மனித வாழ்வை நாசமாக்கும் மூன்று நச்சுகள்
பிறக்கும் போதே நாம் ஒவ்வொருவரும் தீய சிந்தனைகள் எனும் நச்சுகளை தாங்கிக்கொண்டு பிறப்பதில்லை. நாம் மற்றவர்களை துன்புறுத்துவதும் கூட நம் பிறவி குணமல்ல.
நாம் வளரும் போது, நமக்கு சொல்லித்தரப்படுகிற, நாம் பார்க்கின்றவைகளே நச்சுகளை நம் மனதில் உருவாக்குகின்றன. புத்தர் மனித வாழ்வை நாசமாக்கும் அடிப்படையான மூன்று நச்சுகளை வகைப்படுத்துகிறார். அவை புற உலகின் மீது நாம் கொள்ளும் ஆசை, வெறுப்பு, அறியாமை.
மூன்று நச்சுகளை விளக்கும் ஓவியம் இது. சேவல் ‘ஆசை’யின் குறியீடாகவும், பாம்பு ‘வெறுப்பு’ என்பதின் குறியீடாகவும், பன்றி ‘அறியாமை’யில் உழல்வதின் குறியீடாகவும் ஓவியம் விளக்குகிறது.
இதையே தமிழில் திருவள்ளுவப் பெருந்தகை
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய் – 360 என மெய்யுணர்வு அதிகாரத்தில் நமக்கு உரைக்கிறார்.
(காமம் – ஆசை
வெகுளி – வெறுப்பு
மயக்கம் – அறியாமை)
அதீத ஆசை சுரண்டலுக்கு வழிவகுக்கிறது. நுகர்வு கலாச்சாரத்துக்கு அடிமையாக்குகிறது.
அதீத வெறுப்பு சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை மறுக்கிறது.
அறியாமை – நாம் சுரண்டுகிறோமா? சுரண்டப்படுகிறோமா? நாம் வெறுக்கிறோமா? வெறுக்கப்படுகிறோமா? என்பதை அறியாமல் விதியென்னும் மூடநம்பிக்கையேலேயே உழல்வது.
அறியாமையை அகற்றினால் நாம் அனைவரும் இந்த பூமி பந்தின் ஒருதாய் பிள்ளைகள் எனும் ‘அன்பும் கருணையும் ஏற்பட்டு, சமத்துவத்துக்கான நீதியும், சமூக ஜனநாயகமும் தழைத்தோங்கும்..
இந்த மூன்று நச்சுகளை களைந்து வெளியேற முயற்சிப்போம்.
– வேந்தன். இல