புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தத்தில் இணைந்த 44 ஆண்டுகளுக்குப் பின், அவர் பௌத்தத்தில் இணைந்த அதே நாளில் சென்னையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் ஒடுக்கபட்ட மக்களின் சமூக அரசியல், பண்பாட்டு அடையாளங்களை உலகறியச்செய்யும் நோக்குடன் தொடங்கபட்டு இயங்கிக்கொண்டிருக்கிற www.ambedkar.in தமிழ் இணையதளத்தின் மூலம் பௌத்த நெறியேற்பு விழா மற்றும் பௌத்த நூல்கள் வழங்கும் விழா நடைபெற்றது, விழாவில் வணக்கதிற்க்குரிய பிக்கு அசின் வக்கவா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பௌத்தம் தழுவினர். பௌத்தம் தழுவியவர்களுக்கு www.ambedkar.in சார்பில் (ஒரு டன் அளவுள்ள) பௌத்த நூல்கள் வழங்கபட்டன. விழாவில் எழுத்தாளர்.யாக்கன் பொதுச்செயலாளர் – மாற்றுப் பத்திரிக்கையாளர் எழுத்தாளர் பேரவை, அம்பேத்கர் இண்டர்நேஷ்னல் மிசன் தலைவர் திரு.சாந்தமூர்த்தி, பேராசிரியர் க.ஜெயபாலன், கௌதம சன்னா (கருத்தியல் பரப்பு செயலாளர் – வி.சி.க), www.ambedkar.in நிர்வாகிகள் ஸ்ரீதர், இரமணன், சசிகுமார், ராஜெஷ்வேல், லெமுரியன் ராஜசேகர் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக எழுச்சி தமிழர் வழங்கினார்.
நம்மை எல்லாம் மனிதர்களாய் தலைநிமிர வைத்த மகத்தான தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் உலகின் கவனத்தை ஈர்த்த நாள் அக்டோபர் 14, இன்றைய நாள். 1956 ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் ஒரு மகத்தான வரலாற்றை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் படைத்தார். அது இந்திய கலாச்சார உலகத்தை பண்பாட்டு உலகத்தை அதிர வைத்தது. ஏன் அரசியல் உலகத்தையே அதிர வைத்தது. சமூகத் தளத்தில் ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. புரட்சியாளர் அம்பேத்கர் அக்டோபர் திங்கள் 14ஆம் நாள் லட்சக்கணக்கானரோடு நாகபுரியில் பௌத்தத்தை தழுவினார்.
ஒரு அரசியல் தலைவராய், சர்வதேச அரங்கில் அடையாளம் காணப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைநிமிர்விற்காக – விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்த ஒரு போராளியாய் அடையாளம் காணப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், பண்பாட்டுத் தளத்திலே ஒரு மகானாக உயர்ந்து நிற்கிற அடையாளத்தைப் பெற்றார். பண்பாட்டு தளத்தில் எத்தனையோ மகான்கள் உருவாகியிருக்கிறார்கள். எத்தனையோ மகான்கள் மக்களை வழிநடத்தியிருக்கிறார்கள். அவர்கள் தொடக்கத்தில் இருந்தே ஆன்மிகத் தளத்திலே பண்பாட்டு தளத்திலே களப்பணியாற்றி, அந்த பண்பாடு உலகத்தில் நாயர்களாக வளர்ந்தவர்கள். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் அரசியல் உலகத்தில் அடையாளம் காணப்பட்டவராய் ஒரு மகத்தான அரசியல் தலைவராய் சர்வதேச அரங்கில் அங்கிகரிகப்பட்டவராய் விளங்கியவர். ஆக ஒரு மாபெரும் அரசியல் தலைவர் திடீரென்று ஒரு பண்பாட்டு தளத்தில் ஒரு மகத்தான புரட்சியாளராய் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட போது, அது, ஒரு பெரும் அதிர்வை அனைத்து தளங்களிலும் உருவாக்கியது.
ஒரு அரசியல் தலைவர் ஏன் இந்த முடிவை எடுத்தார். அது அனைத்து தளங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ஒரு அரசியல் தலைவரா அல்லது புரட்சியாளரா அதாவது போராளியா அல்லது ஒரு ஆன்மீக தளத்தில் நிமிர்ந்து நிற்கிற ஓர் மகானா? இது தான் அன்றைக்கு ஒரு பெரும் விவாதமாக மானுட சமூகத்தில் வெடித்தது. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் அரசியல் சிந்தனையாளராகத் தன் வாழ்வைத் தொடங்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொள்ள பாடுபட்டு, போராடி சமூகத் தளத்திலும், பண்பாடு தளத்திலும், அரசியல் தளத்திலும், பொருளாதாரத் தளத்திலும் நீண்டநெடிய ஆய்வுகளை நடத்தி, அதன் மூலம் ஒரு முதிர்ச்சியைப் பெற்று பக்குவத்தைப் பெற்று இந்த முடிவிற்கு வந்தார்.
‘முத்தி அடைதல்’ என்பது ‘முற்றுதல்’ என்று பொருள். முற்றுதல் என்பது முதிர்ச்சி அடைதல் என்று பொருள் முதிர்ச்சி அடைதல் எப்போது ஞானம் பெறுதல் என்று பொருள். அதைத்தான் வேற்று மொழியிலே மாற்று மொழியிலே தீட்சை பெறுகிறோம் அல்லது முக்தி அடைகிறோம் என்று சொல்லுகிறோம். ஞானஸ்தானம் பெருகிறோம். ஒரு மனிதன் ஞானம் பெற்றுவிட்டான் என்று சொல்லுகிற போது ஒன்றிரண்டு பேரைத்தான் விரல்விட்டுச் சொல்கிறார்கள். அப்படி என்றால் மற்றவர்கள் ஞானம் பெறவில்லை என்று தான் பொருள். கௌதம புத்தர் ஞானம் அடைந்தார் போதிமரத்தடியிலே. கௌதம புத்தர் ஞானம் அடைந்தார் என்றால் கௌதம புத்தர் வாழ்ந்த காலத்தில் இருந்த மற்ற மனிதர்கள் எல்லாம் ஞானம் இல்லாமல் இருந்தார்கள் என்று பொருளா?. ஆம்! ஞானம் அடைதல் என்பது வாழ்வின் அடிப்படையை உணர்ந்து கொள்ளுதல் என்று பொருள். ஏன் இந்த பிறப்பை எடுத்தோம் எதற்காக நாம் வாழ்கிறோம் ஏன் மீண்டும் மரித்துப்போகிறோம் என்ற வாழ்வின் அடைப்படையை உணர்தல் என்று பொருள். விதைகள் முளைக்கும், பூக்கள் உதிரும், பழங்கள் அழுகும் இது இயற்கையின் விதி இயங்கியல் விதி. மரத்தை பார்க்கிற போது அது இயற்கையின் படைப்பு அது இயற்கையாகவே கருதுகிறோம். ஆனால் மனிதனைப் அதிலிருந்து பிரித்துப் பார்க்கிறோம். மனிதனும் மரம் தான். விலங்கை பார்க்கிறபோது அது விலங்கு என்று அது இயற்கையின் படைப்பு என்று மனிதனை அதிலிருந்து பிரித்துப் பார்க்கிறோம் மனிதனும் விலங்கு தான்.
இயற்கையின் படைப்புளில் மனிதனும் ஒரு அங்கம். இயற்கையின் படைப்பில் மனிதன் மாறுபட்டவன், வேறுபட்டவன், வலிமை பெற்றவன். வலிமைப் பெற்ற ஒரு விலங்கு மனிதன். சிந்திக்கக்கூடிய ஒரு விலங்கு மனிதன். முக்காலத்தையும் இணைத்து தொகுத்து பார்க்க்க்கூடிய ஒரு விலங்கு மனிதன். நிகழ்பொழுதில் வாழ்ந்து கொண்டிருக்கிற மற்ற உயிர்களிலிருந்து கடந்த காலத்தை பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் எண்ணிப்பார்க்கக் கூடிய ஆற்றலைப் பெற்ற விலங்கு மனிதன். ஆக மனிதர்களும் விலங்குகளும் இயற்கையின் படைப்புக்குள் அடக்கம். மனிதர்கள் ஆற்றல் பெற்ற ஆபத்தான விலங்குகள் என்கிற காரணத்தினால் மனிதர்களை நெறிப்படுத்த தேவை வந்தது. பேராற்றல் பெற்ற விலங்குகளாய் மனிதர்கள் இருக்கின்ற காரணத்தினால் இந்த மனிதர்களை ஒழுங்கு படுத்தவேண்டிய தேவை இருந்தது. இல்லை என்றால் மனிதர்களுக்குள்ளேயே மோதல் மனிதர்களுக்குள்ளேயே அழிவு என்பது தவிர்க்க முடியாதாகிறது. ஆகவே மனிதர்களை நெறிப்படுத்த முயன்றவர்கள் தான் மகான்களாகிறார்கள். மனிதர்களுக்கு வாழ்வின் அர்த்தத்தை சொல்ல முயன்றவர்கள் தான் மகான்களாகிறார்கள்.
19 வயதில் சித்தார்த்தன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். சித்தார்த்தன் என்பவன் முழுதையும் உணர்ந்தவன் முழு வலிமையும் பெற்றவன் என்று பொருள். சித்தார்த்தன் எதை உணரவேண்டும் என்று விரும்பினானோ அதை உணர்வதற்கு குடும்ப வாழ்க்கை பொருந்துவதாகத் தெரியவில்லை. சித்தார்த்தன் எதை அறிய வேண்டும் என்று விரும்பினானோ அதை அறிவதற்கு இந்த உலகியல் சூழல், மானுட சூழல் பொருத்தமானதாக இல்லை. ஆகவே அவன் அனைத்தையும் விட்டு வெளியேறுகிறான். கடும் தவம் புரிகிறான். அந்த கடும் தவம் என்பது என்ன? மனதை சும்மா இருக்க வைத்தல். மனதை அவன் செயல்படவிடாமல் தடுக்கிறான். மனம் என்பது எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிற ஆற்றல் பெற்ற ஒன்று. நாமெல்லாம் ‘ஹார்ட்’என்பது மனம் என்று சொல்கிறோம். ஹார்ட் என்பது ஒரு உறுப்பு அவ்வளவுதான். இதயம் என்பது உடலின் ஒரு உறுப்பு. அதற்கும் மனத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இதயம் தான் மனம் என்று இதயத்திலே கைவைத்துச் சொல்லுகிறோம். மனம் உடலில் எந்த இடத்தில் இருக்கின்றதென்று அடையாளப்படுத்த முடியாது. மனிதனின் மூளையை மனம் என்று கருதுகிறோம் மூளை சிந்திக்கக்கூடிய ஒரு உறுப்பு. மூளை ஆணையிடுகிற ஒரு உறுப்பு. மூளை ஒவ்வொன்றையும் உணருகிற ஒரு உறுப்பு அவ்வளவுதான். ஐந்து புலன்களில் வழியாக நாம் எவற்றையெல்லாம் உணருகிறோமோ அவற்றை உணர்ந்து ஆணையிடுகிற ஒரு உறுப்பு. மூளை மனம் அல்ல. இதயம் மனம் அல்ல. மனிதன் சந்திகிறவற்றை சந்திக்கிற அனைத்தையும், சிந்திக்கிற அனைத்தையும் ஒரு தொகுப்பாக எங்கே பதிவாகி இருக்கிறோ அந்த பதிவு தான் மனம். அனுபவங்களின் தொகுப்பு தான் மனம், சிந்தனைகளின் தொகுப்பு தான் மனம், துன்பங்களின் பதிவு தான் மனம், இன்பங்களின் பதிவு தான் மனம், ஆத்திரங்களின் புள்ளி தான் மனம், கோபங்களின் புள்ளி தான் மனம், ஆசையின் புள்ளி தான் மனம். மனம் என்பது உணர்வுகளின் தொகுப்பு, அதற்கு வடிவம் கிடையாது. அதற்கு ஒரு அமைப்பு கிடையாது. அந்த மனம் எதனோடு சேர்கிறதோ அதோடு வேகமாக பயணிக்கிறது. அந்த மனம் எதனோடு இணைகிறதோ அதனோடு மிகவேகமாக இயங்கத் தொடங்குகிறது. ஆத்திர உணர்வோடு மனம் சேர்கிறபோது மனம் அந்த ஆத்திரத்தைப் பல ஆயிரம் மடங்கு பெருக்குகிறது. துக்கத்தோடு மனம் இணைகிறபோது அத்துக்கத்தை வலிமைப்படுத்தி விடுகிறது. இன்பத்தோடு மனம் இணைகிறபோது அந்த இன்பத்தை பலமடங்காக பெருக்கிவிடுகிறது. ஆக மனம் என்பது எதனோடு இணைகிறதோ அதனோடு இணைந்து இயந்து வெகுவாக, வேகமாக இயங்கத் தொடங்குகிறது. அப்படிப்பட்ட மனம் செயல்படாமல் இருக்க வைத்தலின் மூலம் மனிதன் ஞானம் அடைகிறான். அந்த மனதை செயல்பாடமல் தடுத்தல் என்பது தான் ஞானம் பெறுதலின் அடிப்படியான ஒன்று. உடல் எப்போதும் இயங்க வேண்டும், மனம் இயங்காமல் இருக்க வேண்டும் என்று மகான்கள் சொல்கிறார்கள். தியானத்தின் அடிப்படை அது தான். இயங்காமல் இருக்கின்ற உடல் சிதைந்துவிடும், இயங்கிக்கொண்டே இருக்கிற மனம் நம்மை சிதைத்து விடும். ஆக எந்த தீங்கான ஒன்றோடு மனம் இணைந்து நிற்கிறதோ, அந்தத் தீங்கின் திசையை நோக்கி நம்மை இழுத்துக்கொண்டே போகும். உன்னை பயம் வந்து பற்றுகிற போது அந்த பயத்தை நீ பற்றிக்கொள்வாய். அந்த பயத்தில் இருந்து மனம் விடுபடாமல் பயத்தை பற்றிய மேலும் கற்பனைகளை அது உருவாக்கும். பயத்தை பற்றிய அதீத கற்பனைகளை அது வளர்த்துக்கொடுக்கும். ஆகவே பயத்தையே அண்டவிடாமல் தடுத்தல், கோபத்தை அண்டவிடாமல் தடுத்தல், ஆசையை அண்டவிடாமல் தடுத்தல், அப்படியே அந்த உணர்வுகள் வந்தாலும் அதை பற்றிக்கொள்ளாமல் தடுத்தல் என்பது தான் மகான்களுக்கும், சாதாரண மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு. உணர்வுகள் வரும் வந்த வேகத்தில் அது வடிந்து விடும். ஆசைகள் வரும் அது வந்த வேகத்தில் அது வடிந்து விடும். கோபம் வரும் அது வந்த வேகத்தில் அது வடிந்து விடும். ஆனால் அந்த கோபத்தை எவன் பற்றிக்கொண்டே இருக்கிறானோ அவன் கோபக்காரனாகவே இருக்கிறான். எதிர்காலத்தை அவன் இழந்துவிடுகிறான். நிகழ்பொழுதை அவன் இழந்துவிடுகிறான். அந்த கோபம் அவனுக்கு வன்மமாக மாறுகிறது, அந்த கோபம் பழிவாங்கும் வெறியைத் தருகிறது, அந்த கோபம் வன்முறை நோக்கியிட்டுச்செல்கிறது ஏன் என்றால் கோபம் என்ற உணர்வை இவன் பற்றிக்கொள்கிற காரணத்தினால். ஆகவே அந்த உணர்வுகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்கிற ஆற்றல் பெற்றவன் தான் மனிதன்.
இந்த வழிமுறைகளை, நெறிமுறைகளை சொல்லித்தருகிற முனைப்பை கொண்டவர்கள் மகான்களாக மாறுகின்றனர். அந்த வரிசையில் கௌதம புத்தர் இந்த உலகத்தில் மானுடச் சமூகத்தில் ஒரு நிலையான அமைதியை உருவாக்க வேண்டுமானால், வன்முறையற்ற ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டுமானால், மனிதர்களுக்கு இடையிலான போரை நிறுத்த வேண்டுமானால் மனிதன் தன்னிலிருந்து ஒழுக்கநெறிகளை பின்பற்ற வேண்டும். அது தான் பஞ்சசீலம். நீ ஒரு இடத்தில் பொய் சொன்னால், அந்த ஒன்றை மறுபடியும் நியாயப் படுத்துவதற்காக தொடர்ந்து பொய் சொல்லக்கூடியவனாகவே உன்னை ஆளாக்கிக் கொள்ளுவாய். ஆகவே பொய் சொல்லாதே. இப்படி ஒவ்வொருவனும் தன்னை பொய் சொல்லாமல் வளர்த்துக்கொண்டால் யாரும் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எல்லோரும் பொய் சொல்லுகிற போது நான் மட்டும் உண்மையை சொன்னால் நான் எப்படி அந்த இடத்திலே ஒரு ஆளுமை மிக்கவனாக வாழ முடியும்?. ஆகவே நானும் பொய் சொல்லவேண்டியது தேவைப்படுவதாக அமைந்துவிடுகிறது என்று நம்மை நாமே நியாப்படுத்திக் கொள்கிறோம்!. ஆகவே தான் கௌதம புத்தர் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை ஒழுக்க நெறிகளுக்குள் ஆட்படுத்திக்கொண்டு, தன்னை ஞானம் பெற செய்து கொண்டால் யாரும் யாருக்காவும் சண்டையிட வேண்டிய அவசியம் இல்லை.
எல்லோரும் குழந்தைகளாக இருந்தால் மதம் தேவைப்படாது. எல்லோரும் குழந்தைகளாகவே இருந்தால் இயக்கங்கள் தேவைப்படாது. மகான்கள் தேவைப்பட மாட்டார்கள். குழந்தை ஏன் குழந்தையாகவே இருக்கிறது குழந்தை உள்ளத்தோடு இருக்கின்றது என்றால் குழந்தைகளுக்கு அனுபவங்கள் குறைவு, குழந்தைகளுக்கு சந்திப்பு குறைவு, குழந்தைகள் நிழ்வுகளின் ஊடாக தன்னை ஆட்படுத்திக் கொள்கிற போக்குகள் குறைவு. அதனால் பதிவுகளின் தொகுப்பு குறைவாக இருக்கின்ற காரணத்தினால் அது தெய்வமாக இருக்கின்றது. குழந்தைக்கு ஒவ்வொன்றாக மனதில் பதிய பதிய நாம் பேசுவது பதிகிறது, நாம் சிரிப்பது பதிகிறது, சந்திகிற சந்திப்புகளின் தொகுப்பாக மாறுகின்றன. இவ்வாறு குழந்தை, பதிவுகளின் தொகுப்பு என்கிற மனதிற்கு ஆளாகிற போது மனம் என்கிற ஒன்று உருவாகிறபோது, அவன் பொய் சொல்ல தொடங்குகிறான், ஏமாற்ற தொடங்குகிறான், வன்முறைச் செய்ய தொடங்குகிறான், பிறரை ஏய்க்க தொடங்குகிறான். பிறரை ஏய்ப்பதின் மூலம் தான் வாழமுடியும் என்று நம்புகிறான் அதுதான் ஆற்றல் என்று நம்புகிறான். இதனால் மானுட சமூகத்தில் அமைதி கெட்டு விடுகிறது. ஆகவே உலகத்தில் மானுடத்தில் அமைதியை நிலைநிறுத்துவதற்கு ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை நெறிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற வழிமுறைகளை, வாழ்க்கை நெறிமுறைகளை சொல்லத் துணிந்த முதல் புரட்சியாளர் தான் கௌதம புத்தர்.
உலகத்தில் எத்தனையோ மதங்கள் உருவாகியிருக்கலாம் எத்தனையோ மகான்கள் தோன்றியிருக்கலாம் ஆனால் கௌதம புத்தரின் வாழ்க்கை நெறிகள் என்கிற அடிப்படைச் சட்டத்தை மீறி வேறு எதையும் புதிதாக வேறுயாரும் சொல்லிவிடவில்லை. எந்த மதமும் சொல்லவில்லை. அடிப்படை தத்துவத்தை அவர் உணர்ந்து மானுடத்திற்கு கொடையாக வழங்கியிருக்கிறார். 2500 ஆண்டுகள் அதற்கான வரலாறு!. ஆனால் உண்மையிலேயே கௌதம புத்தர் எந்த ஆண்டு பிறந்தார் எந்த ஆண்டு இறந்தார் என்ற பதிவுகள் இல்லை. யூகத்தின் அடிப்படையில் தான் சொல்லப்படுகிறது. கி.மு ஆறாம் நூற்றாண்டு என்று சொல்லப்படுகிறது. 80 ஆண்டுகள் வாழ்ந்தார் என்ற பதிவுகள் இருக்கின்றன. அப்படிபட்ட கௌதம புத்தர், அனைவருக்கும் பொதுவான வாழ்க்கை முறைகளைச் சொல்லியிருக்கிறார். இஸ்லாம் சொல்லுகிற நெறிமுறைகளாக இருந்தாலும், கிருத்துவம் சொல்லுகிற நெறிமுறைகளாக இருந்தாலும், உலகத்தில் புதிதுபுதிதாக எந்த மார்கம் சொல்லுகிற நெறிமுறைகளாக இருந்தாலும் அனைத்திற்கும் constitution law என்பது புத்திசம் தான். அனைத்திற்குமான அடிப்படைச் சட்டம், அரசியலைப்பு சட்டம் அல்லது பண்பாட்டு அடிப்படை சட்டம் என்பது பௌத்தம் தான். அதற்கு மேல் ஆழமாக சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை. எனவே தனி மனித ஒழுக்கத்திலிருந்து தான் சமூக ஒழுக்கத்தை கட்டமைக்க முடியும், சமூக ஒழுக்கத்திலிருந்துதான் பொது அமைதியை, பொது ஒழுக்கத்தை நிலைநாட்ட முடியும், இந்த கருத்தியல் அடிப்படையில் உருவானது தான் பௌத்த மார்க்கம்.
அருமைத் தோழர்களே, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் சுரண்டலுக்கு ஆளாகிக்கிடக்கிறார்கள், ஆயிரம் தலைமுறைகளாக அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு கிடக்கிறார்கள் இவர்களை எழுச்சி பெற செய்ய வேண்டும், மீட்சி பெறச் செய்யவேண்டும் என்றால் இவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து போரிட வேண்டும். போரிட வேண்டுமானால் எதிரிகளின் கைகளில் இருக்கின்ற ஆயுத்தை போன்ற வலிலையான ஆயுதம் நமக்கு தேவைப்படுகிறது. ஆயுதம் ஏந்திய ஒரு புரட்சியை நடத்துவதா, அல்லது அகிம்சா வழியிலே மக்களை நெறிப்படுத்தி அவர்களை மீட்பதா என்கிற போராட்டம் தான் 21 ஆண்டுகள் புரட்சியாளர் அம்பேத்கர் நடத்திய ஆய்வுப் போராட்டம். 1935 ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியிலே கூறுகிறார், நான் பிறக்கும் போது என்னை இந்துவாக முத்திரை குத்தியிருக்கிறார்கள் ஆனால் இறக்கும் போது நான் இந்துவாக சாகமாட்டேன் என்ற உறுதியை தந்தார், ஏன்?. உலகத்திலேயே மானுட சமத்துவதை மறுதளிக்கின்ற ஒரே மதம் இந்து மதம் மட்டுமே. பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வை கற்பித்திருக்கிற ஒரே மதம் இந்து மதம் தான். சமத்துவத்திற்காக போராடுகிற தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், மானுட சமத்துத்தை நிலைநாட்ட வேண்டும் என்று போராடுகிற புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், அரசியல் தளத்திம் மட்டுமே நின்று சாதிக்க முடியாது ஏன் என்றால் அரசியல் என்பது வெறும் அரசியலாக இல்லை, அது மதம் சாந்த அரசியலாக இருக்கிறது. ஏன் என்றால் மதம் என்பது சமூகத்தை வழிநடத்தக்கூடியதாக இருக்கின்றது. சமூக மாற்றத்திற்கு இந்த அனைத்து தளங்களிலிருந்தும் களப்பணியாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. அரசும் மதமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். மதம் இல்லாத அரசுகள் இல்லை, அரசியல் இல்லாத மதமும் இல்லை. இதனடிப்படையில் தான் ஒவ்வொரு நாட்டிற்குமான அரசியல் அமைப்புச் சட்டங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆசிய நாடுகளெல்லாம் பௌத்த நாடுகள், அராபிய நாடுகள் எல்லாம் இசுலாமிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் எல்லாம் கிருத்துவ நாடுகள், உலகில் உள்ள அத்தனை நாடுகளும், தங்களுக்கான அரசியலைப்புச் சட்டத்தில் தனது அரசியல், மதம், என்ன என்பதை பிரகனப்படுத்தியிருக்கிறார்கள். ஆகவே மதம் என்பது அரசியல் சார்பற்றது என்று சொல்ல முடியாது. அரசியல் என்பது மதச்சார்பற்றது என கூற முடியாது. எனவே அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால், மதம் என்ற தளத்தில் நாம் பணியாற்ற வேண்டிய தேவையிருக்கிறது. இசுலாமியர்கள் தங்களுக்கான அரசியலை தங்களின் மதத்தின் மூலமாக நெறிப்படுத்தி, வலிமைப்படுத்தியிருக்கிறார்கள். இந்துக்கள் தங்களுக்குக்கான அரசியல் ஆளுமையை, இந்து மதத்தினூடாகத் தான் சாதித்திருக்கிறார்கள். கிருத்துவர்கள் தங்களின் அரசியல் ஆளுமையை கிருத்துவ மதத்தினூடாகத்தான் நெறிப்படுத்தியிருக்கிறார்கள். மக்களை கிருத்துவர்களாக வளர்த்து, கிருத்துவர்கள் தங்களுக்கு தங்கள் ஆட்சியை தாங்களே தேந்தெடுத்துக்கொள்கிற அரசியல் வழிமுறைகளை கையாண்டு வருகிறார்கள். ஆனால் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் இசுலாமியர்களாகவும் இல்லை கிருத்துவர்களாகவும் இல்லை இந்துக்களாகவும் இல்லை நெறிபடுத்தப்படுகிற எந்த தளமும் இல்லாதவர்களாக இவர்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே நெறிப்படுத்துவதற்கு இவர்களுக்கு எந்த பண்பாட்டு தலைமையும் இல்லை அரசியல் தலைமையும் இல்லை.
தலித்துக்கள் என்று சொல்லப்படுகிற இவர்கள் எந்த இந்துமத உபதேசிகளும், உபதேசிகள் சொல்லுகிற, அவர்களுது உரைகளை கேட்கிற வாய்ப்புகளையும் இவர்கள் பெறவில்லை. சங்கராச்சாரியின் உரைகளை கேட்க அந்த மடத்திலே அனுமதிக்கப்படுகின்றார்களா?. கிருபானந்தவாரியாரின் உரைகளை எத்தனை தலித்துகள் கேட்டிருப்பார்கள். அவர் கோயில்களுக்கு உள்ளே உட்கார்ந்து தான் பேசுவார். கோயிலுக்குள்ளே இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆகவே இந்துமத மகான்கள் சொல்லும் கருத்துதுரைகளையும் கேட்பதற்கு கூட இவர்களுக்கு வாய்ப்பில்லை. இவர்கள் இசுலாமியர்களாக இல்லாத காரணத்தினால் மசூதிகளிலே அந்த அற உரைகளை இவர்களால் கேட்க இயலாது. இவர்கள் கிருஸ்துவர்களாக இல்லாத காரணத்தினால் அந்த கிருத்துவ ஞானிகள் சொல்லும் உபதேசங்களை இவர்கள் கேட்க வாய்ப்பில்லை. ஆக இவர்களைப் பண்பாட்டுத் தளத்தில் வழிநடத்துவதற்குரிய எந்த நிறுவனமும் இல்லை, எந்தத் தலைமையும் இல்லை எனவே, தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இவற்றையெல்லாம் ஆய்வு செய்து பண்பாட்டுத்தளத்திலே, ஆன்மீகத் தளத்திலே இம்மக்களை நிறுவனமயப்படுத்தி வழிநடத்த வேண்டிய தேவை இருக்கின்றது என உணர்ந்து, இவர்களை எப்படி அந்த தளத்திலே அணி திரட்டுவது என்பது பற்றி ஆராய்து பார்த்த போது ஒவ்வொரு மதத்தையும் ஒவ்வொரு மதம் சொல்லுகின்ற அந்த கருத்துக்களையும் ஆராய்ந்து பார்க்கிறார். கிருஸ்துவத்தை உருவாக்கியவர் ஏசு பெருமான். ஏசு பெருமான், கடவுளின் பிள்ளை என்று தன்னை சொல்கிறார். அவரே சொல்கிறார் நானே உனக்கு ஜீவனும், வழியுமாய் இருக்கிறேன் என்று. அவரே சொல்கிறார் வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருகிறேன் என்று, அவரே சொல்கிறார். அவர் சொல்லுவதாகவே பைபில் சொல்லுகிறது. நான் உனக்கு வழிகாட்டியாக இருக்கிறேன் நான் உனக்கு ஜீவனாய் இருக்கிறேன் நான் கடவுளால் கர்பம் தரிக்கப்பட்டவன் கடவுளின் ஆணைப்படி, நான் மரிய அன்னையின் வயிற்றில் உருவானவன் நான் கடவுளின் குழந்தை என்று ஏசு சொல்கிறார். இது புரட்சியாளர் அம்பேத்கரின் ஆய்வில் சொல்லப்படுகிற கருத்து.
முகமது நபிகள் என்ன சொல்கிறார் என்றால், நான் கடவுளின் பிள்ளை என்று தன்னை அவர் சொல்லிக் கொள்ளவில்லை, கடவுளின் குழந்தை என்று அடையாளப் படுத்திக்கொள்ளவில்லை. ஆனால் கடவுளால் அனுப்பப்பட்ட தூதர் என்று சொல்கிறார். நபி, என்றால் இறைத்தூதர் என்று பொருள். கடவுளால் அனுப்பட்ட தூதர் நான் என்கிறார். இத்தனை காலத்தில், எத்தனையோ லட்சக்கணக்கான தூதர்கள் வந்தார்கள், மானுடத்தை வழிநட்த்தினார்கள் ஆனால் இந்த மானுட சமூகத்தின் கடைசி தூதர் நான் தான் என்று சொல்லுகிறவர் முகமது நபி. முகமது நபிகளுக்கு முன்னால் லட்சக்கணக்கான தூதர்கள் என்று அவர் வரிசைபடுத்துகிற அந்த அட்டவணையில், ஏசு பெருமானும் ஒரு தூதுவராக அந்த பட்டியலில் வருகிறார். கௌதம புத்தரும் கூட இறைதூதர் பட்டியலில் தான் இடம் பெருகிறார். ஆக எத்தனையோ தூதர் ஆயிரக்கணக்கில் அல்ல லட்சக்கணக்கில் வந்தார்கள் போனார்கள். மானுட சமூகத்திற்கு கடைசியாக இறைவனால் அனுப்பப்பட்ட கடைசி தூதர் நான் தான் என்றும் எனக்கு பின்னால் யாரும் இல்லை, என்றும் முகமது நபி அவர்களால் சொல்லப்படுவதாக புரட்சியாளர் அம்பேத்கரின் ஆய்வில் சொல்லப்படுகிறது.
இந்துக்களின் வழிகாட்டி யார்?
கிருஸ்துவ மதத்தை உருவாக்கியவர் ஏசு பிரான், இஸ்லாம் மதத்தை உருவாக்கியவர் முகமது நபி, இந்துமதத்தை உருவாக்கியவர்?
ஆனால் இந்துக்களால் நம்பப்படுகிறவர் கிருஷ்ண பர்மாத்மா. பகவத் கீதை தான் இந்துக்களின் வேதம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் உள்ளபடியே பார்க்க போனால் இந்து மத்த்திலே வைணவ பிரிவுக்குத்தான் அவர் தலைவர். சைவ பிரிவுக்கு அவர் தலைவர் அல்ல, அப்படி சொல்லப்போனால் இந்து மதம் என்பது ஒரு மதமாக இருந்தது இல்லை. அதில் பல வழிபாட்டு பிரிவுகள் இருந்தன. சைவப் பிரிவு, வைணவப் பிரிவு, அதற்குள்ளேயே எக்கசக்கமான உட்பிரிவுகளும் இருந்தன. ஆக வைணவப் பிரிவில் ஒரு அவதாரம் கிருஷ்ண அவதாரம். அவர் வந்து சொன்னதாக சொல்லப்படுகின்ற பகவத் கீதையே இந்துக்களின் வேதமாக சொல்லப்படுக்கிறது. அதிலே கிருஷ்ணன் என்ன சொல்கிறார் என்றால் நானே கடவுள் என்று சொல்லுகிறார்.
இயேசு கடவுளால் உருவாக்கப்பட்ட குழந்தை என்று தன்னை சொல்லிக்கொண்டார் , முகமது நபிகள் தன்னை கடவுளால் அனுப்பப்பட்ட கடைசி தூதர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார், கிருஷ்ணன் நாம் தான் கடவுள் என்னை வணங்குங்கள் என்று சொன்னார். இவற்றை பௌத்ததோடு ஒப்பிடுகையில் கௌதம புத்தர் கடவுள் என்ற கருத்துக்குள் நுழையவே இல்லை. கடவுள் என்ற கருத்தையே அவர் பேசவில்லை. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்திற்குள்ளேயே அவர் நுழைய வில்லை. தான் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்றும் சொல்லவில்லை. தன்னை கடவுளின் குழந்தை என்றும் சொல்லவில்லை. நான் தான் கடவுள் என்றும் சொல்லவில்லை. அல்லது யாரோ ஒரு கடவுள் இருக்கிறார் என்றும் சொல்லவில்லை. உலகின் முதல் பகுத்தறிவு தந்தை கௌதம புத்தர் , உலகின் முதல் விஞ்ஞான பூர்வமான ஞானி கௌதம புத்தர். மனிதனின் உணர்வுகளை ஆராய்ந்தவர் மானுடத்தின் வாழ்க்கை முறைகளை ஆராய்ந்தவர். ஆகவே இந்த மானுடம் அமைதியாக வாழ வேண்டும் என்று சிந்தித்து ஞானம் பெற்றவர்.
துன்பம் மனிதனுக்கு வந்தே தீரும் ஏனென்றால் இன்பம் மனிதனுக்கு வருவதினால் இரவு வந்தே தீரும் ஏனென்றால் பகல் வருவதினால் ஆகவே இது இயற்கையின் முரண்பாடு. இந்த இயற்கையின் முரண்பாடுகளின் தொகுப்பு தான் வாழ்க்கை. இந்த இயற்கையின் முரண்பாடுகளின் தொகுப்பு தான் இயக்கம். இயங்கிக்கொண்டே இருக்கின்ற இந்த இயக்கம் என்பது இந்த முரண்பாடுகளின் விளைச்சல்.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பௌத்தத்தையும் மார்க்சியத்தையும் ஒப்பிட்டு ஆராய்சி செய்கிறார். மார்க்சியம் என்பதும் பௌத்தம் என்பதும் ஒன்றுதான் என்று காரல் மார்க்ஸ்க்கு முன்பே இயங்கியல் விதிகளை சொன்னவர் கௌதம புத்தர்! புரட்சியாளர் ஆய்வுகளில் இருந்து அவர் உணர்த்துகிற உண்மை. இப்படித்தான் இயற்கையின் படைப்பில் இருந்து மனிதன் தோன்றினான், இப்படித்தான் இயற்கையின் படைப்பில் இருந்து மனிதன் இயங்குகிறான், இப்படித்தான் உலக இயக்கங்கள் இயங்கிக்கொண்டே இருகின்றன, பிரபஞ்சம் இப்படித்தான் இருக்கின்றது என்பதை எங்கோ ஒரு மூளையில் இருந்து அவற்வை உணர்ந்தவர் கௌதம புத்தர். மார்க்ஸுக்கும் கௌதம புத்தருக்கும் உள்ள ஒரே வேறுபாடு கௌதம புத்தர் ஒவ்வொரு தனிமனிதனும் அகிம்சா வழியில் தன்னை திருத்திக்கொள்வதின் மூலம் இங்கு புரட்சி நடக்கும் என்று சொன்னவர். காரல் மார்க்ஸ் இங்கே நிலுவுகின்ற ஆதிக்க சக்திகளுக்கு எதிராக, ஆதிக்க சக்திகளின் ஆயுதங்களுக்கு எதிராக உழைக்கும் வர்க்கம் ஆயுதம் ஏந்த வேண்டும், போராட வேண்டும் அவற்றை அடித்துநொருக்கி சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்று காரல் மார்க்ஸ் சொல்கிறார். இவர் materialistic கௌதம புத்தர், அவர் idealistic காரல்மார்க்ஸ். கவுதபுத்தர் idealistic காரல் மார்க்ஸ். கௌதம புத்தருக்கும் காரல்மார்க்ஸ்க்கும் இடையிலேயே அவர் கருத்து முதல்வாத அடிப்படையிலான காரல்மார்க்ஸ் யார் கௌதம புத்தர். இவர் பொருள் முதல்வாத கவுத புத்தர் யார் காரல்மார்க்ஸ். புரட்சியாளர் அம்பேத்கரின் ஆய்வில் இருந்து நாம் அப்படிதான் பார்க்க முடிகிறது.
இந்த உலகத்தில் இரண்டு வாதங்கள் தான் இருக்கின்றன. பொருளை முதன்மைப் படுத்தி பேசுகிற வாதம் பொருள் முதல்வாதம், கருத்தை முதன்மைப் படுத்தி பேசுகிற வாதம் கருத்து முதல்வாதம். The idealistic based approch சிந்தனை எண்ணம் ஆகியவற்றை அடிப்படையிலேயே மாற்றிக்கொண்டால், ஒவ்வொருவனும் மாற்றிக் கொண்டால் இங்கு புரட்சியை செய்ய முடியும், மாற்றத்தை உருவாக்க முடியும். அதற்கு இந்த சூழல்களில் நாம் சில மாற்றங்களை பருண்மையாகவே செய்ய வேண்டும். அதற்குத்தான் புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி இது பாலிமொழியிலே சொல்வதனால் ஏதோ என்று நாம் கருதுதுகிறோம். புத்தம் சரணம் கச்சாமி என்றால் அறிவே உன்னை வணங்குகிறேன் என்று தான் பொருள். புத்தம் என்பது தான் புத்தி என்று வருகிறது.புத்தி என்பது தான் அறிவு ஞானம் என்று பொருள். புத்தம் சரணம் கச்சாமி என்றால் ஞானத்தை நான் சரணடைகிறேன். அறிவே உன்னை வணங்குகிறேன். அறிவை வணங்க சொன்னவர் தான் கௌதம புத்தர். கடவுளை வணங்கச் சொல்லவில்லை. புத்தம் சரணம் கச்சாமி அதை எப்படி செய்ய முடியும் அதை எப்படி அடைய முடியும் என்றால் தம்மம் சரணம் கச்சாமி தம்மத்தை யார் தருமத்தை யார் கடைபிடிக்கிறார்களோ தம்மம் என்பது தான் தர்மம், தம்மம் தர்மம் என்பது தான் தமிழிலே அறம் என்று சொல்லப்படுகிறது. அறம் என்பது நீங்கில்லாதது என்று பொருள். பொல்லாங்கு, பொய், போதை, திருட்டு பிழையான காமம் இல்லாதது என்று பொருள். ஆக அறத்தை ஒழுக்கத்தை எவன் கடைபிடிக்கிறானோ அவன் அறிவை நோக்கிப் பயணப்படுவான். அவனால் தான் அறிவையே தேட முடியும். ஞானத்தை அடைய முடியும். ஆக அறிவே உன்னை வணங்குகிறேன் என்று எவன் ஒருவன் சரணடைகிறானோ அவனால் தான் அந்த தம்மத்தை கடைபிடிக்க அவனால் ஒத்துக்கொள்ள முடியும். இந்த தம்மத்தையும் அறிவையும் ஒருவன் பெருவதற்கு அவன் அமைப்பு வழியாக செயல்பட வேண்டும். சங்கம் சரணம் கச்சாமி – சங்கம் என்றால் அமைப்பு என்று பொருள் organisation. சங்கம் என்றால் இயக்கம் என்று பொருள். ஏதாவது ஒரு அமைப்பின் வழியாக நீ இயங்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு system குள் வரவேண்டும். திரிசரணத்தைச் சொல்ல வேண்டும், இந்த 22 உறுதிமொழிகளை புரட்சியாளர் அம்பேதர் அன்று ஏற்றுக்கொண்ட அந்த உறுதிமொழிகளை நாமும் இன்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறோம். கௌதம புத்தரின் சிலையை நமக்கு சமமாக வைக்கக் கூடாது நமக்கு மேலான பீடத்தில் வைக்க வேண்டும் என்று நாம் சொல்கிறோம். இவை எல்லாம் ஒரு சிஸ்டத்தை உருவாக்கக் கூடிய விதிமுறைகள். ஆகவே இதற்கு கட்டுப்படுகிறவன் தான் ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்வான் ஒழுக்கத்தை கற்றுக்கொள்கிறவன் தான் ஞானத்தை அடைவான் ஞானத்தை அடைகிறவன் தான் முக்தி பெருகிறான். ஆக மனிதன் ஞானம் பெருவதற்கு முக்தி பெருவது எங்கிருந்து தொடங்குகிறது என்றால் அமைப்பாவதிலிருந்து தொடங்குகிறது.
எனவே மதம் என்பது மார்க்கம் என்பது மானுடத்தை நெறிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு மகத்தான வழிமுறை – வாழ்க்கை முறை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இதையெல்லாம் ஒப்பிட்டு பார்க்கிறபோது நம்முடைய பூர்வீக வாழ்க்கை முறை பௌத்த முறையாக இருந்திருக்கிறது. எல்லா மதங்களிலும் அடிப்படையான வாழ்க்கை முறைய சொல்லுகிற நெறிமுறையைக் கொண்டிருக்கிறது பௌத்தம், எனவே நான் பௌத்தத்தை ஏற்றுக்கொள்கிறேன் என்று பௌத்தத்தை தழுவினார். இது மதமாற்றம் அல்ல, மதம் தழுவுதல் Converstion அல்ல Embracing. என்பது வேறு. ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறினால் அது கன்வெர்ஷன் ஒன்றுமில்லாத நிலையிலிருந்து ஒன்றை எற்றுக்கொள்ளுதல் என்றால் அது எம்ராஸ்மெண்ட்(தழுவுதல்). தலித்துக்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள் இன்றைக்கு மதமற்றவர்களாய் சாதியற்றவர்களாய் சிதறடிக்கப்பட்டு கிடப்பவர்கள் எனவே அவர்கள் பௌத்தத்தை தழுவுகிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் மதம் மாறவில்லை மதம் தழுவினார். புரட்சியாளர் அம்பேத்கர் இந்து என்று யாரோ சொன்னார்கள் என்னை இந்து என்று முத்திரை குத்தினார்கள் ஆனால் நாங்கள் இந்து கோயிலுகளுக்குள்ளே அனுமதிக்கப் பட்டவர்கள் அல்ல இந்து உபன்யாசிகளின் உபதேசங்களை கேட்க அனுமதிக்கப்பட்டவனல்ல, இந்து தருமங்களை ஏற்று செயல்படுகிற வாய்ப்புக்கள் வழங்கப்பட்டவனல்ல ஏன் என்றால் அதை நான் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வந்தவன் என்னுடைய மூதாதையர்கள் எதிர்த்தார்கள் எதிர்த்ததினால் எங்களை நசுக்கினார்கள் அடக்கினார்கள் ஒடுக்கினார்கள் எனவே இன்றைக்கு சிதறடிக்கப்பட்டு கிடக்கிறோம் அப்படி சிதறடிக்கப்பட்ட இந்த சமூகத்தையெல்லாம் ஒன்று சேர்ப்பதற்கு இவர்கள் அரசியலாய் எழுச்சி பெற முடியாத நிலையில் ஆன்மீக தளத்தில் பண்பாட்டு தளத்தில் இவர்களை அமைதி வழி முறையில் இணைக்க முடியும் என்று நம்பிய காரணத்தினால் தான் ஒரு மாபெரும் மகத்தான அரசியல் தலைவர், ஒரு மாபெரும் மகத்தான ஆன்மீகத் தலைவராக மாறினார். இன்றைக்கு கௌதம புத்தர் அருகில் வைத்துப் போற்றப்படக்கூடிய ஒரு மகானாக புரட்சியாளர் அம்பேத்கர் வடிவம் பெற்றிருக்கிறார்.
தோழர்களே, இன்றைக்கு ஒரு 500 பேரை வரவழைத்து வந்தவர்களிடம் ஒரு விண்ணப்பத்தை கொடுத்து பௌத்தத்தை ஏற்றுக்கொள்வதாய் இருந்தால் எழுதிக்கொடுங்கள் என்று நாம் சொல்லுகிறோம் ஆனால் இதை வெற்றிகரமாக செய்ய இப்பிரச்சாரத்தை இப்படிபட்ட நிகழ்ச்சிகளுக்கு முன்பே நாம் செய்ய வேண்டும். www.ambedkar.in அல்லது வேறு எந்த அமைப்பாக இருந்தாலும் கிராமப்புரங்களுக்கு சென்று பௌத்த பிரச்சாரங்களை செய்து அதற்கு அவர்கள் உடன்பட்ட பிறகு அவர்களை ஒன்று சேர்த்து அதை வெற்றிகரமாகச் செய்ய வேண்டும். அதுதான் நாம் அமைப்பு முறைப்படி நாம் நடத்துகிற வெற்றிகரமான செயலாக இருக்கும். வருகிறவர்கள் வாங்கள் என்று கூறி பௌத்தத்தை தழுவுங்கள் என்றால் அவர்களின் ஏற்கனவே சிதறிக்கிடக்கின்ற மனம் ஒருமுகப்படுவது ஒரு நிகழ்வில் அமைந்துவிடாது. ஒரே நிகழ்வில் வென்றுவிட முடியும் என்பது வெற்றிகரமானதல்ல- சாத்தியமானதல்ல.
திருமாவளன் பேச்சை கேட்டு சில லட்சம் பேர் ஒரு அரசியல் சக்தியாக வந்திருக்கிறார்கள் என்றால் அது வேறு நோக்கங்களைச் சொல்லி வேறுகாரணங்களைச் சொல்லி திரட்டப்பட்டிருக்கிற ஒரு மக்கள் திரள். அந்த மக்கள் திரளிடம் போய் நீங்களெல்லாம் பௌத்தர்களாக மாறுங்கள் என்று சொன்னால் அந்த திரளில் இருக்கிற இசுலாமியர்கள் வெளியேறிவிடுவார்கள், அந்த திரளில் இருக்கிற கிருத்துவர்கள் வெளியேறிவிடுவார்கள், அந்த திரளில் இருக்கிற இந்துக்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறவர்கள் வெளியேறிவிடுவார்கள். திருமாவளன் பின்னால் ஐநூறு அல்லது ஆயிரம் பேர்கள் வருவார்கள். அவ்வளவு தான் எஞ்சுவார்கள். நடைமுறை சாத்தியம் என்பதை எல்லாம் கவனிக்க வேண்டும். நீ ஏன் இன்னும் சேரவில்லை என்று என்னை கேட்கிறார்கள். கௌதம சன்னா சொன்னதைப் போல வேறு எந்த வாழ்க்கைமுறையையும் பின்பற்றாத ஒருவன் பிறப்பின் அடைப்படையிலேயே அவன் பௌத்தன் தான். வேறு எந்த மத அடையாளங்கையும் சுமக்காதவன் பௌத்தன் தான். ஆக, பௌத்த மதத்தில் சேர்ந்து என்னை அடையாளப்படுத்திக் கொண்டால் நான் தமிழகத்தில் இருக்கிற சில ஆயிரம் பேருக்கு உபன்யாசம் சொல்லக்கூடியவனாய் உபதேசம் சொல்லக்கூடியவனாய் அல்லது அவர்களோடு சேர்ந்து வாழக்கூடியவனாய் நான் சுருங்கிப்போவேனேத் தவிர ஒரு விரிந்த தளத்திலே பரந்த தளத்திலே அனைத்து தரப்பைச் சார்ந்த மக்கள் தளத்திலே பணியாற்ற முடியாதவனாய் நான் ஒடுக்கப்பட்டுவிடுவேன், சுருக்கப்பட்டுவிடுவேன். ஆகவே நான் எந்த கருத்தை ஆதரிக்கிறேன் என்பதைத்தான் பார்க்க வேண்டுமே தவிர நான் எந்த அடையாளத்தை சுமக்கிறேன் என்பதல்ல முக்கியம். நான் என்னுடைய தளத்தை மேலும் மேலும் விரிவுபடுத்த வேண்டுமே தவிர நான் என்னை சுருக்கிக்கொள்வதனால் எந்த நற்பயனும் விளைந்துவிடப்போவதில்லை. எனவே இக்கேள்விக்கு இதற்குமேல் நான் விரிவாக விடை சொல்ல விரும்பவில்லை.
அடிப்படையில் ஒவ்வொரு தலித்தும் பௌத்தன் தான், பிறவி அடிப்படையிலே அவன் பௌத்தனாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறான். ஆனால் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுவதற்கு இந்த அடையாளங்களோடு தான் அவற்றை கடைபிடிக்க வேண்டும் என்பது அல்ல. இந்தக் கருத்துக்களை பரப்புகிற கடைமைகளை ஏற்றுக்கொள்வோம் அந்த உறுதிமொழியை விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தர நான் கடமைப்பட்டிருக்கிறேன். எந்த ஒரு இயக்கமும் வெற்றிபெற வேண்டுமானாலும் அந்த இயக்கம் அடிப்படையிலே பௌத்தநெறிகள் சொல்லுகின்ற அந்த வாழ்க்கை நெறிமுறைகளை பின்பற்றினால் வெற்றிபெற முடியும். மனிதன் ஏதோ ஒரு மார்கத்தின் அடையாளத்தை மதத்தின் அடையாளத்தைப் பின்பற்றித்தான் தீரவேண்டும் என்ற உறுதியான முடிவிற்கு வந்த பிறகு தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பௌத்தத்தை ஏற்கிர முடிவை எடுத்தார். தமிழகத்தில் தந்தை பெரியார் அவர்களை அப்போது கேட்டார்கள் நீங்கள் ஏன் அவரோடு சேர்ந்து பவுத்தம் மாறக்கூடாது என்று புரட்சியாளர் அம்பேத்கரின் கருத்தை நான் வரவேற்கிறேன் ஆனால் நன் இந்த தளத்தில் இருந்துகொண்டே போராடினால் தான் இந்துத்துவத்தை எதிர்க்க முடியும் பௌத்தனாய் மாறிவிட்டால் நான் இந்துத்துவத்தை எதிர்க்காதவனாய் மாறிவிடுவேன் ஏனென்றால் அப்போது மதச்சண்டை உருவாகிவிடும் பௌத்தன் எப்படி இந்துத்துவத்தை எதிர்க்கலாம் என்ற கேள்வி எழுந்துவிடும் எனவே நான் இந்த அடையாளத்தோடு போரட விரும்புகிறேன் என்று சொன்னார்.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் முடிவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. வரலாற்றில் மாற்றத்தை உருவாக்கக்கூடியது. இன்றைக்கு இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கலாம் ஆனால் அது நாளுக்கு நாள் வடமாநிலங்களிலே விரிந்து கொண்டிருக்கிறது வளர்ந்து கொண்டிருக்கிறது, வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த எண்ணிக்கை வலுவடைய வலுவடைய அரசியல் தளத்திலும் மாற்றம் நிகழலாம். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் அரசியல் தளத்திலே ஒரு சக்தியாக பரிணமிப்பதற்கு முன்பே அது சுருங்கிப் போய்விடக்கூடாது அப்படிப்பட்ட அந்த உக்திகளின் அடிப்படையிலே தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அரசியல் உக்திகளை மட்டுமே கையாண்டு வழிநடத்தி வருகிறோம். ஒடுக்கப்பட்டவர்கள் அனைத்து தரப்பைச் சார்ந்தவர்களும் சிறுபான்மை சமூகத்தை சார்ந்த அனைவர்களும் இன்னும் சிதறிக்கிடக்கிற அனைவரும் ஒரு அரசியல் சக்தியாய் வடிவம் பெற வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த இயக்கத்தை வழிநடத்தி வருகிறோம். அதனால் பௌத்தநெறிகளுக்கு மாறானவர்கள் அல்ல பௌத்தத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அல்ல, கௌதம புத்தரை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அல்ல. இந்த புரிதலை மட்டும் இந்த நேரத்தில் இங்கே கூடியிருக்கிற பௌத்த சிந்தனையாளர்களுக்கு தெரியப்படுத்தி இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னனி பொருப்பாளர்கள் பலரும் தங்களை பௌத்தர்களாக பதிவு செய்து கொண்டார்கள். அதற்கு எந்த மறுதலிப்பும் தலைமையில் இருந்து இல்லை. நான் வரவேற்கிறேன். நான் அவர்களை வாழ்த்துகிறேன். பௌத்தம் ஏறக்கொண்ட அனைவரையும் நெஞ்சார வாழ்த்துகின்றேன். மானுடத்தை நாம் போற்றுவோம். மானுடத்தை போற்றுவதற்கு பௌத்தத்தை போற்றுவோம் என இந்த நேரத்திலே சொல்லி இந்த நேரத்திலே கவுத புத்தரின் திருவுருவச்சிலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை பலரும் சொன்னார்கள். அதற்கான முன் முயற்சிகளை எடுக்க விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நான் உறுதியளித்து நிறைவு செய்து விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்.