நாளை தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய குடியரசு நாள் அணிவகுப்பில் பாபாசாகேப் அம்பேட்கர் அவர்களின் உருவச்சிலை இல்லை என சிலர் சொல்கிறார்கள். இது உறுதியான தகவலா என தெரியவில்லை.
நாளை நடப்பது தமிழ்நாட்டை சார்ந்த தைப்பூசம் சிறப்பு நாள் அணிவகுப்பு நிகழ்ச்சியாக இருந்திருந்தால், அதில் பாபாசாகேப் சிலை ஏன் இல்லை என கேட்பது முட்டாள்தனமானது. ஆனால் நடக்க இருப்பதோ இந்திய குடியரசு நாள் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சி.
அதாவது இந்தியா குடியரசு என பிரகடனப்படுத்திக்கொள்வதற்கு ஆதாரமான இந்திய அரசமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள். அந்த இந்திய அரசமைப்புச் சட்டக்குழுவிற்கு தலைவராக இருந்த பாபாசாகேப்பை புறக்கணித்துவிட்டு இந்தியாவில் ஒருவர் குடியரசு நாளை கொண்டாடுகிறார் என்றால், அவருக்கு ஒன்று வரலாறு தெரியவில்லை என்று பொருள் அல்லது தெரிந்து புறக்கணிக்கப்பட்டால் அது அவரின் மீதான வன்மம் என்று பொருள். இந்திய குடியரசு நாள் என்பதே அம்பேட்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் கொண்டாடுவதை பார்த்து வருகிறோம்.
இந்த எளிய உண்மையெல்லாம், இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு, இந்திய அரசமைப்புச்சட்டத்தின் படி தமிழ் நாட்டின் முதலமைச்சருக்கு (Protocol) தெரியாமல் இருக்காது. அதனால், இந்திய குடியரசு நாளில் அதற்கு ஆதாரமாக விளங்கிய பாபாசாகேப்பை தமிழ்நாட்டின் குடியரசு நாள் அணிவகுப்பில் புறக்கணிக்க மாட்டார் என்றே நம்புவோம். ஒருவேளை, பாஜக தமிழ்நாட்டை புறக்கணித்ததால், நாங்கள் வட இந்திய தலைவர்களை புறக்கணிக்கிறோம் என பாபாசாகேப்பை புறக்கணிக்கும் எதிர்வினையாக இருந்தால், இது பள்ளிக்கூட சிறுவர்களின் முட்டாள்தனமான எதிர்வினைக்கு ஒப்பானது என்பது என் கருத்து. இந்த அணுகுமுறை முதிர்ச்சி வாய்ந்த தகுதிவாய்ந்த இடத்தில் இருப்பவர்களுக்கு அழகில்லை. ஏனெனில் பாஜக வேறு; திமுக வேறு. பாஜக வேண்டுமானால் முட்டாள்தனமாக செயல்படலாம். நாங்கள் அப்படியல்ல என்ற பகுத்தறிவோடு திமுக பகுத்தறிவற்ற பாஜக போன்று செயல்படாது என்று நம்புகிறேன்.
எந்த ஒரு முன்முடிவும் இன்றி நாளை பார்ப்போம்.
– வேந்தன். இல