Home News Atrocities மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மறைந்தார்

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி மறைந்தார்

0
329

தமிழகத்தைச் சேர்ந்தவரும், 3 தசாப்தங்களுக்கும் மேலாக ஜார்கண்ட் மாநிலத்தில் காடுகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக ஆதிவாசி சமூகங்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து  குரல் கொடுத்து வந்த மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டு, உடல்நலக்குறைவின் காரணமாக மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்ட பழங்குடியின உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை ஸ்டேன் சுவாமி தனது 84 வயதில்  இன்று காலமானார்.அருட்தந்தை ஸ்டேன் சுவாமி கைது நடவடிக்கையின் மூலம், இந்தியாவிலேயே பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட அதிக வயதுடைய செயல்பாட்டாளர்களில் முதன்மையானவராக ஸ்டேன் சுவாமி கருதப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

கடந்த மே 28 அன்று, மும்பை உயர்நீதிமன்றம் ஸ்டான் ஸ்வாமியை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கவும், அதற்கான தொகையை அவரே செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த மே 30 அன்று கொரோனத் தொற்று உறுதிபடுத்தப் பட்டிருந்தது. இந்நிலையில், சில நாட்களாக அவர் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் வைக்கப்படிருந்தார்.

முன்னதாக பல முறை தனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் மனுவை தாக்கல் செய்த அவர், சில வாரங்களுக்கு முன்னர் காணொளிக்காட்சி வழியாக நடந்த ஜாமீன் மீதான விசாரணையின் போது, தனது உடல்நிலை குறித்து தெரிவித்த ஸ்டான் ஸ்வாமி, ”நான் எட்டு மாதங்களுக்கு முன்பு தலோஜா சிறையில் அடைக்கப்பட்டேன். அதிலிருந்து எனது உடல் நலம் மெல்ல குன்றி வருகிறது. என்னால் தற்போது எழுத முடியவில்லை, நடக்கவும் இயலவில்லை. மற்றவர்கள் எனக்கு ஊட்டாமல் என்னால் சாப்பிடவும் முடியவில்லை” “நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை விட இவ்வாறு இருந்து சிறையில் சாவதே மேல், அது என் உடல்நிலையை முன்னேற்றமடைய செய்யாது. நீதிமன்றம் எனது உடல்நிலையை கருத்தில் கொண்டு எனக்குப் பிணை வழங்கப்பட வேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே ஒரு வேண்டுகோள்” என தெரிவித்திருந்தார்.

ஸ்டேன் சுவாமியின் பிணை மனுவை மும்பை உயர் நீதிமன்றம் இன்று விசாரித்து வந்தது. அப்போது மும்பையின் ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்டேன் சுவாமி இன்று பிற்பகல் 1.30 மணியளவில் மரணம் அடைந்த தகவலை அவருக்கு சிகிச்சை வழங்கி வந்த மருத்துவர் உறுதிப்படுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

ஸ்டேன் சுவாமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் மிஹிர் தேசாய் கோரியுள்ளார்.

பீமா கோரேகான் வழக்கில் கைது

83 வயதாகும் ஸ்டேன் சுவாமி ஜார்க்கண்ட மாநிலத்தில் உள்ள பாகைய்சாவில் தனியாக வசித்து வந்தார். பீமா கோரேகான் வழக்கில் இவருக்கு தொடர்புள்ளது என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இவர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிரிவிலும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. பழங்குடியின மக்களின் உரிமைக்காக பணியாற்றி வந்த ஸ்டேன் ஸ்வாமியின் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கடுமையான சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மகாராஷ்டிராவின் பீமா கோரேகானில் வன்முறையை தூண்டியதாகக் கூறி ஸ்டேன் சுவாமி மற்றும் சோமா சென்,  சுதா பரத்வாஜ், சுதிர் தாவாலே, ரோனா வில்சன், மகேஷ் ரவுத், வெர்னான் கொன்சால்வேஸ், அருண் ஃபெரேரா, ஆனந்த டெல்தும்பே, கவுதம் நவ்லாகா ஆகிய எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்தனர்.  பேராபத்தில் சிக்கியிருக்கும் இந்த அவநம்பிக்கையான சூழலில், சிறைகளில் உள்ள செயல்பாட்டாளர்களை குறைந்தபட்சம் இடைக்கால பிணையிலாவது விடுவிக்குமாறு அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பல்வேறு செயல்பாட்டாளர்களும் தொடந்து வலியுறுத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அருட்தந்தை ஸ்டேன் கடந்த 9 மாதங்களாக விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஒரு நாளும் விசாரணைக்கு அவரை போலீஸ் அழைத்ததில்லை எனவும் தெரிகிறது. வயது முதிர்ந்த அவரைவிடுதலை செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் எழுந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் குரலை ஏற்க மோடிஅரசும், நீதிமன்றமும் மறுத்தது பெரும்அநீதி!

 

கடந்த 2018 ஆம் ஆண்டு கட்டட வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டியதாக ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 14 நாட்கள் சிறையில் வைக்க உத்தரவிட்ட நிலையில் ஒரே வாரத்தில் இவரது ஜாமீன் மனுக்கள் மீது வேகமாக விசாரணை நடத்தப்பட்டது. அர்னாப் ஜாமீனும் பெற்றார். அர்னாப் போன்ற நபர்களுக்கு ஒரு வாரத்தில் பிணை கொடுக்கும் அரசுகளும் நீதிமன்றங்களும் நீதிக்கான போராடும் இவர்களை கண்டுகொள்ளாததிருப்பது ஏன் என இச்செய்தியை படிப்பவர்கள் அறியக்கூடும்.

 

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பீமா கோராகானை வைத்துக் கொண்டு தலித்துகளை ஒடுக்குவதில் குறியாக இருப்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
தலித்துகள், இசுலாமியர்கள், கிறித்தவர்கள் என குறிவைத்து இந்துத்துவ பாஜக அரசு வேட்டையாடுவதாகவும் சமூக செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்தவர் ஸ்டேன் சுவாமி

1937ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி தமிழகத்தின் திருச்சியில் பிறந்தார் ஸ்டேன் சுவாமி.1970களில் இறையியல் படிப்பை முடித்த அவர் ஃபிலிப்பைன்ஸில் சமூகவியல் மேல் படிப்பை முடித்தார். அங்கு ஆளும் நிர்வாகத்துக்கு எதிராக நடந்த பல்வேறு போராட்டங்களில் அவர் பங்கெடுத்தார். அதன் பிந்தைய ஆண்டுகளில் பிரேசிலிய கத்தோலிக்க பேராயர் ஹெல்டர் காமராவின் வறியநிலை மக்களுக்கான சேவையால் ஈர்க்கப்பட்ட அவர் தாயகம் திரும்பியதும் பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்தார்.

1975 முதல் 1986ஆம் ஆண்டுவரை அவர் பெங்களூரில் உள்ள இந்திய சமூகவியல் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். பழங்குடியின ஆலோசனை கவுன்சிலை அமைக்க அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையில் உள்ள அம்சங்களை செயல்படுத்தாதது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

இதன் பிறகு, பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் ஜார்கண்ட் மாநிலத்தில் தொலைதூர காடுகளில் வாழும் மக்களின் நில உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். அங்கேயே இறை பணியையும் அவர் மேற்கொண்டார்.

உள்ளூர் மக்களால் அப்பா என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்த அவர், பழங்குடியின உரிமைகளுக்கு இடைவிடாமல் குரல் கொடுத்து வந்ததால் பழங்குடியின மக்களின் ஆதரவைப் பெற்றார். அவர்களிடையே செல்வாக்கு மிக்க நபராகவும் அறியப்பட்டார்.

Load More Related Articles
Load More By sridhar
Load More In Atrocities
Comments are closed.