ஒவ்வொரு தருணத்திலும் மானுடத்திற்குத் தேவையான பணிகள் எங்கேனும் ஒரு மூலையில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட பணிகள்தான் உண்மையான மக்கள் பணியாளர்களுக்கும் மக்களுக்கும் மிகுந்த நன்மை பயக்கக் கூடியனவாக இருக்கும். அத்தகையதொரு பணியை தொடர்ந்து  ஆற்றிவருகிறார் மா. அமரேசன். அமரேசன்  அடிப்படையில் ஒரு தொழில் நுட்பவியலாளர். “நடுங்கும் நிலம் நடுங்கா மனம்’ என்னும் அவருடைய கட்டுரைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்திருக்கிறது. கட்டுரைகள் என்ற அளவில் இல்லாமல் அவை மக்கள்  பிரச்சினையை விரிவாகப் பேசுகின்றன.

தொழிற்கல்வி முடித்த அமரேசன் இளம் வயதிலேயே மார்க்சியம், தமிழ்த்தேசியம் குறித்து ஆழமாகக் கற்றிருக்கிறார். இவருடைய தீவிர வாசிப்பு, பொதுவாக இவரை மற்றவர்களிடமிருந்து விலக்கியே வைத்திருக்கிறது. இவர் பணியாற்றிய நிறுவனத்திலும் இறக்குமதியாகும் எந்திரங்களைக் குறித்த அதிகமான செய்திகளை அவர் தெரிந்து வைத்திருந்ததால், தனது மேலதிகாரிகளிடம் கெட்டபெயர் வாங்குபவராகவே இருந்திருக்கிறார். இதுவே, அவரை மக்கள் பணிக்கு அழைத்து வந்தது.

அமரேசனின் கட்டுரைகள் மிகவும் அவசியமானவை. “புலப்படாத் தண்ணீர் வணிகம்’ என்னும் கட்டுரை பல்வேறு தரவுகளைக் கொண்டுள்ளது. தமிழ் நாட்டில் நடப்பது “அரிசி அரசியல்’; ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகியவற்றில் நடப்பது “நீர் அரசியல்’ என்று அவர் குறிப்பிடும் சொற்றொடர்களிலிருந்தே நாம் அக்கட்டுரையின் சாரத்தை எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு பொருளை ஒரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறோம் என்றால் அதை மட்டும் நாம் ஏற்றுமதி செய்யவில்லை; மாறாக அப்பொருளை உற்பத்தி செய்யப்பயன்படும் நீரையும் ஏற்றுமதி செய்கிறோம்.

ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய நாம் 2000 லிட் டர் தண்ணீரை செலவழிக்கிறோம்; ஒரு கிலோ மாட்டிறைச்சியை உற்பத்தி செய்ய 20,000 லிட்டர் தண்ணீர்  தேவை. ஒரு கிலோ முட்டையை உற்பத்தி செய்ய 3300 ரூபாய் தேவைப்படுகிறது.  ஆகவே, ஒரு பொருளின் மதிப்பில் புலப்படாத்  தண்ணீரின் மதிப்பையும் சேர்க்க வேண்டும் என்னும் கருத்தை வலுவடையச் செய்ய வேண்டும் என்று அக்கட்டுரை பேசுகிறது.

இது குறித்து அவரிடம் கேட்டதற்கு,  “புலப்படா நீர் வணிகம்’ என்ற தத்துவம் இன்று உலகளவில் பேசப்படுகிறது. ஆனால், தலித்துகளாகிய நாம் புலப்படாத மக்களாக இருக்கிறோம். நம்முடைய உழைப்பு  நம்முடைய பங்கு என்று எதுவும்  நமக்கு இல்லை. அவற்றைக் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது என்றார். இது குறித்து தலித் அறிவுலகம் விவாதங்களைத் தொடங்க வேண்டும்.

அவருடைய நூலில் இருக்கும் இன்னொரு கட்டுரை “தவற விடக்கூடாத தருணம்’. இது, தலித்துகள் நிறுவனமயமாகுவதைப் பற்றியது. அமரேசனின் முனைவர் பட்ட ஆய்வு நுண் நிதியம் தொடர்பானது. “மைக்ரோ பைனான்ஸ்’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் அத்தகைய நுண் நிதியத் தத்துவத்தின் மூலம்   தலித்துகளுக்கான  வங்கியை  நிறுவ வேண்டும் என்பதும் சிறிய அளவுகளில்கூட அத்தகைய நிதி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்பதும் அதற்கான நிதிக்கட்டமைப்புகளை உருவாக்க  வழிவகைகளும் கூறப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள ஆதிக்க சாதிகள் அனைத்திற்கும் வங்கிகள் செயல்படுகின்றன.   இந்நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நிதி ஆதாரத்தை ஏன் செயலாக்க முடியாது என்று அவர் வினவுகிறார்.

சுற்றுச் சூழல் குறித்த கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஏரிகளையும் ஆறுகளையும்  மாநில அரசின் அதிகாரத்திலிருந்து கிராம நிர்வாகத்திற்குக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் நீர்வளம் பாதுகாக்கப்படும் என்னும் அவர் கருத்தும் மிகவும் ஆராயத்தக்கது. பாலாற்றின் அழிவுகுறித்த எச்சரிக்கை, வனங்களைக் காக்க வேண்டிய அவசியம், அதற்காக அவர் தரும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் முக்கியமானவை.

அமரேசன் தான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு திடீரென்று வேறொரு  பயிற்சியில் சேர வேண்டி யிருந்தது. அனித்ரா அறக்கட்டளையில் அப்பயிற்சியை நடத்தியவர்  இன்பக்குமார். அப்பயிற்சியில்தான் அவருக்கு சாதி மற்றும் அதன் இருப்பு  குறித்த விரிவான புரிதல் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு முன்பு வரை சாதிய ஆதிக்கத்தால்  ஏற்பட்ட பாதிப்பை அவர் உணரவில்லை. ஆதிக்கவாதிகளுக்கு எது பிடிக்குமோ அதையெல்லாம் செய்து வந்திருக்கிறார்.

“இந்து கடவுளர்களை வணங்கினால் அவர்களுக்கு பிடிக்கும் என்று எண்ணி இந்து கடவுளர்களை வணங்கினேன்.

அப்படியும் அவர்கள் என்னைத் தனியாகத்தான் பார்த்தார்கள். தமிழ் அடையாளம் நம்மைக் காக்கும் என்று எண்ணி என்னை  ஒரு தமிழ்ப் போராளியாக்கிக் கொள்ள முனைந்தேன். ஆனால் அங்கேயும் இதே சாதியப் பார்வைதான் என்மீது விழுந்தது. கடைசியில் அம்பேத்கரைப் படித்து விடுதலைக்கான வழியைக் கண்டுகொண்டேன்” என்கிறார்.

தலித் விடுதலை என்று எதைக் கருதுகிறீர்கள் என்னும் வினாவிற்கு, சட்டை இல்லாமல் போராடிய காலத்தில் சட்டை போடுவது நமக்கு விடுதலை. இன்று நமக்கு விடுதலை என்பது அடுத்த கட்டத் தேவையை நோக்கி நகர்வதுதான். தீண்டாமை ஓரளவு குறைந்திருக்கிறது ஆனால் சாதி ஒழியவில்லை. தலித்துகள்  சாதி ஒழிப்பை முன்வைக்கிறோம். ஆனால், இந்த நவீன சமூகத்தில் தலித்தல்லாத  எந்தச்  சமூகமாவது சாதி ஒழிப்பைப் பற்றி பேசுகிறதா? இக்கேள்வியை நாம் எழுப்பியாக வேண்டும்.

“நம்மிடையே உறவுமுறைச் சங்கங்கள் தோன்ற வேண்டும். ஒரு பகுதி தலித்துகள்  இன்னொரு பகுதி தலித்துகளுக்கு நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும். வசதியுள்ள தலித்துகள் முதலீடு செய்து  புதிய பொருளாதார மேம்பாட்டினை உருவாக்க வேண்டும்” என்கிறார் அமரேசன்.

“பட்ஜெட்டில் தலித்துகளுக்கான  சிறப்பு உட்கூறு திட்டத்தின்படி ஒதுக்கப்படும் நிதி குறித்து நம்முடைய தலைவர்கள் கேட்கிறார்கள். அது மிகவும் சரியே. ஆனால், அந்த நிதியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்னும் திட்டங்களை அரசுக்கு நாம் தருவதோடு, சில நெருக்கடி களையும் உருவாக்க வேண்டும்” என்கிறார்.

அமரேசனின் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளின் இன்னொரு குரல் பற்றி நாம் கூறித்தான் ஆகவேண்டும். அது இந்த இயற்கையைக் காக்க எத்தனிக்கும் அவருடைய மனம். அதுவும் ஒரு தலித் குரலாக சூழலையும் இயற்கையையும்  பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து அவர் கூறுகின்ற காரணங்கள் ஆழமானவை. தமிழகத்தில் அண்மைக் காலங்களில் பூகம்பங்கள் பதிவான இடங்கள், அதற்கான காரணங்கள் மற்றும் இப்படிப்பட்ட பூகம்பங்கள் வருங் காலங்களில் எத்தகைய  பாதிப்பை ஏற்படுத்தும் என்னும் கட்டுரை, சுரண்டலுக்கான களமாக சுற்றுலா எப்படி அங்குள்ள  பழங்குடி மக்களை சுரண்டுகிறது என்பதை அவருøடய கட்டுரைகள் தெளிவாக விளக்குகின்றன.

குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்தாத சமூகம் வலுவற்றதாக மாறிவிடும். மேலும், குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து என்பது ஏதோ சத்து மாத்திரைகளில் இல்லை; மாறாக அவர்கள்  உண்ணும் உணவில் இருக்கிறது. ஆகவே, அரசு ஒவ்வொரு வீட்டிற்கும் பத்துவகையான பழமரக்கன்றுகளைத் தரவேண்டும். அதிலிருந்து வரும் பழங்கள் மிகச் சிறந்த ஊட்டமாகவும் அதே நேரத்தில் சூழலைக் காப்பதாகவும் அமையும் என்னும் கட்டுரை, மரங்களையும் மனிதர்களையும் இணைக்கும் முயற்சியாக இருக்கிறது. அது மட்டுமின்றி உணவே மருந்து என்னும் கோட்பாட்டையும் அது வளர்க்கிறது.

பஞ்சமி நிலமீட்பு தொடர்பான கட்டுரை, “ஆண்களின் உலகமடி’ “தேவை தொலைநோக்குப் பார்வை’ ஆகியவை தன்னம்பிக்கையை தரக்கூடியவையாகும்.

திருவண்ணாமலை  மாவட்டம் கரிக்காத்தூர் கிராமத்திலிருந்து இன்றைக்கு எதிர்கேள்விகள் கேட்கும் கூர்மையும்  தலித் அடையாளத்தோடு எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் ஆற்றலும், பிரச்சினைகளை ஆய்வுக்கு உட்படுத்தும் அறிவும் ஒருங்கே இணைந்த அமரேசனின் கனவு  என்னவாக இருக்கும் என்று கேட்டதற்கு, தலித்துகளுக்கான நிறுவனங்களை உருவாக்கு வதுதான் என்று அடித்துக் கூறுகிறார்.

பல்வேறு தொண்டு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவக் கூடல் நிறைந்தவரான அமரேசன், தன்னுடைய திறமை, அறிவு ஆகியவற்றை தலித்துகளுக்காகப் பயன்படுத்தும் எண்ணம் கொண்டவராக இருக்கிறார்.

மக்கள் பணி செய்யும் மா. அமரேசனின் எழுத்துகள் இன்றைய தமிழ்ச்சூழலுக்குப் புதிய உரையாடல்களை உருவாக்குவதால் அமரேசன் எல்லா விதங்களிலும் போற்றுதலுக்குரிய வராகவே செயல்படுகிறார்.

– யாழன்ஆதி

அமரேசனைத்
தொடர்பு கொள்ள  : 98659 76642

Load More Related Articles
Load More By யாழன் ஆதி
Load More In மாற்றுப்பாதை

Leave a Reply

Your email address will not be published.