Home பௌத்தம் பௌத்த கட்டுரைகள் புத்தர் புதிரல்லர்

புத்தர் புதிரல்லர்

0
569

புத்தர் குறித்து வாசிப்பனுபவம் வாய்க்காதவர்களிடம் பேசினால், அவர்கள் உரைக்கும் முதல் வார்த்தை, “புத்தர் எதற்கும் ஆசைப்படக் கூடாதென்றார்”. இன்னும் தெளிவாக பேசுவோர், “புத்தர், ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார்” என்பர். அறிவுஜீவி கவிஞர்கள் சிலர், “புத்தனும் கூட ஆசைப்பட்டான் ஆசை ஒழிய வேண்டும் என்று” என எழுதிக்கொண்டிருப்பார்கள். இப்படி புத்தர் ஆசைப்படக் கூடாது என்று மட்டும் கூறிவிட்டு ஜீவ சமாதி அடைந்த சாமியார் அளவுக்கு சாமானியர்களுக்கு ஒரு பிம்பத்தைக் கடத்திவிட்டார்கள்.

புத்தரை ஆழ்ந்து வாசிக்கத் துவங்கினால் புத்தர், ஆசை என்பதாக எதை எதையெல்லாம் சுட்டிக்காட்டுகிறார் என்பதை கண்டடையலாம். புத்தர் பிறந்து வாழ்ந்த காலம், சமூக மாற்றம் நிகழ்ந்துகொண்டிருந்த மிக முக்கியமான காலகட்டம். மன்னராட்சி முறையை பிரிட்டீஷ் அரசு முடிவுக்கு கொண்டுவந்து ஜமீன்தார் முறைகளின் மேல் கைவைக்க துவங்கிய வரலாற்றையே இங்கு நாம் தப்பும் தவறுமாக வாசித்துக் கொண்டிருக்கிறோம். இன்று ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டுவிட்டாலும் அதன் நீட்சி ஆங்காங்கே எட்டிப்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. பஞ்சமி நில மீட்பை ஏதோ, ஜமீன்களே முன்வந்து வழங்கியது போன்ற வள்ளல் கதைகள் நம்மீது திணிக்க விட்டுக் கொண்டுதான் வாழ்கிறோம்.

புத்தரது காலகட்டமானது இனக்குழு வாழ்வில் இருந்து பெரிய சாம்ராஜ்யங்களை உருவாக்கி அரசனாக முடிசூட்டிக் கொள்ளும் அதிகாரத்தின் கீழ் நுழைகிற காலம். புத்தர், கபிலவஸ்துவில் சாக்கிய குலத்தில் கி.மு.563ஆம் ஆண்டு பிறக்கிறார். அவர் பிறந்த சூழலில் அவருடைய தந்தை சுத்தோதனாருக்கு கபிலவஸ்துவை ஆளுகின்ற முறை வருகிறது. அதாவது, இனக்குழு வாழ்வியல் முறையில் குழுவிற்கான தலைமை என்பது குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை சுழற்சிமுறையில் தீர்மானிக்கப்படுகிறது. அப்படியான காலகட்டத்தில் பிறந்த சித்தார்த்தன் எனும் பெயர் கொண்ட புத்தர் வளர்ந்து வரும் வேளையில் சமூக மாற்றத்தை உணர்கிறார். தலைமை என்பது சுழற்சிமுறையற்று, அதிகாரம் ஒரே மையம் நோக்கி குவிந்து எங்கும் மன்னராட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது.

நாட்டின் எல்லையை விரிவாக்க பெரும் போர்களும் போர்களில் உயிர் பலிகளும் மிகுந்து வருகிறது. இனக்குழு வாழ்வில் அந்த குழுவினரைத் தவிர வேறு எவரையும் குழுவிற்குள் அனுமதிப்பதில்லை, ஆனால் மன்னராட்சியின் அரசவையில் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடங்களில் ஆரியர்கள் நுழைந்தது வியப்பான வரலாறுதான். அவர்களின் ஆசை வார்த்தைகளால் சகோதரர்கள் மேலேயே எல்லைக்கான போர்களும் அரங்கேறுகின்றன. போரில் வெல்வதற்கு சிறப்பு யாகங்களும் செய்யப்படுகின்றன. யாகங்களில் பலியிட விவசாய கால்நடைகளும், சமயங்களில் அடிமைகளாக உள்ளவர்களும் பயன்படுத்தப்படுகிறார்கள். இப்படியான மண்ணாசை இனக்குழு வாழ்வியலில் இல்லாதது. தன் வாழ்நாட்களில் அவர் வெறுத்த ஆசை என்பது நிச்சயம் இதுவாகத்தான் இருக்கும்.

பண்டைய இந்திய சமூக வரலாற்றில் இனக்குழு வாழ்வியலில் இருந்து அதிகார ஆசையின் முடியரசாக மாற்றமடைந்த கால அத்தியாயம் மிக முக்கியமானது. முடியாட்சியில் சனாதன தர்மம் மிக முக்கிய பங்காற்றுகிறது. இனக்குழுவில் சுழற்சி முறையில் அக்குழுவில் யார் வேண்டுமானாலும் தலைமை ஏற்க முடியும். ஆனால் சனாதனத்தின் கீழ் பிராமணனுக்கு அடிமையாக உள்ள ஷத்ரியன் மட்டுமே தலைமை ஏற்க முடியும். புத்தர் எதிர்த்தது இந்த அதிகார ஆசையைதான். அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். அது யாவருக்கும் கிட்ட வேண்டும். அண்ணல் அம்பேத்கர் கூட இந்த உயரிய கொள்கைக்காக உழைத்தவர்தானே. அதனால்தான் அவர் இந்து மதத்தில் இருந்து மாற வேண்டும் என்று முடிவெடித்து பவுத்தத்தை தழுவினார்.

அண்ணல், பவுத்தத்தை எடுத்த எடுப்பிலேயே ஏற்றுக்கொள்ளவில்லை. 13.10.1935 அன்று “இந்துவாக சாக மாட்டேன் என இயோலா நகராட்சி மன்ற கூட்டத்தில் முழங்கிய அம்பேத்கர் 14.10.1956 அன்று நாக்பூரில் பத்து லட்சம் மக்களுடன் பவுத்த மதம் ஏற்றார். சரியாக 21 ஆண்டுகள் தமது மதமாற்றத்திற்கு காலம் எடுத்துக் கொண்டார். புத்தம் குறித்து மட்டுமல்லாது பல்வேறு மதங்களை குறித்தும் அவர் ஆய்வு செய்தார். சனாதனத்திற்கு சரியான எதிரியாக அவர் பவுத்தத்தையே தேர்ந்தெடுத்தார். காரணம், அதிகாரப் பகிர்வு என்கிற உயரிய கொள்கை.

ஷத்ரியனுக்கு மட்டுமே அரசாள அதிகாரம் உண்டு என்கிறது சனாதனம். அந்த மனுநீதிக்கு எதிரான கலகத்தை புத்தர் துவக்கி வைத்தார். 2500 அண்டுகளுக்கு பிறகு அரசியலில் தனித்தொகுதி உரிமை, கல்வி மற்றும் பணி இடங்களில் இட ஒதுக்கீட்டு உரிமை என அதிகாரம் மறுக்கப்பட்டவர்களுக்கு அந்த அதிகாரத்தை பகிர்ந்தளித்தல் மூலமாக அந்த கலகத்திற்கு புத்துயிர் பெற வைத்தார் அண்ணல் அம்பேத்கர்.

ஆனால் இன்றும் சதுர்வர்ணவாதிகள் அதிகார ஆசையில்தான் மிதக்கிறார்கள். அவர்களிடம் சொல்ல வேண்டியது ஒன்று உள்ளது, “ஆசையே துன்பத்திற்கு காரணம்!”

ரகுநாத்.
2020 ஏப்ரல் சஞ்சிகை இதழில் வெளியான கட்டுரை.

Load More Related Articles
Load More By sridhar
Load More In பௌத்த கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published.