இரண்டு ஆண்டுகள் இருக்கும், இணைய திமுக நண்பர்கள் சிலர் அமேசான் கிண்டில் தளத்தில் தங்களது புத்தகங்களை அறிமுகம் படுத்தும் நிகழ்வு ஒன்றை அன்பகத்தில் முன்னெடுத்தனர். அதில் பேசிய ஒவ்வொருவரும் தங்கள் புத்தகம் குறித்தும் அதற்கு உந்து சக்தியாக இருந்த திராவிட இயக்கம் குறித்தும் பல விஷயங்களை விரிவாக பகிர்ந்து கொண்டனர். அதில் ஒரே ஒருவர் மட்டும் ஒரே ஒரு செய்தியை மட்டும் இரத்தின சுருக்கமாக சொல்லி உருக்கமாய் கலைஞரை நினைவுக்கூர்ந்தார். அந்த ஒருவர் மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் எம்.எம்.அப்துல்லா அவர்கள். பெரியதாய் வாக்கு வங்கி ஏதும் இல்லாத சொற்ப எண்ணிக்கையிலே வாழும் ஒடுக்கப்பட்டோர்களிலும் ஒடுக்கப்பட்டோரான “புதிரை வண்ணார்” சமூகத்தினரின் நலன் குறித்தும் சிந்தித்து அவர்களுக்கான நலவாரியத்தை அமைத்தவர்தாம் தலைவர் கலைஞர் என்று உருக்கமாய் பேசியதுதான் அந்த ஒரே ஒரு செய்தி.
ஆம், உண்மை. கடைக்கோடியில் இருக்கும் ஒற்றை தமிழனின் நிலையும் உயர சிந்திக்கும் உன்னத தலைவர்தாம் கலைஞர். இந்த விஷயத்தில் நாம் கலைஞரோடு இணைத்து நினைத்து பார்க்க வேண்டிய இன்னொரு நபர் விசிக. பொது செயலாளர், முனைவர் து.ரவிக்குமார் அவர்கள். ஆம், 2006-2011 கலைஞரின் ஆட்சி காலத்தில் மட்டும் விவசாயத் தொழிலாளர்கள் நலவாரியம், பனைமர தொழிலாளர்கள் நலவாரியம், ஓவியர்கள் நலவாரியம், மண்பாண்ட தொழிலாளர்கள் நலவாரியம் என 35 நலவாரியங்கள் உருவாக்கப்பட்டு, கிட்ட தட்ட இரண்டேகால் கோடி பயனாளிகளுக்கு சுமார் ஆயிரங்கோடி ருபாய்க்கும் மேலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அவற்றுள் நரிக்குறவர் நலவாரியம், அரவாணிகள் நலவாரியம், வீட்டுப்பணியாளர்கள் நலவாரியம், புதிரை வண்ணார் நலவாரியம் உள்ளிட்ட ஆறு நலவாரியங்கள் ரவிக்குமாரின் கோரிக்கை அடிப்படையிலும், செயற்பாட்டு அடிப்படையிலும் உருவாக்கப்பட்டவை. 2008 ஆம் ஆண்டிலேயே ‘புதிரை வண்ணார்’ தவிர தான் கோரிய மற்ற நலவாரியங்கள் அமைக்கப்பட்டுவிட்ட உத்வேகத்தில் 2009ஆம் ஆண்டில் “புதிரை வண்ணார் நலவாரியம்” அமைக்கப்பட வேண்டும் என்பதை ஒரு கோரிக்கை மனுவாக கலைஞரிடம் வழங்குகிறார் ரவிக்குமார்.
கலைஞர் அதற்கு, “இதைப்பற்றி என் நண்பர் துரைராஜ் சொல்ல கேட்டிருக்கிறேன் அதன் பிறகு நீங்கள் தான் இதை கோரிக்கையாக வைத்திருக்கிறீர்கள் கட்டாயம் செய்து தருகிறேன்” என்று உறுதியளித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர்ப்பார்த்திருந்த ரவிக்குமாருக்கு ஏமாற்றமே கிட்டியது. அந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வரவில்லை. ஆனால் பட்ஜெட் குறித்த பொது விவாதத்தில் “புதிரை வண்ணார் நலவாரியம்” குறித்த தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி முன்வைக்கிறார். அந்த நேரத்தில் கலைஞர் முதுகு தண்டுவட பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை முடித்து மருத்துவமனையில் ஓய்விலிருந்தார். அவரை நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு சென்ற ரவிக்குமாரிடம் கலைஞர், “நீங்கள் சட்டமன்றத்தில் பேசியதை இங்கிருந்தே ஸ்பீக்கரில் கேட்டேன். ஏதோ காரணங்களுக்காக இந்த அறிவிப்பு இம்முறை விடுப்பட்டுவிட்டது மானியக்கோரிக்கை சமயத்தில் நிறைவேற்றி தருகிறேன்” என்று உறுதியளிக்கிறார்.
அதன் பின்பு, கலைஞர் உடல்நலம் தேறி அருந்ததியர் உள் இடஒதுக்கீடு சட்ட மசோதாவை தாக்கல் செய்யவிருந்த நேரத்தில் மீண்டும் உடல்நலம் பாதிப்படைய, அந்த மசோதா உரையை சட்டமன்றத்தில் திரு.ஸ்டாலின் அவர்கள் வாசிக்கிறார். அப்போதும் அந்த மசோதாவை வரவேற்று பேசும் ரவிக்குமார் மீண்டும் “புதிரை வண்ணார் நலவாரியம்” அமைக்கவேண்டும் என்பதயும், அதற்கு முதல்வர் உறுதியளித்தையும் சுட்டிக்காட்டி அவருக்கு நன்றி தெரிவித்து பேசுகிறார்.
தொடர்ந்து 2009ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின் போது மீண்டும் ரவிக்குமார் இந்த புதிரை வண்ணார் நலவாரியம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசுகிறார். 1981சென்சஸ் படி அம்மக்களின் மக்கள் தொகையாக சுமார் 29000 பேர் இருக்கின்றனர். அவர்கள் எவ்வளவு பேர் இருந்தாலும் அவர்களை நாம் கைத்தூக்கி விடவேண்டுமென்று பேசி அவர்களுக்கென்று தனி நலவாரியம் அமைக்கவேண்டும் என வலியுறுத்தி பேசுகிறார். அந்த விவாதத்தின் முடிவில் அமைச்சர் தமிழரசி அவர்கள் புதிரை வண்ணாருக்கென்று தனி நலவாரியம் அமைக்கப்படும் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பினை வெளியிடுகிறார். அப்போது எழுந்து நின்று கலைஞரை வணங்கி நன்றி தெரிவிக்கிறார் ரவிக்குமார். கலைஞரும் அதற்கு கையை உயர்த்தி தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டுகிறார். அந்த “புதிரை வண்ணார் நலவாரியத்தில்” அலுவல் சாரா உறுப்பினராக ரவிக்குமாரையும் நியமிக்கிறார்.
ஆக வாக்கு வங்கியல்ல, அந்த மக்களின் மொத்த மக்கள் தொகையே ஐம்பதாயிரத்தை தாண்டாது என்றபோதும், தான் தேர்ந்தெடுக்கப்பட்டது தலித் மக்களின் நலன் குறித்து, வளர்ச்சிக்குறித்து உருவாக்கப்பட்ட “தனித்தொகுதி”யில் என்பதாலும், அதற்காகவே இயக்கம் கண்டோம் என்பதாலும், இந்த நோக்கங்களுக்கு நியாயம் செய்யவேண்டி, தொடர்ந்து சட்டமன்றதிற்கு உள்ளும் வெளியிலும் இந்த விவகாரத்தை சுமார் ஒரு வருடங்களாக பேசியும் வலியுறுத்தியும் இறுதியில் புதிரை வண்ணார் நலவாரியம் அமைக்க செய்தது ரவிக்குமார் எனும் விசிக தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினரே. இதுமாதிரியான வரலாறு சிறப்பு மிக்க பட்டியல் சமுகம் நலன் சார்ந்த முன்னெடுப்பை தொடர்ந்து வலியுறுத்தி வெற்றிக்கண்ட திமுக, அதிமுக உள்ளிட்ட பிறக்கட்சி “தனித்தொகுதி” சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த செய்திகள் ஏதேனும் இருக்கிறதா?
இன்று, இரண்டு மாநகராட்சி மேயர் பதவிகள் பட்டியல் சமூக பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து அவற்றுள் ஒன்றிலாவது விசிக அமர்ந்தால்தான் இந்த அறிவிப்பின் நோக்கம் முழுமை பெரும் என்று நான் சொன்னதை அடுத்து திமுகவில் பட்டியல் சமூகத்தினர் இல்லையா? ஏன் விசிக? என்று எத்தனை எள்ளல்கள்? எதிர்ப்புகள்? நான் எங்கேயாவது என் பதிவில் திமுக இதனை விசிகவிற்கு ஒதுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கேனா? இல்லை திமுகவில் போட்டியிட பட்டியல் சமூக பெண்களே இல்லையென்று சொல்லியிருக்கேனா? அப்படியிருக்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல சில இணைய திமுக நண்பர்கள் தானாகவே வந்து தங்கள் விசிக எதிர்ப்பு மனநிலையை வெளிப்படுத்தி சென்றிருக்கிறார்கள். நான் திமுக, அதிமுக, பிஜேபி, காங்கிரஸ் என எந்த கட்சியையும் குறிப்பிட்டும் சொல்லியிருக்கவில்லை. ஏன் புதிய தமிழகம், பகுஜன் சமாஜ், புரட்சி பாரதத்தில் எல்லாம் பெண்கள் இல்லையா? அவர்களும் தான் இந்த களத்தில் குதிக்கலாம். என் பதிவு என்ன சொல்கிறது எனில் திமுக ,அதிமுக, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட எந்த கட்சியிலிருக்கும் ஓபிசி வகுப்பை சார்ந்தவர்களுக்கு “தனித்தொகுதி” என்பது பத்தோடு ஒன்னு பதினொன்னு என்பது போல ஜஸ்ட் ஒரு எண்ணிக்கையே. அதுவே தலித்தாகிய எனக்கு “தனித்தொகுதி” என்பது ஒரு ஆயுதம். பார்ப்பனிய, சாதி இந்துக்களின் சமுகத்திலிருந்து தலித்கள் தங்களை காத்துக்கொள்ள, தங்களின் அரசியல் அதிகாரத்தை தாங்களே உறுதிசெய்துக்கொள்ள அம்பேத்கர் முன்மொழிந்த, பெரியார் வழிமொழிந்த “இரட்டைவாக்குரிமை” எனும் போர்வாள் காந்தியத்தின் சதியால் “தனித்தொகுதி” எனும் சிறு கத்தியாக சுருங்கிப்போனாலும் அதன் முனை மழுங்காமல் சானைப்பிடித்து அதன்மூலம் பழம் அறுத்து தருவதும், பாதுக்காப்பு தருவதும் விசிக மட்டுமே.
சமகாலத்தில் “தனித்தொகுதி” உருவாக்கப்பட்டதின் சரியான நோக்கங்களை அதற்கான நேர்மையுடன் கடைப்பிடித்து, களமாடி, செயற்படுத்தி அதற்கான நியாயத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சிகளை காட்டிலும் மிகையாக வெளிப்படுத்தியது, வெளிப்படுத்துவது விசிக மட்டுமே. இதற்கு நான் மேலே சொல்லியிருக்கும் புதிரை வண்ணார் நலவாரியம் என்பது ஒரு உதாரணம்தான். தனித்தொகுதியில் பட்டியல் சமூகத்தினர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர் என்றாலும் அவரை பட்டியல் சமூகத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த ‘ஓபிசி’ வகுப்பினரும் இணைந்தே தேர்ந்தடுப்பதால் அந்த தனித்தொகுதி உறுப்பினரின் சிந்தனையும், பணிகளும் அனைத்து சமூக மக்களின் நலம் குறித்தும் இருக்க வேண்டும். இந்தவகையில் சமூக, பண்பாட்டு அரசியல் தளங்களில் பட்டியல் சமூகத்தினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இஸ்லாமிய மக்கள், ஈழ அகதிகள் என அனைத்துத்தரப்பு எளிய மக்களுக்காக குரல் கொடுப்பதிலும் செயற்படுவதிலும் விசிக தனித்தொகுதி உறுப்பினர்கள் தனிமுத்திரை பதித்திருக்கின்றனர். இதை மறுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சி தனித்தொகுதி பட்டியல் சமூகத்தினர் உறுப்பினர்கள் விசிக உறுப்பனர்களை காட்டிலும் தனது பதவிக்கு அதிகமாக நியாயம் செய்திருக்கிறார்கள் என்பதை தரவுகளுடன் யாரேனும் தந்தீர்களேனால் நான் என் பதிவை திரும்பப்பெறுவதில் தயக்கமே இல்லை.
2006-2011 ஆட்சி காலங்களில் விசிக சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் சட்டமன்றத்தில் தனது கோரிக்கைகள், செயற்பாடுகள், தொடர் அழுத்தங்களின் மூலமாக பட்டியல் சமூகத்தினருக்காக பல முக்கிய பணிகளை செய்திருக்கிறார். அதனை இங்கு நான் சுருக்கமாக பட்டியலிடுகிறேன்.
• பட்டியல் சமூகத்தை சார்ந்த “புதிரை வண்ணார்” மக்களின் கல்வி, சமூக வளர்ச்சிக்காக தனி நலவாரியம் கோரி, தொடர்ந்து வலியுறுத்தி அதனை அமைக்க செய்திருக்கிறார்.
• பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தலித் மக்களுக்கு வழங்கிய பஞ்சமி நிலங்கள் தற்போது ஆதிக்க வகுப்பினர் வசம் இருப்பதை ஆராய்ந்து அதனை திரும்ப பெற்று தலித் மக்களுக்கே வழங்க வேண்டும் என்று தனது கன்னி உரையிலே பேசி, தொடர்ந்து வலியுறுத்தி பஞ்சமி நிலங்களை மீட்க தனி ஆணையம் அமைய பெரும் பங்கு வகித்திருக்கிறார்.
• 60% கிராமபுற வீடில்லாத தலித் மக்களுக்கான, 40% கிராமபுற வீடில்லாத ‘ஓபிசி’ மக்களுக்கான கான்க்ரிட் கூரை வீடுகள் கட்டித்தரும் திட்டமான “இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின்” கீழ் பத்து ஆண்டுகளுக்குன் முன் கட்டப்பட்டு பழுது அடைந்திருக்கும் வீடுகளையும் குடிசை வீடுகளாக கணக்கில் கொண்டு உதவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதன்படி அப்படி பழுந்தடைந்த வீடுகளை சீரமைக்க 15000 ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட காராணமாக இருந்தார்.
• சுமார் 85 கோடி ருபாய் வரையிலான தலித் மக்களின் தாட்கோ கடன்களை தள்ளுபடி செய்ய பெரும் பங்காற்றினார்.
• சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் பட்டியல் சமூக மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகையின் அடிப்படையில் முறையாக நிதி ஒதுக்க வலியுறுத்தி அதனை நிறைவேற்ற செய்தார். இதன்படி ஆண்டுக்கு சுமார் நூறு கோடி ருபாய் மதிப்பிலான திட்டங்கள் அம்மக்களுக்கு கிடைக்க காரணாமாக இருந்தார்.
• உள்ளாட்சி தேர்தல்களில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தலித் மக்களுக்கான தொகுதிகளை உயர்த்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்து ஒரு நகராட்சி உட்பட 1300 க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்க வழிவகை செய்தார்.
• பட்டியல் சமூக, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தொழில்கல்வி பயிலும் போது அதற்கான கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும் என்று வலியுறுத்தியதின் அடிப்படையில் முதல் தலைமுறை பட்டதாரிகளின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் திட்டம் அமைய வழிவகுத்தார்.
• ஒவ்வொரு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போதும் தாழ்த்தப்பட்ட மக்களின் சதவீத அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யும் “சிறப்புக்கூறுகள் திட்டத்தை” நடைமுறைப்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொண்டு அதன்படி 2000 கோடி ருபாய்க்கு மேல் தலித் மக்களின் திட்டங்களுக்கு ஒதுக்கிட செய்தார்.
தனித்தொகுதிகள் உருவாக்கத்தின் பிரதான நோக்கமே மேற்குறிப்பிட்டிருக்கும் பணிகளை போன்று பட்டியல் சமூக மக்களின் நலன் சார்ந்த திட்டங்கள், செயற்பாடுகள் அமைய வேண்டுமென்பதுதான். விசிக உறுப்பினர் செய்த இந்த பணிகளை போல திமுக, அதிமுக உள்ளிட்ட வேறு கட்சி தனித்தொகுதி உறுப்பினர்கள் அந்த சமகாலத்திலோ அல்லது அதற்கு பின்பான காலங்களிலோ செய்த தரவுகள் ஏதேனும் உள்ளனவா?
தனித்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் தனக்கு வாக்களித்து தேர்ந்தெடுத்தது தலித் அல்லாத பிறசமூகத்தினரும் சேர்ந்துதான் என்பதால் அவர்களுக்காகவும் சிந்திப்பதும், செயல்படுவதும் ஒரு தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் கடமையே. அந்த வகையில் விசிக உறுப்பினர் ரவிக்குமார் முன்னெடுத்த பொது சமூக பணிகளை இங்கே பட்டியலிடுகிறேன்.
• குடிசை வீடுகளை காரை வீடுகளாக மாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைத்து, தொடர்ந்து அழுத்தம் கொடுத்து கலைஞர் வீடுவழங்கும் திட்டம் அமைய முக்கிய காரணகர்த்தாக இருந்தார்.
• நரிக்குறவர்களுக்கென்று தனி நலவாரியம் அமைக்கச்செய்தார்.
• அரவாணிகளுக்கென்று தனி நலவாரியம் அமைக்கச்செய்தார்.
• நாட்டுப்புறக் கலைஞர்களுக்கென்று தனி நலவாரியம் அமைக்க செய்தார்.
• அரசு பதிவு பெற்ற பாரம்பரிய மருத்துவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க செய்தார்.
• வீட்டுப்பணியாளர்களுக்கென்று தனி நலவாரியம் அமைக்கச்செய்தார்.
• இசுலாமிய மக்கள் அதிக அளவில் ஈடுபட்டிருக்கும் எலும்புத்தூளால் உரம் தயாரிக்கும் தொழிலுக்கு வாட் எனப்படும் சேவை வரியிலிருந்து முழுமுற்றாக வரிவிலக்குப் பெற்றுத்தந்தார்.
• ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு கோரிக்கை வைத்து நிறைவேற்றச்செய்தார்.
• ஈழத்தமிழ் அகதிகளுக்கான பணக்கொடையை இரண்டு மடங்காக உயர்த்த காரமாயிருந்தார்.
• நாட்டுப்படகு மீனவர்களுக்கு மாதம் 300 லிட்டர் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க வழி வகை செய்தார்.
• உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (Tank Operators) பணியாளர்களுக்கு ஊதியம் 1500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தவழிவகை செய்தார்.
• அரசு தொழிற் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உருவாக செய்ததில் பங்குவகித்தார்.
• மின்னணுக் கழிவு கொள்கையை உருவாக்க வேண்டுமென்று வலியுறுத்தி, அதற்கான கொள்கையை உருவாக்க வழி வகை செய்தார்.
• புவி வெப்பமயமாதல் ஆபத்தைக் குறைக்கவும், மின்சார பற்றாக்குறையைப் போக்கவும், அரசு அலுவலகங்களில்; குண்டு பல்புகளைப் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி, தற்போது அரசு அலுவலகங்களில் CFL குழல் விளக்குகள் பயன்படுத்த வழி செய்தார்.
• பயிர் பாதுகாப்பில் கர்நாடக, ஆந்திர மாநிலங்களை ஒப்பிட்டுப் பயிர் பாதுகாப்புத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கச் செய்தது. அதுமட்டுமின்றி அந்த பயிர் பாதுகாப்புத் திட்டத்தில் வட்டம் பிளாக் என்பது அடிப்படை அலகாக வைக்கப்பட்டிருந்தது. அதை மாற்றி கிராமம் என்பதை ஒரே அலகாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி அதையும் இன்று நடைமுறைப்படுத்த வழி செய்தார்.
• இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதன் காரணமாக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் ஆண்டு தோறும் 40 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டிருப்பத்தில் பங்குவகித்திருக்கிறார்.
• நூலகங்களுக்கு வாங்கும் நூல்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கோரி அதற்கான வழிவகைகளை செய்திருக்கிறார்.
• சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் வழிபட உரிமை கோரிய ஆறுமுக சாமி அவர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித் தொகை பெற்றுத் தந்திருக்கிறார்.
மேற்குறிப்பிட்ட பணிகளில் மூன்றினை மட்டும் சற்று விரிவாக அறிவதன் மூலம் ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி முதல்வரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகும் வகையில் சரியான தரவுகளுடனும், ஆற்றலுடனும் செயற்படவேண்டு என்பதை தெரிந்துகொள்ளலாம். அவற்றுள் முதலாவதாக கலைஞர் வீடு வழங்கும் திட்டம். முதன்முதலில் 2007 ஆம் ஆண்டு கலைஞர் தலைமையில் விசிக நடத்திய மண்ணியல் மாநாட்டில் தமிழத்திலுள்ள குடிசை வீடுகளை காரை வீடுகளாக்கவேண்டும் என்ற கோரிக்கை தீர்மானமாக முன்மொழியப்பட்டது. இதனை அப்போது விசிக சட்டமன்ற உறுப்பினராக ரவிக்குமார் பணியாற்றிய போது ’குடிசை இல்லாத தமிழ் நாட்டை உருவாக்க வேண்டும்’ என்ற ஒரு இலக்கை உருவாக்கிக்கொண்டு தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வந்தார். அதுதொடர்பாகத் தரவுகளை சேகரிக்கும் போது அவருக்கு ஒரு அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்தது. இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் குடிசை வீடுகள் இருப்பது தமிழ்நாட்டில் என்பதுதான் அந்த அதிர்ச்சிகரமான செய்தி. அதிலும் பேரதிர்ச்சி என்னவென்றால் விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்கள் தான் தமிழ்நாட்டிலேயே குடிசை வீடுகள் அதிகமாக இருக்கும் மாவட்டங்கள் என தெரியவருகிறது. இதை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் காரணமாக அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்த நேரத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்காக இந்த திட்டத்தை அதில் சேர்த்துக் கொள்ளுமாறு அன்றைய மாநில திட்டக் கமிஷன் தலைவராக இருந்த தற்போதைய ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவருமான எழிலன் அவர்களின் தந்தையான பேராசிரியர் நாகநாதன் அவர்களிடம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி இது தொடர்பாக தொடர்ந்து ரவிக்குமார் வலியுறுத்தி வருகிறார் அவரிடம் அதற்கான தரவுகளைக் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார். அதனடிப்படையில் பேராசிரியர் அவர்கள் ரவிக்குமாரை தொலைபேசியில் அழைத்து இதுதொடர்பான தரவுகளோடு நேரில் வாருங்கள் என்று கூற அவற்றை எல்லாம் எடுத்துச் சென்று அவரோடு விவாதித்து இந்த திட்டம் அந்தத் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்ற காரணத்தினால் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் முடிவுசெய்தார். தமிழ்நாடு முழுவதும் இருக்கிற குடிசை வீடுகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. 21 லட்சம் குடிசை வீடுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அவற்றை படிப்படியாக கான்கிரீட் வீடுகளாக மாற்றுவது என்ற மாபெரும் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு அதற்கு கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என்று பெயரிடப்பட்டது. 2010 மற்றும் 2011 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது விசிகவின் மைய நீரோட்ட அரசியலின் மிகமுக்கியமான முத்திரையாக அரசியல் ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படுகிறது.
அடுத்து ஒரு பத்திரிக்கை செய்தியை ரவிக்குமார் பார்த்து அதனை முதல்வர் கலைஞருக்கு கடத்தியும்; அதேபோல ரவிக்குமாரின் ஒரு பத்திரிகை செய்தியை கலைஞர் பார்த்து அதனை திரும்ப ரவிக்குமாருக்கு கடத்தியும் செய்த இரண்டு முக்கிய பணிகளை பார்ப்போம்.
பார்ப்பனிய தீட்ச்சிதர்களின் கடும் அடக்குமுறைகளை, தாக்குதலை எதிர்த்து சிதம்பரம் நடராசர் கோவலில் தேவாரம் பாடி தமிழை ஒலிக்க செய்து வரலாற்றில் இடம்பிடித்தவர் தாம் சிவனடியார் ஆறுமுகசாமிகள். அந்த ஆறுமுகசாமிகள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாழ்வதாக தினகரன் பத்திரிக்கையில் செய்தியாக பார்த்த ரவிக்குமார் அதனை கலைஞருக்கு கடத்தி அவருக்கு மாதந்தோறும் உதவித்தொகையும், மருத்துவ படியும் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறார். கலைஞர் அதனை உடனடியாக ஏற்று ஆறுமுகசாமிக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூபாய் மூவாயிரமும், மருத்துவப்படியாக ரூபாய் பதினைந்தும் வழங்க ஆணை பிறப்பித்தார். அந்த ஆணையை ரவிக்குமார் முன்னிலையிலே வழங்க செய்து ரவிக்குமாருக்கு பெருமை சேர்த்திருந்தார் கலைஞர். அதோடு விடவில்லை ரவிக்குமார் ஆறுமுகசாமிகள் மறைந்த போது, ஆறுமுகசாமி “ஒரு சமூகநீதி குறியீடு”. இதனை வளரும் தலைமுறைகள் தெரிந்துகொள்ளும் வகையில் சிதம்பரத்தில் பொருத்தமான இடத்தில் அவருக்கு ஒரு சிலை வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிற்கு வைக்கிறார். இங்கே நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய செய்தி கலைஞர், ரவிக்குமார், ஆறுமுகசாமி மூவருமே சமூகத்தின் கடைநிலையில் இருக்கும் சமூகத்தை சார்ந்தவர்கள், ஆனால் ஒரே சமூகத்தை சார்ந்தவர்கள் அல்ல. எனினும் இவர்கள் மூவரையும் இணைப்பது எது? அதுதான் சமூகநீதி.
மேலே ஒருபத்திரிக்கை செய்தியை ரவிக்குமார் எப்படி கையாண்டு அதைதன் சமூகநீதிக்கான கடமையாக மாற்றினார் என்பதை அறிந்தோம். அதேபோல ரவிக்குமாரின் ஒரு பத்திரிக்கை செய்தியை கலைஞர் எப்படி கையாண்டு அதை தன் சமூகநீதிக்கான கடமையாக மாற்றினார் என்பதை பார்ப்போம். அது ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிது. அப்போது ஆனந்த விகடனில் அவர் ஈழ அகதிகள் குறித்துக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதைப் படித்துவிட்டுத் கலைஞர் அவர்கள் விடிகாலையிலேயே ரவிக்குமாரை தொலைபேசியில் அழைத்து, தமிழ்நாட்டிலுள்ள அகதி முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டு, அறிக்கையொன்றைத் தரும்படி அவருக்கு ஆணையிட்டிருந்தார். ரவிக்குமாரும் பல்வேறு முகாம்களைப் பார்வையிட்டு 04.07.2006 அன்று முதல்வரிடம் ஈழத் தமிழ் அகதிகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்தார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கலைஞர், உடனடியாக சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். தமிழ் அகதிகளுக்கு அது வரை மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த பணக்கொடை மிகமிகக் குறைவாக உள்ளது என்பதை தனது அறிக்கையில் ரவிக்குமார் சுட்டிக்காட்டியிருந்தார். ஒரு குடும்பத்தின் தலைவருக்கு மாதம் ஒன்றுக்கு 200 ரூபாய், குடும்பத் திலுள்ள வயது வந்த பிற உறுப்பினர்களுக்கு 144 ரூபாய், முதல் குழந்தைக்கு 90 ரூபாய், அடுத்தடுத்த குழந்தைகளுக்கு 45 ரூபாய் என்றுதான் பணக்கொடை மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது மிகவும் குறைவு என்பதை உணர்ந்த கலைஞர் உடனடியாக மாநில அரசின் சார்பில் அதே அளவு தொகையைச் சேர்த்து அந்த பணக்கொடையை இரு மடங்காக உயர்த்தி ஆணையிட்டார். அது மட்டுமின்றி, அகதி முகாம்களின் நிலைமைகளைச் சீர்படுத்திட பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் ஆணையிட்டார்.
இதைக்குறித்து ரவிக்குமார் கூறும் போது, “முதல்வர் கலைஞரிடம் நான் சமர்ப்பித்த அறிக்கையில், மாநில அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளாக 28 கோரிக்கைகளையும், மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டியவையென்று ஐந்து கோரிக்கைகளையும் முன்வைக்கப்பட்டிருந்தது. 33 பரிந்துரைகள் அடங்கிய எனது அறிக்கையில் 32-வது பரிந்துரையாக ஒன்றைக் குறிப்பிட்டிருந்தேன். அது,’இந்தியாவில் பிறந்த அகதிக் குழந்தைகள், இந்தியர்களைத் திருமணம் புரிந்துகொண்ட அகதிகள், இந்தியாவில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் வசிக்கும் அகதிகள் ஆகியோரிடம் அவர்களது குடியுரிமை தொடர்பாக விருப்பத்தேர்வினைக் கேட்கும் விதமாக இந்தியக் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்!’ என்று நான் வேண்டியிருந்தேன். இதற்காக மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டுமென்றும் கேட்டிருந்தேன். முதல்வர் கலைஞரிடம் வழங்கிய அறிக்கையில் நான் முன்வைத்திருந்த கோரிக்கைகள் பலவும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. குடியுரிமை தொடர்பான எனது கோரிக்கையும் இன்று தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு மத்திய அரசிடம் அது தொடர்பாக வலியுறுத்துவதற்கு தமிழக முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவில் தங்கியிருக்கும் ஈழத் தமிழ் அகதிகளின் நல்வாழ்வுக்காக கலைஞர் மேற் கொண்டுள்ள இந்த முயற்சிகள் வரலாற்றில் என்றும் நிலைபெற்றிருக்கும்” என்று முடிக்கிறார்.
ரவிக்குமாரின் இத்தகைய சாதனை பணிகளை மெச்சியே தலைவர் கலைஞர் அவர்கள் ரவிக்குமாருக்கு 2010 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் “அண்ணா விருதை” வழங்கி கவுரவிக்கிறார். அந்த விழாவில் கலைஞர் பேசும் போது, ”பேரறிஞர் அண்ணா விருதைப் பெற்றவர் அருமைச் சகோதரர் ரவிக்குமார், எம்.எல்.ஏ., அவர்கள் விடுதலை சிறுத்தைகளின் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தளபதிகளிலே ஒருவர் ஆவார். அவரை தளபதி என்று நான் சொல்வதை நம்முடைய திருமாவளவன் ஏற்றுக்கொண்டிருப்பார் என்றே நான் கருதுகிறேன். திருமாவளவன் கையொலி செய்வதிலிருந்தே அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். ரவிக்குமார் அவர்கள் பல நூல்களை எழுதியவர். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு நுல்களா, நாமே இவ்வளவு எழுதவில்லையே என்று. அவ்வளவு நுல்களை, உலகத்திலே உள்ள பல தலைவர்களைப்பற்றி, பல கருத்துகளைப் பற்றி விமர்சனங்களையெல்லாம் எழுதியவர் அவர். இன்னும் சொல்லப் போனால் ஆரம்ப காலத்தில் அவர் எங்களைத் தீவிரமாக எதிர்த்தவர். தீவிரமாக எதிர்த்தால்தான் பிறகு தீவிரமாக ஆதரிப்பார்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும் (அரங்கமே கைத்தட்டுகிறது). எனக்கு அவரிடம் எப்போதுமே அவருடைய பேச்சில், அவருடைய நடவடிக்கையில், அவருடைய எழுத்தில் மயக்கம் உண்டு. இவர் நம்மிடமே இருக்க வேண்டுமே என்று கருதியிருந்தேன். பிறகு பார்த்தால் அவர் சிறுத்தைகளிடம் இருந்தார். அதுவும் நம் இடம் தான் என்று அதிலே ஒரு ஆறுதல் கொண்டேன் (மீண்டும் அரங்கமே கைத்தட்டுகிறது) என்று முடிக்கிறார்.
அதே போல ரவிக்குமாரும் இந்த அத்தனை சாதனைகளும் கலைஞரால் நிகழ்த்தப்பட்டவை என்பதை எப்போதுமே நன்றியுடன் சொல்லி வருகிறார். அவர் கலைஞரிடம் தான் கண்ட பிரமிப்பை “கலைஞர் சமரசமில்லா சமத்துவ போராளி’’ என்ற புத்தகமாகவே கொண்டுவந்து வரலாற்றில் பதியசெய்தார். அந்த புத்தகம் எத்தகையது, ரவிக்குமார் எத்தகையவர் என்பதை அந்த புத்தகத்தில் முன்னுரையாக மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தந்த செய்தியை அப்படியே தருகிறேன்.
தங்கம் தென்னரசு பேசுகிறார், “கலைஞர் என்னும் மகத்தான ஆளுமை குறித்து எனது இனிய நண்பர் ரவிக்குமார் அவர்கள் உருவாக்கியுள்ள இந்த நூலுக்கு முன்னுரை ஒன்றினை நான் வழங்கிட வேண்டுமென அவர் தெரிவித்தபோது நான் மலைத்துப் போனேன். தலைவர் கலைஞர் அவர்களது வரிகளையே கடன் வாங்கிச் சொல்லவேண்டுமென்றால், “இமயத்துக்குப் பொன்னாடை போர்த்தும் முயற்சி” இது என்பதை நான் நன்கறிவேன். அவரது பேரன்பின் காரணமாகவும் இந்த நூலில் காணப்படும் பல கட்டுரைகள் மின்னம்பலம்.காம் தளத்தில் வெளிவந்தபோது அவற்றைப் படித்துப் பகிர்ந்துகொண்டவன் என்ற முறையிலும், அவர் குறிப்பிடும் பல்வேறு சட்டபேரவை நிகழ்வுகளை நானும் உடனிருந்து காணக்கூடிய வாய்ப்பினைப் பெற்றவன் என்ற வகையிலும் இந்த முன்னுரையை ஒருவாறாக எழுதத் துணிந்தேன். தமிழ்ச் சமுதாயத்திற்கு தலைவர் கலைஞர் அவர்கள் என்ன செய்துவிட்டார் என்று கேட்பது இப்போதெல்லாம் சிலருக்கு வாடிக்கையாகப் போய்விட்ட நிலையில் தமிழுக்கும் தமிழர்தம் உயர்வுக்கும் அவர் என்னதான் செய்யவில்லை என்ற மறு வினாவினை பதிலாகச் சொல்லும் நூலாகவே இதை நான் கண்கிறேன். தலைவர் கலைஞர் அவர்கள் தனது எண்பத்து நான்கு ஆண்டுகாலப் பொது வாழ்வில் இரண்டு நூற்றாண்டுகளை சந்தித்து அரசியல், கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டுத் தளங்களில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தவர். அவற்றில் மிக முக்கியமானவையாகத் தான் கண்டவற்றை நண்பர் ரவிக்குமார் சிறப்பாகத் தொகுத்து வழங்கியிருக்கின்றார்.
2006ஆம் ஆண்டு ரவிக்குமார் அவர்கள் முதன்முறையாக சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைக்கும்போது தலைவர் கலைஞர் அவர்கள் பேரவையில் தனது பொன்விழாவை நெருங்கிக்கொண்டிருந்தார். இருப்பினும் ரவிக்குமார் பேசுகின்றபோதெல்லாம் அவரது உரையினை மிகவும் கூர்ந்து கவனிப்பதோடு, சில சமயம் தனது மேசைமீது இருக்கும் தாளில் முக்கியமான விஷயங்களை தலைவர் கலைஞர் அவர்கள் குறித்துக்கொள்வதை நான் கண்டிருக்கிறேன். அதற்குக் காரணம் அவரது பேச்சில் இருக்கும் கருத்துச் செறிவும் அதை அவர் அவை முன்னர் வைக்கும் பாங்கும் என்பதை நான் குறிப்பிட்டே ஆகவேண்டும். ஆர்ப்பாட்டமில்லாத, அமைதியான, தெள்ளிய நீரோடை போன்ற தனது பேச்சில் ஆதாரங்களையும் புள்ளி விபரங்களையும் தேவைப்பட்ட இடங்களில் தெரிவிப்பதுடன் அடித்தட்டு மக்களின் அவலத்தை உள்ளது உள்ளபடியே படம் பிடித்துக் காட்டுவதும் நண்பர் ரவிக்குமாரிடம் கவனிக்கத்தக்க அம்சங்களாகும். கூர்த்த மதி படைத்த கலைஞரின் கவனத்தை ஈர்க்க இதுவே போதுமானதாக இருந்தது.
ஈழத் தமிழ் அகதிகளின் நிலைகுறித்து அவரது ஆனந்தவிகடன் கட்டுரைக்குப் பிறகு அன்றைக்கு அமைச்சர்களாக இருந்த எங்களையெல்லாம் உடனடியாக அந்த முகாம்களைப் பார்வையிட்டு அறிக்கை தரச் சொல்லிய தலைவர் அவர்கள் பேரவையிலேயே நண்பர் ரவிக்குமாரின் பல்வேறு கோரிக்கை களை ஏற்று அறிவிப்புச்செய்து ஆணையாக்கி நடைமுறைப் படுத்தியதை மறக்க முடியாது.
இந்நூலில் குறிப்பிடப்படும் செய்திகள் தலைவர் கலைஞர் அவர்களின் பன்முக ஆற்றலை ஒவ்வொரு தளத்திலும் வெளிப் படுத்துகின்றன. குறிப்பாக திருக்குறளுக்கு அவர் எழுதிய உரையில் “அறவாழி அந்தணன்” எனும் சொல்லுக்கு “சான்றோர்” என உரை பகர்ந்திருப்பது பற்றிச் சொல்லும் ரவிக்குமார் அச்சொல்லுக்கு பரிமேலழகரும், அயோத்திதாசப் பண்டிதரும், மு.வரதராசனாரும் எவ்வாறெல்லாம் பொருள் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒப்புநோக்கி இந்தச் சொல்லுக்கு “அறிவு நிலையில் நின்ற சான்றோர்” என்று பொருளுரைக்க முனைந்தது தலைவர் கலைஞர் ஒருவரே என்ற கருத்தாழம் மிக்க செய்தியைச் சொல்லுகின்றார்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தவே முடியாது என்றெண்ணி இருந்த பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக் காச்சியேந்தல் ஊராட்சிகளில் வெற்றிகரமாகத் தேர்தலை நடத்தி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை ஊராட்சிமன்றத் தலைவர் களாகத் தேர்ந்தெடுக்கச் செய்ததன் மூலம் சமத்துவம் என்ற கோட்பாட்டில் சமரசம் செய்துகொள்ளாமல் ஜன நாயகத்தைக் காத்த பெருமை கலைஞருக்கு உண்டு என்பதையும், அது தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படவேண்டிய செய்தி என்பதையும் பதிவு செய்திருக்கின்றார்.
இப்படி தொடர்ந்து சொல்லக்கூடிய விஷயங்கள் இந்த நூலில் ஏராளம். புதிரை வண்ணார் நலவாரியம், நரிக்குறவர் நலவாரியம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என கலைஞர் அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்குப் பின்னால் நண்பர் ரவிக்குமாரின் அழுத்தமான பங்களிப்பு இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. மகிழ்ச்சிக்குரிய செய்தி.
மாநில சுயாட்சி போன்ற நுட்பமான விஷயங்களில் காணப்படும் ஆழ்ந்த கருத்துகளையும், சட்ட மேலவையில் இட ஒதுக்கீடு குறித்த அரசியல் அமைப்புச் சட்ட சிக்கல்களையும் எளிதாகப் புரியும் வகையில் ரவிக்குமார் எடுத்துரைத்துள்ளது தனிச்சிறப்பானதொன்று. இவ்வளவு காத்திரமான விஷயங் களுக்கு நடுவில் “இப்போதெல்லாம் நாட்டில் நரிகள் மனிதர் களாகிவிட்டனவோ” என வினவும் ரவிக்குமாரின் நகைச்சுவை உணர்வு மெலிதான புன்னகையை வரவழைக்கத் தவறவில்லை. தலைவர் கலைஞர் குறித்த எவ்வளவோ புதிய செய்திகளைச் சொல்லும் இந்நூலினைப் படிக்கின்ற ஒவ்வொருவரின் மனதிலும் தேக்கிவைத்துக்கொள்ள வேண்டியவை பின்வரும் வைர வரிகளாகும்:
“அவரது கருத்தியலின் ஆழத்தில் வகுப்புவாதத்தோடு சமரசம் செய்து கொள்ளாத பகுத்தறிவு கங்கு கனன்று கொண்டிருப்பதை எனக்குக் காட்டியது. அவரது பேச்சில் எரிமலை உமிழ்வாக அவ்வப்போது அந்தக் கனல் வந்து விழுவதுண்டு. அதனால் அவர் அரசியல் தளத்தில் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகள் ஏராளம். ஆனால் அந்த இடையூறுகளையெல்லாம் தாண்டி கலைஞரைத் தமிழின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவராய் அடையாளப்படுத்திக்கொண்டிருப்பது அந்த அடியாழத்து நெருப்புதான்.”
அந்த நெருப்புதான் தலைவர் கலைஞரின் போர்க்குரல் ஒலிக்காதா என்ற ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் மீண்டும் மீண்டும் நம்முள் எழுப்புகின்றது.
தலைவர் கலைஞர் அவர்களுக்கு எனது வணக்கமும், நண்பர் ரவிக்குமார் அவர்களுக்கு எனது வாழ்த்துகளும்!”.
-தங்கம் தென்னரசு.
இவையெல்லாம் விசிகவின் ரவிக்குமார் என்ற ஒற்றை “தனித்தொகுதி” சட்டமன்ற உறுப்பினர் தனக்கு கிடைத்த அறிய வாய்ப்பினை அதுவும் ஒற்றை வாய்ப்பினை பயன்ப்படுத்தி தான் தேர்ந்தெடுக்கப்பட்டதின் நோக்கமான பட்டியிலின மக்களின் நலன் சார்ந்தும்; தான் தேர்ந்தெடுக்கப்பட்டதின் கடமையான இதர பொது சமூகத்தினரின் நலன் சார்ந்தும் சிந்தித்தும், செயற்பட்டும் தன் சக்திக்கு மீறி செய்த சாதனைகள் ஆகும்.
இதுபோல முதல்வர் கையில் விருதும் பெறும் அளவிற்கோ அல்லது அமைச்சரின் பாராட்டுக்களை பெறுமளவிற்கோ சிந்திக்கவோ செயலாற்றவோ கூட தேவையில்லை குறைந்தப்பட்சம் பட்டியலின மக்களின் பிரதான பிரச்சனைகள் குறித்து, அதற்கான தீர்வுகள் குறித்து ஆய்வுகள், தரவுகள் திரட்டுதல் போன்ற பணிகளையாவது செய்திருக்கிறார்களா திமுக, அதிமுக உள்ளிட பிறகட்சி பட்டியலின தனித்தொகுதி உறுப்பினர்கள்? அட்லீஸ்ட் இவற்றை குறித்து தனது ஆணித்தரமான கருத்தையாவது இவர்கள் சட்டமன்றங்களிலே தொடர்ந்து பதிவு செய்திருக்கிறார்களா? ஆணவ படுகொலைகள், சாதிய வன்கொடுமைகளை எதிர்த்து களமாட கூடவேண்டாம் கடந்த ஆட்சியில் சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் ஆணவ படுகொலைகளே நடப்பதில்லை என்று பேசிய போது அங்கிருந்த அதிமுக, திமுகவை சார்ந்த தனித்தொகுதி பட்டியலின உறுப்பினர்கள் யாராவது அதை மறுத்து கடுமையான எதிர்ப்பையாவது பதிவு செய்திருக்கலாமே.. செய்தார்களா? அதுவே அங்கே விசிகவின் சிந்தனைசெல்வனோ, ரவிக்குமாரோ இருந்திருந்தால் கடும் எதிர்ப்பை முன்வைத்து பன்னீர்செல்வத்தை தரவுகளால் பிரித்துமேய்ந்திருப்பர். ஆக தனித்தொகுதி உருவாக்கப்பட்டத்தின் எந்தவொரு நோக்கத்தையும் உணர்ந்துக்கொண்டு அதற்கான குறைந்தப்பட்ச செயல்திட்டங்களை கூட முன் வைக்காதவர்களுக்கு தனித்தொகுதி எதற்கு?
இதுவரையில் பார்த்தது கடந்தகால செயற்பாடுகள். தற்போதைய நிகழ்வுகளின் அடிப்படையில் சிலவிஷயங்களை பேசுவோம். கடந்த ஆறுமாத கால திமுக ஆட்சியில் விசிக தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் போன்று திமுக, அதிமுக உள்ளிட்ட வேறு எந்த கட்சியை சார்ந்த தனித்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் எவரும் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட “தனித்தொகுதி” என்பதன் நோக்கத்தின் அடிப்படையில் எந்தவொரு முன்னெடுப்பையும் எடுத்ததில்லை என்ற குற்றச்சாட்டை பகிங்கிரமாக வைக்கிறேன். இதையும் நான் அந்த கட்சியை சார்ந்த யாரேனும் தரவுகளுடன் மறுத்தால் என் கருத்தினை திரும்ப பெற்றுக்கொள்வதில் எனக்கு துளியும் தயக்கமில்லை.
• விசிக சட்டமன்ற உறுப்பினர் திரு.சிந்தனைசெல்வன் அவர்கள் 23.06.2021 அன்று மாநில அளவில் குழந்தைகள் தேசிய ஆணையம், மகளிர் தேசிய ஆணையம் இருப்பதுபோன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் என்ற ஒன்றும் தேவை. கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் கூட அந்த ஆணையம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இல்லாத வருத்தத்தை இந்த அரசு சரிசெய்திட வேண்டும் என்று கோரிக்கையாக பதிவு செய்கிறார். 08-09-2021 அன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அந்த கோரிக்கையை ஏற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சடப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலஆணையம் என்ற புதிய தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய அமைப்பு அமைக்கப்படும் என்று அறிவிப்புசெய்து, அமைக்கவும் செய்கிறார்.
• ஆளுநர் உரையின் போது அறிவிக்கப்பட்ட அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் க்ளாஸ் போன்ற உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் சிறப்பு திட்டங்கள் செயற்படுத்தப்படும் என்ற அறிவிப்பினை சுட்டிக்காட்டி அந்த வரம்பிற்குள் ஆதிதிராவிடர் நல பள்ளிகளையும் சேர்த்து அந்த பள்ளிகளிலும் ஸ்மார்ட் க்ளாஸ் போன்ற உட்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார் விசிக உறுப்பினர் சிந்தனைசெல்வன். அதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு உறுப்பினர் சிந்தனைசெல்வனின் கோரிக்கையை ஏற்று அந்த வரம்பிற்குள் ஆதிதிராவிடர் நல பள்ளிகளையும் சேர்த்து அதற்கென சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கிறார்.
• நமக்கு நாமே திட்டத்தின் கீழ்மூன்றில் ஒரு பங்கு மக்கள் நிதியாகவும் இரண்டு பங்கு அரசு நிதியாகவும் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் சார்ந்த பகுதியில் நடைபெறும் நலத்திட்டங்களில் மூன்றில் ஒரு பங்கு என்பது அம்மக்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும் எனவே ஐந்தில் ஒரு பங்கு என மாற்றி அமைக்க வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்துகிறார் சிந்தனைசெல்வன். அதனையும் கனிவோடு ஏற்று பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பகுதியில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு ஐந்தில் ஒரு பங்கு நிதியை மக்கள் அளித்தால் போதும் என்று அறிவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இதெல்லாம் மிகக்குறுகிய காலத்திலேயே தனிப்பட்ட சிந்தனைசெல்வன் என்ற தனித்தொகுதி விசிக உறுப்பினர் நிகழ்த்திமுடித்த பெரும்பணிகள். தொடர்ந்து சட்டமன்றங்களிலும், முதல்வரை நேரடியாகவும் சந்தித்து விசிக உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகள் எனக்கு மிக சிறந்தவையாகவும், திராவிட அரசியம், மொழி, பண்பாட்டு தளத்தை வலுப்படுத்தும் விதமாகவும், சமூகநீதியை நிலைநாட்டும் விதமாக நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. அவற்றுள் சிலவற்றை கீழே தருகிறேன்.
• பதவி உயர்வு இடஒதுக்கீட்டிலும் இனசுழற்சி என்ற ரோஸ்ட்டர் முறையை பின்பற்ற வழிவகை செய்யவேண்டும்.
• தனியார் துறையில் இடஒதுக்கீடு என்பது தொலைநோக்கு பார்வையுடையது என்றாலும் அரசு ஒப்பந்த பணிகளில், சிப்காட் போன்ற ஆலைகளில், குறிப்பாக தொழிற்துறையின் கொள்முதலில் இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்தி சமூகநீதியை அனைத்து தளங்களிலும் நிலைநாட்ட வேண்டும்.
• பாண்பாட்டு தளத்தில் ஐம்பெரும்காப்பியங்களும் வலியுறுத்திய பவுத்த,சமண ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். கண்ணகிக்கு வைத்தை போன்று மணிமேகலைக்கும் ஒரு சிலை வைக்க வேண்டும்.
• கலைஞர் நடைமுறைப்படுத்திய பட்டியலின மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டதிற்கான நிதியில் மூன்றில் ஒரு பங்கை கட்டாயம் பட்டியலின மக்கள் சார்ந்த திட்டங்களுக்கு பயன்படுத்தபட வேண்டும். இந்த நிதி எப்படி இதுவரையில் கையாளப்பட்டது என்பதை விளக்கி வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
• பெரியார், அம்பேத்கர், காந்தியடிகள் சிலைகள் நவீன பாதுகாப்புமுறை கொண்டு பாதுகாக்கப்பட வேண்டும்.
• கிறித்துவர்களுகென்று இருக்கும் இடஒதுக்கீடை சிலர் வேண்டாம் என்றும் தவிர்க்கும் போது அந்த இடங்களை தற்காலிகமாக கிறித்துவ மதத்தில் இருக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்கு ஒதுக்கப்படவேண்டும்.
• தமிழக பல்கலைகழக துணைவேந்தர் நியமனத்தில் இட ஒதுக்கீடு, மாநில அரசின் அதிகாரம் வலுப்பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
• கலைஞர் ஆட்சியில் இஸ்லாமியருக்கு வழங்கப்பட்ட 3.5% இடஒதுக்கீட்டை அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப உயர்த்தித்தரவேண்டும். குறிப்பாக இஸ்லாமிய பெண்களின் கல்விக்கென்று சிறப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும்.
• பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்தது போன்று கலைஞரின் பிறந்ததினத்தை மாநில உரிமைகள் தினமாக அறிவித்து கொண்டாடப்படவேண்டும்.
• கலைஞர் பெயரில் ஒரு மொழியியல் பல்கலைகழகம் அமைக்கப்படவேண்டும்.
• கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரில் பல்கலைகழக ஆய்வு இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும்.
• ஆனைமுத்து பெயரை தமிழக ஆவணக்காப்பக நூலகம் ஒன்றிற்கு சூட்டவேண்டும்.
• விபி.சிங் பெயரில் ஒரு கல்வி நிலையத்தை ஏற்படுத்த வேண்டும்.
• கல்விநிலையங்களில் மதம் சார்ந்த தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயற்படுவதை கவனமாக கண்காணித்து தடுக்கப்பட வேண்டும்.
• சிங்காரசென்னை என்பது உலகத்தரம் வாய்ந்த சிறந்த திட்டம். அதற்குள் பூர்வகுடிமக்களையும் சேர்த்து சிந்தித்து செயர்படுத்தபட வேண்டும்.
• அர்ச்சகர் பணியிடங்களை நிரப்புவதற்கு கால அவகாசம் வழங்கியது போன்று பட்டியலின காலியிடங்களை நிரப்புவதற்கும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
• காவல்துறையில் சீர்த்திருத்தம் கொண்டுவரப்படவேண்டும். காவலர்களின் உடல்நலனில் நுறு சதவித பொறுப்பினை அரசே ஏற்கவேண்டும். மிலிட்டரி ஹாஸ்பிட்டல் என்று இருப்பது போல போலிஸ் ஹாஸ்பிட்டல் என்ற கருத்துருவாக்கத்தை நோக்கி சிந்திக்கவேண்டும்.
இப்படியான பட்டியல் சமூகத்தை சார்ந்திருந்தாலும், பொது சமூகம் சார்ந்த பல சிந்தனை மிகு கோரிக்கைகள் விசிக உறுப்பினர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இவர்களெல்லாம் எப்போதாவது அத்தி பூத்தார் போன்று கிடைக்கும் தனக்கான வாய்ப்பினை பயன்ப்படுத்திகொண்டு தான் இந்த இடத்திற்கு வர காரணமாக இருந்த “தனித்தொகுதி” என்ற அரசியல் உரிமைக்கு நுறு சதவீதம் நியாயம் சேர்க்க சிந்திக்கிறார்கள், செயல்படுகிறார்கள். ஆனால் அதே “தனித்தொகுதி” என்ற அரசியல் கேட் பாஸ் வழியாக சட்டமன்றம் நுழையும் திமுக,அதிமுக உள்ளிட்ட பிறகட்சி பட்டியலின உறுப்பினர்கள் அதற்குண்டான நியாயத்தை செய்திருக்கிறார்களா? செய்கிறார்களா? என்பதை அந்தந்த கட்சிகளை சார்ந்த நண்பர்களின் நியாய சிந்தைனைக்கே விட்டுவிடுகிறேன்.
இன்றும் சட்டமன்றத்தில் குறிஞ்சான்குளம் காந்தாரி அம்மைனை நிமிர கெஞ்சுபவர்கள் விசிக உறுப்பினர்களாக தான் இருக்கிறார்கள்.
இன்றும் வன்கொடுமைக்கு எதிராக சிந்தனை வழிகளில் போராடி முதல்வரிடம் கோரிக்கை வைத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாதுகாக்கவேண்டி நான்கு சிறப்பு நீதிமன்றங்களை கொண்டு வருவதற்கு செயற்படுபவர்கள் விசிக உறுப்பினர்களாக தான் இருக்கிறார்கள்.
இன்றும் முதல்வரிடம் நேரடியாக பட்டியலின மக்களின் வாழ்வுநிலை உயர சம்பிரதாயமான நிகழ்வுகளை தவித்துவிட்டு ஆக்கபூர்வமானசிறப்பு திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்று பணிவுடன் கூடிய துணிச்சலுடன் கோரிக்கை வைப்பவர்கள் விசிக உறுப்பினர்களாக தான் இருக்கிறார்கள்.
இவ்வளவு ஏன் இப்போது வீரலூர் பட்டியளினத்தவர் மீதான தாக்குதலை அறிந்து முதல்வருக்கு கடிதம் எழுதி, மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவருக்கு கடிதம் அனுப்பி, துணைத்தலைவர் புனித பாண்டியன் அவர்களிடம் தொலைபேசியில் பேசி, இதன்மூலம் அந்த ஆணையத்தை சார்ந்தவர்கள் அங்கு நேரடியாக சென்று விசாரிக்க செய்து, காவல்துறை உயரதிகாரிகளின் நேரடி பார்வையில் சடலத்த நெடுஞ்சாலை வழியே அனுமதிக்க செய்து, மேற்கொண்டு விசாரணைக்கு வலியுறுத்துபவர் விசிக உறுப்பினர் ரவிக்குமாராக தான் இருக்கிறார்.
மீண்டும் மீண்டும் பணிவுடன் சொல்கிறேன் “தனித்தொகுதி” என்பது அம்பேத்கர் முன்மொழிந்து, பெரியார் வழிமொழிந்து தலித்களின் முன்னேற்றத்தை, அதிகார பகிர்வை வலுப்படுத்தும் “இரட்டை வாக்குரிமை” என்ற போர்வாள் காந்திய சதியால் சுருக்கப்பட்டதன் மிச்சமான சிறு கத்தி. தனித்தொகுதி என்பது தலித் அல்லாத பொது சமூகத்தினரின் ஓட்டரசியல் பார்வையில் அது ஒரு சாத்திய அடையாளம். ஆனால் தலித்களின் சமூகநீதி பார்வையில் அது ஒரு ஆயுதம். அந்த ஆயுதத்தை என் சொந்த வீட்டு கருவூலத்தில் பத்திரமாக வைத்து பாதுகாக்கும் என் “உடன்பிறப்புகளை” விட அதனை கொண்டு எனக்கு சிறு உதவியேனும் செய்யும் என் பக்கத்து வீட்டு நண்பன் எனக்கு பெரியதாகதான் தெரிவான்.
ஆக சென்னை, தாம்பரம் உள்ளிட்ட இரண்டு மாநகராட்சிகள் பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதில் அந்த இடங்களில் ஏதேனும் ஒன்றிலாவது விசிக இடம்பெற்றால் தான் அதன் நோக்கம் முழுமையடையும்.
– கோபிநாத் குபேந்திரன்