புதிர் எண் 2
வேதங்களின் தோற்றம்: பிராமணிய விளக்கம் அல்லது சுற்றிவளைத்துப்பேசும் தன்மை
வேதங்கள் இந்து மதத்தின் மிகப் புனிதமான நூல் என்று கருதாத இந்து எவரும் இல்லை எனலாம். ஆயினும் எந்த ஒரு இந்துவிடமேனும் வேதங்கள் எவ்வாறு தோன்றின என்று கேட்டுப் பாருங்கள். இந்த எளிய கேள்விக்குத் தெளிவான திட்ட வட்டமான விடை கூறக்கூடியவரைக் காண்பது கடினமாயிருக்கும். இந்தக் கேள்வியை ஒரு வைதிக. பிராமணரிடம் கேட்டால் அவர், வேதங்கள் சனாதனமானவை என்பார். ஆனால் இது கேள்விக்கு விடை ஆகாது, முதலில் ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள் என்ன?
சனாதனம்‘ என்ற சொல்லுக்கு மிகச் சிறந்த விளக்கம் மனு ஸ்மிருதி அதிகாரம் 1. சுலோகம் 22-23க்கு குல்லுக பட்டர் எழுதியுள்ள உரையில் காணப்படுகிறது. குல்லுக பட்டர் ‘சனாதனம்‘ என்ற சொல்லுக்கு இவ்வாறு விளக்கமளிக்கிறார்.1
“சனாதனம்” என்ற சொல் ‘என்றென்றும் முன்பே இருந்துவருவது’ எனப் பொருள்படும் என்று அவர் கூறுகிறார். வேதங்களின் தோற்றம் மனிதச் செயலுக்கு அப்பாற்பட்டது என்ற கோட்பாட்டை மனுவும் வலியுறுத்துகிறார். முந்தைய கல்ப காலத்தில் ‘ (இருந்த) அதே வேதங்கள் பரமாத்மாவுடன் ஒன்றானவரும் எல்லாம் அளிப்பவருமான பிரமாவின் நினைவில் பாதுகாக்கப்பட்டன. அந்த வேதங்களைத்தான் அவர் இப்போதைய கல்ப காலத்தின் தொடக்கத்தில் அக்னி, வாயு, சூர்யன் ஆகியோரிடமிருந்து வெளிக்கொணர்ந்தார். வேதத்தை ஆதாரமாகக் கொண்ட இந்தக் கோட்பாட்டைப் பற்றிக் கேள்வி கேட்கக்கூடாது. வேதம் இவ்வாறு கூறுகிறது: ‘ரிக்வேதம் அக்னியிடமிருந்தும், யஜுர் வேதம் வாயுவிடமிருந்தும், சாமவேதம் சூரியனிடமிருந்தும் வருகின்றன.”
குல்லுக பட்டர் அளிக்கும் விளக்கத்தைப் புரிந்து கொள்வதற்குக் கல்பகாலம் என்பதன் பொருளை விளக்கவேண்டும்.
கல்பம் என்பது வேதகால பிராமணர்கள் பின்பற்றிய ஒரு காலக்கணக்கு. இந்த பிராமணியக் காலக் கணக்கின்படி காலம் இவ்வாறு பிரிக்கப்பட்டது: (1) வருஷம், (2) யுகம், (3) மகாயுகம், (4) மன்வந்தரம், (5) கல்பம். வருஷம என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். அது ஓர் ஆண்டைக் குறிக்கிறது,
ஒரு யுகம் என்று கூறப்படும் காலப்பிரிவின் அளவு என்ன என்பது பற்றி ஒரே மாதிரியான கருத்து இல்லை.
ஒரு மகாயுகம் என்பது நான்கு வெவ்வேறு யுகங்கள் சேர்ந்த காலம். (1) கிருதயுகம், (2) திரேதாயுகம், (3) துவாபரயுகம், (4) கலியுகம் என்பவை இந்த நான்கு யுகங்களாகும். இவை ஒன்றன் பின் ஒன்றாகச் சக்கரவட்டமாக வருகின்றன. முதல் யுகத்தின் காலம் முடிந்ததும் அதற்கு அடுத்த யுகம் தொடங்குகிறது. இவ்வாறே அடுத்தடுத்து வரிசைப்படித் தொடர்ந்து வருகின்றன. ஒரு சக்கரவட்டம் முடிந்ததும் ஒரு மகாயுகம் நிறைவடைந்து அடுத்த மகாயுகம் தொடங்குகிறது ஒவ்வொரு மகாயுகம் கிருத யுகத்துடன் தொடங்கிக் கலியுகத்துடன் முடிவடைகிறது. மகாயுகமும் கல்பமும் காலக் கணக்கில் எவ்வாறு தொடர்புகொண்டுள்ளன என்பதில் நிச்சயமின்மை எதுவும் இல்லை. 71 மகாயுகங்கள் கொண்டது ஒரு கல்பம். ஆனால் மகாயுகத்துக்கும் மன்வந்தரத்துக்கும் உள்ள காலக்கணக்குத் தொடர்பு பற்றி ஒரு நிச்சயமின்மை உள்ளது. ஒரு மன்வந்தரம் என்பது 71 மகாயுகங்களும் ‘மேலும் கொஞ்சமும்’ கொண்டது. மேலும் கொஞ்சம்’ என்று கூறப்படும் கால அளவு என்ன என்பதைப் பிராமணர்களால் உறுதியாகக் கூறமுடியவில்லை. எனவே மன்வந்தரத்துக்கும் கல்பத்துக்கும் -இடையிலான காலக் கணக்குத் தொடர்பு நிச்சயமற்றதாக உள்ளது.
ஆனால் நாம் இப்போது எடுத்துக் கொண்டுள்ள விஷயத்துக்கு இது அவ்வளவு முக்கியமான தல்ல. இப்போதைக்குக் கல்பம் என்பதை மட்டும் கவனித்தால் போதும்.
கல்பம் என்ற காலக்கணக்குக்கு அடிப்படையான கருத்து, பிரபஞ்சத்தின் தோற்றம், அதன் அழிவு ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. உலகம் தோற்றுவிக்கப்படுவது சிருஷ்டி.’ என்று கூறப்படுகிறது. பிரபஞ்சத்தின் அழிவு பிரளயம்’ என்று கூறப்படுகிறது. சிருஷ்டிக்கும் பிரளயத்துக்கும் இடைப்பட்ட காலம் ‘கல்பம்’ எனப்படுகிறது. இவ்வாறாக வேதங்களின் தோற்றம் பற்றிய கருத்து கல்பம் என்ற கருத்துடன் அதிகமாகத் தொடர்பு கொண்டுள்ளது.
இந்த முறையின் படி, ஒரு கல்பம் தொடங்கும்போது சிருஷ்டிதொடங்குவதாகக் கூறப்படுகிறது. சிருஷ்டி தொடங்கியதும் புதிதாக வேதங்களும் உண்டாக்கப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு புதிய கல்பத்திலும் புதிதாக வேதங்கள் உண்டாக்கப்பட்டாலும், பழைய வேதங்களைத் தான் பிரமா தனது நினைவிலிருந்து மீண்டும் தருகிறார் என்பது தான் குல்லுக பட்டர் சொல்ல விரும்பும் கருத்து. அதனால்தான் அவர் வேதங்கள் சனாதனமானவை அதாவது என்றென்றும் முன்பே இருந்து வருபவை என்று கூறுகிறார்.
குல்லுக பட்டர் சொல்வது, வேதங்கள் நினைவிலிருந்து மீண்டும் தரப்படுகின்றன என்பதாகும். ஆனால் உண்மையான கேள்வி அவற்றைச் செய்தவர் யார் என்பதே; யார் மீண்டும் தந்தார் என்பதல்ல. ஒவ்வொரு கல்ப காலத்தின் தொடக்கத்திலும் வேதங்கள் மீண்டும் தரப்படுகின்றன என்ற கொள்கையை ஏற்றாலும், முதல் கல்பம் தொடங்கியபோது வேதங்களைச் செய்தவர் யார் என்ற கேள்விக்கு விடை இல்லாமல் உள்ளது. வேதங்கள் ஒன்றுமில்லாத வெறுமையிலிருந்து வந்திருக்க முடியாது. அவற்றுக்கு இறுதி இல்லை என்றாலும் தொடக்கம் ஒன்று இருக்கவேண்டும். பிராமணர்கள் ஏன் இதை வெளிப்படையாகக் கூறவில்லை? ஏன் இந்தச் சுற்றிவளைக்கும் கூற்று?
“வேதங்களின் தோற்றம்” என்ற பொருள் பற்றி 72 பக்கங்கள் கிடைத்துள்ளன. இந்தப் பக்கங்கள் சரியாக வரிசைப் படுத்திவைக்கப்படவில்லை: ஆசிரியரோ அல்லது தட்டச்சுச் செய்தவரோ பக்கங்களுக்கு எண்களும் கொடுக்கவில்லை. நாங்கள் இவற்றை ஒருவாறு ஒழுங்குபடுத்த முயன்றிருக்கிறோம். உள்ளுறை அட்டவணையில் காணப்படும் வரிசைப்படி இவற்றைப் புதிர் எண் 2 முதல் 6 வரை பிரித்திருக்கிறோம். ஒவ்வொரு அதிகாரத்திலும் எடுத்துக் கொள்ளப்பட்ட பொருள் பற்றி இந்தப் பக்கங்களில் முழுமையாகக் கூறப்பட்டுள்ளதாகக் கருதுவது கடினம்.
மேலும், ‘வேதங்களின் புதிர் என்ற தலைப்பில் 61 பக்கங்கள் கொண்ட தனியான ஓர் அதிகாரமும் உள்ளது. இது பின் இணைப்பு-1 என இப்புத்தகத்தில் தரப்பட்டுள்ளது. பொருள்கள் அட்டவணையில் எண் 2 முதல் 6 வரையான தலைப்புகளில் உள்ள எல்லாப் பொருள்கள் பற்றியும் ஒருங்கிணைந்த முறையில் இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. பல பத்திகள் அந்தக் கட்டுரையில் திரும்பவும் வந்திருக்கலாம். இங்குத் தரப்பட்டுள்ள அதிகாரம் 2 முதல் 6 வரையுள்ள பகுதியின் மூலப்பிரதியில் ஆசிரியரின் கையெழுத்தில் திருத்தங்களும் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் பின் இணைப்புஎனத்தரப்பட்டுள்ள அதிகாரம் தட்டச்சில் இரண்டாம் பிரதியாகவும் திருத்தங்கள் எதுவும் இல்லாமலும் உள்ளது. நாங்கள் உள்ளுறை அட்டவணையின் வரிசை முறையைப் பின்பற்றி, திருத்தங்கள் செய்யப்பட்ட பிரதியை ஒழுங்குப்படுத்தியிருக்கிறோம்.
– பதிப்பாசிரியர்கள்.
1. முயிர். சமஸ்கிருத மூல நூல்கள், தொகுதி 3.ப.6