பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளிடம் பாலியல் உறவு வைத்துக்கொள்வது பாலியல் வன்கொடுமைக் குற்றமாகும் என இந்தியத் தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கூடுதலாக ‘இந்தியத் தண்டனைச் சட்டம் 375’ பிரிவு 2-ஐ, (‘15 மதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்துகொண்ட கணவன்மார்கள் பாலியல் உறவு வைத்துக்கொள்வது குற்றமாகாது’) தலைமை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேலும், இந்திய நாடாளுமன்றம் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றிய ‘குழந்தைகள் பாலியல் வன்கொடுமைப் பாதுகாப்புச் சட்டம்’ (POCSO) பிரிவு 5 “ 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண் குழந்தைகளிடம் பாலியல் வல்லுறவு செய்வது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும்” எனக் கூறுகிறது. ‘இந்திய தண்டணைச்சட்டம் 375’ பிரிவு 2 மற்றும் ‘குழந்தைகள் பாலியல் வன்கொடுமைப் பாதுகாப்புச் சட்டம்’ (றிளிசிஷிளி) பிரிவு 5 ஆகிய இரண்டிற்கும் உள்ள முரண்பாட்டைச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிமன்றம், எதிரெதிர் இரட்டைத்தன்மை கொண்ட சட்டங்களை அனுமதித்தற்காக மத்திய அரசை கடுமையாகக் கண்டித்துள்ளது. நாடு முழுவதும் பரவலாக நடைபெற்று வருகிறது என்பதற்காக குழந்தைத் திருமணங்கள் ஏற்கத் தக்க மரபு அல்ல என்றும் குழந்தைத் திருமணங்கள் குறித்து அதிகம் பேசாமல், பெண் குழந்தைகளின் உரிமைகள் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் கவலைப்பட வேண்டும் என்றும் தலைமை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்திய நாட்டில் மிகவும் கொடியமுறையில் கையாளப்பட்டு வரும் பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் இருந்தும்கூட மத்திய மாநில அரசுகளின் அலட்சியத்தாலும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அலுவலர்கள் சட்டத்தையே மதிக்காதவர்களாக இருப்பதாலும் பெண் குழந்தைகளின் உரிமைகள் மதிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. தடைசெய்யப்பட்டிருக்கிறபோதிலும் நாடு முழுவதிலும் குழந்தைத் திருமணங்கள் கள்ளத்தனமாக நடைபெற்று வருகின்றன. இந்திய தண்டனைச் சட்டம் 375’ பிரிவு 2ஐ இரத்து செய்திருப்பதன் மூலம், 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளோடு பாலியல் வல்லுறவு கொள்வது இனி எந்த வகையான சட்டப்படியும் ஏற்கத்தக்கது அல்ல என்பதைத் தலைமை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக கருதப்படும் இந்தத் தீர்ப்பு, குழந்தைத் திருமணங்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் இந்திய சாதியச் சமூக அமைப்பினால் காப்பாற்றப்பட்டுவரும் குழந்தைத் திருமணங்களை எதிர்த்து பலர் போராட்டடங்களை முன்னெடுத்த போதிலும், அந்த கொடிய திருமணமுறைகள் இன்றும் நீடித்து வருகின்றன. பாபாசாகேப் அம்பேத்கர் குறிப்பிடுவதைப் போல, குழந்தைத் திருமணங்களுக்கு மத அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதே அதற்குக் காரணமாகும். சட்ட விரோதமானது என்றாலும்கூட, சாதியைக் காப்பாற்றும் நோக்கில்தான் குழந்தைத் திருமணங்களை, இந்துக்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சாதியும், குழந்தைத் திருமணங்களும் ‘மதக் கடமை’ என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுகிறது என்பதை பாபாசாகேப் அம்பேத்கர் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.
1916-ல் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் வாசித்தளித்த ‘இந்தியாவில் ஜாதிகள் : தோற்றமும் அதன் அமைப்பியக்கமும்’ என்ற ஆய்வுக்கட்டுரையில், சாதிகளின் அமைப்பியக்கம் ‘அகமண முறையில் அமைந்துள்ளது. ஒரு சாதியில் அகமணமுறை குழப்பமில்லாமல் நீடிக்க வேண்டுமானால் ஆண்-பெண் சம எண்ணிக்கையில் இருந்தாக வேண்டும். மண வயதுடைய ஆண்-பெண் சமமின்மையை ஒழுங்குபடுத்துவதைச் சுற்றியே சாதி சுழல்கிறது. திருமணமான ஆண், திடீரென இறக்க நேர்ந்தால், மனைவியை இறந்த கணவனோடு சேர்த்து எரித்துவிடுவதன் மூலமும், திருமணமான பெண் இறந்துவிட்டால் அவளது கணவனுக்கு பெண் குழந்தை ஒன்றை திருமணம் செய்து வைப்பதன் மூலமும் அந்த இழப்பை சரிசெய்து விடமுடியும். அதன் மூலம் ஒரு சாதியைச் சார்ந்த ஆண்-பெண் சம எண்ணிக்கை யில் இருப்பதை சாதிய சமூகம் உறுதி செய்தது.’ போன்ற கருத்துகளை முன்வைத்துள்ளார். அதன் மூலம் சாதிய சமூகத்தைக் காப்பாற்றவே குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று வருவதை பாபாசாகேப் அம்பேத்கர் உறுதி செய்தார். பின்னாளில் ஆணோ பெண்ணோ தனது சாதியை விட்டு வேறு சாதியில் திருமணம் செய்துகொண்டுவிடக்கூடாது என்பதற்காகவும், புதிய சாதியை உருவாக்கவும், ஒரு சாதியின் சொத்துகள் வேறு சாதிகளைச் சார்ந்த குடும்பங்களுக்குச் சென்றுவிடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் குழந்தைத் திருமணமுறை திட்டமிட்டு உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு, நிலைத்துவிட்டது.
ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் இந்திய சாதியச் சமூக அமைப்பினால் காப்பாற்றப்பட்டுவரும் குழந்தைத் திருமணங்களை எதிர்த்து பலர் போராட்டடங்களை முன்னெடுத்த போதிலும், அந்த கொடிய திருமணமுறைகள் இன்றும் நீடித்து வருகின்றன. பாபாசாகேப் அம்பேத்கர் குறிப்பிடுவதைப் போல, குழந்தைத் திருமணங்களுக்கு மத அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதே அதற்குக் காரணமாகும். சட்ட விரோதமானது என்றாலும்கூட, சாதியைக் காப்பாற்றும் நோக்கில்தான் குழந்தைத் திருமணங்களை, இந்துக்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சாதியும், குழந்தைத் திருமணங்களும் ‘மதக் கடமை’ என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுகிறது என்பதை பாபாசாகேப் அம்பேத்கர் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.
தலைமை நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பை சில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்த்துள்ளன. ‘ஷரியா சட்டத்தின்படி, 13 வயது நிரம்பிவிட்டாலே பெண் குழந்தைகள் பெரியவளாகிவிட்டள்’ என்றும், ‘ 13 வயது நிரம்பிய பெண், ஒரு ஆணைத் திருமணம் செய்துகொள்வாளேயானால், அவளுக்கு பாலியல் இன்பத்தை அனுபவிக்க உரிமை உண்டு’ என்றும், ‘தலைமை நீதிமன்றத்தின் தீர்ப்பை சட்டப்படி எதிர்கொள்வது குறித்து ஆலோசிப்போம்’ என்றும் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஆனாலும் ‘ஷரியா சட்டங்கள் எங்கு நடைமுறையில் உள்ளனவோ அங்குதான் இது பொருந்தும் என்றும், இந்தியா போன்ற நாடுகளில் அந்த நாட்டின் சட்டம் எதுவோ அதற்கு கீழ்ப் படியவேண்டும்’ என்றும் சில இஸ்லாமிய தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். குழந்தைத் திருமணங்களை வெளிப்படையபகவே ஆதரித்துப் பேசிய காஞ்சி ஜியேந்திரன் போன்ற இந்து மத ஏஜெண்ட்களிடமிருந்தும், கொடிய பயங்கரவாத இந்து மத அமைப்புகளிடமிருந்தும் இன்னும் வெளிப்படையான கருத்துகள் வெளிவரவில்லை.
18 வயதுக்குக் கீழுள்ள பெண் குழந்தையைத் திருமணம் செய்துகொண்ட போதிலும், பாலியல் உறவு செய்வது தண்டனைக்குரிய குற்றம் என கூறும் இந்தியத் தலைமை நீதிமன்றம் அத்தகையத் குழந்தைத் திருமணங்களுக்கு அளிக்கப்படும் மத அங்கீகாரத்தையும் ரத்து செய்ய முன்வரவேண்டும். பெண் குழந்தைகளைத் திருமணத்தை அங்கீகரிக்கும் எந்தவொரு மதத்தின் ‘தனிப்பட்ட சட்டங்களை’ இந்தியத் தலைமை நீதிமன்றம் தடை செய்ய வேண்டும். அத்தகைய ‘தனிப்பட்ட சட்டங்களை’ மக்களிடையே பரப்பி வரும் ‘மத ஏஜென்ட்கள்’ குற்றவாளிகளாக்கப்படவேண்டும். அப்போதுதான் குழந்தைத் திருமணங்கள், பெண் குழந்தைகப் பாலியல் வல்லுறவு, குழந்தைளைப் பலியிடுதல் போன்ற கொடிய ஈவு இரக்கமற்ற குற்றங்கள் குறையும்.
- யாக்கன்