முன்னுரை
இந்தப் புத்தகம் பிராமணிய இறையியல் என்று அழைக்கப்படக் கூடிய கோட்பாடு எடுத்துரைக்கின்ற நம்பிக்கைகளைப் பற்றிய ஒரு விளக்கவுரையாகும். இது சாதாரண இந்து மக்களுக்காக எழுதப் பட்டுள்ள நூல். பிராமணர்கள் அவர்களை எத்தகைய புதை சேற்றில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியச் செய்வதற்காகவும், பகுத்தறிவு ரீதியான சிந்தனைப் பாதையில் அவர்களை இட்டுச் செல்வதற்காகவும் இது எழுதப்பட்டுள்ளது. பிராமணர்கள் ஒரு கருத்தைப் பரப்பி வந்திருக்கிறார்கள்: இந்து மதம் சனாதனமானது, அதாவது மாற்றம் இல்லாதது என்பதே அந்தக் கருத்து பல ஐரோப்பிய அறிஞர்களும் இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வகையில் இந்து நாகரிகம் மாற்றத்துக்கு உள்ளாகாமல் ஒரே நிலையில் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். இந்தக் கருத்து உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இந்து சமூகம் காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது மட்டுமின்றி, பல சமயங்களில் இந்த மாற்றம் அடிப்படைக் கூறுகளையே மாற்றுவதாக இருந்தது என்பதையும் இந்தப் புத்தகத்தில் எடுத்துக்காட்ட முயன்றிருக்கிறேன். இது தொடர்பாக இந்தப் புத்தகத்தில் ‘இம்சையிலிருந்து அகிம்சைக்கு’ என்ற புதிரையும், அகிம்சையிலிருந்து மீண்டும் இம்சைக்கு’ என்ற புதிரையும் ஒப்பிட்டுப் பார்க்கவும். இந்து மதம் சனாதனமானது அல்ல என்பதைச் சாதாரண மக்கள் உணரச் செய்ய விரும்புகிறேன்,
இந்தப் புத்தகத்தின் இரண்டாவது நோக்கம், பிராமணர்களின் தந்திரங்களைச் சாதாரண இந்து மக்களின் கவனத்துக்குக் கொண்டு வந்து, பிராமணர்கள் எப்படியெல்லாம் தங்களை ஏமாற்றியும் திசை திருப்பியும் வந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி அவர்களைச் சுயமாகச் சிந்திக்கத் தூண்டுவதாகும்.
பிராமணர்கள் எவ்வாறு மாறியும் முரண்பட்டும், வந்திருக்கிறார்கள் என்பதும் எடுத்துக் காட்டப்படும். ஒரு காலத்தில் அவர்கள் வேதங்களில் கூறப்படும் கடவுளர்களை வணங்கி வந்தார்கள். பின்பு ஒரு காலத்தில் அந்தக் கடவுளர்களைக் கைவிட்டு வேதங்களில் இல்லாத கடவுளர்களை வழிபடத் தொடங்கினார்கள். எங்கே இந்திரன், எங்கே வருணன், எங்கே பிரமா, எங்கே மித்ரன், வேதங்களில் கூறப்படும் இந்தக் கடவுளர்கள் எல்லோரும் எங்கே என்று அவர்களை ஒருவர் கேட்கலாம் அவர்களெல்லாம் மறைந்து போனார்கள். அது ஏன்? இந்திரனையும் வருணனையும்பிரமாவையும் வழிபடுவது லாபம் தருவதாக இல்லாமல் போனதே இதற்குக் காரணம். பிராமணர்கள் வேதக் கடவுளர்களைக் கைவிட்டது மட்டுமின்றி, சில இடங்களில் முஸ்லீம் பீர்களை வணங்குவோராகக் கூட மாறியிருக்கிறார்கள். இது தொடர்பாக, மிக வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்ற ஒரு உதாரணத்தைக் குறிப்பி….லாம். பம்பாய்க்கு அருகே கல்யாண்’ என்ற இடத்தில் ஒரு குன்றின் உச்சியில் பாவா மலங்க்க்ஷா என்ற பீரின் பிரபலமான தர்கா உள்ளது. அது மிகவும் புகழ்பெற்ற தர்கா. அங்கே ஆண்டு தோறும் உர்ஸ் விழா நடப்பதும், அப்போது காணிக்கைகள் செலுத்தப்படுவதும் வழக்கம். அந்த தர்காவில் புரோகிதராக இருப்பவர் ஒரு பிராமணர், அவர் முஸ்லிம் உடை அணிந்து, தர்காவுக்கு அருகே அமர்ந்து கொண்டு, அங்கே செலுத்தப்படும் காணிக்கைகளைப் பெற்றுக் கொள்கிறார். இதை அவர் பணத்துக்காகச் செய்கிறார். மதமோ, மதம் இல்லையோ, பிராமணருக்கு வேண்டியது தட்சணை தான், உண்மையில், பிராமணர்கள் மதத்தை ஒரு வியாபாரப் பொருளாக ஆக்கிவிட்டார்கள், யூதர்களை வெற்றிகொண்ட மன்னன் நெபுகாத்நெசார், அவர்கள் தங்கள் மதத்தைக் கைவிட்டுத் தனது மதத்தை ஏற்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தியபோது கூட யூதர்கள் தங்கள் கடவுளிடம் காட்டிய விசுவாசத்தைப் பிராமணர்களின் இந்த விசுவாசமின்மையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.’
“மன்னனாகிய நெபுகாத்நெசார் அறுபது முழ உயரமும் ஆறு முழ அகலமுமான பொற்சிலையொன்றைச் செய்வித்து, அதைப் பாபிலோன் மாகாணத்தின் துரா என்ற சமவெளியில் அமைத்தான்.
பின்பு மன்னன் நெபுகாத்நெசாா சிற்றரசர்களையும், ஆளுநர்களையும், தலைவர்களையும், நீதிபதிகளையும், ஆலோசனைக் குழுவினர்களையும், கருவூல அதிகாரிகளையும், அமைதிக்காவலர்களையும் , மாகாணங்களின் ஆட்சியாளர்களையும் தான் அமைத்த சிலையின் பிரதிட்டைக்கு வருமாறு கட்டளையிட்டான்.
அவ்வாறே சிற்றரசர்களும், ஆளுநர்களும், தலைவர்களும், நீதிபதிகளும், கருவூல அதிகாரிகளும், ஆலோசனைக் குழுவினர்களும், அமைதிக்காவலர்களும், மாகாணங்களின் ஆட்சியாளர்களும் நெபுகாத்நெசார் மன்னன் அமைத்த சிலையின் பிரதிட்டைக்கு வந்த சேர்ந்து, சிலையின் முன்னால் நின்றார்கள்.
அப்போது கட்டியக்காரன் உரத்த குரலில் கூறினான்; “இதனால் * மக்கள் அனைவருக்கும், எல்லா இனத்தினருக்கும், மொழியினருக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால்-எக்காளம், குழல், கின்னரம், சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லாவகை இசைக்கருவிகளும் ஒலிப்பதைக் கேட்டவுடன் நீங்கள் எல்லோரும் கீழே விழுந்து மன்னன் நெபுகாத்நெசார் அமைத்த பொற்சிலையை வணங்க வேண்டும்.”
“யாராவது அப்படி விழுந்து வணங்கவில்லையென்றால், அவன் அப்போதே எரிகிற தீச்சூளையின் நடுவில் போடப்படுவான்,” ஆகவே, எக்காளம், குழல், கின்னரம், சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லா வகை இசைக்கருவிகளும் ஒலிப்பதைக் கேட்டவுடனே எல்லா மக்களும், எல்லா இனத்தவரும், எல்லா மொழியினரும் கீழே விழுந்து மன்னன் நெபுகாத்நெசார் அமைத்த பொற்சிலையை வணங்கினார்கள்.
அப்போது கல்தேயரில் சிலர் அருகில் வந்து யூதர்கள் மேல் குற்றம் சாட்டினார்கள். மன்னன் நெபுகாத்நெசாரிடம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்; “மன்னரே, நீர் நீடு வாழ்க! மன்னரே, எக்காளம், குழல், கின்னரம், சாம்புகை, சுரமண்டலம், தம்புரு முதலிய எல்லாவகை இசைக்கருவிகளும் ஒலிக்கக் கேட்கும் ஒவ்வொரு மனிதனும் கீழே விழுந்து பொற்சிலையை வணங்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தீர்;
யாரேனும் கீழே விழுந்து வணங்கவில்லையென்றால் அவன் மேரிகிற தீச்சூளையில் போடப்படுவான் என்றும் நீர் கட்டளையிட்டீர்:
ஆனால், பாபிலோன் மாகாணத்தின் காரியங்களைக் கவனிப்பதற்காக நீர் நியமித்த ஷாத்ராக், மேஷாக், ஆபேத்-நேகோ என்னும் யூதர்கள் உமது கட்டளையை அவமதித்து 2.மது தெய்வங்களிடம் பற்றில்லாதவர்களாகவும், நீர் அமைத்த பொற்சிலையை வணங்காமலும் இருக்கிறார்கள்.”
அப்போது நெபுகாத்நெசார் கடும் சினம் கொண்டு ஷாத்ராக், மேஷாக், ஆபேத்-நேகோ ஆகியோரைக் கொண்டு வரும்படி ஆணையிட்டான். அவர்கள் மன்னன் முன் கொண்டு வரப்பட்டார்கள். – நெபுகாத்நெசார் அவர்களை நோக்கிக் கூறினான்: “ஷாத்ராக், மேஷாக், ஆபேத்-நேகோ, நீங்கள் மூவரும் என் தெய்வங்களிடம் பற்றில்லாதவர்களாகவும், நான் அமைத்த பொற்சிலையை வணங்காமலும் இருப்பது உண்மைதானா?
இப்போதாவது,எக்காளம்,குழல்,கில் ரம்,சாம்புகை,சுரமண்டலம், தம்புரு முதலான எல்லா வகை இசைக்கருவிகளும் ஒலிப்பதைக்கேட்கும்போது நீங்கள் கீழே விழுந்து, நான் அமைத்த போற்சிலையே வணங்கத் தயாராயிருந்தால் நல்லது; வணங்கவில்லையேன்றால் அப்போதே நீங்கள் எரிகிற திச்சூளையில் போடப்படுவர்கள் உங்களை என்னிடமிருந்து காப்பாற்றக் கூடிய கடவுள் யார் இருக்கிறார்?”
அதற்கு ஷாத்ராக், மேஷாக், ஆபேத் நேகோ ஆகியோர், “நெபுகாத்நெசாரே, இந்த விஷயத்தில் உமக்குப் பதில் கூற எங்களுக்கு அக்கறையில்லை”
ஏனென்றால் அரசே, நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள் எரிகின்ற தீச்சூளையிலிருந்தும், உம்முடைய கைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றி மீட்டு விடுவார்.
அப்படி ஆகாமற்போனாலும் உம்முடைய தெய்வங்களுக்கு நாங்கள் பணிசெய்யமாட்டோம். நீர் அமைத்த பொற்சிலையை வணங்க மாட்டோம் என்பதை நீர் தெரிந்துகொள்ளும்” என்றார்கள்.
அப்போது நெபுகாத்நெசாருக்குக் கடும் சினம் மூண்டது; அவன் கடுகடுப்பான முகத்தோடு ஷாத்ராக், மேஷாக், ஆபேத்- நேகோ ஆகியோரைப் பார்த்தான். தீச்சூளையைச் சாதாரணமாகச் சூடாக்குவதைவிட ஏழு மடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி அவன் கட்டளையிட்டான்.
பின்பு ஷாத்ராக், மேஷாக், ஆபேத்-நேகோ ஆகிய மூவரையும் கைகால்களைக் கட்டி, அந்த எரிகிற தீச்சூளையில் போடும்படித் தன் படைவீரர்களுள் மிகுந்த உடல்வலிமை உள்ளவர்களுக்குக் கட்டளையிட்டான்.
உடனே அந்த மனிதர்களை அவர்களுடைய மேலங்கிகளோடும் நிசார்களோடும், தொப்பிகளோடும், மற்ற ஆடைகளோடும் கட்டி எரிகின்ற தீச்சூளையின் நடுவில் போட்டார்கள்,
மன்னனின் ‘ கட்டளையை உடனடியாக நிறைவேற்ற வேண்டியிருந்ததாலும், தீச்சூளை மிக அதிக வெப்பமாய் இருந்ததாலும், ஷாத்ராக், பேஷாக், ஆபேத்-நேகோ ஆகியோரைத் தூக்கிச் சென்றவர்களைத் தீயின் சுவாலை கொன்றுவிட்டது.
ஷாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூவரும் கட்டப்பட்டவர்களாய் எரிகின்ற , தீச்சூளையின் நடுவில் விழுந்தார்கள்”.
இந்தியாவின் பிராமணர்கள் தங்கள் கடவுளர்களுக்கும் தங்கள் மத நம்பிக்கைக்கும் இத்தகைய உறுதியான விசுவாசத்தையும் பற்றுதலையும் காட்டமுடியுமா?
பக்கிள் (Buckle), நாகரிகத்தின் வரலாறு” என்னும் தமது நூலில் கூறுகிறார்:
“ஐயம் எழத் தொடங்காதவரை முன்னேற்றம் ஏற்படமுடியாது என்பது தெளிவு. நாகரிகத்தின் முன்னேற்றம் முற்றிலுமாக மனித அறிவு பெறுகின்ற வளங்களையும், அந்த வளங்கள் எந்த அளவுக்கு மக்களிடையே பரப்பப்படுகின்றன ‘என்பதையும் பொறுத்தது என்பதை நாம் ஏற்கெனவே தெளிவாகக் கண்டோம். ஆனால், தங்களது சொந்த அறிவைப் பற்றி முழுமையாகத் திருப்தியடைந்திருப்பவர்கள் அதை வளர்க்க ஒரு போதும் முயற்சி செய்யமாட்டார்கள். தங்களுடைய கருத்துக்கள் சரியானவை என்று முழுமையாக நம்புகின்றவர்கள் அவற்றின் அடிப்படையை ஆராய முயலமாட்டார்கள். தங்கள் தந்தையர்களிடமிருந்து பரம்பரையாகப் பெற்ற கருத்துக்களுக்கு முரணான கருத்துக்களை அவர்கள் வியப்புடனும் பல சமயங்களில் வெறுப்புடனும் பார்க்கிறார்கள்; அவர்கள் இத்தகைய மன நிலையில் இருக்கும் போது, தாங்கள் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுள்ள முடிவுகளில் குறுக்கிடுகின்ற எந்தப் புதிய உண்மைகளையும் வரவேற்க மாட்டார்கள்.
இந்தக் காரணத்தினால், புதிய அறிவுகளைப் பெறுவதன் மூலம்தான் சமூக முன்னேற்றப் பாதையில் ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்க முடியும் என்றாலும், அந்த அறிவைப் பெறுவதற்கு ஆராய்ந்து உண்மை காணும் ஆர்வம் முதலில் ஏற்படவேண்டும். இந்த ஆர்வம் வரவேண்டுமானால் ஐயம் எழுப்பும் மனப்பான்மை ஏற்படவேண்டும். ஏனென்றால், ஐயம் இல்லை என்றால் ஆய்வு நடக்காது: ஆய்வு இல்லையென்றால் அறிவு வளராது. ஏனென்றால், அறிவு என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மிடம் வந்து சேருகின்ற பொருள் அல்ல; தேடித் தேடித்தான் அதை அடைய முடியும். பெரும் முயற்சியும், அதன் காரணமாகப் பெரும் தியாகமும் செய்வதன் விளைவாகத் தான் அறிவு கிட்டுகிறது.
ஆனால் தாங்கள் ஏற்கெனவே முழுமையாகத் திருப்தி யடைந்திருக்கும் விஷயங்களுக்காக மனிதர்கள் அத்தகைய உழைப்பையும் தியாகத்தையும் மேற்கொள்வார்கள் என்று எண்ணுவது தவறாகும். இருளை உணராதவர்கள் ஒளியைத் தேட மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்திலேனும் நாம் நிச்சயமான கருத்தை அடைந்துவிட்டால் அதைப் பற்றி மேலும் ஆய்வு செய்யமாட்டோம்; ஏனென்றால் அது பயனற்றது மட்டுமின்றி ஒரு வேளை ஆபத்தானதாகவும் இருக்கலாம். ஐயம் குறுக்கிட்டால் தான் ஆய்வு தொடங்கும். எனவே ஐயப்படும் செயல் தான் எல்லா முன்னேற்றங்களையும் தோற்றுவிக்கிறது, அல்லது முன்னேற்றத்துக்கு முதல் படியாக அமைகிறது எனக் காண்கிறோம்.”
பிராமணர்கள் ஐயம் எழுவதற்கு இடமே வைக்கவில்லை; ஏனென்றால் அவர்கள் மிகவும் விஷமத்தனமான ஒரு கருத்தை மக்களிடையே பரப்பியிருக்கிறார்கள். வேதங்கள் பொய்யாதவை, தவறுக்கிடமற்றவை என்பதே இந்தக் கருத்து. இந்துக்களின் அறிவு வளர்ச்சி நின்று விட்டதென்றால், இந்து நாகரிகமும் பண்பாடும் தேக்கமடைந்து முடை நாற்றக் குட்டை ஆகிவிட்டது என்றால் இதுதான் காரணம். இந்தியா முன்னேற வேண்டுமானால் இந்தக் கருத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழித்து ஒழிக்கவேண்டும். வேதங்கள் உதவாக்கரையான படைப்புகள். அவற்றைப் புனிதமானவை என்றோ பொய்யாதவை என்றோ கூறுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. பிராமணர்கள் தான் அவற்றைப் புனிதம் என்றும் பொய்யாதவை என்றும் போற்றும்படிச் செய்து வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் பிற்காலத்திய இடைச் செருகலான புருஷ சூக்தத்தின் மூலம் வேதங்கள், பிராமணர்களைப் பூமியின் அதிபதிகளாக ஆக்கியுள்ளன. இனக்குழுவின் கடவுளர்களைத் துதித்து, அவர்கள். எதிரிகளை அழித்து, அவர்களின் உடைமைகளைக் கொள்ளையடித்து, தங்களை வழிபடுவோருக்குக் கொடுக்கும்படிக் கேட்டுக்கொள்ளும் வேண்டுகோள்களைத் தவிர வேறெதுவும் இல்லாத இந்த உதவாக்கரை நூல்களைப் புனிதமானவை என்றும் பொய்யாதவை என்றும் ஆக்கப்பட்டது ஏன் என்று கேட்பதற்கு யாருக்கும் தைரியம் இல்லாமற் போயிற்று. ஆனால் பிராமணர்கள் பரப்பியுள்ள இந்த விவேகமற்ற கருத்தின் பிடியில்1 இருந்து இந்து மனத்தை விடுவிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த விடுதலை ஏற்படாமல் இந்தியாவுக்கு வருங்காலம் இல்லை. இதில் உள்ள அபாயத்தை2 நன்றாக அறிந்தே இந்தப் பணியை மேற்கொண்டிருக்கிறேன். விளைவுகளுக்கு நான் அஞ்சவில்லை. மக்களைத்தட்டி எழுப்பி விடுவதில் நான் வெற்றி பெற்றால் பெரிதும் மகிழ்வேன்.
பி. ஆர். அம்பேத்கர்
இது ஏழு பக்கங்கள் கொண்ட ஒரு எழுத்துப் பிரதி. இதில் டாக்டர் அம்பேத்கர் தமது கையெழுத்தில் திருத்தங்கள் செய்திருக்கிறார், தட்டச்சுச் செய்யப்பட்ட பிரதியின் இறுதியில் டாக்டர் அம்பேத்கர் லைப்பட எழுதிய சில பத்திகள் சேர்க்கப்பட்டுள்ளன.
– பதிப்பாசிரியர்கள்,
* இதன் பின் வருவது “பழைய ஏற்பாடு” தானியேல் அதிகாரம் 3-இல் இருந்து தரப்படுகிறது
- ‘பிடி’ என்ற சொல் எங்களால் சேர்க்கப்பட்டது கையெழுத்துப் பிரதியில் இந்தச்சொல் படிப்பதற்குத் தெளிவாகத் தெரியவில்லை
- ‘அபாயத்தை’ என்ற சொல்லும் மூலப் பிரதியில் இல்லை.