அன்பிற்குரிய பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களுக்கு,
வணக்கம்,
விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் திரு. சிந்தனைச்செல்வன், தலித் மக்கள் பௌத்த மதத்திற்கு மாறவேண்டும் என்று பரப்புரை நிகழ்த்திவருவது குறித்து நீங்கள் உங்கள் முகநூலில் எழுதிய கருத்துகளை வாசிக்க வாய்ப்புக் கிடைத்தது. தலித் மக்களின் உயிராதாரச் சிக்கலைக் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போது, மேலோட்டமான முறையில் நீங்கள் பேசுவது கண்டு வருத்தமடைந்தேன். அதோடு, பாபாசாகேப் அம்பேத்கரின் பௌத்த மதமாற்றம் குறித்து, தெளிவான சிந்தனையை நீங்கள் எட்டவில்லை என்பதையும் அறிந்துகொள்ளமுடிந்தது.
தமிழகத்தைப் பொருத்தவரை, பாபாசாகேப் அம்பேத்கர் மறைந்து 58 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது தான் பௌத்த மதமாற்றம் குறித்த உரையாடல்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்து வருகின்றன. இந்தச் சூழலில் உங்களின் கருத்துகள் குட்டையைக் மேலும் குழப்பிவிடுவதைப்போல அமைந்திருப்பது வருத்தமளிக்கிறது.
பௌத்த மதத்திற்கு மாறிவிட்டாலே அடுத்தநொடியில் அனைத்துச் சிக்கலும் தீர்ந்துவிடும் என்று டாக்டர் அம்பேத்கர் ஒருபோதும் தெரிவிக்கவில்லை.
தமிழகத்தில் பௌத்த மதமாற்றம் அம்பேத்கர் எதிர்பார்த்த விடுதலையை அளித்துவிடவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். தமிழகத்தில் இதுவரை நடந்துள்ள பௌத்த மதமாற்றம் குறித்து உங்களின் கருத்து அறிவார்ந்த தன்மையுடன் இல்லை. பௌத்த மதத்திற்கு மாறிய அயோத்திதாசரின் வாரீசுகளும், அன்பு பொன்னோவியத்தின் வாரீசுககும் தீண்டாமைக்குப் பலியானதாக குறிப்பிடுகிறீர்கள். பௌத்த மதத்திற்கு மாறிவிட்டாலே அடுத்தநொடியில் அனைத்துச் சிக்கலும் தீர்ந்துவிடும் என்று டாக்டர் அம்பேத்கர் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்துகளையும் பௌத்தக் கோட்பாடுகளையும் கற்றுத் தேர்ந்து, பௌத்த மதத்தில் தன்னை இணைத்துக்கொண்ட ஒருவர் தீண்டாமைக்கோ, வேறுவித ஒடுக்குமுறைகளுக்கோ பலியாகமாட்டார் என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.
1956 அக்டோபரில் நாகபுரியில் பௌத்தநெறி ஏற்பு நிகழ்வின்போது, தனக்கு முன்னால் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்களைப் பார்த்து பாபாசகேப் அம்பேத்கர் திட்டவட்டமாக ஒரு கருத்தைத் தெரிவித்தார். அது என்னவெனில், ‘பௌத்த மதத்தைத் இணைந்துவிட்டால், வாழ்வதற்கு சொர்க்க லோகம் காத்திருக்கிறது என்று எண்ணாதீர்கள். பௌத்தத்திற்கு மாறிய போதும் நீங்கள் சாதி இந்து களுடன் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்’.
பெரிய அளவில் தலித் மக்கள் பௌத்தத்தில் இணைந்துவிட்டதைப் போலவும், ஆனாலும் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை என்பதைப் போலவும் நீங்கள் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள். நீங்கள் எண்ணுவதைப்போல, தமிழகத்தில் ஒன்றும் பெரிதாக பௌத்த மதமாற்றம் ஏதும் நடந்துவிடவில்லை. கடந்த 2001 லிருந்து 2014 வரை பௌத்த மதத்திற்கு மாறி, அரசிதழில் பதிவு செய்தோர் எண்ணிக்கை 400ஐ தாண்டவில்லை என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில்கீழ் கேட்டுப்பெற்ற குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னால் அதாவது 1956லிருந்து பௌத்த மதத்திற்கு மாறியவர்கள் சிலரைத் தவிர, அரசிதழில் பதிவு செய்தவர்கள் அதிகமில்லை. அவர்களும்கூட தங்களின் வாரிசுகளை பௌத்த மதத்தில் நடத்திச்செல்ல இயலாதவர்களாகவே மடிந்தனர்.
கடந்த ஐம்பது ஆண்டுகாலத்தில், தமிழகத்தில் பௌத்த மதமாற்றம் என்ற செயல்பாடே வெறும் வாய்ப் பேச்சாகவே நடந்து வருகிறது. பாபாசாகேப் அம்பேத்கருக்குப் பின், பௌத்த மதமாற்றத்தில் மக்களை வழிடத்த இந்திய அளவில் இன்னும் ஒரு தலைவர்கூட உருவாகவில்லை. பௌத்த மதமாற்றம் குறித்த ஆழமான விவாதங்கள்கூட இன்னும் தொடங்கப்படவில்லை. அதற்குள் உங்களைப் போன்றோர் இஸ்லாத்திற்கு மாறுவதே சிறந்தது என்ற கருத்தை முன்வைப்பது நான் முன்னரே குறிப்பிட்டதைபோல குழப்புகிற வேலையாகவே முடியும்.
தலித் மக்கள் அலையலையாக இஸ்லாத்திற்கு மாறவேண்டும் என்று பெரியார் கூறியதையே நீங்களும் முன்மொழிந்திருக்கிறீர்கள்.
‘பாபாசாகேப் அம்பேத்கர் பௌத்த மதத்தைத் நோக்கித் தள்ளப்பட்டார்’ என்று எழுதியுள்ளீர்கள். இஸ்லாத்திற்குப் போக அவர் விரும்பியதைப் போலவும் ஆனாலும் புற நெருக்கடிகள் காரணமாகவே பௌத்தத்திற்குச் சென்றார் என்றும் தெரிவித்திருக்கிறீர்கள். இந்தக் கருத்துகளை வெளியிட்டதன் மூலம் பாபாசாகேப் அம்பேத்கரைப் பற்றிய ஆழமான புரிதல் உங்களுக்கு இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. 1928ல் தொடங்கி 1956 வரையிலும் 30 ஆண்டுகாலம் இடைவிடாத வாசிப்புகள், ஆய்வுகள், விவாதங்கள் மூலமாகத்தான் பௌத்தத்திற்கு மாறும் முடிவை பாபாசாகேப் அம்பேத்கர் எடுத்தார். பௌத்த மதமாற்ற விஷயத்தில் எந்த நெருக்கடியையும் எவரும் அவருக்கு அளிக்கவில்லை. இக்கருத்தை அவரே தெரிவிக்கிறார். இது குறித்து ஆங்கிலத்தில் ஏராளமான நூல்கள் வெளிவந்துள்ள.
இஸ்லாத்திற்கு மாறுவதன் மூலம் தலித் மக்கள் தங்களின் சமூக இழிவுகளிலிருந்து விடுபடமுடியாது என்று பாபாசாகேப் அம்பேத்கர் திட்டவட்டமாக நம்பினார். இஸ்லாத்திற்கு மாறும் தலித் மக்கள் பல தலைமுறைகளாக இன்றும் ‘லெப்பை’களாகவே கருதப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார். மதம் மாறும் தலித் மக்கள் அனைவரையும் இஸ்லாம் சமூகம் சமமாக நடத்துவதில்லை என்பதை மீனாட்சி புரத்தில் இஸ்லாத்திற்கு மாறிய தலித் மக்களின் வாழ்நிலை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து மதம் மாறிய இஸ்லாமியர்கள் என்பதனால் அவர்களுடன், திருமண பந்தம் வைத்துக் கொள்வதைக் கூட அவ்வூரைச் சார்ந்த பிற இஸ்லாமியர்கள் விரும்பவில்லை. எனவே முதிர் கன்னிகளின் எண்ணிக்கை அங்கு அதிகமாக இருப்பதை நாம் அறிவோம். இஸ்லாத்திற்கு மாறிய தலித் மக்களில் ஒரு சிலரே உமர் பாருக்கைப் போன்று இஸ்லாத்தில் தனிமனித அங்கீகாரத்தைப் பெறுகின்றனர்.
தலித் மக்களின் மீது, சாதி இந்துகள் எத்தகைய கருத்தைக்கொண்டிருக்கிறார்க
தருமபுரி – நத்தம், நாயக்கன்கொட்டாய் கிராமங்களில் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ‘நாடகக் காதல்’ விவாதங்களில், தமிழக இஸ்லாமிய அறிவு ஜீவிகள் சிலர், சாதி இந்துகளைவிட மோசமாக கருத்துகளைத் தெவிரித்த செய்தியை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அழகான குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும், பணத்திற்காவுமே தலித் இளைஞர்கள் பிற சமூகத்துப் பெண்களை காதலிக்கிறார்கள் என்று கொச்சையாக சில இஸ்லாமிய பேராசிரியர்கள் தங்களின் வலைத் தளத்தில் வெளிப்படையாகவே எழுதியதை நீங்கள் வாசித்திருப்பீர்கள்.
‘நம்மை ஒரு பெரிய சமூகம் என்று ஒன்று ஏற்க வேண்டும் என்றும், நல்லது கெட்டதற்கு பெண் எடுக்க பெண் கொடுக்க, ஒரு பிரச்சனையில் கூட நிற்க, குழந்தைப் பேறு, திருமணம், இறப்பு முதலியவற்றில் அங்கீகாரம் அளிக்க, சென்று வணங்க, சொல்லியழ, ஒரு தொழுகைத்தலம் அமைக்க, நம்மைத் தீண்டத்தகாதவராக நினைக்காத ஒரு சமூகம் நமக்கு வேண்டும்’ என்று கூறியுள்ளீர்கள்.
25 சதவிகிதம் இருக்கும் தலித் மக்களைவிட 12 சதவிகிதமே இருக்கும் இஸ்லாம் மக்கள் பெரிய சமூகம் என்று எப்படி கணக்கிட்டீர்கள். நல்லது கெட்டதற்கு கூட நிற்கவும், பெண் கொடுக்க /
தலித் சமூகம், இந்திய மண்ணின் வரலாற்றுவாக்கில், தனித்த சமூகமாக, தனித்த பண்பாட்டுக் கூறுகளுடன், தனித்த வாழ்விடங்களுடன், நீண்ட நெங்காலம் நிலைத்து நின்று வாழும் தனித்த சமூகம். அவர்கள் இந்துகள் அல்லர். இஸ்லாமியர்களைப் போலவே, கிறித்தவர்களைப் போலவே, சீக்கியர்கள், பார்சிகளைப் போலவே அவர்கள் தனித்த வகுப்பினர். இந்திய நாட்டில் கிறித்தவமும், இஸ்லாமும் நுழைவதற்கு முன்னால் தனித்த மத அடையாளங்களுடன் வாழ்ந்தவர்கள் அம்மக்கள். பௌத்தமே தலித் மக்களின் மதமாக இருந்தது. அம்மக்கள் பௌத்தர்களாக இருந்ததினால்தான் தீண்டாமைக் கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர். மீண்டும் பௌத்தத்திற்கு திரும்புவதன் மூலமே அம்மக்கள் இந்து அடிமைத்தனத்திலிருந்து விடுபட முடியும். பௌத்தத்தை ஏற்பதன் மூலமே இந்திய மண்ணில் தங்களுடையை ஆயிரமாண்டு கால வரலாற்றை அம்மக்களால் புதுப்பித்துக்கொள்ள முடியும். இஸ்லாமும் கிறித்தவமும் இந்துத் தன்மையை அடைந்துவிட்டன. அவை இந்து மதத்தின் இன்னொரு கிளைகளாகவே இயங்குகின்றன. இஸ்லாமும் கிறித்தவமும் இந்து மதத்திற்கு மாற்றான மதமாக இல்லை. பௌத்தம் மட்டுமே இந்து மதத்திற்கு மாற்றானது. இவை தான் மதமாற்றம் குறித்து பாபாசாகேப் அம்பேத்கரின் கருத்துகளாக இருந்தன. பாபாசாகேப் அம்பேத்கர், இஸ்லாத்திற்கு செல்லும்படி தலித் மக்களுக்கு வழிகாட்டவில்லை.
இஸ்லாத்திற்கு மாறுவதன் மூலம் தலித் மக்கள் தங்களுக்குக் கிடைத்து வரும் இடஒதுக்கீட்டு உரிமை களை இழக்க நேரிடும் என்பதும், பௌத்தத்திற்கத் திரும்புவதன் மூலம் அவ்வுரிமைகளைத் தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்பதும் பேராசிரியர் அறிந்துகொள்ளவில்லையா என்ன! இடஒதுக்கீடுகளும் இல்லை யெனில் தலித் மக்களின் நிலைமை என்னவாகும்!
பாபாசாகேப் அம்பேத்கரின் வழிகாட்டலை ஏற்றுக்கொண்டு, மராட்டியத்திலும், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் இன்னும் இந்தியா முழுவதிலும் பௌத்த மதத்தைத் தழுவியுள்ள தலித் மக்கள் தீண்டாமைக் கொடுமையைச் சந்தித்து வருகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், அதற்குக் காரணம் வேறு. அங்கொன்றும் இங்கொன்றுமாக பௌத்தத்திற்கு மாறும் தலித் மக்கள் இன்றுவரை தனித் தனியாட்களாகவே வாழ்ந்து வருகின்றனர். அதனால் சாதி இந்துகளின் தாக்குதலுக்கு எளிதில் பலியாகிவிடுகின்றனர். பௌத்தத்திற்கு மாறும் தலித் மக்கள், தங்களை ஒரு தனித்த சமூகமாக மாற்றிக் கொள்ளாதவரை, தீண்டாமை உள்ளிட்ட பல கொடுமைகளைச் அவர்கள் சந்தித்துத்தான் ஆகவேண்டும். இந்துக்களாக வாழ்ந்ததினால் ஏற்பட்ட அடிமைக் கறைகளைக் கழுவ, பௌத்தத்திற்கு மாறும் தலித் மக்களுக்கு, நீண்டகாலம் பிடிக்கும் என்பதையும் நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும்.
தேவை ஏற்படுமானால், இது குறித்து விவாதிக்க ஏராளமான செய்திகளுடன் காத்திருக்கிறேன் பேராசிரியர் அவர்களே! நன்றி.
– யாக்கன்