ஆசை தான் துன்பத்திற்கு காரணமா?
புத்தரின் பல கோட்பாடுகள் சமூகத்தில் பல குழப்பட்டும் தவறாக கருதப்பட்டும் உள்ளன. அதில் ஒன்று தான் புத்தரின் * ஆசையே துன்பத்திற்கு காரணம் / அவா அறுத்தல்*.
ஆசை / அவா இந்த சொற்களுக்கான உண்மையான பொருள் தெரியாததால், இந்த கோட்பாடே தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு பொதுசமூகத்தில் பல எதிர் கேள்விகளை கேட்கவைக்கிறது.
ஆசையே துன்பத்துக்கு காரணம் என்றார் புத்தர். ஆசையில்லாமல் மனிதர்கள் எப்படி வாழ முடியும்.
இந்தியா விடுதலையடைய வேண்டும் என்கிற ஆசை இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா விடுதலை பெற்றிருக்குமா?
தீண்டாமையற்ற சாதியற்ற சுரண்டலற்ற சமூகம் அமைய தலைவர்கள் ஆசைபடாமல் இருந்திருந்தால் போராட முடியுமா?
* தன் குழந்தைகளுக்கு நல்ல கல்வி சுகாதாரம் கொடுக்க பெற்றோர் ஆசைப்படுதலே தவறா?
குழந்தையில்லாத தம்பதிகள் தனக்கு குழந்தை வேண்டும் என ஆசைப்படுதலே தவறா?
எல்லா கேள்விகளையும் மிஞ்சும் வகையில் உள்ள கேள்வி இதுதான். புத்தரே தன் தம்மம் பரவ வேண்டும் என்று தானே ஆசைபட்டார்?
பதில் : இந்தியாவை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தியதை எதிர்த்து போராடியதற்கு காரணம் ஆசையன்று; அதன் பெயர் உரிமை. ஒரு நாடு தன் நாட்டை அடிமைப்படுத்துவதை எதிர்த்து போராடியது தன் உரிமைக்கான போராட்டம் தானே தவிர ஆசைக்கான போராட்டமன்று.
இதையே சாதி, தீண்டாமைக்கு எதிரான செயலுக்கும் போராட்டத்துக்கும் பொறுத்திப் பார்க்கலாம். (Rights)
அந்த உரிமைக்காக போராடத்தூண்டியது நாட்டின் மீது, மக்களின் மீதான நேசம் என சொல்லலாமே தவிர ஆசையென சொல்லமுடியாது. நேசம் – ஆசை இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. (Love)
தன் குழந்தைக்கான கல்வியை, சுகாதாரத்தை பெற்றோர் கொடுக்க நினைப்பது ஆசையன்று. அது கடமை (Duty).
தனக்கு குழந்தை வேண்டுமென நினைப்பது தம்பதிகளின் ஆசையன்று. அது நியாயமான விருப்பம் (Wish)
புத்தர் கொண்டிருந்தது எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கவேண்டும் என தம்மத்தை பரப்பியதன் காரணம் ஆசையன்று. அது பரந்த நேயம். (Compassion / Maithri / Metta)
Rights, Duty, Desire, Love, Compassion, Wish, Will, Greed என சொற்களுக்குள் உள்ள நுட்ப வேறுபாட்டை புரிந்து கொண்டால் ஆசை / அவா எனும் சொற்களின் பொருளையும் நுட்பமாக புரிந்து கொள்ளலாம்.
ஆசை / அவா – Greed.
* ஆசை என்னும் சொல்லின் பொருள்
மனம் எப்போதும் ஏதேனும் ஒன்றை நோக்கி அலைந்து கொண்டே (அசைந்து) செல்லும். அந்த நிகழ்வுக்கு பெயர் தான் ஆசை. ஒன்றில் நிலைக்காமல் அசைந்து கொண்டே (Oscillate) இருக்கும் மனதின் சலனமே ஆசை. Oscillate – ஆசை சொற்களுக்கிடையில் கூட தொடர்பு இருக்கலாம்.
* அவா அறுத்தல்
சலனத்தோடு இயங்கிக்கொண்டு கண்டத்தை கேட்டதை என எல்லாவற்றையும் அடைய நினைக்கும் அந்த ஆசையை / அவாவை அறுத்தெறி என்றார் புத்தர். ஆசையை தமிழ்மரபு எவ்விதம் கையாண்டது என்பதை நாம் விளங்கிக்கொள்ள நமக்கு உதவுபவர் வள்ளுவப்பெருந்தகையாம் திருவள்ளுவர். அவா அறுத்தல் என தனி அதிகாரமே கொடுத்துள்ளார்.
திருவள்ளுவர் கூட ஆசையே / அவாவே துன்பத்திற்கு காரணம் என ‘அவா’வின் தீங்கு பற்றி இவ்வாறு சொல்கிறார்.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.
ஏற்கெனவே கைபேசி வைத்திருந்தாலும், மச்சி.. New model நிறைய Features ஓட புது mobile வந்திருக்கு.. வாங்கலாமா..? என்று கேட்பது தான் ‘நவீன காலத்து அவா’..
– வேந்தன். இல