பிணவறையின் வெளியே உள்ள திண்டு ஒன்றில் சடலமாக கிடந்தார் சபரீஸ்வரன். அவரது கிழிக்கப்பட்ட வயிற்று பகுதியை நூலால் தைத்துக் கொண்டிருந்தார் பிணம் அறுக்கும் தொழிலாளி. பிணம் தான் அதற்காக அம்மணமாக போட்டிருக்க வேண்டுமா? யாராவது ஒரு துணியைக் கொண்டு போர்த்துங்கள் என்று ஒரு பெரியவர் நெஞ்சுருகி கலங்கிக் கொண்டிருந்தார். ஐயா, கொலைகாரர்களுக்கு ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுங்கள் என்று ஒரு பெரியவர் என் கைகளைக் பிடித்து கொண்டு விடாமல் பொறுமிக் கொண்டிருந்தார்.
நானூறுக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அழுது அழுது பலமின்றி தரையில் கிடந்த சிட்டுப்பிள்ளை அருகில் சென்றேன். ஐயா, என் பிள்ளைய கத்தியால் நெஞ்சில் குத்தி கொலை செய்துவிட்டார்கள். இதை கேட்க யாருமே இல்லையா? என்று கலங்கினார். அங்கிருந்த பெண்களும் கடுமையாக அழுது கொண்டிருந்தனர்.
தலித் இளைஞர் சபரீஸ்வரனுக்கு வயது 21. அவரது அப்பா மணிகண்டன் திருப்பூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு தம்பி, ஒரு தங்கை.
சடலமாக கிடந்த சபரீஸ்வரன் கொல்லப்பட்டதற்கு என்ன காரணம்? சாதி எதிர்ப்பு தான். இரண்டே வார்த்தையில் பதில் இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுள்ள சாதியை இந்த வார்த்தையை கொண்டு ஒடுக்கிவிட முடியுமா?
மேலூருக்கு அருகில் உள்ள கிராமம் மேலவளவு. கடந்த 30 ஜுன் 1997ம் ஆண்டு தலித் பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் ஆதிக்கசாதி வெறியர்களால் கொலை செய்யப்பட்டனர். இந்த மேலவளவு கிராமத்திலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது பட்டூர்.
பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 350 குடும்பங்களாகவும், மூப்பனார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 400 குடும்பங்களாகவும், கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 30 குடும்பங்களாவும் வசித்து வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆதிக்கசாதியைச் சேர்ந்த குணபாலன், அஜித்குமார் ஆகிய இளைஞர்கள் சாதிக் கொடி ஒன்றினை நட்டுள்ளனர். இதற்கு சபரீஸ்வரன் தலைமையில் உள்ள தலித் இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த கிராமத்தில் சாதி ரீதியான கொடி இருக்கக்கூடாது. இதனால் தேவையில்லாத பதட்டமும் மோதலும் வருகிறது என்று சபரீஸ்வரன் கூற, இந்த கிராமத்தில் நீங்கள் பெரும்பான்மையாக இருக்கிறீர்கள் என்பதற்காக எங்களை எதிர்க்கிறீர்களா? உங்களைப் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியது மட்டுமல்லாமல் பறப்பயலுகளுக்கு ஒரு நாள் நாங்கள் யார் என்று காட்டுகிறோம் என்று குணபாலன் மிரட்டியிருக்கிறார். இரண்டு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து 6 மாதத்திற்கு முன்பு பட்டூரில் இளவட்ட கல் தூக்கும் நிகழ்வு நடந்திருக்கிறது. தலித் இளைஞர்கள் சிலர் அந்த கல்லை தூக்க முயற்சி செய்ய குணபாலன், இந்த கல் எங்கள் சாதிக்கு சொந்தமானது, இதை எந்த பறையனும் தொடக்கூடாது என்று இழிவாகப்பேச அதனை தட்டிக் கேட்டிருக்கிறார் சபரீஸ்வரன்.
இரண்டு தரப்பினருக்கு இடையே அடிக்கடி உரசலும் மோதலும் ஏற்பட்டிருக்கிறது. நேற்று 31.07.2018 அன்று காலை சுமார் 9.30 மணியளவில் மேலவளவு கிராமத்தில் ஆதிக்க சாதியினரால் நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு நிகழ்விற்கு தலித் இளைஞர்கள் சபரீஸ்வரன், நாகராஜ், அண்ணாமலை, ஆனந்தக்குமார் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். அங்கு குணபாலன், அஜித்குமார், சுதர்சன், கார்த்திக் ஆகிய 4 ஆதிக்கசாதி இளைஞர்கள் வழிமறித்து, இது எங்க சாதி திருவிழா இங்கு நாங்க தான் மெஜாரிட்டியாக இருக்கிறோம். இங்கு உங்கள் வேலையை காட்ட முடியாது. நீங்கள் எப்படிடா இந்த மஞ்சுவிரட்டு விழாவிற்கு வரலாம்? என்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு தலித் இளைஞர்கள் தேவையில்லாமல் சாதி குறித்து பேசக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்க இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
அன்று மாலை 5.30 மணியளவில் குணபாலன், சுதர்சன், சரண்ராஜ் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் குளிக்க சென்ற சபரீஸ்வரனை வழிமறித்து அவரது மார்பில் கத்தியால் குத்தியுள்ளனர். சுருண்டு விழுந்த சபரீஸ்வரனை சாலையில் இருந்து வயல் காட்டுக்கு இழுத்துச் சென்று நெஞ்சு, விலா, வயிறு என்று பல பகுதிகளில் கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. மதுரை மாவட்ட எஸ்பி மணிவண்ணன், இன்றைக்குள் கண்டிப்பாக குற்றவாளிகளை கைது செய்துவிடுவோம் என்று உறுதியளித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். ஆனாலும் தலித் மக்கள் மேலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாதிக் கொடியை ஏற்ற தடுத்ததற்காகவும் இளவட்ட கல்லை தொட்டதற்காகவும் மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டதற்காகவும் சாதி விரட்டி விரட்டி ஒரு இளைஞனை கொன்று தீர்த்திருக்கிறது.
ஒரு கொடி, ஒரு இளவட்ட கல், ஒரு மஞ்சுவிரட்டு என்று இதை சுருக்கிவிடவும் முடியாது. இவையெல்லாம் சாதிய வன்மத்திற்கான களங்கள் தான். ஆனால் அந்த பகுதியில் ஏழை, எளிய ஆதிக்கசாதி இளைஞர்களை சாதி உணர்வோடு தூண்டுகிற சாதி இயக்கங்கள், சக்திகள் பின்னால் இருந்து கடுமையாக வேலை செய்கின்றன.
நீ கொன்றுவிட்டு வா, வழக்கை நாங்கள் நடத்துகிறோம் என்கிற ரீதியில் ஆதிக்கசாதி இளைஞர்களை தலித்துகளுக்கு எதிராக கொம்பு சீவி விடுகிற இந்த சக்திகள் அழிக்கப்பட வேண்டியவை. அரசுக்கு இந்த சக்திகள் யார் என்று தெரியும். இந்த இளைஞர்கள் அம்புகள் தான். எய்து கொண்டிருக்கக்கூடிய அந்த சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான் மேலூர் பகுதியில் சாதியத்தை கட்டுப்படுத்த முடியும்.
இதை அரசு செய்யும் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் மக்கள்.
எவிடன்ஸ் கதிர்