I
அயோத்திதாச பண்டிதர் (20/05/1845-05/05/1914) அவர்கள் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் தமிழ்ப்பேரறிஞரும் அரசியல் சீர்திருத்தவாதியும் ஆவார்.
அவர் தனது பன்முகப்பட்ட திறமைகளாலும் பன்முகப்பட்ட செயல் முறைகளாலும் காலம் கடந்தும் தமிழ்ச் சமூகத்தின் மீதும் ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் மீதும் தனது தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளார். அவர் நடத்தி இருக்கின்ற பண்பாட்டுப் புரட்சிகளைப் பின்வரும் உள் தலைப்புகளில் காண்பது நலம்.
1. பண்பாட்டு புரட்சி
2. இந்திய வரலாறு குறித்த அணுகுமுறை
3. இந்தியாவில் தொடர்ந்து வரும் கருத்தியல் முரண்பாடுகள்.
4. பண்டிதரின் பார்வையில் தேசமும் அரசும்.
5. சுரண்டலின் வடிவங்கள்
(சமய, சமூக ஒடுக்குமுறைகள் பொருளாதார ஒடுக்குமுறைகளாக மாறுகின்ற தன்மை).
6. தமிழ் இலக்கிய, இலக்கணங்களை அவர் கண்ட பௌத்த அணுகுமுறை.
7. நவீன கால ஒளியைத் தந்த மேற்கத்திய அணுகு முறைகளில் இருந்து வேறுபட்ட நிலை.
8. பண்டித அயோத்திதாசரின் தீர்க்கமான முடிவுகள்.
9. இட ஒதுக்கீடு எனும் சமூக நீதிக் கொள்கை
10. இன்றைய தேவை.
II
1.பண்பாட்டுப் புரட்சி.
இந்திய நாடு பல்வேறு விதமான இனங்கள், மொழிகள், பண்பாட்டுப் பின்புலம் கொண்ட ஒரு கலாச்சார சூழலில் உள்ள நாடாகும்.
இங்கே நாம் சொல்லுகிற பண்பாட்டு மாற்றம் என்பது மக்களின் நடை உடை பாவனைகளைக் கடந்து மக்களின் உள்ளத்தில் சமுதாய வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் கருத்துக்கள், மக்கள் மதிப்பு கொடுக்கும் விழுமியங்கள், மக்கள் பேணிக்காக்கின்ற சமூக நிறுவனங்கள் உள்ளிட்ட செய்திகள் தொடர்பான ஆய்வு என்றால் மிகையில்லை. பண்பாடு என்பவை பெரும்பான்மையும் ஒரு காலகட்டத்தில் இருந்து மக்கள் அடுத்த காலகட்டத்திற்குத் தலைமுறைக்குத் தருகின்ற செய்திகள் என்ற பொருளிலும் காண முடியும்.
1.1 அகச்சீர்திருத்தமும் புறச்சீர்திருத்தமும்
பண்டித அயோத்திதாசர் செய்ய முயன்ற மாபெரும் பண்பாட்டுப் புரட்சி என்பது சாதி ஒழிந்த சமூக கட்டமைப்பிற்கு வித்திட்டச் சிந்தனைகளைத் தமிழ்ச் சமூகத்தின் வழியாக இந்திய சமூகத்தில் பரப்பியதாகும். இதன்மூலம் குடும்பத்திற்குள் செய்யப்படும் விதவை மறுமணம் பெண்கள் விடுதலை போன்ற அகச் சீர்திருத்தங்களைத் தாண்டி ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பையும் மாற்றி அமைக்கின்ற சாதிய கட்டுக்களைக் களைகின்ற செயல்பாடு என்பது மாபெரும் புறச்சீர்திருத்தம் ஆகும்.
2. இந்திய வரலாறு குறித்த அணுகுமுறை.
இந்திய வரலாறு குறித்த அயோத்திதாச பண்டிதரின் அணுகுமுறை மிக சுவையானது. இந்திய வரலாற்றை அவர் எவ்வாறு காணுகிறார் என்ற அந்தப் பார்வையைப் புரிந்து கொண்டாலே அவர் எத்தகைய பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திட்டு உள்ளார் என்பதை எளிதாக உணரமுடியும்.
இதுதொடர்பாக இக்கட்டுரை ஆசிரியர் எழுதி இருக்கிற “அயோத்திதாச பண்டிதரின் வரலாற்றெழுதியல்”(Historiography of pandit C.Iyotheedass) என்ற கட்டுரை இது பற்றிய ஓர் அறிமுகத்தை வழங்கலாம்.
இந்திய நாட்டினுடைய வரலாறு என்பது மன்னர்கள் தொடர்ந்து மாறி மாறி ஆண்டு வந்த ஒரு வரலாறு என்ற பார்வையிலிருந்து அயோத்திதாச பண்டிதர் முற்றிலும் மாறுபட்ட ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறார்.
பல்வேறு மதங்கள், பல்வேறு இனங்கள், பல்வேறு மொழிகள் இந்தியா முழுவதும் மாறி மாறி ஆட்சி செய்துள்ளன என்பதை விளக்க முற்படுகிறார். இவ்வகையிலான அயோத்திதாச பண்டிதரின் புதிய அணுகுமுறை “இந்திரர் தேச சரித்திரம்” என்ற விரிந்த நூலில் தெளிவாகக் காணமுடிகிறது. இதே அணுகுமுறையைப் பின்னாளில் பாபாசாகேப் அம்பேத்கரும் மேற்கொண்டு நூல்களை எழுதியுள்ளார் என்பது சிந்திக்கத்தக்கது.
2.1 சாமி லஞ்சமே சதா லஞ்சமாக முடிந்தது.
2.2. மனு தன்மமே விவசாய சீர்கேட்டிற்கு வித்திட்டது.
2.3 சாதிபேதமே ஊரைக் கெடுப்பதற்கும் ஒற்றுமைக் கேட்டிருக்கும் ஆதாரம்.
2.4. உழுது உழைக்கும் சாதிகள் சிறிய சாதியாகவும் சோம்பேறிகள் பெரிய சாதியாகவும் நோக்கப்படுவது விசாரிணைக் குறைவினால் ஆகும்.
2.5 பேசுவது எல்லாம் வேதாந்தம் அபகரிப்பது எல்லாம் அயலான் சொத்து.
2.6. நாட்டில் அறமும் அன்பும் ஓங்கினால் மட்டுமே இயற்கை வளங்கள் பெருகும் இயற்கை வளங்கள் பெருகினால் பசி பஞ்சம் நீங்கும் நல்லாட்சி மலரும் எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன
இவ்வகையில் வருகின்ற பண்டித அயோத்திதாசரின் கருத்துக்கள் மிக விரிவாக காணத்தக்கவை.
3. கருத்தியல் முரண்பாடுகள்.
இந்திய நாட்டில் ஏறத்தாழ இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து கருத்தியல் முரண்கள் நடைபெற்றுக் கொண்டே இருப்பதை எவரும் எளிதாக உணர முடியும். வேறு எந்த நாடுகளையும் விட சொந்த நாட்டு மக்களைச் சுரண்டுவதற்கு ஏராளமான சாதி, மத பேதங்கள் பல்வேறு விதமான புராண இதிகாச மரபுகள் எல்லாம் உருவாக்கி மக்களைச் சுரண்டும் சமூகக் கட்டமைப்பு இந்தியாவில் மிக மிக அதிகம்.
இந்தச் சுரண்டும் சமூக கட்டமைப்பின் போக்கில் இருந்ததால் பண்டைய அமைப்பு மாறாமல் கட்டிக் காக்கின்ற குழுக்களும் புதிய விடுதலையை நோக்கிச் செல்லுகின்ற குழுக்களும் தொடர்ந்து இருக்கின்றன.
3.1 இந்தியாவில் பௌத்த, ஜைன எதிர்ப்பும் இன்றைய இந்தியாவில் இஸ்லாம், கிறிஸ்துவ எதிர்ப்பும்
பண்டைய இந்தியாவில் ஏறத்தாழ கி.பி. நான்கு, ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளில் இருந்து இந்தியா முழுவதும் பல்வேறு சூழல்களில் பௌத்த ஜைன மரபுகள் எதிர்க்கப்பட்டன. இன்றைய இருபது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுகளில் இஸ்லாம், கிறிஸ்தவ மரபுகள் எதிர்க்கப்படுகின்றன. இதன் வழியே இந்தியாவில் தொடர்ந்து வருகின்ற ஆதிக்கம் சார்ந்த சாதி, சமய கட்டமைப்புகள் ஒருபுறமும் அதற்கு மாற்றான மரபுகள் ஒருபுறமும் தொடர்ந்து எதிர்த்து இயங்கி வருவதை உணர முடியும். இதை புரிந்துகொண்டால் சமூக கட்டமைப்புகளில் இருக்கின்ற பல்வேறு அரசியல், பல்வேறு போக்குகள் எளிதாகப் புரியும்.
4. அயோத்திதாச பண்டிதரின் பார்வையில் தேசமும் அரசும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பா கண்டம் முழுவதும் மாபெரும் சீர்திருத்த உணர்வுகள் ஓங்கி இருந்தன. மார்க்சியம் போன்ற கருத்து நிலைகளும் விரிவாக வளர்ந்தன. தேசம்,அரசு,புரட்சி என்று பல்வேறு தத்துவங்கள் விரிவாக வளர்ந்தன. இக்கருத்துக்கள் ரஷ்ய, சீன நாடுகளிலும் பெரிய அளவில் வளர்ந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் தமிழகம், மராட்டியம், வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் இத்தகு கருத்துக்கள் மிக விரிவாக வளர்ச்சி பெற்றன. இத்தகு சூழலில் தான் புதிய தேசக் கட்டமைப்பு குறித்தும் நல்ல அரசுக்கான இயக்கங்கள் குறித்தும் பண்டைய பௌத்த ஒளியோடும் நவீனஐரோப்பிய சிந்தனைகளோடும் இணைந்து அயோத்திதாச பண்டிதர் புதிய அணுகுமுறைகளைத் தந்துள்ளார். இந்த அணுகுமுறைகளின் விளக்கமாகவே அவரது அரசியல் கட்டுரைகள் விரிந்த பார்வையைக் கொண்டு விளங்குகின்றன. சான்றுக்குச் “சுதேச சீர்திருத்தம்” என்ற விரிந்த கட்டுரையைப் பார்த்தாலே போதும்.
5.சுரண்டலின் வடிவங்கள்.
உலகம் முழுவதுமே வேட்டைச்சமூகத்திற்குப் பிறகு உருவான நிலவுடமை,பொருளுடைமை, இன்றைய வளர்ச்சி பெற்று வருகிற முதலாளித்துவம் உலகப் பெரும் முதலாளித்துவம் ஆகிய காலகட்டங்களில் ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு விதமான சுரண்டல் முறைகள் இருக்கின்றன.
இந்திய நாட்டிலோ சுரண்டல் முறைகள் மதத்தில், சமுதாய வாழ்வில் அங்கீகாரம் பெற்றதாக இருக்கின்றது. இதுதான் சாதிய படிநிலை அமைப்பு முறை. இது சுரண்டலின் மிகக் கொடிய ஒடுக்குமுறை வடிவம் என்பதை மிகச் சரியாக அடையாளம் கண்டு முன்னோடியாக எழுதியவர்களில் முதன்மையானவர் பண்டித அயோத்திதாசர். இவரின் சமகாலத்திலேயே மகாராட்டிரத்தில் ஜோதிராவ் பூலே அவர்களும் தமிழகத்தில் வெங்கடாசல நாயக்கர் அவர்களும் இன்னும் சிலரும் கூட சுரண்டல் முறைகளை எதிர்த்தனர். ஆனால் அதன் தத்துவ பின்புலத்தோடு அயோத்திதாச பண்டிதரும் மகாத்மா பூலே அவர்களும் ஆராய்ந்து கண்டு எதிர்த்ததில் முதன்மையானவர்கள் எனலாம்.
6. தமிழ் இலக்கிய இலக்கணங்களை அவர் கண்ட அணுகுமுறை.
பண்பாடு என்பதும் சமுதாயம் என்பது சமயம் என்பதும் பொருளாதாரக் கட்டமைப்பு என்பதும் எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நிற்கின்றன. பண்பாட்டினைத் தாங்கிப் பிடிப்பதில் மொழியும் இலக்கியமும் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. இதனால்தான் அயோத்திதாச பண்டிதர் மட்டுமல்லாமல் அவர் காலத்தில் வாழ்ந்த அவரின் சமகால பௌத்த அறிஞர்களால் இ.நா. அய்யாக்கண்ணு புலவர், ஏ.பி.பெரியசாமி புலவர், கேப்ரியல் அப்பாதுரையார் ,உள்ளிட்ட பலரும் மொழியில், இலக்கியத்தில் பல முன்னோடி வேலைகளைச் செய்தனர்.
தமிழ்க் கவிஞர்களில் பாரதியார், பாரதிதாசன், கவிமணி, முருகேச பாகவதர், சுத்தானந்த பாரதியார் உள்ளிட்ட கவிஞர்கள் மிக ஆழமான பண்பாட்டு மாற்றத்திற்கு வித்திட்டனர்.
தமிழ் இலக்கியங்களைச் சிராமண பின்புலத்திலிருந்து கண்ட அணுகுமுறை அயோத்திதாச பண்டிதரின் அணுகுமுறையாகும். இதே அணுகுமுறையில் இன்னும் கூர்மையான விமர்சனத்தோடு தமிழ் இலக்கியங்களைத் தந்தை பெரியார் அவர்கள் பின்னாளில் பார்த்தார்.
இங்கே பண்டிதர் அவர்கள் தமிழ் இலக்கியங்களுக்குக் காட்டும் பௌத்த பின்புலம் என்பது மிக ஆழமான விளக்கமான ஒரு அணுகுமுறையாகும்.
இப்பார்வை இந்திய வரலாற்றில் ஐரோப்பியர்களின் உதவியுடன் தொல்லியல் அறிஞர்களின் அணுகுமுறையுடன் பௌத்த இந்தியா கண்டுபிடிக்கப்பட்டது போல தமிழ் இலக்கியங்களில் புதைந்து இருந்த பௌத்த கூறுகளை மிகச் சிறப்பாக வெளிக்கொண்டு வந்தது பண்டித அயோத்திதாசருக்குப் பேரிடம் உண்டு.
அதாவது பண்பாட்டுத்தளத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் சைவ-வைணவ அல்லது இஸ்லாம் கிறிஸ்துவ என்ற நிலைகளில் மட்டுமல்லாமல் பண்டைய இந்தியாவின் அடித்தளங்கள் பண்பாட்டு நிலைகள் பௌத்தத்தின் பெரும்பான்மையிலிருந்து உருவாகின என்பதை பண்டித அயோத்திதாசர் விளக்கிக் காட்டினார்.
இந்த அணுகுமுறையிலிருந்து சடங்குகள், விழாக்கள், பெயரிடும் முறைகள் என்று பல்வேறு விதமான விளக்கங்களை அளித்தார். இந்த விளக்கங்கள் ஒருகட்டத்தில் இந்துமத விளக்கங்களைப் போல் தோற்றம் தந்தாலும் இவ்வகையில் காண்பதற்கும் இடமுண்டு என்பதை பண்டித அயோத்திதாசர் நிறுவினார்.
7. மேற்கத்திய அணுகு முறைகளில் இருந்து வேறுபட்ட இடங்கள்.
அனகாரிக தம்மபால அவர்கள் பேரா லட்சுமிநரசு நூலுக்கு அணிந்துரை எழுதும்பொழுது இவர் முழுமையான ஐரோப்பிய பார்வை கொண்டவர் என்று கூறுகிறார். அந்த வகையில்தான் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் எனப் பலரும் இருந்தனர். நவீன ஐரோப்பாவின் தொழில் புரட்சி பிரெஞ்சுப் புரட்சி உள்ளிட்ட புரட்சிகளில் இருந்து பெறப்பட்ட சமூக அரசியல் விடுதலை கருத்துக்களை அப்படியே கிடை நாடுகளில் பொருத்துவது என்பது இங்கு ஒரு பாணியாக ஆனால் ரஷ்யாவிலும் சீனாவிலும் முறையே இலெனின் மாசேதுங் உள்ளிட்டவர்கள் ஐரோப்பிய கோட்பாடுகளை தங்கள் நாடுகளில் தங்கள் மண்ணுக்கு ஏற்ப ரஷ்ய தன்மையிலும் தான் வளர்த்து ஆளாக்கினார் வியட்நாமிலும் ஹோசிமின் இதையே செய்தார் அவ்வகையில் தான் இங்கே இருந்த பண்பாட்டு புரிதல்களோடு சமூக மாற்றத்தை கொண்டு வருவதில் அயோத்திதாச பண்டிதர் பாபாசாகேப் அம்பேத்கர் தந்தை பெரியார் போன்றவர்கள் ஆழமான பணிகளை செய்தனர்.இங்குப் பற்பல ஐரோப்பியர்கள் குறிப்பாக மாக்ஸ்முல்லர் உள்ளிட்ட பலரும் கொடுத்திருந்த அணுகுமுறைகளைப் பௌத்தக் கண்ணோட்டத்திலிருந்து இவர் கிழக்கு உலக அணுகுமுறைகளில் இருந்து விளக்கினார். கிழக்கு உலக அணுகுமுறை(Oriental studies) என்று சொல்லக்கூடியப் பார்வைகளை கொண்டு இவர் விளக்கங்கள் தந்தார்.
தமிழ் இலக்கியங்கள் பற்றி போப் உள்ளிட்ட சில ஐரோப்பிய அறிஞர்கள் கூறிய சில கருத்துக்களையும் மறுத்துள்ளார். அதே வகையில் பௌத்தம் குறித்து மாக்ஸ்முல்லர் சொன்ன சில கருத்துக்களையும் மறுக்கின்றார். கிழக்குலகின் ஞான சாதன முறைகளையும் நன்கு ஆழ்ந்து கற்றவர் என்பதனால் சொற்களின் பொருளை வெறுமனே மொழிபெயர்ப்பதோடு அல்லாமல் அதன் உட்பொருளை ஆழ்ந்த கருத்தை அணுகி இவர் கூறுகிறார் என்பது கவனத்திற்குரியது.
வெறுமனே பொருள்முதல்வாதம் பகுத்தறிவு வாதம் என்ற மேலைய அணுகுமுறையைத் தமிழ் மண்ணில் பண்டித அயோத்திதாசரின் காலத்திலேயே தத்துவ விவேசினி உள்ளிட்ட இதழ்கள் கொண்டுவந்தன என்பது யாரும் அறியாததல்ல. ஆயினும் எத்தகு அணுகுமுறைகள் இந்திய மண்ணிற்கு ஏற்ற இந்திய வாழ்வில் ஏற்ப விளக்கங்களையும் பார்வைகளையும் கொண்டிருந்தால் மட்டுமே அவை இந்த மண்ணில் வெற்றி பெற இயலும் இல்லை என்றால் அந்த இடத்தில் மீண்டும் மரபார்ந்த சாதி சமய இந்துத்துவ வாழ்க்கை முறைகளே வந்து நிரப்பும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் இந்திய சமூக வாழ்வியல் நிலைகள் இதற்குச் சரியான விளக்கமாய் உள்ளன.
8. அயோத்திதாச பண்டிதரின் தீர்க்கமான முடிவுகள்.
பண்டிதர் பல தீர்க்கமான கருத்துக்களை கொண்டிருந்தார். அவர் கொண்டிருந்த தீர்க்கமான கருத்துக்களால் தான் அவர் மறைக்கப்பட்டார் என்றும் கூடக் கூறலாம். அவர் கொண்டிருந்த பல கருத்துக்கள் காலவெள்ளத்தில் புதிய புதிய கண்டுபிடிப்புகளினால் மாற்றம் பெற்றுள்ளன என்று கூறினாலும் சில கருத்துக்கள் இன்றைக்கும் நாம் எடுத்து பார்க்க வேண்டியுள்ளன. அவ்வகையான கருத்துக்களில் சில வருமாறு.
8.1. சாதி வேற்றுமை கோட்பாடுதான் அனைத்து தீமைகளுக்கும் வேராக உள்ளது.
8.2. சாதி வேற்றுமை கோட்பாடுதான் தீண்டாமையையும் வலுவாக்கி இந்திய மனங்களில் ஊடுருவி நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.
8.3. தீண்டாமை சாதியம் யாவும் இந்து மதத்தில் பகுதிகளாக உள்ளன. எனவே இந்து சமூக கட்டமைப்பு மாறாமல் இவை மாறுவதில்லை.
8.4. புத்தர் போதித்த உன்னதமான கருத்துக்கள் சமுதாய கட்டமைப்புக்கு மட்டுமல்ல புதிய சமத்துவஅரசியல் கட்டமைப்புக்குள் என்றைக்கும் ஏற்றவையாக உள்ளன.
8.5. புத்தர் கருத்துக்கள் இந்திய மண்ணில் மறைக்கப்பட்டு இருக்கலாம்; திரிக்கப்பட்டு இருக்கலாம் இருந்தாலும் இன்றைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே அவை ஒரு பண்பாடாகத் தொடர்ந்து வந்துள்ளன என்பதை நிரூபித்ததில் அயோத்திதாச பண்டிதர் மாபெரும் முன்னோடியாக விளங்குகிறார். மற்ற பௌத்த அறிஞர்கள் ஆய்வாளர்கள் சிந்தனையாளர்கள் அனைவருமே இந்தியாவில் பௌத்தம் இருந்தது என்றதோடு நின்றார்கள். ஆனால் அயோத்திதாச பண்டிதர் அது இன்றைக்கும் ஒடுக்கப்பட்ட மற்றும் இந்தியாவின் சாதி மத வேறுபாடுகள் பாராத தூய மனித குழுக்களிடம் வாழ்க்கையில் கூறி கிடைக்கின்றன என்பதை விளக்கிக் காட்டினார்.
8.6. இன்றைக்கு இந்து மதத்தில் உள்ள பல்வேறு பண்டிகைகள் வழிபாடுகள் இன்னும் பல கதையாடல்கள் யாவும் பௌத்தத்தில் இருந்து நிரம்ப திருத்தி உள்வாங்கப்பட்ட வடிவில் உள்ளன என்பதை விளக்குவதில் பண்டிதர் மிகவும் முதன்மையாக விளங்கினார். இந்த ஆய்விற்குப் பல்வேறு ஐரோப்பிய அறிஞர்களின் சிந்தனைகளும் நூல்களும் கூட அவருக்கு உதவி செய்தன.
8.7. தமிழ் மொழி என்பது தமிழ் மண்ணிற்கு மட்டும் அல்லாமல் இந்திய துணைக்கண்டத்தின் அடிப்படையாக இருந்தது மேலும் பௌத்த கருத்துக்களை உலகெங்கும் கொண்டு சேர்ப்பதற்கும் தமிழ்நாட்டின் பௌத்த அறிஞர்கள் பெரும் பங்காற்றினார்கள் என்பதை தனது ஆய்வுகள் மூலமாக அயோத்திதாச பண்டிதர் விளக்க முயல்கின்றார்.
இவ்வகையில் இன்னும் பற்பல கருத்துக்களை அயோத்திதாசர் தனது ஆய்வுகளின் வழியாக தீர்க்கமான முடிவுகளாய் முன்வைத்துள்ளார். இவையாவும் பல்வேறு பௌத்த அறிஞர்களால், சமூகவியல் சிந்தனையாளர்களால் கவனித்து பாராட்ட பெற்றிருக்கின்றன. ஆனால் இக்கருத்துக்கள் வாழ்வியலாகக் கொண்டு வருவதில் பல்வேறு தடைகள் உள்ளன என்பதும் இங்கே இருக்கின்ற சமூக, சமய, அரசியல் கட்டமைப்புகள் இக்கருத்துக்களை ஆபத்தான எதிர்க் கருத்தாக இன்றைக்கும் பார்த்து வருகின்றன என்பதை விளக்கத் தேவையில்லை.
9.இடஒதுக்கீடு என்னும் சமூகநீதி.
பண்டைக் கால மன்னர்கள் மற்றும் ஆள்வோர்கள் எவராக இருந்தாலும் அவர்களைச் சார்ந்து தங்கள் சாதிகளுக்கான நலன்களை மட்டுமே வளர்த்துக்கொள்ளும் பிராமண சமுதாயத்தை தெரிந்தோ தெரியாமலோ இந்துச் சமூகம் முழுவதும் தனக்கான ஒரு முன்மாதிரியாகக் கொண்டு இருக்கிறது. இதனால் பிராமணர்கள் எவ்வாறு நலன்களை ஆளும் வர்க்கங்களை ஒட்டி பெற்றுக் கொள்கிறார்களோ அதைப் போலவே ஒட்டுண்ணியாய் வாழும் வாழ்க்கைப்
பண்பை இந்துக்கள் சமுதாயம் இன்றுவரை பெற்றிருக்கிறது. இதனால் இந்தச் சமூக கட்டமைப்பிலிருந்து சுயசிந்தனையும் கண்டுபிடிப்புகளும் வலிமையான பண்பாட்டு மாற்றங்களைத் தேச எழுச்சிகளும் எதுவும் உருவாவதில்லை.(அரசு என்பது சுரண்டுகிற வடிவமாய் மாறி இருக்கின்ற இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் சூழலில் அயோத்திதாச பண்டிதரின் இட ஒதுக்கீடு எனும் சமூக நீதிக் கொள்கையைக் காண்பது மிகத் தேவை). யதார்த்த பிராமண வேதாந்த விவரம் வேஷ பிராமண வேதாந்த விவரம் உள்ளிட்ட பல்வேறு சமூக அரசியல் படைப்புகள் மூலமாக இந்தியாவின் உலக இயல்புகளை சமூகவியல் உண்மைகளை உடைத்துக் காட்டினார் பண்டித அயோத்திதாசர். இதே வகையில் வெங்கடாசல நாயக்கர் கூட சில பணிகளை தமிழகத்தில் செய்தார்.
முன்னோடியாய் பலராலும் கருதப்படுகிற சமூகம் சுயநலமாக இருக்கும் பொழுது அது எவ்வளவு பெரிய கேடுகளை நாட்டிற்கு கொண்டு வந்து தருகிறது என்பதை மிக விரிவாக பாபாசாகேப் பேசுகிறார் புகழ்பெற்ற அவரது வாசகத்தில் ஒரு பகுதி வருமாறு:
“பனியா தான் வரலாற்றிலேயே மிகவும் புல்லுருவி தரமான அட்டை போன்ற வகுப்பு ஆகும் பணம் சேர்க்கும் அவனது பேராசையில் மனச்சான்று பண்பாட்டுக்கும் இடம் இல்லை”
(பக்கம் 107 பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி 17 தமிழ்)
“ஒவ்வொரு நாட்டிலும் ஆதிக்க வர்க்கம் இருக்கிறது ஆனால் இந்தியாவில் இருப்பது போன்று முழுக்க முழுக்க சுயநலம் கொண்ட சீரழிவுப் பாதையில் செல்லுகின்ற மிகவும் அபாயகரமான மூர்க்க வெறி மனோபாவம் கொண்ட ஓர் ஆதிக்க வகுப்பு உலகில் எங்கேனும் இருக்கிறதா? ஆதிக்க வகுப்பினரின் அதிகாரத்தையும் புகழையும் கீர்த்தியையும் சீர்த்தியையும் நிலைநாட்டும் பொருட்டு அடிமட்ட வகுப்புகளை மிதித்து வைக்கும்படி போதிக்கும் ஒரு அருவருப்பான இகழார்ந்த வெறுக்கத்தக்க வாழ்க்கை தத்துவத்தை கொண்ட ஓர் ஆதிக்க வகுப்பு இப்பூவுலகில் எங்கேனும் இருக்கிறதா? எனக்குத் தெரிந்தவரை இல்லை”
(பக்கம் 108 மேற்படி நூல்)
தங்கள் அதிகாரத்தையும் நலன்களையும் கட்டி காப்பதற்காகவே எல்லாவிதமான தேச முன்னேற்றங்களையும் போலி சுதேசியங்களையும் பேசுகின்ற நிலைகளை மிகச்சரியாக அயோத்திதாசப் பண்டிதர் சாடியிருக்கிறார். இத்தகு மனிதர்களை நடிப்பு சுதேசிகள் என்று அவர் காலத்தில் பாரதியாரும் எழுதியிருக்கிறார் என்பது கவனத்திற்குரியது.
9.1.சாதியம் இருப்பதினால் தேசியம் இல்லை.
தேசத்தின் அடிப்படை கட்டமைப்புகள் யாவும் ஏழை எளிய உழைக்கும் மக்களிடமிருந்து உருவாகின்றன மற்றவர்கள் இங்கே சாதிகளாக ஒவ்வொரு சாதியும் ஒரு தேசமாக இருக்கிறது. எனவேதான் தேசியத்திற்கு நேரெதிர் பாதையில் சாதியம் இருக்கிறது. சாதியவாதிகள் தேச நலனை ஒருபோதும் எண்ணுவதில்லை. இப்படிப்பட்ட இருவேறு துருவங்களில் தான் இன்றைக்கு இந்தியா சென்று கொண்டிருக்கிறது. இதை நுட்பமான மொழியில் எழுதிக் காட்டிய பெருமைக்குரியவர் பண்டித அயோத்திதாசர். இத்தகைய எழுத்திற்கு சான்றுகள் அவரது அரசியல் கட்டுரைகளில் ஏராளமாக உள்ளன.
எந்த வழியில் பாதிக்கப்பட்டார்களோ அதே வழியில் உரிமைபெற வேண்டும் என்ற தன்மையினால் தொடர்ந்து தென்னிந்தியாவின் முன்னோடி ஆதிதிராவிட சான்றோர்கள், திராவிட இயக்க முன்னோடிகள், அறிஞர்கள் வெள்ளை அரசாங்கத்திடம் சேர்த்த செய்திகளினாலும் போராட்டங்களினாலும் விளைந்தவை தான் இந்திய மண்ணில் இன்று ஒடுக்கப்பட்ட, பிற்பட்ட சமுதாயங்கள் பெற்றிருக்கின்ற இட ஒதுக்கீடு என்னும் மிக நீண்ட நெடிய வரலாறு கொண்ட சமூகநீதி தத்துவமாகும்.
இந்தத் தத்துவத்திற்குச் சிந்தனைக்கு அயோத்திதாச பண்டிதர் மிக முன்னோடியாக விளங்குகிறார் என்றால் மிகையில்லை.
பொருளாதார அடிப்படையில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு என்று இன்றைய இந்தியாவில் வழங்கப்படுகிற இட ஒதுக்கீடு மிகப்பெரிய விமர்சனத்திற்குள்ளாகி இருப்பது கவனத்திற்குரியது. பற்பல நூற்றாண்டுகளாய் இங்கே கல்விகற்க, பொருளாதார வளம் பெற யார் யார் மறுக்கப்பட்டவர்கள் அவர்களுக்குத்தான் இட ஒதுக்கீடு என்னும் உயரிய தத்துவத்தை சிதைக்கும் இத்தகு போக்குகள் இந்திய எதிர்ப் புரட்சியின் எதிர் தத்துவத்தின் நிலைகளிலிருந்து உருவானவை என்றால் மிகையில்லை.
10. இன்றைய தேவை.
ஒரு அறிஞரை அவரின் புகழைப் பாட வேண்டும் என்று சமகால உலகம் தூக்கி சுமப்பதில்லை. அவர் இன்றைய சமூகத்தின் சிக்கல்களைத் தீர்ப்பவராக இருந்தால்தான் சமுதாயம் அவரைத் தூக்கிச் சுமக்கும். சாதிய மற்றும் வேறு சில பின்புலங்களோடு அரைகுறை அறிஞர்கள் கூட, தலைவர்கள் கூட பெரிய அளவில் ஊடகங்களால் மற்றும் பல பின்புலங்களால் பெரியவர்களாகக் காட்டப்படலாலாம். ஆனால் அவை நிரந்தரமானவை அல்ல.
பண்டித அயோத்திதாசர் கருத்துக்களை வளர்ந்து வருகின்ற உலகம் எவ்வளவுதான் சாதியக் கட்டமைப்பில் வெறுத்து ஒதுக்கினாலும் அதன் உண்மைகளை, நேர்மையைக் கண்டு பாராட்ட தயங்கினாலும் (ஒளியைக் கண்டு இருள் விலகினாலும்) சிலர் பேச முனைந்து வருகின்றனர். இதன் தொகை இன்னும் கூட வேண்டும். சமூக நீதியைச் சரியான பண்பாடு, அரசியல் பொருளாதார சிந்தனைகளுடன் முன்னெடுத்துச் செல்ல பண்டித அயோத்திதாசர் பயன்படுகிறார் என்பது மிக முக்கியமானது. அவ்வகையில் இன்றைக்கு அவர் தேவைப்படுகிறார்.
(“இரட்டைமலை சீனிவாசனார்” பேரவை சார்பில் ரேவதி நாகராஜன் அம்மையார் ஒருங்கிணைத்த அயோத்திதாச பண்டிதர் நினைவு நாள் 05/05/2022அன்று கருத்தரங்கத்தில் அளிக்கப்பட்ட கட்டுரை)
துணைநூற்பட்டியல்
1, பண்டித அயோத்திதாசரின் சிந்தனைக் களஞ்சியங்கள்.
2. பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதிகள்
3. பண்டித அயோத்திதாசர் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்கள், திறனாய்வு நூல்கள்.
4. மற்றும் பற்பல வார, மாத ஏடுகள், மார்க்சிய, பெரியாரிய, தமிழ்தேசிய பார்வையில் அறிஞர்கள் சிந்தனையாளர்கள் எழுதிய நூல்கள் கட்டுரைகள், விவாதங்கள் இன்னபிற.
முனைவர் க. ஜெயபாலன்.
அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி (தன்னாட்சி),
நந்தனம், சென்னை- 35.
செல்பேசி:9003056091
மின்னஞ்சல்: jayabalankannan74@gmail.com