மேலவளவில் படுகொலை செய்யப்பட்ட என் அண்ணன்களுக்கு வீர வணக்கம்.
அகன்ற நிழல்பரப்பி உயர்ந்திருக்கும்
அரச மரத்தின்கீழ் எங்கள் இருப்பிடம்
புகைப்படத்தில் இருப்பவன் என் தந்தை
கலவரத்தில் வெட்டுண்ட அவன் தலை
ஏழாம்நாள் கண்களற்றுக் கிடைத்தது
இவள் என்னுடைய தாய்
கோவில் ஒன்றினுள் நுழைந்ததற்காய்
ஒற்றைக் காலுடன் திரிகிறாள்
அவன் என்னுடைய சகோதரன்
வாயில் மலம் திணிக்கப்பட்டவன்
இவள் என்னுடைய சகோதரி
வேலிக்குள் வல்லுறவால் வதைபட்டவள்
என்னையும் கழிப்பறைச் சந்துகளில்
கவனித்திருக்கலாம்
மலம் கூட்டிக் கொண்டிருப்பேன்
கோப்புகளில் குறிப்பெழுதிக் கையொப்பமிடுகிறீர்கள்
மிகச் சாதாரணமானவை
மலத்தைத் திணிப்பதும் பெண்ணைச் சிதைப்பதும்
தலையை வெட்டுவதும்
ஆம்.
மிக மிகச் சாதாரணமானவை