Home கலை இலக்கியம் மாற்றுப்பாதை மாற்றுப்பாதை – அய்.ஜா.ம.இன்பகுமார்

மாற்றுப்பாதை – அய்.ஜா.ம.இன்பகுமார்

0
2,133
“ஆகப்போவது ஒன்றுமில்லை

எல்லா எத்தனமும் வீணேயெனினும்

முளையொன்றோடு பிணைத்துன்

கழுத்தைச் சுற்றிக்கிடக்கும் வலிய சங்கிலியின்

இரும்புக் கண்ணிகளைக்

கடித்துக் கொண்டாவது இரு.''

மதிவண்ணனின் கவிதை இது. அநீதிக்கு எதிராக எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதையே தன் பயணத்தின் லட்சியமாகக் கொண்டிருப்பவர் களப்பணியாளர் இன்பகுமார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் வசிக்கும் இவர், தன்னுடைய தொடக்கக் கல்வியை பாணாவரத்திலும், மேனிலைக் கல்வியை அரக்கோணத்திலும் முடித்தõர். வேலூர் ஊரிசு கல்லூரியில் விலங்கியல் பட்டம் பெற்ற இவர், சுமார் ஆறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். பிறகு ஆசிரியர் பணியை கைவிட்டு, தொண்டு நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தõர். ஒன்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் இவருக்கு, 1995 ஆம் ஆண்டு வரை சாதியம் குறித்த எந்தப் புரிதலும் இன்றி தன் ஆசிரியப் பணியிலேயே கவனம் செலுத்தியிருக்கிறார். 1996 ஆம் ஆண்டு மும்பைக்கு ஒரு பயிற்சிக்காகச் சென்றபோது, அங்கு அவர் ரமணி என்ற பழங்குடியினப் பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அப்பெண் சாதி இந்துக்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டவர் என்பதை அறிந்து, அப்போதுதான் சாதியின் கொடூரத்தை இன்பகுமார் ஆழமாக உணர்ந்திருக்கிறார்.

பிறகு இன்னொரு பயிற்சிக்காக, அவர் ஆந்திராவிலுள்ள பீமாவரம் என்ற ஊரில் தங்கியிருந்தபோது, “எண்டே ராமலும்மா’ என்னும் திரைப்படத்தைப் பார்த்தபோது, அதில் காட்டப்பட்ட மாலா – மாதிகா சாதிய வேறுபாட்டை பொய் என்று கூறி மறுத்திருக்கிறார். ஆனால், அவ்வூரில் இருக்கும் மாலா – மாதிகா சாதிகளின் வேறுபாடு நிறைந்த வாழ்க்கையை பார்த்தபோதுதான் – சாதிய சமூகத்தின் படிநிலைகள் அவருக்கு புரியத் தொடங்கியிருக்கின்றன. தன் சிறு வயதில் தீண்டாமைக் கொடுமைகள் என்பதே தெரியாமல் தான் அனுபவித்தவற்றை தற்பொழுது பகிர்ந்து கொள்கிறார்.

தன்னுடைய தந்தையின் சொந்த கிராமமான பாராஞ்சிக்கு செல்லும்போது, சொப்புகள் வாங்க சாதி இந்துக்களின் வீடுகளுக்கு தன் பாட்டியுடன் செல்வாராம் இன்பகுமார். அப்போது ஒரு வீட்டிற்குள் கூட முன்வாசல் வழியாக சென்றதில்லையாம்; பின்புறமாகத்தான் போக முடியுமாம்! அவர்கள் காசை வாங்கிக் கொண்டு சொப்புகளை வீசியெறிய, அவருடைய பாட்டி அவற்றைத் தன் முந்தானையில் பிடித்துக் கொள்வாராம். அடுத்து, கண்ணன் என்ற தன்னுடைய பார்ப்பன நண்பர் வீட்டில் தண்ணீர் குடிக்கச் சென்றபோது, வீட்டிலிருந்த பாத்திரத்தில் தண்ணீர் தராமல் வெளியிலிருந்த பிளாஸ்டிக் குவளையில் அவருக்கு தண்ணீர் தரப்பட்டிருக்கிறது. இதற்கான காரணத்தை எல்லாம் 1996 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் அவரால் உணர முடிந்திருக்கிறது.

1999 இல் ஒரு நாடகப் பயிற்சிக்காக மதுரை தலித் ஆதார மய்யத்தின் இயக்குநர் அய்சக் கதிர்வேல் அவர்களை இன்பகுமார் அணுக, அவர் அம்மய்யத்தைச் சேர்ந்த கே.எஸ். முத்துவை பயிற்சியாளராக அனுப்பியிருக்கிறார். முத்து, இன்பகுமாரை மதுரை தலித் கலை விழாவிற்கு அழைத்துச் சென்றார். அங்கு நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் மூலம் தலித் பிரச்சினைகளை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டவராக, சாதிப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு என்று முத்துவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு முத்து, “அம்பேத்கர்தான்’ என பதிலளித்தார். அப்படியானால் உடனடியாக அம்பேத்கர் நூல்களை எனக்கு அறிமுகப்படுத்துங்கள் என்று கேட்டிருக்கிறார்.

ஒரு நியாயமான மனிதர், அம்பேத்கரைப் பற்றி அறிந்து கொண்டதும் எப்படி வெறுமையாய் இருக்க முடியும்? அம்பேத்கரையும் சமூக அக்கறையுள்ள நூல்களையும் வாசிக்கத் தொடங்கினார். பத்தாண்டுக்குள் பல நூல்களை எழுதி, சமூக மாற்றத்திற்கான பணிகளை அவரால் ஆற்ற முடிந்திருக்கிறது.

தொண்டு நிறுவனங்களில் அவர் பணியாற்றுகின்ற காலத்திலும் தலித் விடுதலைக்கான பணிகளை ஆழமாகச் செய்யத் தொடங்கியிருக்கிறார். அவர் எழுதிய ‘மீண்டும் அம்பேத்கர்’ நாடகம், 300 க்கும் மேற்பட்ட முறை அரங்கேற்றம் பெற்றுள்ளது. அவர் அனித்ரா அறக்கட்டளையில் பணியாற்றும்போது, அவரோடு பணியாற்றிய தாரா ஜான் என்பவர், அவருடைய எழுத்தாற்றலைக் கண்டறிந்து எழுதத் தூண்டியுள்ளார். இன்பகுமார் எழுதிய முதல் கட்டுரை, பள்ளிகொண்டா கிருஷ்ணசாமியைப் பற்றியது. “புதிய கோடாங்கி’யில் அவர் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அப்போது எழுத்தாளர் சிவகாமி தன்னுடைய எழுத்துகளை செழுமைப்படுத்தியதாகப் பெருமையோடு சொல்கிறார் இன்பா.

அனித்ரா அறக்கட்டளையில் பணியாற்றும் போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆறு ஏக்கர் பஞ்சமி நிலம் மீட்கப்பட்டதற்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்று ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டதற்கும் முக்கியப் பங்கினை ஆற்றியவர் இன்பா. அப்போது வழக்கிற்காக அவர் சந்தித்த சட்டப் பிரச்சினைகள், “ஜமா பந்தி’ போன்ற வழிமுறைகள் ஆகியவற்றை முருகேசன் மற்றும் வழக்குரைஞர் ஆரோக்கிய மணிராஜ் ஆகியோருடன் இணைந்து தொகுத்து – “பஞ்சமி நில மீட்பு’ என்னும் நூலாக்கினார். அதுதான் இன்பாவின் முதல் நூல்.

பஞ்சமி நில மீட்புப் போரை புரிந்து கொள்வதற்கும் அதில் பங்கெடுப்பதற்கும் அந்நூல் மிக முக்கியப் பங்கினை ஆற்று கிறது. “நில அரசியல்’ இன்பாவின் இரண்டாவது நூல். தமிழகத்தில் உள்ள பொது நிலங்கள், பயனற்ற நிலங்கள், பஞ்சமி நிலங்கள் ஆகியவை குறித்த மொத்தத் தகவல் களும் அடங்கிய ஒரு பேழை அது. தலித் மக்களுக்கான அரசின் திட்டங்கள் எவையெவை, அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பனவற்றைத் தெளிவாகக் கூறும் அவருடைய அடுத்த நூல் “திறவுகோல்’.

“அடித்தட்டு ஜனநாயகம்’ என்னும் அவருடைய நூல், ஊராட்சிகளைப் பற்றியது. ஊராட்சியின் அதிகாரங்களைப் பயன்படுத்துவது எப்படி என்பதை அதில் விளக்கி யுள்ளார். 500 பேர் இருந்தால் ஓர் ஊராட்சியை உருவாக்கலாம் என்னும் திட்டம் இருக்கும்போது, தலித்துகள் அதிகமாக உள்ள பகுதிகளை தனி ஊராட்சிகளாக ஏன் மாற்றக் கூடாது என்று கேட்கிறது, அவருடைய “தனிப் பஞ்சாயத்தும் தலித் ஆதரவாளர்களின் பங்கும்’ என்னும் நூல். 29 துறைகளிலிருந்து ஊராட்சிகளுக்கு பணம் வருகிறது. ஆனால், 4 துறைகளிலிருந்து மட்டும்தான் தலித்துகளுக்கு பங்கு தரப்படுகிறது. மீதியிருக்கும் 25 துறைகளில் உள்ள பணம் தரப்படுவதில்லை. ஆகையால், தலித்துகளுக்கு தனி ஊராட்சியை ஏன் தரக்கூடாது என்னும் இன்பாவின் கேள்வியில் உள்ள நியாயமும் தேவையும் விரைந்து தீர்க்கப்பட வேண்டிய ஒன்று.

ஊராட்சிகளில் பெண்களின் பங்கு மற்றும் கோலப்பன் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை மய்யப்படுத்தி – “தனிப் பஞ்சாயத்து’ என்ற நூலும் இன்பாவின் உழைப்புதான்.

புனைவுகளைக் கடந்த இன்பாவின் இத்தகைய எழுத்து, மக்களுக்கான கையேடுகளாக மாறுகின்றன; சமூக ஆர்வலர்களுக்கான ஆவணங்களாக அவை செயல்படுகின்றன. அவ்வகையில் விளிம்பு நிலை சமூகத்தின் மேன்மையை அவர் விழைகிறார். தகவல் பெறும் உரிமைச் சட்டம், ஊரக வேலைவாய்ப்பு திட்டம், குடும்ப வன்முறைத் தடைச் சட்டம், பெண் உரிமைக்கான குற்றவியல் நடைமுறைச் சட்டம், தலித்துகளுக்கான பாதுகாப்புச் சட்டம், சிறப்பு உட்கூறு திட்டம் ஆகியவற்றை இணைத்து “நாட்டு வக்கீல் கையேடு’ என்று அவர் உருவாக்கிய நூல், களப்பணியாற்றுவோர்க்கு மிகுந்த பயனுடையதாகும்.

தொண்டு நிறுவனங்களின் பணிகள் குறித்து கேட்டபோது, நிதிக்கான பணிகளைக் கடந்துதான் தலித் விடுதலைக்கான பணிகளை ஆற்ற வேண்டியுள்ளது என்றும், இயக்கங்கள் தொண்டு நிறுவனங்களைப் பணம் காய்ச்சும் மரங்களாக மட்டுமே பார்க்கின்றன; அவற்றிடமிருந்து கருத்துருவாக்கங்களையோ, பயிற்சிகளையோ பெறுவதற்காக முயல்வதில்லை என்கிறார்.

தலித் இலக்கியம் குறித்து பேச்சு திரும்பியபோது, தலித் இலக்கியத்தின் அவசியம் இன்றளவும் இருக்கிறது. அது தேவையில்லை என்று கூறுவது சந்தர்ப்பவாதம். தலித் எழுத்தாளர்கள் தொடக்க காலங்களில் தங்கள் அடையாளங்களை உருவாக்குவதற்கு – மற்றவர்களின் அங்கீகாரத்தைப் பெறுவது எவ்வளவு முக்கியமோ, அதைப் போலவே வளர்ந்துவிட்ட பிறகு அதைத் தூக்கியெறிவதும், புதிய கருத்தாடல்களையும் கம்பீரங்களையும் உருவாக்குவதும் முக்கியம் என புதிய வரையறையை உருவாக்குகிறார் இன்பா.

பத்தாண்டுகளுக்கு மேலாகக் களத்திலும் எழுத்திலும் நிறைந்திருக்கும் அவர் பணிகளால் பயன் ஏதாவது நிகழ்ந்திருக்கிறதா என்னும் கேள்விக்கு, அவர் நூற்றுக்கு இருநூறு விழுக்காடு பயனுள்ளதாக இருக்கிறது என்று பதிலளிக்கிறார். நிலத்தின் மீதான அவருடைய கவனமும் பணியும், தலித்துகளுக்கான மரியாதையைப் பெற்றுத் தருகின்றன என்னும் அவர் நம்பிக்கை அசைக்க முடியாததாக இருக்கிறது.

தலித் அரசியல் குறித்த அவரின் உரையாடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. 50 ஆண்டுகளாக இயங்கி வரும் தலித் கட்சிகளால் தமக்கென்று ஒரு சின்னத்தைக்கூட வாங்க முடியவில்லை. வளர்ந்துவிட்ட கட்சிகளோ திராவிடக் கட்சிகளின் நகல்களாகவே இருக்கின்றன. தற்போதைய தேர்தல் முறைகளால் தலித்துகளுக்கு விடுதலை கிட்டாது என்ற நிலையில், மாற்று வழியைக் கூற எவருமே இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது. புரட்சியாளர் அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட விகிதாச்சார தேர்தல் முறையைக் கொண்டு வர, தலித் இயக்கங்கள் போராட வேண்டும் என்கிறார் இன்பா.

ஆங்கிலத்தில் அவர் எழுதிய Land Politics என்னும் நூல், பரவலாக வாசிப்புத் தளத்தைப் பெற்றுள்ளது. “போளூர் சாசனம்’, “வாழும் வரலாறு’, “துயரங்களின் மொழிபெயர்ப்பு’ ஆகியவை இன்பா ஆக்கிய இன்னும் சில நூல்கள். களப்பணி யில் கால்கள்; எழுதுவதில் கைகள்; சமூக விடுதலையில் சிந்தனை – இவைதான் இன்பகுமாரின் இடையறாத வாழ்க்கை.

– யாழன் ஆதி

இன்பகுமாரைத் தொடர்பு கொள்ள : 88704 38838

Load More Related Articles
Load More By யாழன் ஆதி
Load More In மாற்றுப்பாதை

Leave a Reply

Your email address will not be published.