்றங்களை விரும்பாதவர்களையும், பொருளாதார ஏகபோகவாதிகளையுமே அவ்வாறு குறிப்பிடுகிறேன் – ‘அம்பேத்கர் எங்களுக்கும் சொந்தமானவர்’ என்று சொல்லலாம். ஆனால் அவர்களைத் தூண்டுவது அந்த மாமனிதர்மீது அவர்கள் கொண்ட மரியாதையா?

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்த வரிசையில் நிற்பதற்குக் காரணம் இருக்கிறது: அது மாமனிதர்மீதுள்ள காதலைவிட அவரோடு சேர்ந்து அடையாளம் காணப்படுவதால் கிடைக்கும் தேர்தல் ஆதாயங்கள் மீதுள்ள காதல்.

எந்த இடத்திலும் வலதுசாரிப் பிளவுவாதிகள் இரண்டுவகையான சர்வாதிகாரங்களை நம்புகிறார்கள்: ஒன்று தலைவரின் சர்வாதிகாரம்; மற்றொன்று குழுவின் சர்வாதிகாரம். இந்திய வலதுசாரிகளும் வேறுபட்டவர்கள் அல்ல. இந்திய மக்கள் என்றும் ஒரு வழிகாட்டியையும் தலைவரையும் நோக்கியிருக்கும் மரபைக் கொண்டவர்கள் என்பதனாலேயே அவர்கள் ஜனநாயகமுறையில் தனிநபர் சர்வாதிகாரத்தைத் தூக்கிப்பிடிப்பார்கள் என்று நமது வலதுசாரிகள் நம்புகிறார்கள். இந்துப் பெரும்பான்மையினர் அவர்களது ராஜ்யத்தையே, அதாவது இந்து ராஜ்யத்தையே விரும்புவார்கள் என்றும் நம்புகிறார்கள்.

அம்பேத்கரைத் தங்களவராக ஆக்கிக்கொள்வதற்கு முன்னால் அவர் 29 ஆகஸ்டு 1949ம் ஆண்டு அரசியல் சட்ட நிர்ணய சபையில் சொன்னதை வலதுசாரிகள் நினைத்துப் பார்க்கட்டும்: “இந்தியா போன்ற நாட்டில், நீண்டநாட்கள் பயன்படுத்தாததால் ஜனநாயகம் ஏதோ புதிதாக வந்ததாக நினைக்கப்படலாம். அதனால் அது சர்வாதிகாரத்திற்கு வழிவிடும் அபாயத்திற்கான வாய்ப்பு இருக்கிறது. புதிதாகப் பிறந்திருக்கும் இந்த ஜனநாயகம், அதன் வடிவத்தை மட்டும் தக்கவைத்துக்கொண்டு உண்மையில் சர்வாதிகாரத்திற்கு வழிவிடும் வாய்ப்பும் இருக்கிறது. (தேர்தலில்) பெருவெற்றி பெறும் பட்சத்தில். இரண்டாவதாகச் சொல்லப்பட்டது உண்மையாக ஆகக்கூடிய சாத்தியம் மிக அதிகம்.”

அவர்கள் அம்பேத்கர் 5 நவம்பர் 1949ஆம் ஆண்டு சொன்னதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். “சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்புகளை அமைத்துக் கொடுத்ததில் அரசியல் சட்ட நிர்ணய சபை விவேகத்துடன் நடந்து கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு ஐயம் இல்லை. இந்த நாட்டில் பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரும் தவறான பாதையில் சென்றிருக்கிறார்கள். சிறுபான்மையினரை வாழவிட மறுப்பது பெரும்பான்மையினர் செய்யும் தவறு. இருந்த இடத்திலேயே மாறாமல் இருப்போம் என்று கூறுவது சிறுபான்மையினர் செய்யும் தவறு. இரு நோக்கங்களை நிறைவேற்றும் தீர்வு ஒன்றைக் காண வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு. சிறுபான்மையினர் என்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை அங்கீகரிப்பதில் அது தொடங்க வேண்டும். ஒரு காலத்தில் பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரும் ஒன்றாக இணைவதற்கு வழிவகை செய்வதாகவும் அது இருக்க வேண்டும். தங்களது வாழ்க்கையையே பெரும்பான்மையினர் கையில் ஒப்படைக்கச் சிறுபான்மையினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். பெரும்பான்மையினரின் ஆட்சிக்குக் கீழ் இயங்க -அது அரசியல் பெரும்பான்மையாக இராமல் மதப்பெரும்பான்மையாக இருந்தாலும் – அவர்கள் நம்பிக்கையுடன் ஒப்புக்கொண்டுள்ளனர். சிறுபான்மையினரைப் பாகுபாடு இல்லாமல் நடத்த வேண்டிய பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது என்பதைப் பெரும்பான்மையினர் உணர வேண்டும். இந்தப் பழக்கம்தான் சிறுபான்மையினர் இருப்பார்களா அல்லது மறைந்து விடுவார்களா என்பதைத் தீர்மானிக்கும். என்றைக்குச் சிறுபான்மையினருக்கு எதிராகப் பாகுபாடு செய்யும் பழக்கத்தைப் பெரும்பான்மையினர் கைவிடுகிறார்களோ அன்றைக்கே சிறுபான்மையினரின் இருப்புக்கான அடிப்படை இருக்காது. சிறுபான்மையினரே மறைந்துவிடுவார்கள்.”

நான் அவையோருக்கு அம்பேத்கர், ‘மறைதல்’ என்ற சொல்லைத் தாங்கள் அரசியலில் ‘தனித்தவர்கள்’ என்ற நிலைப்பாட்டை சிறுபான்மையினர் தொடர விரும்பமாட்டார்கள் என்ற பொருளில் பயன்படுத்தினார் என்பதைச் சொல்ல வேண்டிய தேவையில்லை. சிறுபான்மையினர் தங்களது கலாச்சார, மத வழக்கங்களையும் நம்பிக்கையையும் இழந்து மறைந்துவிடுவார்கள் என்று அவர் எண்ணவில்லை. புத்தமதம் காட்டும் பாதையைத் தனது வாழ்க்கையின் கடைசி மாதங்களில் உறுதியோடு தேர்வு செய்த அவர் ‘வீடு திரும்புதல்’ என்ற எண்ணத்தை இந்தியாவின் பொதுப்பண்பிற்கே எதிரானது என்று கடுமையாகச் சாடியிருப்பார்.

அம்பேத்கரைத் தங்களது சுயநலத்திற்காகத் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் பாபாசாகேபின் பெயரைச் சொல்ல தங்களுக்கு அதிக உரிமை இருக்கிறது என்று நினைத்தால், அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் அவர்கள் பாபாசாகேபின் பெயரைத் தங்கள் சுயநலத்திற்காகப் பயன்படுத்த நினைத்தால் அதில் நியாயம் இல்லை என்பதை வருத்தத்துடன் சொல்கிறேன். அவர்கள் தவறிழைக்கிறார்கள். கணினியின் உதவியுடன் அவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இன்றைய அரசியல்வாதிகள் அவருடன் சேர்ந்து இருப்பதுபோல் பொய்த்தோற்றப் புகைப்படங்களை எடுத்துக்கொள்வது இப்போது வழக்கமாகிவிட்டது. இது துயரம் தருவது. இவர்களுக்குச் சுயமான எண்ணங்களும் தன்னம்பிக்கையும் அதிகமாவும் செப்பிடு வித்தைத் திறன் குறைவாகவும் இருந்திருக்க வேண்டும். நமக்கு வரலாறு பற்றிய மறதி அதிகம். ஆனால் இவர்கள் தலைவருக்கு நெருக்கமானவர்கள் என்று நம்பும் அளவிற்கு நாம் அவ்வளவு அப்பாவிகள் அல்ல. கான்ஷிராம் அவர்கள் இத்தகைய சாகச முயற்சியை எடுக்கவில்லை என்பதை இங்கு சொல்லியாக வேண்டும்.

ஒருமுறை அரசியல் சட்ட நிர்ணய சபையில் டாக்டர் அம்பேத்கர் ஜெஃபர்ஸனை மேற்கோள் காட்டி ஒவ்வொரு தலைமுறையும் ஒரு புதிய நாடு என்றார். இன்று நாம் அந்தப் புதிய நாடு. ‘நம்முடைய’ புதிய தலைமுறை ஒன்று இருக்கிறது. உண்மை என்னவென்றால், அப்படியே இருந்தாலும், நமது புதிய நாட்டில் பழைய பாரபட்சங்கள், பழைய அடக்குமுறைகள் இன்னும் இருக்கின்றன. நமது மாநகரங்களும் பெரிய நகரங்களும் தீண்டாமையை முன்புபோல கடைப்பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் சிறிய நகரங்களிலும் கிராமங்களிலும் வெளிப்படையாக இல்லாமல், சூட்சுமமாக, தலித்துகள் தலித்துகளாகவே அறியப்படுகிறார்கள் – ஒரு தனி வகையாக. தாழ்த்தப்பட்ட சாதிகளையும் பழங்குடியினரையும் கொண்ட பட்டியல் ஒன்று வர வேண்டும். இதுபோன்ற ஆக்கபூர்வமான திருத்தம் பற்றி இந்தியாவால் மட்டும்தான் யோசித்திருக்கமுடியும். இந்தியாவால் மட்டும்தான் அந்தச் சொல்லை – நான் அதைத் திருப்பிச் சொல்ல விரும்பவில்லை – கொச்சைச் சொல்லாகத் தாழ்த்தியிருக்க முடியும். இந்தச் சொல் தாம்பிராம், குஜ்ஜூ, மல்லு போன்று தீங்கற்ற முறையில் பயன்படுத்தப்படவில்லை. ஏளனம் செய்வதற்கென்றே பயன்படுத்தப் படுகிறது. நமக்கு வெட்கமளிக்கக்கூடியது இது. ஒரு புறம் நாம் புதிய நாடு என்றாலும், மறுபுறம் இன்னும் புதியநாடு அல்ல.

காந்தி படைத்த ‘ஹரிஜன்’ என்ற சொல்லாக்கம் அதனுடைய பங்கையாற்றிவிட்டு மறைந்துவிட்டது.. அதன் சரியான, தகுதியான வாரிசான ‘தலித்’ என்ற சொல்லும் ஒருநாள் தேவையற்றதாக ஆகிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்தச் சொல் பெயர்ச்சொல்லாகப் பயன்படுத்தப்படாமல் பெயரடையாகப் பயன்படுத்தப்படும் காலம் வரும் -அது ஒரு காலத்தில் எப்படி அறியப்பட்டது என்பதன் நினைவாக. ஆனால் அந்த நாள் வெகுதொலைவில் இருக்கிறது. பணி நியமனங்களிலும் கல்வியிலும் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடுகள் அவற்றின் பயனாளிகளுக்கு வியக்கத்தக்க அளவில் நலனளித்திருக்கின்றன. மக்களின் வாழ்க்கையில் இடஒதுக்கீடுகள் கொண்டுவந்த மாற்றத்திற்கு, எனது மாநிலமான தமிழ்நாடு ஓர் உதாரணம். இடஒதுக்கீடுகள் பல ஆண்டுகள் நீடிக்க வேண்டும், ஆனால் தன்னிச்சை என்று ஒன்று இருக்கிறது. எனக்குத் தெரிந்த சில குறிப்பிடத்தக்க தலித்துகள் ஏறத்தாழ இவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்; “நான் தலித்துதான். ஆனால் எந்தவகையிலும் எதையும் இழந்தவன்அல்ல. என்னை யாரும் தூக்கிவிட வேண்டாம்.” அவர்களது சுயதிருத்தத்தை நான் வணங்குகிறேன். இரண்டாவது, மூன்றாவது மற்றும் அவற்றிற்கு அடுத்த தலைமுறையினரும், இடஒதுக்கீட்டின் பயனை நியாயமாக அனுபவித்தவர்களின் பிள்ளைகளும் பேரன் பேத்திகளும், முன்னுக்கு வராத, தங்கள் சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமையை விட்டுக்கொடுக்கலாம் என்று எண்ணலாம்.

தொழில் வளர்ச்சி, கனிம, வன வளங்களைப் பயன்படுத்துதல் என்ற பெயரில் நமது கிராமங்களில் வசிக்கும் ஏழைகளின் – குறிப்பாக தலித்துகளின், பழங்குடி தலித்துகளின் – உடைமைகளைப் பறிப்பது அவர்களை நகையாடுவதற்கு ஒப்பாகும். இது சிறுபான்மையினரின் உரிமைகளைக் காப்பதற்காக அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் நமது பொறுப்புகளை மீறுவதாகும். தாமதமாகக் கொண்டுவரப்பட்டாலும், முந்தைய அரசின் நிலக் கையகப்படுத்தும் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இழப்பீடுப் பிரிவுகள், இவ்வுரிமைகளைக் காப்பதற்காக எடுக்கப்பட்ட முதல் காலடி. இவற்றை நீர்த்துப்போக வைப்பதைத் தலித் இந்தியர் மட்டுமல்ல, எல்லா இந்தியரும் எதிர்க்க வேண்டும். இழப்பீட்டின் நீதி, இழப்பீடு பற்றியது மட்டும் அல்ல, நீதியையும் பற்றியது. நீதி, அமைதியைப்போல, பிரிக்க முடியாதது.

அம்பேத்கரை ஓர் அறிவுசார் பேர்நிகழ்வாக அணுக வேண்டியது முக்கியமானது. எவருடைய ஏழ்மையை நீக்கப்பாடுபட்டாரோ அந்த மக்களால் மட்டுமல்ல, முழு இந்தியாவும் அவரை அவ்வாறு அணுக வேண்டும். அவரை ஒரு குழுவிற்குள் அடைக்காமல் இருப்பதும் முக்கியம். அவருடைய பரந்த அறிவுத்திறனை எல்லோரும் பயன்படுத்திக்கொள்வதும் அவசியம். என்னைப் பொறுத்தவரை பல வருடங்களாக, அவரை தலித்துகளுக்காக யாரும் பேசாத அளவில் பேசிய, நமது அரசியல் சட்டத்தை யாரும் வடிவமைக்க முடியாத அளவில் வடிவமைத்த மாமனிதர் என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன். இந்த இரண்டு சாதனைகளும் அவருக்கு வரலாற்றில் ஓர் இடத்தை நிச்சயமாக்கிவிட்டன என்று நினைத்துக்கொண்டிருந்தேன், ஆனால் எனது நடுவயதில் அவருடைய படைப்புகளின் விரிவைப் பார்க்க முடிந்தபோதுதான் அவர் ஒரு மறுமலர்ச்சி மனிதர் என்ற புரிதலை அடைந்தேன். அவர் மூடியிருந்த கதவுகளையும் சாளரங்களையும் திறந்தவர் . அவை, குறுகிய பாரபட்சத்தால் மட்டுமல்ல, அறிவுச் செயலின்மையால், மனச்சோர்வால், கருத்துருவாக்கக் கோழைத்தனத்தால் மூடப்பட்டவை. அவரைப் போன்ற ஒரு மனிதரை விளிம்புகளுக்குள்,ஒரு குழுவிற்காகப் பேசுபவராக, ஒரு கருத்துக்குச் சொந்தக்காரராக, ஒருசார்பு நிலைப்பாடு எடுப்பவராக, ஒரு சட்டக் கட்டமைப்பின் சிற்பியாகக் குறுக்கினால், – அவர் எதிர்க்கவே முடியாதவராக இருந்தாலும் – நாம் எல்லோரும் அவரது வாரிசுகள் என்பதை மறுக்க அல்லது வலுக்குறையச் செய்ய வேண்டிவரும்.

பாபாசாகேப் அம்பேத்கர் விட்டுச்சென்ற கொடை மிகப் பரந்தது. அது நம்மை நாமே உலகநாகரிக அளவைகளால் நிறையிட உதவுகிறது. இந்தியராக மட்டும் அல்ல, மனிதகுலத்தின் ஒரு பிரிவாக; ஒரு பகுதி ஆற்றலோடு இயங்கினால், மறுபகுதி மூச்சைவிடும் தருவாயில் இருத்தல்; ஒருபகுதி தன்னிறைவோடு இருந்தால், மறுபகுதி தன்னையே தாழ்த்திக்கொண்டு இருத்தல்; ஒரு பகுதி உலக விவகாரங்களில் அங்கம் வகிக்கும் முனைப்பில் இருந்தால், மறுபகுதி அறிவூனத்தை விளைவிக்கும் சிற்றூர் பிரச்சினைச் சேற்றில் அமிழ்ந்திருத்தல் போன்றவற்றை அளக்கும் அளவைகளாக. அவர் எவ்வளவு ஒதுக்க முடியாதவரோ, அவ்வளவு தன்வசப்படுத்திக்கொள்ள முடியாதவர். அவரை வேலி போட்டுத் தடுக்க முடியாது. வேலி போட்டு உள்ளே வர வேண்டாம் என்று சொல்லவும் முடியாது. அவரும் காந்தியைப்போல எல்லாக்காலங்களுக்கும் ஒத்த பருவம். ஒரு சிறு வசந்தத்தின் நிலையில்லாச் சுவையல்ல.

இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரச்சினையை காந்தி பார்த்த விதத்திற்கும் பாபாசாகேப் பார்த்த விதத்திற்கும், ஆழமான, வரையறை செய்யக்கூடிய வேறுபாடுகள் இருந்தன என்பதை மறுக்க முடியாது. இந்திய சமுதாயக் கட்டமைப்பைப் பற்றி இருவருக்கும் இடையே இருந்த வேறுபாடுகளையும் குறைத்து மதிப்பிட முடியாது. எல்லா மனிதர்களும் தவறு செய்யக் கூடியவர்கள். காந்தி, வருணாசிரம தருமத்திற்கு ஆதரவு கொடுத்து தீண்டாமையை எதிர்த்ததில் தவறு செய்தார் என்று நான் கருதுகிறேன். அம்பேத்கரின் நிலைப்பாடுதான் சரி. காந்தி தலித்துகளுக்குத் தனித் தொகுதிகளை அமைப்பதை எதிர்த்தார். அவர்களுக்குப் பொது வாக்கெடுப்பில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதை ஆதரித்தார். இங்கு காந்தியின் நிலைப்பாடு சரி, அம்பேத்கரின் நிலைப்பாடு தவறு என நம்புகிறேன். பொருட்படுத்தக்கூடத் தகுதியில்லாத ‘நான்’ இந்த இரு முடிவுகளுக்கு வருவதில் தவறு செய்திருக்கலாம். ஆனால் நான் இப்போது சொல்லப்போவதில் தவறு இல்லை என்பது எனக்குத் தெரியும்: அவர்கள் உலகைத் துயரமிக்கதாக விட்டுச்சென்று ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. பாகுபாடுகளையும் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதையும் விரும்பாத, பரந்த நோக்குள்ள இந்தியன் இவர்கள் இருவரையும் ஒரே பக்கத்தில் வைத்துத்தான் பார்ப்பான். வேறுவேறு பக்கங்களில் அல்ல. ஒரே கதையாடலின் மாந்தர்கள் இவர்கள். மாறுபட்ட கதையாடல்களின் மாந்தர்கள் அல்ல. குழுமனப்பான்மை நமது பன்முகத்தன்மைக்கும் மதவெறி நமது மதச்சார்பின்மைக்கும் ஊறு விளைவிக்கும் சூழலில் இந்தியக் கலாச்சாரத்தின் வளர்ச்சிபற்றிய சொல்லாடல்கள் நடக்கும்போது அவர்கள் ஒரே தரப்பில்தான் இருப்பார்கள். வேறுபட்ட தரப்புகளில் அல்ல. மதவெறியையும் பெரும்பான்மையிசத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கு காந்தி, அம்பேத்கர் இருவருமே ஊக்கசக்திகள்.

அம்பேத்கருக்கு – காந்திக்கும்தான் – நாம் வழிபாட்டைச் செலுத்த வேண்டாம். அதை அவர் விரும்பமாட்டார். அவருக்கே உரித்தான மதிப்பை அளிப்போம். அவர் விட்டுச் சென்றவற்றின் மீது தொண்டர் திணித்த பொதியை – சிந்திக்காத தொண்டர்கள் – ஏற்ற வேண்டாம். மாறாக அவற்றோடு ஒருங்கிணைந்து அவர் முடிக்காது விட்ட செயற்திட்டங்களைக் கையில் எடுத்துக்கொள்வோம். அவற்றை எதிர்ப்பவர்களை எதிர்கொள்வோம்.

எழுத்தாளர், கல்வியாளர், அயல்நாட்டுத் தூதுவர், முன்னாள் மேற்கு வங்க ஆளுநர், கோபால்கிருஷ்ண காந்தி 14 ஏப்ரல் 2015 அன்று உச்சநீதிமன்ற நூலகத்தில் டாக்டர் அம்பேத்கரின் படத்தை திறந்துவைத்து ஆற்றிய உரை.

நன்றி: Scroll.in

காலச்சுவடு, அக்டோபர் 2015

Load More Related Articles
Load More By sridhar
Load More In சிறப்பு கட்டுரைகள்
Comments are closed.

Check Also

சிந்தப்பட்ட பின்னும் கொப்பளிக்கும் இரத்தம்!

கொடிய இடைநிலைச் சாதியம் கொடிகட்டிப் பறக்கும் – தமிழகத்தின் மிகப்பெரும் கிராமமான மதுர…