“எங்கள் எழுத்துகள் தலித் அல்லாதோரிடம் குற்றவுணர்வை ஏற்படுத்தின!” – அர்ஜுன் டாங்ளே
அர்ஜுன் டாங்ளே – தலித் இலக்கியத்தில் இந்திய அளவில் கவனம் ஈர்த்த எழுத்தாளர்; சமூகச் செயற்பாட்டாளர். மகாராஷ்டிராவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தலித் பேந்தர் (Dalit Panther) இயக்கம், தலித் இளைஞரணி அமைப்பு (Militanat Dalit youth organization) ஆகியவற்றை உருவாக்கியவர்களில் ஒருவர். ‘பாரதிய குடியரசுக் கட்சி’ (Bharatiya Republic Party)யின் தலைவராகவும் இருந்தவர். தற்போது, ‘குடியரசு ஜன சக்தி’யின் தலைவராக இருக்கிறார். டாங்லே எழுதிய பல கவிதைகளும், கட்டுரைகளும், சிறுகதைகளும் இந்திய மற்றும் சர்வதேச மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1992-ம் ஆண்டு இவர் தொகுத்த ‘Poisoned Bread’ என்ற தலித் இலக்கியத் தொகுப்புதான், இந்திய மொழிகளில் முதன்முதலாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட முதல் தலித்திய எழுத்து. இந்தியாவில் தலித் மக்கள் பற்றிய ஆய்வுகளில் இத்தொகுப்பு முக்கிய இடம் வகிக்கின்றது. கவிதைகள், கதைகள், உண்மைச் சம்பவங்கள், வாழ்க்கைச் சரித்திரங்கள், விமர்சனக் கட்டுரைகள் என்ற பன்முகத்தன்மைகொண்ட இத்தொகுப்பின் சாராம்சம் 21-ம் நூற்றூண்டுக்கும் பொருந்தும். ‘பிணத்தை எரித்தே வெளிச்சம்’ மற்றும் ‘தலித் கவிதையியல்’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்திருந்த அர்ஜுன் டாங்ளேவுடன் உரையாடியதிலிருந்து…
“உங்களின் இளமைக்காலம், நீங்கள் எழுத்தின் பக்கம் வந்தது பற்றிய அறிமுகத்தோடு உரையாடலைத் தொடங்குவோமா?”
“நிச்சயமாக, மும்பையில் தாராவி பகுதியிலுள்ள மாதுங்கா லேபர் கேம்ப்பில் (Matunga Labour Camp) 1945-ல் பிறந்தேன். அது முழுக்க முழுக்க தொழிலாளர்கள் வாழும் பகுதி. என் தாய்மாமன் சங்கர் நாராயண், ஒரு கம்யூனிஸப் போராளி. அதனால், கம்யூனிஸத் தத்துவங்கள் எனக்கு சிறுவயதிலேயே அறிமுகமானது. அந்தப் பருவத்திலிருந்தே மாமாவுடன் சேர்ந்து இயக்கங்களில் இயங்கிக்கொண்டிருந்தேன். அந்த வயதிலேயே, கவிதைகளும் கட்டுரைகளும் எழுதுவேன். பிறகு, கல்லூரி நாள்களில் எனக்கு இரண்டுவிதமான இயக்கங்கள் அறிமுகமாகின. ஒன்று, பிற்படுத்தப்பட்ட சாதிய இயக்கம். மற்றொன்று, அம்பேத்கரிய இயக்கம். நான் அம்பேத்கர் இயக்கத்தில் சேர்ந்தேன். அவரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட நான், முழுவதுமாக அவரைக் கற்றுக்கொள்ள முடிந்தது. கவிதைகளையும் கட்டுரைகளையும் வேறு வடிவத்தில் எழுதிப்பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது.”
“அந்தக் காலகட்டத்தில் மராத்திய இலக்கிய உலகம் எவ்வாறு இருந்தது?”
“மராத்தியத்தில் தலித் இலக்கியம் உருவான 1960-ம் ஆண்டைப் புரட்சிகரமான ஆண்டாகவே பார்க்கிறேன். முற்போக்குச் சிந்தனைகளைக்கொண்ட எழுத்தாளர்கள் ஒரு பக்கம், சிற்றிதழ்களே ஓரியக்கமாக புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி வளர்த்த காலகட்டம் இன்னொரு பக்கம். அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு, அணித் திரட்டல்களின் முக்கியத்துவத்தை நாங்கள் உணர்ந்த காலம் அது. 1958 மார்ச் 2-ல் மும்பை தாதர் பகுதியில் உள்ள பெங்காலி உயர்நிலைப் பள்ளியில் தலித் எழுத்தாளர்கள் கூடினார்கள். தலித்தியச் சிந்தனையாளர் பந்துமகாதேவ், ‘ரஷ்யப் புரட்சிக்கும் லெனினின் தத்துவங்களுக்கும் ரஷ்ய எழுத்தாளர்கள் எப்படி உதவியாக இருந்தார்களோ, அதேபோல அம்பேத்கரின் கருத்துகளைக் கிராமம்தோறும் எடுத்துச் செல்வதும் பரப்புவதும் எழுத்தாளர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை’ என்று எழுதினார். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சமூகநீதி மறுக்கப்பட்ட மக்களுக்காகப் போராட அரசியல் களம் மட்டும் போதாது. எல்லா முனைகளிலிருந்தும் போராட வேண்டும் என்று முடிவுசெய்தோம். அம்பேத்கரின் அடிப்படைக் கொள்கைகளைக்கொண்டு இலக்கியப் படைப்புகளை உருவாக்கத் தொடங்கினோம். 1960-ல் மும்பையில் ‘மகாராஷ்டிரா புத்த சாகித்திய சபா’ எங்கள் கவிதைகளை, ‘AKAR’ என்ற தொகுப்பு நூலாகத் தங்கள் கூட்டத்தில் வெளியிட்டார்கள். பாபுராவ் பகுல், தயாபவார், யாதவ்ராவ் காங்கோர்டே, சொக்கே காம்ப்ளே கவிதைகளுடன் என்னுடைய கவிதைகளும் அத்தொகுப்பில் இடம்பெற்றன. இன்றைக்கு வாசிக்கும்போது, அதில் இடம்பெற்றிருக்கும் எல்லாக் கவிதைகளும் தலித்திய பார்வைகொண்டவை என்று சொல்ல முடியாவிட்டாலும், தலித்தியக் கவிதைகளுக்கான ஓரிடம் மராத்திய இலக்கிய உலகில் அன்று உண்டானது என்று சொல்லலாம். தலித் எழுத்தாளர்கள், தலித் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுக்கொண்டிருந்தனர். வி.எஸ்.காண்டேகர், எம்.எஸ்.படுகே உள்ளிட்ட எழுத்தாளர்கள் எழுதிய ரம்மியமான எழுத்துகளை சுவாரஸ்யமாக வாசித்துக்கொண்டிருந்தவர்களுக்கு, எங்கள் எழுத்துகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. ‘இதெல்லாம் எப்படி இலக்கியமாக முடியும்?’ என்றும் அவர்கள் விமர்சித்தார்கள். அவர்கள் எழுத்துகளில் எங்கள் வாழ்க்கை இல்லை. எங்கள் வாழ்வியலைப் பற்றி அவர்கள் எதுவும் அறியாதவர்கள்.
பிரபல மராத்திய எழுத்தாளர் விஜய் டெண்டுல்கருக்கு, நாங்கள் சிவப்பு விளக்குப் பகுதியைப் பற்றி எழுதும்போது, அவருக்கு அது புரியவில்லை. அதைப் பற்றி அவர் எங்களிடம் கேட்டபோது, அவரை அந்தப் பகுதிக்கே அழைத்துச் சென்று காண்பித்தோம். எங்களின் வாழ்க்கை முறையும் சிந்தனையும் வேறாக இருந்தன. உதாரணத்திற்கு, நாம் நிலவைப் பார்க்கிறோம். பலருக்கு அது பலவிதமான கற்பனைகளைத் தூண்டும். ஆனால், அந்த நிலவைப் பார்த்தால், எங்களுக்கு ரொட்டிதான் ஞாபகத்திற்கு வரும். இந்த உணர்வை, ஒரு தலித்தாக இருந்தால் மட்டுமே பெற முடியும்.”
உங்களை பாதித்த எழுத்தாளர்களைப் பற்றி?”
“நாரயண் சுர்வே, தொழிலாளர்களின் பிரச்னைகளை முன்வைத்து எழுதிக்கொண்டிருந்தார். பாபுராவ் பகுலின் கவிதைகள் ‘FAKTA’ என்ற சிற்றிதழில் வெளிவந்துகொண்டிருந்தன. பாபுராவ் பகுலின் படைப்புகள் தலித் இலக்கியத்திற்குக் குறிப்பிடும்படியான உத்வேகத்தைக் கொடுத்தன என்று சொல்வேன். அன்னாபவ் சாத்தேவை (Annabhau Sathe) எங்கள் புரட்சிக் கவிஞர் என்றே சொல்வேன். இலக்கியத்தின் அனைத்து வடிவங்களையும் வெற்றிகரமாகக் கையாண்டவர். கதைகள், கவிதைகள், நாடகங்கள் மட்டுமல்ல, அவர் சிறந்த பாடலாசிரியர்; மார்க்ஸிய சிந்தனையாளர்; அம்பேத்கர்யவாதி; களப்போராளி. அவருடைய கவிதைகளும் பாடல்களும் எங்கள் மேடைகளில் உரக்க ஒலித்த நாள்கள் நினைவிலிருக்கின்றன. Yeh azadi jhooti hai, desi ki janata bhooki hai (இந்த விடுதலை நகைப்புக்குரியது… இந்தத் தேசத்தின் மக்கள் பசியுடன் அலைகிறார்கள்) பாபுராவ் பகுலும் அன்னாபவ் சாத்தேயும் நான் பிறந்து வளர்ந்த அதே தாராவி லேபர் கேம்ப் பகுதிக்காரர்கள். என்னை பாதித்த எழுத்தாளர்களில் இவர்கள் முக்கியமானவர்கள்.”
“தலித் பேந்தர் இயக்கத்தைத் தொடங்கியது எப்போது?”
“அப்போது மேற்கத்திய நாடுகளில், கறுப்பின அடிமைத்தனம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்த சமயம். அதற்கு எதிராகக் குரல் கொடுக்க, கறுப்பின மக்கள், ‘பிளாக் பேந்தர்’ (Black Panther) என்ற இயக்கத்தை நடத்திவந்தனர். அவர்கள் எழுத்துமூலமாகவும், போராட்டங்கள் மூலமாகவும் தங்களின் உரிமைகளை மீட்டெடுக்கப் போராடிக்கொண்டிருந்தனர். இதைக் குறிப்பிட்டு, அப்போதைய மெட்ராஸ் மேயராக இருந்த என்.சிவராஜும் டாக்டர் ரோஹியாவும் பேசினார்கள். இந்தச் சமூகத்தில் நிலவும் சமத்துவமற்ற சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்ற ஆழமான எண்ணம்கொண்ட நாங்கள், ‘பிளாக் பேந்தர்’ இயக்கத்தை எங்கள் முன்மாதிரியாகக்கொண்டு 1972-ல் ‘தலித் பேந்தர்’ அமைப்பை உருவாக்கினோம். நான், நாம்தேவ் தாசல், ராஜா டோலே ஆகியோரின் கூட்டுமுயற்சியே ‘தலித் பேந்தர்’. அக்காலகட்டத்தில் நாங்கள் சம்யுக்தா மகாராஷ்டிரா இயக்கச் செயல்பாடுகளிலும் கலந்துகொண்டோம். அதாவது, தனி மகாராஷ்ட்ரா வலியுறுத்தும் போராட்டம். கம்யூனிச மற்றும் ரிபப்ளிக்கன் (Republican) தலைவர்களாகிய எஸ்.ஏ.டாங்கே, தாதாசாகிப் கெய்க்வாட், சி.எம்.ஜோஷி, அசாரியா அட்ரே போன்றோர் என் மனதை ஆட்கொண்டிருந்தனர். ஓர் இயக்கம் எனபது, குறிப்பிட்ட ஒரு சாதியின் உரிமைகளுக்காக மட்டும் போராடுவது அல்ல. சிதறிக் கிடக்கின்ற எண்ணற்ற சிறுசிறு சாதிகளின், சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்காகவும் போராடுவது என்ற புரிதல் எங்களிடமிருந்தது. அதுவே எங்களின் லட்சியமாகயிருந்தது; அதில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.”
“தலித் பேந்தரின் செயல்பாடுகள் எப்படி இருந்தன?”
‘‘எழுத்தாளர்கள், கவிஞர்கள், தலைவர்களாகவும் களப்போராளிகளாகவும் இருந்தோம் என்பது, தலித் பேந்தரின் மிக முக்கியமான சிறப்பம்சம். ‘Poet leaders’ என்று எங்களை அன்றைக்கு அழைத்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மும்பை, அவுரங்கபாத், புனே ஆகிய மூன்று இடங்களிலும் எங்கள் செயல்பாடுகள் மிகவும் உச்சத்தில் இருந்தன. அதற்கு சில காரணங்கள் உண்டு. புனாவில், எங்கள் மகாத்மா ஜோதிராவ் புலேவின் செயல்பாடுகளால் ஏற்கெனவே ஒரு மாற்றத்தை நோக்கி மக்கள் பயணித்துக்கொண்டிருந்தனர். மும்பையிலும் அவுரங்கபாத்திலும் எங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தவர் பாபாசாகேப்தான். 1946-ல் மும்பையில் அவர் ஆரம்பித்த சித்தார்த்தா கல்லூரி, 1947-ல் அவுரங்கபாத்தில் அவர் ஆரம்பித்த மிலின் கல்லூரி (Milind College) ஆகியவற்றில் படித்த மாணவர்கள், பெரும்பாலும் தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும்தான். இக்கல்லூரிகள் எங்கள் செயல்பாட்டுக்கு உதவியாக இருந்தன. மாணவர்கள் மட்டுமல்ல, பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களின் ஆதரவும் இருந்தது. அதில் குறிப்பிடத்தகுந்தவர்கள் எம்.பி.சிட்னிஸ், எம்.என்.வாங்கடே. மிலின் கல்லூரியில் ‘அஷ்மிதா’ என்ற இதழ் வெளிவந்தது. மார்க்ஸியர்கள் எங்கள் எழுத்துகளை வரவேற்றதுடன், தலித் அல்லாதர்களையும் வாசிக்கவைத்தார்கள். போராட்டங்கள் நிறைந்ததாகவும் எங்கள் வாழ்க்கை இருந்தது. ரோட்டில் இறங்கிப் போராட அன்றும் இன்றும் நாங்கள் தயங்கியதில்லை. கழிவறை முதல் ரயில்வே பிளாட்ஃபார்ம், ஓடும் பேருந்து, ரயில் இப்படியான இடங்களில்கூட எங்கள் சந்திப்புகள் நிகழ்ந்ததுண்டு. இந்துக் கடவுள்களின் சிலைகளை உடைத்தோம், பகவத் கீதையை எரித்தோம், தேர்தலைப் புறக்கணித்தோம், இந்திய சுதந்திர தினத்தைக் கறுப்பு தினம் என்று அறிவித்தோம். அதற்காகக் கைதுசெய்யப்பட்டோம். அம்பேத்கரின் புத்தகங்களை அரசே அச்சிட்டு 10 ரூபாய்க்கு விற்றது. அந்தப் பெரிய பெரிய புத்தகங்களைச் சுமந்துகொண்டு மக்களிடம் கொண்டுசேர்த்தோம். அம்பேத்கரின் எழுத்துகள் பெரும் தாக்கத்தை உருவாக்கின. எங்களை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். மனித உரிமைக்காகப் போராடுவதே எங்கள் லட்சியமாக இருந்தது. அதில், நாங்கள் உறுதியாக இருப்பதை மக்கள் புரிந்துகொண்டார்கள்.’’
“உங்களின் இலக்கிய, அரசியல் செயல்பாட்டுக்கு, பத்திரிகைகள் உதவினவா?”
“தொடக்கத்தில், எங்களை ஒதுக்கத்தான் செய்தன. எங்கள் எழுத்துகளை இலக்கியமா என்றும் கேட்டன. முற்போக்குச் சிந்தனையாளர்கள் குறிப்பாக மார்க்ஸியவாதிகள் எங்களை முதலில் ஏற்றுக்கொண்டார்கள். எங்கள் சுயசரிதைகள் வெளிவர ஆரம்பித்தன. அப்போது தலித்துகளில் சிலரே அதை எதிர்த்தார்கள். ‘நம்முடைய அவலமான நாற்றமெடுக்கும் அசிங்கத்தை ஏன் வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்?’ என்று கேட்டார்கள். அன்றைக்கு அந்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்வதற்கு (1972 அக்டோபர் 15) ‘மகாராஷ்டிரா டைம்’ஸில் ஒரு கட்டுரை எழுதினேன். அவர்களை நான் ‘தலித் பிராமணர்கள்’ என்று எழுதியிருந்தேன். எங்களுக்கு உதவினார்களா இல்லையா என்பதைவிட, எங்கள் தொடர்ச்சியான செயல்பாடுகளால் நாங்கள் அவர்களுக்குத் தவிர்க்க முடியாதவர்களாக இருந்தோம் என்பதுதான் உண்மை. பௌத்த தலித் இலக்கியம், மார்க்ஸிய தலித் இலக்கியம், அம்பேத்கரிய தலித் இலக்கியம், காந்திய தலித் இலக்கியம் என்ற வகைப்பாடுகள், அவரவர் பார்வையில் வைக்கப்பட்டன.
கறுப்பின மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய நெல்சன் மண்டேலா, எங்களைப் பற்றியும் எங்கள் இயக்கத்தைப் பற்றியும் கேள்விப்பட்டு எங்களுக்கு வாழ்த்து அட்டை அனுப்பினார்; என்னைத் தென்னாப்பிரிக்காவுக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். அவர் கைப்பட எழுதிய வாழ்த்துச் செய்தியுடன் எனக்கு வந்த அவரின் சுயசரிதைப் புத்தகத்தை இன்றும் என் பொக்கிஷமாக, எனக்குக் கிடைத்த ஆகச்சிறந்த அங்கீகாரமாக வைத்திருக்கிறேன்.’’
“தலித் இலக்கியத்தில் இன்றைய தலைமுறையின் பங்களிப்பு எப்படி இருக்கிறது?”
“அவர்களின் வாசிப்பும் தேடலும் அம்பேத்கரைத் தலித்துகளின் தலைவராக மட்டுமே பார்த்துக்கொண்டிருந்ததை மாற்றி, அவரை இந்த நூற்றாண்டின் சிறந்த அறிஞராகப் பார்க்கும் பார்வை, என் போன்றோருக்கு மகிழ்ச்சி தருகிறது. இந்தியா போன்ற நாடுகளுக்கு உலகமயமாதல் ஒரு கலாசாரத் தீவிரவாதமாக இருப்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டியது அவசியமாகிறது.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உலகமயமாதலிலிருந்து நாம் தப்பிக்க முடியாதுதான். கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை அனைவருமே இன்று அடிமைகளாக இருக்கிறோம். உலகமயமாதல் என்னவோ விவசாயிகளையும் தொழிலாளர்களையும் மட்டுமே பாதித்திருப்பதாக எண்ணக் கூடாது. அந்த விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டும். இதை எல்லாம் மையப்படுத்தி எழுதவேண்டியது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அருண் காயப் (Arun Kayab), ஊர்மிளா பவார், ஜாகன் குமார் போன்ற பலரும் மிகவும் நேர்த்தியாக எழுதிக்கொண்டிருக்கின்றனர்.”
“உங்களின் குடியரசுக் கட்சியால், தலித் பேந்தரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்று ஒருமுறை கூறியிருக்கிறீர்கள். அது ஏன்?”
“ ‘தலித் பேந்தர்’ என்பது கலாசார இயக்கம்; அதை வரவேற்றார்கள். ஆனால், ‘பாரதிய குடியரசுக் கட்சி’ என்பது, தேர்தலின் வெற்றி தோல்விகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் ஓர் அரசியல் கட்சி. ஓட்டு அரசியலில் கொடுக்கல் வாங்கல்கள், சமரசங்கள் நீங்கள் அறியாததா… தலித் பேந்தரின் களப்போராளிகளுக்கு இயக்கமே வாழ்க்கையாக இருந்தது. எங்கள் எழுத்தே இயக்கமாக, செயலாக எங்கள் வாழ்க்கையாக இருந்தது. இப்படியான பல்வேறு அரசியல் தார்மிகக் காரணங்களுக்காகத் தனித்தனியாக இருந்தோம் என்றாலுமே சமூகப் பிரச்னை என்று வரும்போது, நாங்கள் இணைந்தேதான் செயல்பட்டோம்.”
“அம்பேத்கர் வழியைப் பின்பற்றி எழுதிய தலித் எழுத்தாளர்களால் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டுவர முடிந்ததா?”
“எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மட்டுமே இந்தத் சமூகத்தின் சீர்திருத்தவாதிகள் அல்ல. அவர்களால் மட்டுமே இதைச் சீர்திருத்தவும் முடியாது. ஆனால், இந்தச் சமுதாய மாற்றத்திற்கு அவர்கள் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றனர். எத்தனைக் கவிதைகள், கட்டுரைகள் விமர்சனங்கள், சுயசரிதைகள் எழுதியிருக்கிறோம். அவையெல்லாம் தலித் அல்லாதவர்களிடம் குற்றஉணர்வை ஏற்படுத்தின. சமத்துவமில்லாத இந்தச் சமூகத்தை மாற்ற வேண்டும் என்ற உணர்வை, அடிப்படை மனிதநேயமாக மாற்றுவதில் ஓரளவு நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். மக்களிடமிருந்து பலத்த வரவேற்பையும் பெற்றிருக்கிறோம். ஒப்பீட்டு அளவில் பெண்களுக்குச் சமஉரிமையைக் கொடுத்தவர்கள் நாங்கள். பெண் எழுத்தாளர்கள் பலரும் முன்வந்தனர். தலித்தியமும் பெண்ணியமும் சேர்ந்த பெண் படைப்பாளர்களின் எழுத்துகள், எங்களுக்கும்கூட ஆண்களின் பார்வையிலிருந்து மாறுபட்ட அவர்களின் பார்வையை அனுபவத்தைப் புரியவைத்தது. ஒடுக்குமுறையை அனுபவிக்கும் எங்களுக்கு, பெண்களின் உரிமைக்குரலின் நியாயங்கள் புரிந்தன. இந்தக் கருத்துகளையெல்லாம் ஒரு சமூக நடைமுறையாக மாற்றியிருக்கிறோம். உறுதியாகச் சொல்லலாம், எங்கள் எழுத்துகள் தலித் அல்லாதோரிடம் ஒரு குற்றஉணர்வை ஏற்படுத்தின. இதுவே பெரிய செயல்பாடுதான்.’’
“உங்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறேன். தமிழ்நாட்டிலுள்ள ‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி’யின் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ‘இந்தத் கட்சியில் உட்சாதி தலித்துகளின் எண்ணிக்கை சீராக இல்லை’ என்று. இதுபோன்ற…”
(இடைமறிக்கிறார்) உங்களுக்குத் தெரியுமா… பாபாசாகேப் காலத்திலிருந்தே இந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் உண்டு. அவரை வெறும் ‘மகர்’களின் தலைவராக சிறுமைப்படுத்தியவர்களும் உண்டு. எங்களைப் பொறுத்தவரை தலித் என்பது வெறும் சாதி அடையாளமல்ல. தலித் என்பது, மாற்றத்தின் அடையாளம்; சமூகப் புரட்சியின் அடையாளம்.”
“தற்போதைய பா.ஜ.க அரசு, அம்பேத்கர் மையம் அமைத்தது பற்றி?”
“எல்லாமே கண் துடைப்புதான். காங்கிரஸ் கட்சியும் இதைச் செய்யத்தான் முயன்றனர். இன்னமும் செய்வார்கள். நாங்கள் அம்பேத்கரிடமிருந்து ஒருபோதும் விலகிச் செல்லவில்லை. தலித் எழுத்துக்குப் பல திசைகள் உண்டு. ஆனால், நாங்கள் எல்லோருமே இந்துத்துவ அமைப்புக்கு, வர்ணாசிரமத்திற்கு எதிராகத்தான் செயல்படுகிறோம். மாட்டு இறைச்சியை எவ்வளவு பெரிய அரசியலாக்கியிருக்கிறார்கள். கவனிக்கிறீர்கள்தானே!”
“சுயசரிதை நூல்களை மொழியாக்கம்செய்வதில் ஆர்வம்கொண்ட உங்களை பாதித்த சுயசரிதை நூல்கள் எவை?”
“லக்ஷ்மண் மானே எழுதிய ‘அத்வனிச்ச பட்ஷி’ என்னை மிகவும் பாதித்தது. இது மிகவும் துணிச்சலான எழுத்து. தயா பவாரின் ‘பலுட்டா.’ Zhenva Mi Jaat Chorali Hoti (When I Concealed My Caste)’, by Baburao Bagul, Joothan-A Dalit’s Life’, by Omprakash Valmiki (Hindi) இப்படிப் பல நூல்களைச் சொல்ல முடியும்.’’
‘‘ஓர் இலக்கிய ஆக்கத்தை மொழிபெயர்க்க வேண்டுமெனில், அதற்கு எத்தகைய வரையறைகளைக் கடைப்பிடிப்பீர்கள்?’’
‘‘இந்த வரையறைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கும். என்னளவில் அவர்களின் எழுத்தில் இருக்கும் ஜீவனாக உண்மையை மட்டுமே பார்க்கிறேன். ‘உண்மையை எழுதுவது எப்படி இலக்கியமாகும்?’ என்று நீங்கள் கேட்கலாம். ஓர் உண்மையைச் சொல்வதற்குத்தான் எழுத்தாளன் புனைவுக்குள் நுழைகிறான்!’’
“உங்கள் வாழ்வில் தனிப்பட்ட முறையில் சாதியக் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளீர்களா?”
“அப்படி ஏதுமில்லை. ஏனென்றால், நாங்கள் குடியிருந்தது, தாராவி லேபர் கேம்ப்பில். எங்களைச் சுற்றிலும் எங்களைப் போன்ற தலித் மக்கள்தான் வாழ்ந்துவந்தார்கள்.”
“தற்போதைய இந்தியச் சூழலில் அம்பேத்கரின் நட்புச் சக்திகள் என நீங்கள் நினைப்பது?”
“அம்பேத்கரின் கொள்கையைப் பின்பற்றுபவர்கள், ஏற்றுக்கொண்டவர்கள் அனைவருக்கும் எங்கள் நட்புக் கரத்தை நீட்டுகிறோம். இந்தியத் தேர்தல் அரசியலில் ஒப்பீட்டு அளவில் பார்க்கும்போது, காங்கிரஸா பா.ஜ.க.வா என்று பார்த்தால், நிச்சயமாக காங்கிரஸ்தான்.”
“தமிழ்ப் படைப்புகளைக் கவனிக்கிறீர்களா, உங்களின் வாசிப்பளவில் தமிழ்ப் படைப்புகள் குறித்த பார்வை என்ன?”
“மொழிச் சிக்கல்களைத் தாண்டி, தமிழ் எழுத்துகளின் பெரும்பரப்பில் என் கவனிப்புக்கு வந்ததும் நான் அறிந்ததும் வெகுசொற்பம் என்றுதான் சொல்ல வேண்டும். என்.டி.ராஜ்குமாரின் கவிதைகள் வாசித்திருக்கிறேன். புதினங்கள் என்று சொன்னால் பாமாவின் ‘கருக்கு,’ ‘சங்கதி’ எனக்கு நன்கு அறிமுகமானவை. சிவகாமியின் நாவல் ‘grip of changes.’ ரவிக்குமாரை ஓர் எழுத்தாளராக மட்டுமல்ல தலித்தியச் சிந்தனையாளராகவும் அரசியல்வாதியாகவும் தெரிந்து வைத்திருக்கிறேன். இந்திரனின் மொழியாக்கம், குறிப்பாக ஆப்பிரிக்க இலக்கியத்தின் மொழியாக்கம் தமிழ் தலித் இளம் படைப்பாளர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி அறிவேன். பெருமாள் முருகனின் நாவல் ஒன்றைப் பற்றிய சர்ச்சை கிளம்பியபோது, என் தோழி புதியமாதவி அந்தப் புத்தகத்தை வாசிக்கக் கொடுத்தார். தமிழில் வெளிவந்த சுயசரிதைகள் மற்றும் மராத்திய சுயசரிதைகள் என்ற தலைப்பில் பேசியபோது, பூமணியின் சுயசரிதை குறித்துப் பேசி இருக்கிறோம். சுகிர்தராணி, அன்பாதவன், விழி.பா.இதயவேந்தன், இமையம் கதைகள் குறித்தெல்லாம் புதியமாதவி வாயிலாக எனக்கும் எங்கள் இலக்கிய வட்டத்துக்கும் ஓரளவு அறிமுகம் உண்டு.
தமிழ் இலக்கியத்தின் பழைமையும் செழுமையும் தலித் இலக்கியத்திலும் பிரதிபலிக்கின்றன. அதன் அடிநாதமாக இருக்கின்றன. நாட்டுப்புறப் பாடல்கள், தொன்மங்கள் இவையெல்லாம் மொழிபெயர்ப்புக்குள் சிக்கிவிடாது என்பதையும் அறிவேன். இருந்தாலும் தமிழ் – மராத்தி மொழி இலக்கியங்களுக்கிடையில் மொழியாக்கப் பரிமாற்றங்கள் எந்தளவு இருக்கின்றன, நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும்.”
“தமிழக எழுத்தாளர்களுக்கும் மக்களுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”
“தலித் எழுத்தாளர்களுக்கும் தலித் அரசியல் அமைப்புகள்/கட்சிகளுக்குமான தொடர்புகளை நான் உன்னிப்பாகக் கவனித்துவருகிறேன். கவிதையை ஓர் இயக்கமாகக்கொண்டு வாழ்ந்தவர்கள் நாங்கள் என்பதால்கூட என் பார்வையும் அக்கறையும் இந்தத் தளத்தில் தொடர்கிறது. பெரியாரையும் அம்பேத்கரையும் அடுத்த தலைமுறைக்கு எப்படி நாம் அளிக்கப் போகிறோம் என்பதுதான் இன்றைய முக்கியமான கேள்வி. இங்கே ஒன்றைக் கூற விரும்புகிறேன். அம்பேத்கர் கொள்கைகளைப் பின்பற்றிச் செயல்பட்டவர்கள், அந்த மண்ணின் மக்கள் அதன் பயனை அனுபவித்தனர். ஆனால், பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்த மண்ணில், அந்த மக்கள், அதன் பயனை அனுபவிக்கவில்லை என்பது மிகவும் வேதனையான ஒன்று. இங்கே வரலாறுகள் அத்தனையும் திரிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில காலம் போனால், தமிழ்நாட்டில் பெரியார்தான் இந்துத்துவத்தை வளர்த்தார் என்று திரித்து எழுதினாலும், ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்துத்துவா அமைப்புகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. அதனால், அவர்கள் ஏஜென்டுகளை அனுப்ப ஆரம்பித்துள்ளனர். அதனால்தான் நான் சொல்கிறேன், தமிழ்நாட்டில் சுதந்திரமும் சமுத்துவமும் நிலவ வேண்டுமெனில், மக்கள் தெளிவாக இருக்கவேண்டும். மக்களைத் தவறான முறையில் வழிநடத்த வருகிறவர்களிடம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.”
“உங்களின் சுயசரிதையை எப்போது எழுதப் போகிறீர்கள்?’’
‘‘எழுத வேண்டும் என்ற எண்ணம் இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. அதற்கான குறிப்புகள்கூட ஓரளவுக்குத் தயாராகிவிட்டன. நேரம்தான் ஒத்துழைக்க மறுக்கிறது. பார்க்கலாம்.”
தமிழில்: எம்.ஆர்.ஷோபனா
நன்றி: இந்திரன், புதியமாதவி
Courtesy : Vikatan Tadam, July 2018