தென்னிந்திய ஆலய நுழைவுப் போராட்டங்கள் பற்றிப் பாபாசாகேப் அம்பேத்கர்.
(கேரளாவின் குருவாயூர் ஆலய நுழைவுப்போராட்டம்)
“ஆலய பிரவேச பிரச்சனையை ஒரு விந்தையான, விபரீதமான அரசியல் செப்படி வித்தை என்றே கூற வேண்டும்”
“உங்கள் கோவில்களைத் திறப்பதோ திறக்காம லிருப்பதோ உங்கள் இஷ்டம் ; அது நீங்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டிய விஷயம் ; அதற்காக நாங்கள் கிளர்ச்சி எதுவும் செய்யப் போவதில்லை . மனித ஆளுமையின் புனிதத்தை , தூய்மையை மதிக் காதிருப்பது சரியல்ல , முறையல்ல என்று நீங்கள் கருதினால் உங்கள் கோவில்களைத் திறந்து விட்டுப் பண்பாளர்களாக, பொறுப்புணர்ச்சி மிக்கவர்களாக, பெருந்தன்மையுடையோராக நடந்து கொள்ளுங்கள். அப்படியில்லை நாங்கள் பண்பாளர்களாக இருப்பதைவிட இந்துக்களாகத்தான் இருப்போம் என்றால் கதவுகளை அடைத்துவிட்டு எக்கேடாவது கெட்டுப்போங்கள். ஏனென்றால் கோவில்களுக்கு வரவேண்டும் என்று நாங்கள் ஒன்றும் துடித்துக் கொண்டிருக்க வில்லை” என்பது உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சமூக விடுதலையும் நாட்டமுள்ள பகுத்தறிவுள்ள மனிதர்களின் பார்வையாக இருக்கிறது என்று பாபாசாகேப் அம்பேத்கர் விளக்குகிறார்.

“மலபாரில் பொன்னானி தாலுக்காவில் குருவாயூர் என்னும் இடத்தில் கிருஷ்ணர் கோயில் ஒன்று இருக்கிறது. கள்ளிக்கோட்டை ஜெமோரின் தான் இந்தக் கோயில் தர்மகர்த்தா. மலபாரில் தீண்டப்படாத ஊரின் நலனுக்காக பாடுபட்டு வரும் சிறு கேளப்பன் என்ற ஓர் இந்து கோயிலுக்குள் தீண்டப்படாதோர் அனுமதிக்க வேண்டும் என்பதற்காக ஓர். கிளர்ச்சியை தொடங்கினார்.
ஆனால் கோவிலின் தர்மகர்த்தாவான கள்ளிக்கோட்டை ஜமோரின் தீண்டப்படாதோருக்கு கோவிலைத் திறந்துவிட மறுத்துவிட்டார் ; தமது நடவடிக் கைக்கு ஆதரவாக இந்து சமய அறக்கொடை சட்டத்தின் 40 ஆவது பிரிவை மேற்கோள் காட்டினார்; எந்தத் தர்மகர்த்தாவும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள கோவில்களின் பழக்க வழக்கங்களுக்கும் மரபுகளுக்கும் விரோதமாக எந்த நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அந்தப் பிரிவு கூறுகிறது.
1932 செப்டம்பர் 20 ஆம் தேதி திரு.கேளப்பன் உண்ணாவிரதம் மேற்கொண்டார்; தீண்டப்படாதோர் சம்பந்தமாக ஜமோரின் தமது கருத்துகளை மாற்றிக் கொள்ளும்வரை கோவிலின் முன்னர் சுட்டெரிக்கும் வெயிலில் படுத்து உண்ணா விரதம் இருந்தார். இந்தத் தொல்லையிலிருந்தும் இக்கட்டிலிருந்தும் விடுபடும் பொருட்டு ஜமோரின் காந்தியை அணுகினார்; உண்ணா பனை வலியுறுத்துமாறு அவர் திரு.காந்தியைக் கேட்டுக் கொண் விரதத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கும்படி திரு.கேளப்டார். பத்து தினங்கள் உண்ணாவிரதம் இருந்தபிறகு திரு.காந்தியின் வேண்டுகோளின் பேரில் திரு.கேளப்பன் 1932 அக்டோபர் 1 ஆம் தேதி மூன்று மாதங்களுக்கு உண்ணாவிரதத்தை ஒத்திவைத்தார் . ஆனால் இதன் பிறகு ஜமோரின் எதுவும் செய்ய வில்லை . இதன் பேரில் திரு.காந்தி அவருக்கு தந்தி ஒன்றை அனுப்பினார் ; இந்த விஷயத்தில் விரைந்து செயல்படும்படியும் சட்ட மற்றும் இதர இக்கட்டுகளை வெற்றிகரமாகச் சமாளிக்கும்படியும் அதில் அறி வுரை கூறியிருந்தார்.

ஜமோரின் இதற்கு இணங்க மறுத்து , பின்கண்ட எதிர் அறிக்கையை பத்திரிகைகளில் வெளியிட்டார்
“கோவில்களை அவர்ணர்களுக்குத் திறந்து விடுமாறு கேட்டுக்கொண்டு வெளியிடப்படும் பல்வேறு வேண்டு கோள்கள் இதில் உள்ள சிரமங்களைப் போதிய அளவுக்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் வெளியிடப்படுபவை யாகும் . இத்தகைய சூழ்நிலைமையில் , ஆலயப் பிரவேச இயக்கத்தின் ஆதரவாளர்கள் விரும்புவதுபோன்று குருவாயூர் கோவிலை அவர்ணர்களுக்குத் திறந்துவிடுவது என் அதிகாரத்தில் இருப்பதுபோல் நினைப்பது எவ்வகை யிலும் நியாயமற்றதாகும் . “
இத்தகைய சந்தர்ப்பச் சூழ்நிலைமைகளில் திரு.காந்தி உண்ணாவிரதம் மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகவும் அவசிய மானதாகவும் ஆகிவிட்டது. ஆனால் திரு. காந்தி தாம் கூறியதைப் போல் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளவில்லை. மாறாக, அவர் தமது நிலையை மாற்றிக் கொண்டார் ; கோவில் அமைந்துள்ள பொன்னானி வட்டத்தில் ஒரு பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தலாம் என்றும், தீண்டப்படாதவர்களுக்குக் கோவில்களைத் திறந்து விடுவதை பெரும்பாலோர் எதிர்க்கின்றனர் என்பது அந்த வாக் கெடுப்பு மூலம் தெரியவந்தால், தாம் உண்ணாவிரதம் இருக்கும் முடிவைக் கைவிடுவதாகவும் அவர் கூறினார். அவ்வாறே ஒரு பொது மக்கள் வாக்கெடுப்பு நடைபெற்றது . ஆனால் வழக்கமாக கோவி லுக்குச் சென்று வருபவர்கள் மத்தியில் மட்டுமே இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. கோவிலுக்குள் செல்ல தகுதியற்றவர்களும் , பொதுவாக கோவிலுக்குச் செல்லாதவர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களில் 73 சத வீதத்தினர் வாக்களித்ததாகக் கூறப்பட்டது. வாக்கெடுப்பின் முடிவு பின்வருமாறு அமைந்திருந்தது : ஆலயப் பிரவேசத்துக்கு ஆதரவாக 56 சதவீதத்தினர் வாக்களித்தனர் ; 9 சதவீதத்தினர் எதிராக வாக் களித்தனர் ; 8 சதவீதத்தினர் நடுநிலைமை வகித்தனர் ; 27 சதவீதத் தினர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த வாக்கெடுப்பில் தெரியவந்த முடிவின்படி உண்ணா விரதத்தை மேற்கொள்ள திரு . காந்தி கடமைப்பட்டிருந்தார். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை . மாறாக , 1932 டிசம்பர் 29 ஆம் தேதிதிரு . காந்தி பத்திரிகைகளில் ஓர் அறிக்கை வெளியிட்டார் .
“ஆலயப் பிரவேசம் சம்பந்தமாக சென்னை மேலவை யில் டாக்டர் சுப்பராயனின் மனுவை அனுமதிப்பது குறித்த வைசிராயின் முடிவு ஜனவரி 15 ஆம் தேதிக்கு முன்னர் வெளியிடப்படுவது சாத்தியமில்லையாதலால் , புத்தாண்டின் இரண்டாம் நாளன்று தொடங்க உத்தேசித் திருந்த உண்ணாவிரதம் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது ; இன்னும் தெளிவாகக் கூறுவ தானால் வைசிராயின் முடிவு வெளியிடப்படும் வரை உண்ணாவிரதம் ஒத்திவைக்கப்படுகிறது . இந்த ஒத்தி வைப்பை திரு.கேளப்பனும் ஏற்றுக்கொண்டிருக்கிறார் .”
திரு.காந்தி குறிப்பிடும் வைசிராயின் அறிவிப்பு என்பது சட்டமன்றத்தில் ஆலயப் பிரவேச மசோதாக்கள் கொண்டு வருவ தற்கு வைசிராயின் அனுமதி வழங்கப்படுவதை அல்லது மறுக்கப் படுவதைக் குறிக்கிறது. இந்த அனுமதி இறுதியில் வைசிராயால் அளிக்கப்பட்டது . எனினும் திரு.காந்தி உண்ணா விரதத்தை மேற் கொள்ளவில்லை . அவர் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளாதது மட்டுமல்ல, அது அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்ற ரீதியில் அதனை அடியோடு மறந்தும் விட்டார் . அப்போது முதல் குருவாயூர் ஆலயப் பிரவேச சத்தியாக்கிரகம் பற்றி எந்தத் தக வலும் இல்லை . இன்றுவரை கூட அதன் கதவுகள் தீண்டப்படா தோருக்கு மூடியே கிடக்கின்றன .
(இயல் 4 ஓர் இழிவான சரணாகதி – காங்கிரசும் காந்தியும் தீண்டப்படாததோருக்கு செய்தது என்ன? பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி 16தமிழ்)
இக்கருத்துக்களைப் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் 1945 இல் எழுதுகிறார் என்பதை சிந்திக்க வேண்டும். அதே நேரத்தில் என்றைக்கு 2022 இலும் கூட சுதந்திரம் பெற்ற இந்தியாவில் ஆலய நுழைவு என்பது மிகப்பெரிய அரசியலாகவே நடந்து கொண்டிருககிறது என்பது யாரும் அறியாததல்ல.
பேரா.க.ஜெயபாலன்