புரட்சிப்பாடகர் தலித் சுப்பையா அவர்கள், சர்க்கரை நோயின் தீவிரத் தாக்குதலால் புதுவை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இயற்கையடைந்துள்ளார் என்கிற துயர்மிக்கச் செய்தி வந்துள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், முனியாண்டிப்பட்டி எனும் சிற்றூர்ச் சேரியில் கருப்பன் என்னும் நாட்டு வைத்தியருக்கு மகனாகப் பிறந்தவர் பிச்சை. தமிழகத்தில் உள்ள சாதிய கொடுமைகள் நிறைந்த கிராமங்களைப் போன்ற கிராமம்தான் முனியாண்டிப்பட்டி. சாதி இந்துக்களே நிலவுடைமையாளர்கள். குறிப்பாக, கள்ளர்களின் ஆதிக்கம் உள்ள கிராமம். வேளாண் தொழிலாளியாகவும், சிறு வைத்தியங்களை செய்து வந்தவருமாகவும் இருந்த கருப்பனின் வீட்டிற்கு மாலை நேரத்தில் மக்கள் வருவதுண்டு. அப்படி வருபவர்கள் அமர்வதற்காக, இரண்டடி அகலமும் ஐந்தடி நீளமும் உடைய பாறை ஒன்றை வாசலில் வைத்திருந்தார் கருப்பன். தாங்கள் அந்த வழியாக வரும்போது அந்த பாறையில் சேரிக்காரர்கள் உட்கார்ந்திருப்பதா என்று கோவப்பட்டார்கள் கள்ளர்கள். வேறு வழியின்றி அந்த பாறையை அகற்றினார் கருப்பன். இப்படி பல்வேறு ஒடுக்குமுறைகளைக் கொண்டிருந்த அந்த கிராமத்தில் துவக்கப் பள்ளிக்கூடம் ஊர்த்தெருவில் இருந்ததால், சேரியிலிருத்து மாணவர்கள் செல்லுவதில் சிரமமிருந்தது. அப்போதுதான் அங்கே இருதயம் என்பவர் ஆசிரியராக வந்தார். அன்பானவரான அவர் சேரிக்குள் வந்து மாணவர்களை அழைத்துச் சென்று பள்ளியில் படிக்க வைத்தார். அத்தகைய மாணவர்களின் ஒருவர் கருப்பனின் மகனான பிச்சை. பிச்சை என்கிற பெயரில் ஒருவகையான தாழ்வெண்ணம் பொதுவில் இருந்ததால், ‘ஐயா’ எனும் மதிப்புக்குரிய விகுதியுடைய சுப்பையா என்கிற புதிய பெயரை பதிவேட்டில் எழுதினார் ஆசிரியர் இருதயம். இவ்வாறுதான் சுப்பையா உருவானார். சுப்பையாவின் உருவாக்கத்தில் புதிய வடிவமைப்பைக் கொடுத்த ஆசிரியர் இருதயம் அவர்கள், ஓர் தலித் கிறித்துவர் ஆவார்.
உள்ளூரில் துவக்கப்பள்ளியை முடித்த சுப்பையா, மதுரை மேலூர் ஒன்றிய ஊராட்சிப் பள்ளியில் சேர்ந்து 6 ஆம் வகுப்பில் சேர்ந்தார். அங்கு தமிழாசிரியையாக இருந்தவர் ஆசாரி சமூகத்தைச் சார்ந்த பச்சையம்மாள. ஊரில் எப்போதாவது தெருவில் சுப்பையா பாடிக்கொண்டு போகும் போது, ‘பாடக்கூடாது’ என்று அச்சுறுத்துவார்கள் உள்ளூர் கள்ளர்கள். அதேவேளையில், சுப்பையாவின் பாடும் ஆர்வத்தை ஊக்கப்படுத்தியவர்களும் இருந்தனர். அவர்களில் ஒருவர் தமிழாசிரியை பச்சையம்மாள். ஊராட்சி பள்ளியில் எட்டாம் வகுப்பை முடித்த சுப்பையா, மேலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பில் சேர்ந்தார். அப்பள்ளியில் திங்கள் கிழமைகளில் பள்ளி சீருடையணிவது கட்டாயமாக இருந்தது. ஆனால், சுப்பையாவிடம் சீருடை இல்லாததால் திங்கள் கிழமைகளில் பள்ளிக்கு செல்லுவதை தவிர்த்துக் கொண்டு, ஆசிரியர்களிடம் வசுவுகளையும் தாக்குதல்களையும் பெற்று, உடல் காயங்களையும் மனக்காயங்களையும் கொண்டிருக்கிறார். இன்னொருபக்கம், அப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருந்த சுப்பையாவின் ஊரான முனியப்பபாண்டி கள்ளர் பெரிய கருப்பன் சுப்பையா போன்ற தலித் மாணவர்களை உதாசீனப்படுத்தி கள்ளர் சாதி மாணவர்களை மட்டும் பயிற்றுவிக்கும் தீண்டாமையும் நடந்தது. அதேநேரத்தில், சுப்பையாவுக்கு ஆறுதலாகவும் துணையாகவும் இருந்தார்கள் ஆசிரியர்களான கன்னியப்பன் மற்றும் அரசன் ஆகியோர். இவர்கள் இருவருமே சாதி இந்துச் சமூகத்தவர்களாவார்கள்.
சாதிய தீண்டாமை, வறுமை என பல்வேறு நெருக்கடிகளை கடந்து பள்ளிப் படிப்பை முடித்து எழுந்து வந்த சுப்பையா, மதுரை தியாகராயர் கல்லூரியில் சேர்ந்து படித்து முடித்தார். அச்சமயத்தில்தான் அவருக்கு இடதுசாரிகளின் நட்புறவுக் கிடைத்தது. இலக்கியங்களும், அரசியலும் அவருக்கு பரிச்சையமாகத் துவங்கிய காலம் அது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மதுரைக் கிளையுடனான தொடர்பு, தமுஎகச கூட்டங்கள் என்று அவருடைய மார்க்ஸிய அரசியல் தளம் விரிவடைந்து. இந்நிலையில், மலேசியாவில் பிறந்து வளர்ந்த அம்மையாருடன் சுப்பையா அவர்களுக்கு திருமணம் நடந்தது. தமது பணி நிமித்தமாக புதுவைக்கு இடம் பெயர்ந்தார் சுப்பையா. மார்க்ஸிய இலக்கியங்களின் மீதான மதிப்பில், தம்முடைய மூத்த மகனுக்கு ஸ்பார்ட்டகஸ் என்றும், இளைய மகனுக்கு கார்க்கி என்றும் பெயர் சூட்டினார். 1980 களில் ‘யுத்தம் துவங்கட்டும்’ எனும் நூலின் வழியே எழுத்தாளரகவும் உருவெடுத்தார். தன்னுடைய தந்தையின் நாட்டுப்புற பாடல்களை திண்ணையில் கேட்டும், மக்களின் வாழ்க்கையை கண்டும் தமக்குள்ளிருந்த பாடகரை மீட்டெடுத்த சுப்பையா, மேடைகளில் புரட்சிகர பாடகராக தோன்றினார்.
90’களில் கிளர்ந்தெழுந்த அம்பேத்கர் நூற்றாண்டு எழுச்சியில் மேலெழுந்து வந்த தலித் கலைஞர்களில் முக்கியமானவராக வந்தார் சுப்பையா. அண்ணல் அம்பேத்கர் பற்றிய எழுச்சிக் கருத்துகளையும் , சமூகக் கொடுமைகளையும், சமூக- அரசியல் விழிப்புணர்வைகளையும் மக்களின் பண்பாட்டு வடிவிலான பாடலாக உரக்க முழங்கினார் தலித் சுப்பையா. அப்போதுதான் சுப்பையா ‘தலித் சுப்பையா’வாகவும் ஆனார். பிறகு, ‘லெனின் சுப்பையா’ என்று தம்மை அவர் அறிவித்துக் கொண்டபிறகும்கூட, இன்று வரை தலித் சுப்பையா என்பதே அவரின் அடையாளமாக உள்ளது.
வாய்ப்பேச முடியாத, காது கேளாத தாய்க்கு மகனாக பிறந்த சுப்பையாவின் புரட்சிகர பாடல்கள், குரலற்றவர்களின் குரலாக,ஆதிக்கச் செவிப்பறையை காலம்பூராவும் மோதிக் கொண்டே இருக்கப்போகின்றன.
Courtesy : https://tamil.indianexpress.com