அம்பேத்கர் பார்வையில் இந்திய வேளாண் துறையும் தொழிலாளர்களும்
இந்திய பொருளாதாரத்திலும் சமூக அரசியல் தளத்திலும் டாக்டர் அம்பேத்கரின் பங்களிப்பு பரவலாக அறியப்பட்டதே. சுதந்திரம் அடைந்த போது மிகப் பெரும் சிக்கலாக இருந்த பல விஷயங்களைப் பற்றி அம்பேத்கர் தனது உரைகளிலும், எழுத்துக்களிலும் விளக்கியிருக்கிறார். அதில் சமூக அரசியல் பொருளாதாரத்தை முன்னிறுத்தும் விஷயங்களுக்கு கவனம் கிடைத்தது. ஆனால் இதுவரை அம்பேத்கரின் பார்வைகளும் கவனிக்கப்படாமலே இருக்கின்றன. அவற்றில் ஒன்று அவரது வேளாண்மையும், வேளாண் தொழிலாளர்களும்.
Indian Journal of Economic Society என்ற ஆராய்ச்சி இதழில் 1917இல் அம்பேத்கர் ” இந்தியாவில் சிறு உடைமைகள் அதன் தீர்வும்”(Small holdings in India and its remedies) என்ற ஆய்வு கட்டுரை எழுதி இருக்கிறார். இதில் தற்கால அறிஞர்கள் இந்திய வேளாண் துறையின் மிகப்பெரும் சிக்கலாக குறிப்பிடும் சிறு மற்றும் குறு நிலங்களின் பிரச்சனைகளை பற்றி அம்பேத்கர் 1917லே விளக்கி எழுதியிருக்கிறார்.இக்கட்டுரை அவரது இந்திய வேளாண்மை மீதான அவரது தீர்க்க தரிசனத்திற்கு எடுத்துக்காட்டு.
இதன் காரணமாகவே குறைந்த மகசூலும், விளைபொருட்களின் விலை உயர்வும் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு குறைந்த வருமானம் கிடைப்பதால் சிறு,குறு மக்களின் நிலை தொடர்ந்து மோசமாகிறது. எனவே எல்லா பிரச்சினைக்கும் காரணமான சிறு,குறு நிலங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்கிறார்.
இந்த சிறு மற்றும் குறு நிலங்கள் மட்டுமே இந்திய வேளாண் துறையின் மகசூல் குறைவதற்குக் காரணம் என குறிப்பிடவில்லை. மாறாக அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்தியாவில் முதலீடு செய்யும் திறன், வேளாண் தொழிலாளர்கள் மற்றும் வேளாண் இடுபொருட்கள் கிடைப்பதில் மிகப் பெரும் சிக்கல் நிலவுகிறது. இந்தியாவின் வேளாண் நிலங்கள் துண்டுதுண்டாகச் சிதறடிக்கப்பட்டுள்ளதால் அந்நிலங்களில் முதலீடு செய்யும் முதலாளிகளின் மனநிலையும் தொய்வாக உள்ளவதாக அம்பேத்கர் குறிப்பிடுகிறார். இதனைக் கருத்தில் கொண்டே நில கையகப்படுத்தும் மசோதா இந்திய விடுதலைக்குப்பின் நிறைவேற்றப்பட்டது.
இந்திய வேளாண் துறையில் நிலவுடைமையாளர்கள் விவசாயக் கூலிகளை கடுமையாக வாட்டுகின்றனர். நிலவுடையாளராக இருக்கும் ஆதிக்க சாதியினர் பட்டியல் வகுப்பினரையும் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரையும் பண்ணையடிமைகளாகவும்,கொத்தடிமைகளாகவும் வைத்திருக்கின்றனர்.
பட்டியல் வகுப்பினரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் துண்டுதுண்டாக வைத்திருக்கும் வேளாண் நிலங்களை ஒருங்கிணைத்து ஒரு கூட்டுப் பண்ணையம் செய்வது அவர்களுக்கு நல்ல பயனைத் தரும். அதிகமாக நிலம் வைத்திருக்கும் நில உடையாளர்களிடம் இருந்து நிலங்களைக் கையகப்படுத்தி அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும். இந்த விவசாய நிலங்களில் இருந்து கிடைக்கும் அறுவடையைப் பெரும் தொழிற்சாலைகள் கொண்டுசென்று பதனிடுதல், மதிப்புக்கூட்டல் போன்ற செயல்களைச் செய்யும்போது கீழ்மட்ட நிலையிலிருந்து மேல்மட்ட நிலை வரை அனைவருக்கும் நல்ல லாபம் கிட்டும் அம்பேத்கர் தொலைநோக்கோடு குறிப்பிட்டுள்ளார்.
காலம் காலமாக வேளாண் நிலங்கள் பெரும் நிலவுடைமையாளர்களிடம் இருக்கிறது. அதனால் ஒட்டுமொத்தமாக நீர், விதைகள், கடன் போன்றவை அரசாங்கம் ஏற்று நடத்த வேண்டும். இல்லையேல் அடிநிலையில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும் பட்டியல் சாதியினருக்கும் மேற்கூறிய வளங்கள் மற்றும் இடுபொருட்கள் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்துவார்கள். அதனால் அரசாங்கமே இந்த வேலைகளை முன்னின்று நடத்த வேண்டும். அதேபோல் காலியாக உள்ள நிலங்களை அரசு நிலமில்லாத விவசாய கூலிகளுக்கும், குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
நிலவுடைமையாளர்கள் காலங்காலமாகக் கடன் வழங்கி உதவி செய்து வருகிறோம் என்கிற பெயரில் ஏழை விவசாயிகளைச் சாதிரீதியாகவும் வர்க்க ரீதியாகவும் அடக்கி வைத்திருக்கின்றனர். இதனை சரிசெய்யும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். இதுபோலே கடன் வழங்குபவர்களையும் அரசு சீர் செய்ய வேண்டும். மொத்தத்தில் கடன், ஊக்கத்தொகை, இடுபொருள் உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்க வேண்டும் எனவும் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.
அம்பேத்கரின் எழுத்தும் உரைகளும் தொகுதி மூன்று பக்கம் 408ல், ”வேளாண்மையில் அரசின் தலையீடு மட்டும் இருந்தால் போதாது .அரசே வேளாண்மையை அரசுடைமையாக்கி ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான வேளாண் முறைகளை வகுக்க வேண்டும். அது ஒருங்கிணைந்த பண்ணையமாகவும் அதே சமயத்தில் வேளாண்மையை அரசு பொதுவுடைமை தொழிலாகவும் ஆக்க வேண்டும்”என ஆணித்தரமாக சொல்கிறார்.
மொத்தத்தில் இந்தியாவில் நிலங்கள் சிறிதாக இருப்பது மட்டும் பிரச்சனை அல்ல.அப்படி இருக்கும்பட்சத்தில் நிலங்களின் அளவை பெரிதாக்குவதன் மூலம் தீர்த்துவிடலாம். உண்மையான சிக்கலை தீர்க்கும் வழி என்பது அதிக முதலீட்டுடன் அதிக வேலை ஆட்களை நியமித்துப் பெருந்தொழிலாக வேளாண்மையை ஆக்க வேண்டும் என வழிக்காட்டுகிறார்.
வேளாண் துறையின் பிரதான பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் நிலசீர்திருத்தமும் தொழில் வளர்ச்சியும் ஒன்றிணைவது இல்லை என்பதே. ஆக தொழில் வளர்ச்சியும் நிலசீர்திருத்தத்தையும் ஒரே நேரத்தில் செயல்பட வைக்க வேண்டும் எனவும் அம்பேத்கர் சுட்டுகிறார்.
– ஜீ.கே.தினேஷ்
கட்டுரையாளர் வேளாண் துறையில் ஆராய்ச்சியாளர்.
தொடர்புக்கு :writergkdinesh@gmail.com
Source : Tamil Hindu , May 01, 2020