அம்பேத்கர்

0
2,755

மனிதர்கள் கோடிக்கணக்கில் இருக்கலாம் ….

ஆண்டுகள் ஆயிரக்கணக்கில் கடந்து போகலாம் ….

ஆனால் வரலாறு படைக்க ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஜாம்பவாண்களும் –
ஞானிகளும் பேரேடுகளும் பிறந்து கொண்டே இருப்பார்கள்.

இந்திய விடுதலைக்குப் பிறகு, நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும் , இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கிய அம்பேத்கரின் நினைவு நாள் இன்று .

டாக்டர் அம்பேத்கர் மாகாராஷ்ர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 –ஆம் நாள் ராம்ஜி –பீமாபாய் ஆகியோருக்கு 14 – வது குழந்தையாகப் பிறந்தார்.

மகர் இனத்தில் பிறந்தவர்கள் ராணுவத்தில் பணி புரிய மறுக்கப்பட்டதால் , அம்பேத்கரின் தந்தை ராணுவப்பணியை விட்டு வெளியேற்றப்பட்டார் .

கிராமத்தில் இருந்தால் பிற்போக்கு சாதிய பாகுபாடுகளில் சிக்கி தவிக்க வேண்டுமென்று நகர்புரத்திற்கு குடிபெயர்ந்தார்.

அம்பேத்கர் படித்து மேல்நிலைக்கு வர வேண்டுமென்று தந்தை ராம்ஜீ ஆசைப்பட்டார் . மகன் படிப்பதற்காகவே தனி அறை ஒதுக்கி விடியும் வரை மகன் படிக்க ராம்ஜீயும் விழித்திருந்தார்.

அம்பேத்கர் படிக்கின்ற வயதில் ஏற்பட்ட அவலங்களையும் – ஒடுக்கு முறைகளையும் வரலாறு மறக்காது . தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ,தனி மண்பானையில் தண்ணீர் குடிப்பது – குதிரை வண்டியில் போகும் போது தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்றதும் பாதியிலே இறக்கி விட்டது – சமமாக நாற்காலியில் அமர்ந்து படிக்க முடியாதது – போன்ற துன்பங்கள் அம்பேத்கரை சுடர்விட தூண்டியன .

பள்ளிப் படிப்பு படித்து முடித்ததும் பரோடா அரண்மனையில் வேலை செய்ய வாய்ப்பிருந்து அம்பேத்கரின் தந்தை மறுத்து மேலும் தன் மகனை படிக்க வைக்க நினைத்தார் . அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைகழகத்தில் மேற்படிப்பு படிக்க அழைப்பு வந்த்து .

அந்த அழைப்பை விடுத்தவர் பரோடா மன்னர் . எந்த அரண்மனைக்கு வேலைக்கு அனுப்பகக் கூடதென்று நினைத்தாரோ அங்கிருந்தே தன் மகனுக்கு படிக்க வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார் ராம்ஜி .

படித்து முடித்ததும் 10 ஆண்டு காலம் அரண்மனையில் பணிபுரிய வேண்டுமென்ற பரோடா மன்னர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டு ,அம்பேத்கர் கொலம்பியா மண்ணை மிதித்தார் .

அம்பேத்கருக்குள் புதுக் கிளர்ச்சியை உண்டாக்கியது அமெரிக்கவின் நீயூயார்க் நகரம்.

காரணம் இங்கே அவர் மகர் இல்லை .அவரைக் கடந்து செல்பவரிடம் இவன் என்ன சாதியாக இருப்பான் என்ற சந்தேகப் பார்வைகள் இல்லை . முகச் சுளிப்புகள் இல்லை .
விலகி நடந்து ,சக மனிதனை அற்ப பிராணி போல நடத்தும் அசிங்கம் அமெரிக்காவில் இல்லை .நடையிலும் உடையிலும் அம்பேத்காருக்கு புது உற்சாகம் பிறந்தது . கைகள் சற்று அகலமாகவே நகரத்தின் வீதிகளை வீசி அளந்தன என்றாலும் , தனது தாய் நாடான இந்திய மண்ணில் இந்த அக சுதந்திரத்தைத் தன்னால் பூரணமாக அனுபவிக்க முடியவில்லையே என்று வருந்தினார் .

இந்தக் குறைகளிலிருந்து தன் தேசத்தையும் தன் மக்களையும் விடுவிப்பது தான் எதிர்காலத்தில் தான் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியம் என்பதை அச்சமயத்தில் முழுமையாக உணர்ந்தார் அம்பேத்கர் .22 வயதில் விரும்பி தன் முதுகில் ஏற்றிக்கொண்ட இந்தச் சுமையுடன் கொலம்பிய பல்கலைக்கழகத்தினுள் அம்பேத்கர் அடியெடுத்து வைத்தார் .

1921 ஆம் ஆண்டுகளில் சட்டப்படிப்பிற்காக பாரிஸ் பட்டத்தையும், அடுத்தடுத்த ஆண்டுகளில் பொருளாதாரத்தில் எம் .எஸ் .ஸி. மற்றும் டி. எஸ். ஸி .போன்ற ஆய்வுப் பட்டங்களையும் தன் பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொண்டார் .

காரல் மார்க்ஸ் ,மாஜினி ,லெனின் என உலகின் தலை சிறந்த மனிதர்களை உருவாக்கிய லண்டன் நூலகத்தில் அம்பேத்கருகும் படிக்க வாய்ப்பு கிடைத்து .
அங்கு படித்த மூன்று ஆண்டுகளில் அம்பேத்கருக்கு தாய் மடியாகவும் இளைப்பாரும் இடமாகவும் இந்த நூலகம் இருந்தது .

லண்டனில் அம்பேத்கர் தான் படிக்கும் காலங்களில் லண்டன் நாளிதழ்களில் இந்தியா பற்றிய செய்திகளை கவனித்துக் கொண்டே வந்தார் . அதில் தொடர்ச்சியாக மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்ற பெயர் அடிக்கடி இடம்பெறுவதை உற்று நோக்கினார் .

யார் இந்த காந்தி …? தீண்டாமை குறித்து ஆவேசமாக பேசும் இவரால் தாழ்த்தப்பட்ட மக்களுடைய வாழ்வில் உண்மையான வெளிச்சத்தைக் கொண்டு வர முடியுமா என்ற ஆயிரம் கேள்விகள் அம்பேத்கரின் அடிமனதில் நொடிக்கொரு முறை நினைவூட்டிக்கொண்டே இருந்தது .

1923 க்குப்பிறகு இந்தியாவுக்குத் திரும்பிய அம்பேத்கார் மகாத்மா காந்தியைப் பற்றியும் , இந்திய தேசிய காங்கிரஸைப்பற்றியும் அம்பேத்கர் ஆராயத்துவங்கினார் .
பரோடா மன்னருக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற அம்பேத்கர் அரண்மனையில் சில காலம் பணிபுரிந்தார் .
அரண்மனையில் உயர் சாதி வெறியர்களின் அட்டுளியங்களை சகித்துக் கொண்டு இருக்க வேண்டிய கட்டாயத்தில் அம்பேத்கர் பணிபுரிந்தார் .

மக்களுக்காகப் போராட்டம் நடத்த ஆளில்லாமல் அம்பேத்கருக்கான சபை ,சில பத்து மனிதர்களாலும் கூடியிருக்கிறது .

இழிந்த குலத்தவர்கள் என்று கருதப்பட்டவர்கள் உயர் சாதியினர் தண்ணீர் எடுக்கும் குளத்தில் அனுமதிக்கப்படாத போது அதற்காக பெரும் போராட்டம் நடத்தினார் .

தாழ்த்தப்பட்டவர்களுக்கு ,கோவில் நுழைவு மறுக்கப்பட்ட போது விடிய விடிய அசையாமல் 1000க்கணக்கான மக்களைத் திரட்டி வெற்றிக் கண்டார் . பல நேரங்களில் தோல்வியும் கண்டார் .

இந்தியப் பாரம்பரிய பெருவெளியில் தாக்கம் செய்த மாகாத்மா காந்தியின், காந்தியக் கோட்பாடுகளைத் தகுந்த ஆதாரங்களோடு அம்பேத்கர் மறுத்தார் .

தாழ்த்தப்பட்டவர்கள் கடவுளின் குழந்தைகள் என்றால் , உயர் ஜாதி மக்கள் பிசாசுகளின் பிள்ளைகளா …? என்ற நகைப்பில் அமேத்கர் தர்க்கம் செய்தார் .

சொத்துடைமை வர்க்கத்துக்குக் கீறல் ஏற்பட்டுவிடக் கூடாதென்றே மிஸ்டர் காந்தி விரும்புகிறார் . சமூகப் பொருளாதார பிரச்சினைகளைப் பொறுத்தவரை டால்ஸ்டாய் ரூசோ போன்றவர்கள் சொன்னதையே காந்தியும் திரும்பச் சொல்கிறார் . எளிமை மட்டுமே காந்தியத்தின் சிறப்பியல்பு.

அதிகாரமும் செல்வமும் மமதையும் போலிப் பெருமைககளும் ஒரு புறம் குவியும் போது பாதுகாப்பின்மையும், பட்டினியும் ,வீழ்ச்சியும் இழிவுகளும் மற்றொரு பக்கம் பெருகுகின்றன .இப்படிப்பட்ட ஒரு அமைப்பையே காந்தியம் நம்புகிறது என்று அம்பேத்கர் கடுமையாகச் சாடினார் .

லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாடுகளில் ….அம்பேத்கரும் – மகாத்மா காந்தியும் கலந்து கொண்ட நிகழ்வுகள் உலக இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமானதாகும் .

1930 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு தாழந்த்பபட்டவருக்கான இரட்டை வாக்குகரிமையை வழங்கவேண்டுமென அம்பேத்கர் வலியுறுத்தினார் .

பிரிடிஷ் அரசாங்கத்தின் மண்ணிலே ,அவர்களது ஆட்சி முறையின் கோளாருகளை அம்பேத்கர் கடுமையாகச் சாடினார் . உங்களது ஆட்சி எம் மக்களுக்கு அளித்து வந்த வேதனைகள் போதும் . காலம் காலமாக எம்மக்கள் மதத்தின் பேரால் அனுபவித்து வரும் துயரங்களிலிருந்து மீட்காமல் , உஹ்கள் அரசு அவர்களை மேலும் இழிவு படுத்தி வருவதை இனியும் எங்களால் சகித்துக் கொள்ள முடியாது .

ஒரு தாழ்த்தப்பட்டவனுக்கு அந்த நாட்டின் ராணுவப்படையில் சேர உரிமை மறுக்கப்படுமானால் , அப்படிப்பட்ட ஆட்சியே எங்களுக்குத் தேவையில்லை . இனி இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களால் மக்களே ஆளுகிற புதிய ஆட்சி முறை வேண்டும் .அந்த ஜனநாயக ஆட்சியில் எம் தாழ்த்தப்பட்ட மக்கள் இப்போது வாழ்கிற அடிமை நிலையிலிருந்து விடுபட்டு, அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூக நிலைகளில் ஏனைய உயர் சாதியினரைப் போல பூரண விடுதலை பெற்ற வர்களாக வாழ வேண்டும் . என்று உரத்துக் கூறினார் .

மாநாட்டுக்கு வந்த இதர சிற்றரசர்கள் முன்னிலையில் அன்று இரவு அம்பேத்கருக்கு
விருந்து கொடுத்துக் கௌரவப்படுத்திக் கட்டித் தழுவினார் பரோடா மன்னர் .
உலக நாடுகள் அம்பேத்கரின் பேச்சுக்கு மரியாதை அளித்தன .அம்பேத்கரின் உரையே சிறப்பு என இண்டியன் மெயில் நாளேடுகள் எழுத, ஸ்பெக்டேடர் நாளேடு அதற்கும் ஒரு படி மேலாக அம்பேத்கர், இந்திய தேசியத் தலைவர்களில் தவிர்க்க முடியாத நபர் , என புகழ் பாடத் தொடங்கியது .

முதலாம் வட்ட மேசை மாநாட்டைத் தொடர்ந்து ,அடுத்த வருடமே இரண்டாவது வட்ட மேசை மாநாட்டுக்கான அழைப்பு வந்தது .எதையும் கண்டு கலங்காதவராக இன்னும் உறுதியுடன் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார் அம்பேத்கர்.

மூன்றாம் வட்ட மேசை மாநாட்டில், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளால் மகாத்மா காந்தி பங்கேற்கவில்லை . அம்பேத்கர் கலந்து கொண்டார் .
சட்டம் – ஒழுங்கு – வரலாறு – பொருளாதாரம் என்று உலக நாடுகளில் பட்டறிவு பெற்ற அம்பேத்கர் , தாழ்த்தப்பட்ட அடித்தட்டு மக்களுக்காகப் போராடினார் .
பரம்பரைத் தொழில் அல்லது குலத் தொழில் என்று ஒடுக்கப்பட்டு, சமூதாயத்தின் முக்கிய அம்சங்களில் ஒதுக்கி வைக்கப்ட்ட மக்களுக்காக பிரச்சனையை அம்பேத்கர் கையில் எடுத்தார் .

முதலாளி – தொழிலாளி என்ற இடைவெளியில் உள்ள வர்க்க பேதங்களை தன் பேச்சாற்றலாலும் ,எழுத்தாற்றலாலும் வேர்வரை சென்று விசாரித்தவர் அம்பேத்கர் .
தீண்டாமை ,பெண்ணடிமை ,குற்றப்பரம்பரை என்ற அறியாமையில் தொண்டு செய்து வாழந்த சமூகத்தை சிந்தனையில் மாற்றம் செய்தார் . அம்பேத்கர் கருத்துச் சுதந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார் . சாதியக் கட்டுமானங்களின் வலுவான நம்பிக்கையை உடைத்தார்.
ஓய்வும் கலாச்சாரமும் மனிதனாய் பிறந்த அனைவருக்கும் சமமானது என்று சொன்னவர் அம்பேத்கர் .

“என் பதவி விலகும் முடிவை எடுக்க இத்தனை காலம் பிடித்தற்கு காரணங்கள் உண்டு .
முதலாவதாக அமைச்சரவையின் உறுப்பினராக இருந்த பெரும்பாலான காலத்தில் , 1950 சனவரி 26 வரை அரசியல் சட்டத்தை உருவாக்கும் பணியில் மூழ்கியிருந்தேன் .
இந்து சட்டத்தொகுப்பிற்காகப் பதவியில் நான் நீடித்தது தவறு என்று சிலர் எண்ணக் கூடும் . வர்க்க ஏற்றத்தாழ்வுகளும் – பாலின ஏற்ற தாழ்வுகளுமே இந்து சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது . இதனை அப்படியே விட்டு விட்டு, பொருளாதார சிக்கல்கள் குறித்த சட்டங்களை மட்டும் இயற்றிக் கொண்டே போவது, நமது அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கேலிக்கூத்தாக்கும்.

இது சாணி குவியலில் அரண்மனையைக் கட்டுவதற்கு ஒப்பதானதாகும் . இந்து சட்டத் தொகுப்பிற்கு நான் வழங்கும் முக்கியத்துவம் இது தான் . இதன் பொருட்டே என் மன வேறுபாடுகளை ஒதுக்கி விட்டு நான் பதவியில் நீடித்திருந்தேன் .

இவ்வாறு பேசிய அம்பேத்கர் … மாகாபாரதத்தையும் – ராமயணத்தையும் முழுவதுமாக படித்தவராக இருந்தாலும் புத்தமதக் கொள்கைகளை பின்பற்றினார் .
அம்பேத்கர் மறைந்து 121 வருடங்கள் கடந்த நிலையில் … இந்திய அரசியல் கட்சிகள் தங்கள் கொள்களை வரையறுக்க அம்பேத்கரின் வழியை நாடியுள்ளதை நம்மால் கவனிக்க முடியும் .

கடைசி மனிதன் இருக்கும் வரை அம்பேத்கர் அமைத்த களம் உலக மக்களுக்களுக்குத் தேவையாக இருக்கும் .

மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழக்கை இனி உண்டோ …? என்றான் பாரதி .
அம்பேத்கரின் பட்டறிவும் – சட்டறிவும் இந்திய வரலாற்றின் பழமைவாதப் பக்கங்களைக் கிழித்து எறிந்ததை இந்த நினைவு நாளில் நாம் நினைந்து கொள்வோம் …!

 

– சந்திரபால்

Load More Related Articles
Load More By sridhar
Load More In சிறப்பு கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published.