டிசம்பர் 6 – பி.ஆர். அம்பேத்கர் நினைவு நாள்.
லண்டனில் அம்பேத்கர் வாழ்ந்த வீடு.-
1921-22இல் லண்டனில் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் தங்கிப் படித்த வீட்டை 2015இல் மகாராஷ்டிரா அரசு விலைக்கு வாங்கி நினைவு இல்லமாக்கி இருக்கிறது. இவ்வீட்டின் பூங்காவில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சிலை ஒன்று நிறுவப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இவரது சிலைகள் உடைக்கப்படாமல் இருப்பதற்காக இரும்பு கூண்டுக்குள் வைக்கப்படுவது வழக்கம். அதே அம்பேத்கர் லண்டனில் சுதந்திரமாகக் காட்சியளிக்கிறார்.
மார்க்ஸ், அம்பேத்கர், பெர்னாட்ஷா போன்றவர்கள் பயன்படுத்திய பிரிட்டீஷ் நூலகத்தின் வாசக அறை இப்போது மூடப்பட்டு விட்டது. லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் இவரது படிப்பு 1917இல் மூண்ட முதல் உலகப் போரினால் தடைபட்டது. இவர் முதலில் எழுதிய ஆராய்ச்சிப் பிரதி கப்பலில் வந்தபோது அழிந்துவிட்டது.

இந்தியா திரும்பியவர்.1920இல் மீண்டும் லண்டன் சென்று பொருளாதாரத்தில் ( இந்தியாவிலேயே முதல்) டாக்டர் பட்டத்தை முடித்தார். இந்த நேரத்தில்தான் 10ஆம் இலக்கம், கிங் ஹென்றி சாலையில் மற்றொரு இந்தியருடனும் , அந்த வீட்டின் பாதுகாவலருடனும் தங்கி இருந்தார். லண்டனில், ஐரோப்பிய தாராளமயவாதம், வரலாறு, தத்துவம் ஆகியவை உயர்ந்த சிந்தனைகளுக்கு இவரது மனதைப் பழக்கியிருந்தது. மிக ஒழுக்கமாக நேரத்தையும் பணத்தையும் செலவிட்டுக் கொண்டு பாதிநாள் பசியுடன் இருந்தபோதும் புத்தகம் வாங்கத் தயங்கியதில்லை. அம்பேத்கர் “விசாவுக்குக் காத்திருத்தல்” எனும் சுயசரிதையில் இப்படி எழுதுகிறார்.
“ஐந்து ஆண்டுகள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வாழ்ந்தபோது நான் ஒரு தீண்டத்தகாதவன் என்பது என் மனதிலிருந்தும் சிந்தனையிலிருந்தும் சுத்தமாகத் துடைக்கப்பட்டு விட்டது. இந்தியாவில் ஒரு தீண்டத்தகாதவன் எங்கு சென்றாலும் அவன் மற்றவர்களுக்கும், தனக்கும் பிரச்சினையை வரவழைத்துக் கொள்பவனாகவே இருந்தான். மீண்டும் இந்தியா வந்தபோது “எங்கே போவது? யார் என்னை ஏற்றுக் கொள்வார்கள்? எனக்குள் கிளர்ச்சியாக இருந்தது.”
இந்தியாவில் ஒரு தீண்டத்தகாதவனாக நடத்தப்பட்ட அம்பேத்கர் தன்னை ஒரு அறிஞராக ஐரோப்பாவில் நடத்தப்படுவதை உணர்ந்தார். மாபெரும் அறிஞராகவும், சட்ட நிபுணராகவும் லண்டனில் தன்னை உணர்ந்த டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் கடைசியில் ஒரு தீண்டத்தகாதவனாகவே இந்தியாவுக்குத் திரும்பியதுதான் வரலாற்றின் மிகப் பெரிய சோகம். இதிலிருந்து விடுபட அவர் வாழ்நாள் முழுவதும் உழைக்க வேண்டி இருந்தது.
- இந்திரா ராஜேந்திரன்
