பாலிவுட்டின் கவன ஈர்ப்புக்குரிய இளம் இயக்குநர். முதல் படமான ‘மஸான்’ மூலம் சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது, 2 கேன்ஸ் விருதுகள் என பாலிவுட்டில் பலரின் புருவங்களை உயர வைத்தவர். இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் பாசறையைச் சேர்ந்தவர். ‘கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’ படத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். நெட்ஃபிளிக்ஸில் ஹிட்டடித்த ‘சேக்ரெட் கேம்ஸ்’ வெப் சீரிஸின் சிக்கலான 8 அத்தியாயங்களை இயக்கி அசத்தியவர். ‘சோர்’, ‘எபிபோனி’, ‘ஜூஸ்’ என்ற 3 குறும்படங்கள் மூலம் சர்வதேச அங்கீகாரங்களை வென்றவர். சமீபத்திய நெட்ஃபிளிக்ஸ் டாப் சார்ட் ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘அஜீப் தாஸ்தான்ஸ்’ ஆந்தாலஜி படத்தில் இவர் இயக்கிய ‘கீலி புச்சி’ பலத்த வரவேற்பைக் குவித்திருக்கிறது.
“தலித் இயக்குநராக உங்களைப் பொதுவெளியில் அடையாளப்படுத்திக் கொள்வதன் நோக்கம் என்ன? பாலிவுட்டில் அதற்கு எதிர்வினைகள் இருக்குமே?’’
“என் முதல் படம் ‘மஸான்’ ஒரு தலித் இளைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான கதை. பிணங்களை எரியூட்டும் குலத்தொழில் செய்யும் டிப்ளோமா இன்ஜினீயரிங் பட்டதாரி ஹீரோ. ஆதிக்கசாதிப் பெண்ணுடனான அவனுடைய காதல் என்னவானது என்பதே கதை. அதை வாரணாசியில் படமாக்கும்போது, எனக்கு அங்கிருந்த எல்லோரும் உதவி செய்தார்கள். என் அடையாளத்தைச் சொன்னால் உதவுவார்களா என்ற தயக்கம் அப்போது இருந்தது. ஆனால், அது தேவை என இப்போது உணர்கிறேன். மற்றவர்களைவிட அந்த வலியை என்னால் அதிகமாக உணர முடியும். இந்தியாவில் எந்த மூலையில் இருந்துகொண்டாவது சாதிகள் இல்லை என்று சொல்லுவது வடிகட்டிய பொய். சுய சாதிப்பெருமை இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்து சாதியை மறுக்கிறேன் எனச் சொல்லலாம். அதைத்தான் நான் செய்கிறேன்.
ஊடகங்கள் பெருகிக்கிடக்கும் இந்தக் காலத்திலும்கூட ‘இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்?’ என்று சிம்பிளாகக் கடக்கும் எல்லோருமே வில்லன்கள்தான்.
ஒரு பிரபல இயக்குநர் ஒரு ட்வீட் போட்டிருந்தார். ‘எக்ஸிகியூட்டிவ் க்ளாஸ் ஃப்ளைட்டில் என் பக்கத்தில் ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் பயணிக்கிறார். இந்தியா முன்னேறி விட்டது. ஆனால், ஏன் இன்னமும் சாதிப்பாகுபாடு, தலித் புரட்சி எனப் புலம்புகிறார்கள்?’ என்று. நான் அதை என் கமெண்ட்டோடு இப்படி ஷேர் செய்திருந்தேன். ‘ஆம். நானும் விருதுகள் குவித்த தலித் இயக்குநர்தான். போராடித்தான் அதேபோல எக்ஸி கியூட்டிவ் இருக்கையில் அமர்ந்திருக்கிறேன். தேவைப் பட்டால் என் இருக்கையைக்கூட உங்களுக்கு விட்டுக்கொடுக்க முடியும்’ என்றேன்.
‘உதவி இயக்குநர்கள், எழுத் தாளர்கள் தேவை: தகுதியுள்ள தலித், பகுஜன் மற்றும் ஆதிவாசி இளைஞர்கள் விண்ணப்பிக்கவும்’ என்ற என் ட்வீட்டுக்கும் நிறைய எதிர்வினைகள் வந்தன. வாய்ப்புகள் மறுக்கப் பட்டவர்களுக்கு அம்பேத்கர் என்ன செய்தார் என்பதை மறந்து விடுகிறோம். என் அடையாளத்தைச் சொல்லாமல் சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசுவது அபத்தம் என்று நினைத்துதான் அப்படிச் சொன்னேன். தமிழ் சினிமா இயக்குநர் பா.இரஞ்சித் தலித் இயக்குநராகத் தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவிதம் பிடித்திருந்தது. எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன் அவர். படங்களை மட்டும் இயக்காமல், நிறைய படங்களைத் தயாரித்துப் பல இளம் திறமை சாலிகளை உருவாக்குகிறார். அதேபோல, ‘பான்றி’, ‘சாய்ரத்’ படங்களை இயக்கிய மராத்திய இயக்குநர் நாகராஜ் மஞ்சுலே வையும் ரொம்பப் பிடிக்கும்!”
நன்றி : விகடன்