இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சோகனூர் கிராமம். சோகனூர் பகுதியில் பட்டியல் சாதி மக்கள் சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாள்ராஜம்பேட்டை வன்னியர் சமூகத்து இளைஞர்கள், சோகனூர் பகுதியைச் சேர்ந்த பட்டியல் சாதி இளைஞர்கள் மீது தொடர்ந்து சாதி ரீதியான வெறுப்புணர்வுடன் இருந்து வந்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்த திரு.சு.ரவி அவர்களுக்கு தற்போது தொகுதி மக்கள் மத்தியில் முன்பிருந்த அளவிற்கு வரவேற்பு இல்லை. இதன் எதிரொலியாக 2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது அஇஅதிமுக கட்சி வேட்பாளர் திரு.சு.ரவி அவர்கள் மீது கடும் விமர்சனமும், எதிர்ப்பையும் மக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கைனூர், தணிகைபோளூர், சிச்சேரி ஆகிய பகுதிகளில் அஇஅதிமுக கட்சி வேட்பாளர் திரு.சு.ரவி அவர்கள் வாக்கு கேட்டு வரும் போது பட்டியல் சாதி மக்கள் கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்திய சம்பவமும் நிகழ்ந்துள்ளது. மாறாக மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கக் கூடிய விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திரு.கெளதம் சன்னா அவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
குறிப்பாக மற்ற கட்சியில் உறுப்பினராக இருக்கக் கூடிய சோகனூர் பகுதி பட்டியல் சாதி மக்கள் மற்றும் இளைஞர்கள் இந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சி சின்னமான பானை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்துள்ளனர். இது மேலும் பாமக மற்றும் அதன் கூட்டணி கட்சியான அஇஅதிமுக விற்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அஇஅதிமுக மற்றும் பாமக கட்சியை சேர்ந்த அப்பகுதி வன்னியர்கள் பட்டியல் சாதி மக்கள் மீது கடும் வன்மத்துடன் இருந்து வந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து கடந்த 07.04.2021 அன்று இரவு 07.30 மணியளவில் அரக்கோணம் கீழ்குப்பம் தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த திரு.சௌந்தரராஜன் (23) த/பெ.மோகன் மற்றும் செம்பேடு காலனியைச் சேர்ந்த திரு.அப்பனு(எ)அய்யப்பன் (19) த/பெ.ரமேஷ் ஆகிய இருவரும் செம்பேடு பகுதியிலிருந்து சுமார் 2 கீ.மீ தொலைவில் உள்ள குருவராஜாபேட்டை மார்க்கெட் பகுதிக்கு டூவீலரில் சென்றுள்ளனர். டூவீலரை அப்பனு(எ)அய்யப்பன் ஓட்ட சௌந்தரராஜன் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். குருராஜபேட்டை பேருந்து நிறுத்தம் எதிரே முருகன் கோவில் அருகே உள்ள திரு.அஜித் என்பவரது பானி பூரி கடையில் திரு.சௌந்தரராஜன், திரு.அப்பனு(எ) அய்யப்பன் பானி பூரி வாங்குவதற்காக நின்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அப்பனு(எ)அய்யப்பன் நண்பனும், பெரிய கடை பகுதியைச் சேர்ந்த திரு.ஆதி (18) என்கிற நபர் அப்பகுதியை கடந்து சென்றுள்ளார். உடனே அப்பனு(எ)அய்யப்பன் தன் கையை உயர்த்தி ஏய் என்று கூப்பிட்டுள்ளார். அதைப் பார்த்து பதிலுக்கு ஆதியும் தன் கையை காண்பித்துவிட்டு சென்றுள்ளார். அப்போது எதிரே பெருமாள்ராஜம்பேட்டை பகுதியைச் சேர்ந்த வன்னியர் சாதி இளைஞர்களான புலி(எ)சுரேந்தர் (24) த/பெ.ரமேஷ்,அஜித் (24) த/பெ.ராஜவேல், மதன் (37 )த/பெ.ராஜ் ஆகிய மூன்று பேரும் ஒரே டூவீலரில் வந்துள்ளனர். வன்னியர் சாதி இளைஞர்களான அந்த மூவரும் டூவீலருடன் அப்பனு(எ)அய்யப்பன் அருகே வந்து டேய், யாரப்பாத்துடா, ஏய்னு கூப்பிட்ட என்று கேட்டுள்ளனர்?. அதற்கு அப்பனு(எ)அய்யப்பன் நான் உங்களை கூப்பிடவில்லை, என் நண்பனை கூப்பிட்டேன் என்று கூறியுள்ளார்.
உடனே வன்னியர் சாதி இளைஞர் புலி(எ)சுரேந்தர் டூவீலர் முன் சக்கரத்தினால் சௌந்தரராஜன் இடது காலில் இடித்து விட்டு எந்த ஊர்டா நீங்க என்று கேட்டுள்ளான். அதற்கு சௌந்தரராஜன் செம்பேடு காலனி என்று கூறியுள்ளார். வன்னியர் சாதி இளைஞரான அஜித் காலனிக்கார பறத் தேவடியா பயல்களுக்கு இவ்வளவு திமிரா? என்று கூறிக் கொண்டே தனது கையால் சௌந்தரராஜனை தாக்கியுள்ளார். அப்போது உடனிருந்த வன்னியர் சாதி இளைஞரான அஜித், அப்பனு(எ)அய்யப்பனின் கழுத்தை நெரித்து தாக்கியுள்ளார். உடனே சௌந்தரராஜன் வண்டியை விட்டு இறங்கி ஓட, நிலைமையை புரிந்து கொண்டு அப்பனு(எ)அய்யப்பன் தான் கொண்டு வந்த டூவீலரை எடுத்துக் கொண்டு சோகனூர் காலனிக்கு சென்றுள்ளார்.
அப்போது சோகனூர் காலனியில் இருந்த பட்டியல் சாதி இளைஞர்கள் திரு.அஜய் (24) த/பெ.முருகன், திரு.அஜித் (23) த/பெ.சந்திரன், திரு.விஜய் (22) ஆகியோரிடம் தங்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமை தாக்குதல் சம்பவத்தை திரு.சௌந்தரராஜனும், திரு.அப்பனு(எ)அய்யப்பன் தெரிவித்துள்ளனர். உடனே பட்டியல் சாதி இளைஞர் அஜித், கவலைப்படாதீர்கள் உங்களை தாக்கிய அஜித் எனக்கு தெரிந்தவன் தான், அவனிடம் நான் பேசுகிறேன் என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே சாதி இந்துவான அஜித், செல்போன் மூலமாக பட்டியல் சாதி இளைஞர் அஜித்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளான். இறுதியாக சௌந்தரராஜனையும், அப்பு(எ)அய்யப்பனையும் அழைத்துக் கொண்டுவா சமாதானம் பேசுவோம் என்று கூறி (சோமனூர் – அருந்ததியர் காலனி குடியிருப்பிற்கு அருகே) சித்தாம்பாடி கூட்டு ரோடு பிரிவில் உள்ள கெளதம் நகர் – நாகாலம்மன் கோவிலுக்கு வரச் சொல்லியிருக்கிறார்.
இரவு சுமார் 08.00 மணியளவில் நாகாலம்மன் கோவில் அருகே பட்டியல் சாதி இளைஞர்கள் அஜித், விஜய், அஜய், சௌந்தர்ராஜன், அப்பனு(எ)அய்யப்பன் மற்றும் செம்பேடு காலனியைச் சேர்ந்த அப்பனுவின் பெரியப்பா மணி, பெரியம்மா கஸ்தூரி ஆகியோரும் சென்றிருக்கின்றனர். ஏற்கனவே அப்பகுதியில் பெருமாள்ராஜம்பேட்டை வன்னியர் சாதி இளைஞர்களான திரு.புலி(எ)சுரேந்தர், திரு.அஜித், திரு.மதன், திரு.மூக்கன், திரு.குமரன், திரு.சிவா, திரு.ராகுல், திரு.சூர்யா ஆகிய 8 பேர் கையில் மது பாட்டிலுடன் இருந்துள்ளனர். இதற்கிடையில் சம்பவத்தை கேள்விப்பட்டு அப்பனு(எ)அய்யப்பனின் உறவு முறையில் அண்ணனான செம்பேடு காலனியைச் சேர்ந்த திரு.சூர்யா(24) த/பெ.பழனி, சோகனூர் காலனியைச் சேர்ந்த திரு.அர்ஜுன் (22) த/பெ.ரவி, அவரது தம்பி திரு.வல்லரசு (20), திரு.மதன்குமார் (23) ஆகியோரும் வந்திருக்கின்றனர்.
சிறிது நேரத்தில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 12க்கும் மேற்பட்ட நபர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் பட்டியல் சாதி இளைஞர் அர்ஜுனை, வன்னியர் சாதி இளைஞரான அஜித் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இடது பக்க வயிற்றில் இரண்டு முறை குத்தியுள்ளான். அர்ஜுன் வலியால் துடிதுடித்து கீழே விழுந்து மயங்கியுள்ளார். சாதி இந்துக்களான மதனும், சிவாவும் கீழே கிடந்த கற்களை எடுத்து அவர் மீது எறிந்து மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இதனைக் கண்டு தடுக்கச் சென்ற சூர்யாவை, வன்னியர் சாதி இளைஞரான ராகுல் கத்தியால் இடது கை தோல் பட்டை மற்றும் இடது பக்க மார்பில் குத்தியுள்ளார். வன்னியர் சாதி இளைஞர்களான புலி(எ)சுரேந்தர், சூர்யா ஆகிய இருவரும் சேர்ந்து பட்டியல் சாதி இளைஞர் மதன் குமாரை இடது பக்க இடுப்பு, இடது பக்க முதுகு, இடது பக்க பிட்டம் ஆகிய இடங்களில் குத்தியுள்ளனர். பட்டியல் சாதி இளைஞர் சௌந்தரராஜனை, வன்னியர் சாதி இளைஞரான புலி(எ)சுரேந்தர் இடது பக்க முதுகில் கத்தியால் குத்தியுள்ளார்.
வல்லரசுவை வன்னியர் சாதி இளைஞரான குமரன் கம்பால் தலையின் நடுப் பகுதியில் தாக்கியதில் ரத்தம் பீறீட்டு வெளியேறியுள்ளது. இறுதியாக வன்னியர் சாதி இளைஞர்கள் தங்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களை காட்டி பறத் தேவடியா பசங்களா எங்களிடம் மோதுனிங்கனா உங்களை குத்தி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றுள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் சுமார் 15 நிமிடம் நடந்துள்ளது. சம்பவ இடத்தில் இரத்த வெள்ளத்தில் கிடந்த பட்டியல் சாதி இளைஞர்களை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆட்டோவிலும், இரண்டு சக்கர வாகனத்திலும் தூக்கிக் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அர்ஜுன், சூர்யா இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். சௌந்தரராஜன், மதன் குமார், வல்லரசு ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்று இரவு சௌந்தரராஜனும், மதன் குமாரும் மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டறிந்தவைகள் :
- இரட்டை படுகொலை சம்பவத்தில் மிக முக்கிய குற்றவாளியான அஜித்தின் தந்தை திரு. ராஜவேல் அப்பகுதியின் பா.ம.க கட்சியின் கிளைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சத்யாவின் தந்தை திரு.பழனி என்பவர் காவேரிப்பாக்கம் பகுதியின் அஇஅதிமுக ஒன்றிய செயலாளர். குருராஜம்பேட்டை பானிபூரி கடையில் பட்டியல் சாதியைச் சேர்ந்த திரு.சௌந்திரராஜன் மற்றும் அப்பனு (எ) அய்யப்பன் ஆகியோரை பா.ம.க. கட்சியைச் சேர்ந்த திரு. ராஜவேல் மகன் அஜித் தாக்கும் போது பானை சின்னத்திற்க்குத்தானே நீங்க ஒட்டு போட்டீங்க பறத் தேவிடியா பசங்களா என்று கூறி தாக்கியது அவர்களுக்கு தேர்தல் விரோதம் இருந்தது என்பதை சாதி வன்கொடுமை தாக்குதலில் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தவர்களின் வாக்குமூலங்களில் இருந்தும், பொது மக்களின் சாட்சியங்களிலும் இருந்து அறிய முடிகிறது.
- தமிழகத்தில் பா.ம.க. முன்னெடுத்து வருகிற தலித் வெறுப்பு அரசியல் என்பது பெருவாரியான வன்னியர் மக்கள் மத்தியில் மிகத் தீவிரமாக ஊடுருவியிருக்கிறது, அதன் விளைவாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தலித்துகள் மீதான வன்கொடுமை தாக்குதல்கள் , வன்கொலைகள் , சாதி ஆணவ கொலைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இந்த தலித் வெறுப்பு அரசியல் அரக்கோணம் தாலுகா, சோகனுர் கிராம தலித் இளைஞர்களின் இரட்டை படுகொலைக்கும், வன்கொடுமை தாக்குதலுக்கும் ஒரு மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கிரதியும் அறிய முடிகிறது.
- அரக்கோணம் சட்டமன்ற தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் கடந்த இரண்டு முறை நிகழ்ந்த சட்டமன்ற தேர்தலிலும் அஇஅதிமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அஇஅதிமுக சட்ட மன்ற உறுப்பினர் பொறுப்பு வகித்து வந்தாலும் தொகுதி மக்கள் மத்தியில் போதிய வரவேற்பில்லை. மாறாக மதச்சார்பற்ற கூட்டனிக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மற்ற கட்சியில் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய சோகனூர் பகுதி பட்டியல் சாதி மக்கள் மற்றும் இளைஞர்கள் இந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சி சின்னமான பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்துள்ளனர். இது மேலும் பா.ம.க மற்றும் அதன் கூட்டணி கட்சியான அஇஅதிமுக விற்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது என்பது கள ஆய்வின் போது பொது மக்கள் அளித்த சாட்சியங்களின் வழியாக தெரிய வருகிறது.
- சாதி வன்கொடுமை தாக்குதலால் படுகாயமடைந்த சௌந்தரராஜன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது வாக்கு மூலம் பெற்ற காவல் துறை சார்பு ஆய்வாளர் திரு.விநாயகம் அவர்களிடம் அளித்த முழு வாக்கு மூலமும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்படவில்லை. குறிப்பாக பானை சின்னத்திற்கு வாக்களித்ததற்காக வன்னியர் சாதி இளைஞர்களால் தாக்கப்பட்டோம் என்கிற தகவல் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறவில்லை. வேண்டுமென்றே காவல்துறையினர் இந்த உண்மை சம்பவத்தினை முதல் தகவல் அறிக்கையிலிருந்து மறைத்து இருகின்றனர் என சௌந்திரராஜன் வாக்குமூலத்தில் இருந்தும் முதல் தகவல் அறிக்கையில் இருந்தும் அறிய முடிகிறது.
- இரட்டை படுகொலை சம்பவத்திற்கு முன்பாக சௌந்தரராஜன், அப்பனு(எ)அய்யப்பன் ஆகிய இரண்டு பட்டியல் சாதி இளைஞர்கள் மீது, வன்னியர் சாதி இளைஞர்கள் வன்கொடுமை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து பட்டியல் சாதி இளைஞர்கள் காவல் துறையிடம் வாக்குமூலம் அளித்தும் இதுவரை முதல் நடந்த சாதிய வன்கொடுமை தாக்குதல் சம்பவத்திற்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.
- இரட்டை படுகொலை வழக்கில் போலீசார் உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யாமலும், பழைய வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989ன் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். எமது “நீதிக்கான சாட்சியம்” அமைப்பு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரிடம் சுட்டிக்காட்டிய பின்னர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015ன் கீழ் வழக்கு பிரிவு மாற்றம் செய்தனர். தேர்தல் தொடர்பான சாதி வன்கொடுமை குறித்த பிரிவுகள் இன்னும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை என்பதையும் முதல் தகவல் அறிக்கையிலிருந்து அறிய முடிகிறது..
- சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு நடந்த மிகக் கொடூரமான இரட்டை படுகொலை சம்பவத்தில் இரு சமூகத்தினரிடையே மிகவும் பதட்டமான சூழல் நிலவிக் கொண்டிருக்கும் இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கை தவறுதலான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பது இச் சம்பவத்தில் காவல் துறையினர் பெரும் அலட்சியத்தோடு நடந்து கொள்ளுகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
- இரட்டை படுகொலை சம்பவம் நடந்த மறுநாள் 08.04.2021 இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்கள் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் இந்த இரட்டை படுகொலை சம்பவம் இரண்டு தரப்பினருக்கிடையே குடிபோதையில் நடந்த படுகொலை என கூறியிருந்தார். இது குறித்து கடந்த 09.04.2021 அன்று டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழில் செய்தி வெளியானது. அதாவது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழக்கு புலன் விசாரணையில் இருக்கும் போதே இதுதான் உண்மை என்று புலன் விசாரணையின் இறுதி முடிவுக்கு முன்பே தனது அனுமானத்தில் கூறுவது அறிவியல் பூர்வமான புலன் விசாரணைக்கு எதிரானது. இந்த அணுகுமுறை நேர்மையற்ற, பாரபட்சமான புலன் விசாரணைக்கு வழிவகுத்திருக்கிறது என்பதை கண்டறிய முடிகிறது.
- காவேரிப்பாக்கம் அஇஅதிமுக ஒன்றிய செயலாளர் பழனி மற்றும் அப்பகுதியில் ஆர்.எம்.எஸ் சேம்பர் வைத்திருக்கக்கூடிய ராஜு ஆகியோர் தொடர் மணல் கொள்ளைகளில் ஈடுபட்டு வருகின்றனர், இதை பட்டியல் சாதி மக்கள் தொடர்ந்து அரசின் கவனத்திற்கும், மணல் கொள்ளையை எதிர்த்தும் வந்துள்ளனர். எனவே பட்டியல் சாதி இளைஞர்கள் மீதும், மக்கள் மீதும் வன்னியர் சாதியைச் சேர்ந்த திரு.பழனி, மற்றும் திரு. ராஜூ மிகுந்த கோபத்தில் இருந்து வந்துள்ளனர் என்பதையும் கள ஆய்வில் கண்டறிய முடிகிறது. பழனியின் மகன் சத்யா, ராஜுவின் மகன்கள் சிவா, மதன் ஆகியோர் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2014ம் ஆண்டு நடந்து ,முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மோதிரம் சின்னத்தில் வேட்பாளராக போட்டியிட்டார். பட்டியல் சாதி மக்கள் மோதிரம் சின்னத்திற்கு வாக்களித்தர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக பா.ம.க கட்சியைச் சேர்ந்த வன்னியர்கள் வடக்கு மாங்குடி கிராமத்தில் உள்ள பட்டியல் சாதி மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இவ்வன்கொடுமை தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த பட்டியல் சாதி மக்கள் 2பேர் மரணமடைந்தனர். மேலும் பட்டியல் சாதி மக்கள் 6 பேர் படுகாயமடைந்தனர். பா.ம.க கட்சியைச் சேர்ந்த வன்னியர்களால் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன.
- இதனைத் தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு மீண்டும் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் போட்டியிட்டார். பட்டியல் சாதி மக்கள் பானை சின்னத்திற்கு ஓட்டு போட்டார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக பா.ம.க கட்சியைச் சேர்ந்த வன்னியர்களால் பொன்பரப்பியில் பட்டியல் சாதி மக்கள் மீது மிகக் கொடுரமான சாதி வன்கொடுமை தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. பட்டியல் சாதி மக்கள் குடியிருப்புகள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இதுபோன்ற வன்கொடுமை தாக்குதல் சம்பவங்களை நன்கு அறிந்த தமிழக தேர்தல் ஆணையமும், தமிழக காவல்துறை இயக்குனர் அவர்களும் தேர்தல் தொடர்பான வன்கொடுமை சம்பவங்களை தடுப்பதற்கு போதிய முன்தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பது இதுபோன்ற வன்கொடுமை தாக்குதலுக்கும் கொலைகளுக்கும் முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது என்பதையும் அறிய முடிகிறது.
பரிந்துரைகள் :
- பட்டியல் சாதியைச் சேர்ந்த அர்ஜுன், சூர்யா படுகொலை திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட மிகக் கொடுரமான சாதிய படுகொலை. தேர்தல் முன்விரோதம், பட்டியல் சாதி மக்கள் மீதான வெறுப்பிலும் நிகழ்த்தப்பட்ட இரட்டை படுகொலை. எனவே இவ்வழக்கில் கூடுதலாக வன்கொடுமைத் தடுப்பு திருத்தச் சட்டம் 2015 பிரிவுகள் 3(1)(n), 3(1)(o)ன் கீழ் வழக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும். அனைத்து குற்றவாளிகளும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
- வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 2015, விதிகள் 12 ன் கீழ் சாதி வன் படுகொலை செய்யப்பட்ட அர்ஜுன், சூர்யா குடும்பத்தினருக்கு ரூபாய் 1 கோடி தீருதவித் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 2 ஏக்கர் விவசாய நிலமும் உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சாதி வன்கொடுமை தாக்குதலால் படுகாயமடைந்த சௌந்தரராஜன், மதன்குமார், வல்லரசுக்கு ஆகியோருக்கு ரூபாய் 10லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மிகக் கொடுரமான முறையில் தேர்தல் முன்விரோதம் , சாதி வன்கொடுமை தாக்குதலால் நிகழ்த்தப்பட்ட இரட்டை படுகொலை மற்றும் வன்கொடுமை தாக்குதல் வழக்கில் முறையாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், மிகவும் அலட்சியமாக விசாரணையை கையாண்டு வரும் அரக்கோணம் காவல்துறையிடமிருந்து இவ்வழக்கை மாற்றம் செய்து பாரபட்சமற்ற வகையில் , அறிவியல்பூர்வமான புலன் விசாரணையை மேற்கொள்ள இவ் வழக்கை மத்திய புலனாய்வு பிரிவுக்கு (CBI) மாற்ற தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இரட்டை படுகொலை சம்பவத்திற்கு முன்பாக பட்டியல் சாதியைச் சேர்ந்த திரு. சௌந்திரராஜன் மற்றும் அப்பனு (எ) அய்யப்பன் ஆகியோரை வன்னியர் சாதி இளைஞர்கள் மிகக் கொடுரமாக சாதி வன்கொடுமை தாக்குதல் செய்த சம்பவத்தில் இதுவரை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை. எனவே அரக்கோணம் தாலுகா காவல் நிலைய போலீசார் வன்கொடுமைத் தடுப்பு திருத்த சட்டம் 2015 ன் கீழ் உடனடியாக தனி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சாதி வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட அர்ஜுன் , சூர்யா அகியோரின் குடும்பத்திற்கும், இரட்டை படுகொலை சம்பவ புகர்தாரர் சௌந்திரராஜன் மற்றும் சம்பவ சாட்சிகள் , சோகனுர் , செம்பேடு பகுதியில் வசிக்கின்ற தலித் மக்களுக்கு வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 பிரிவு 15A (1) ன் கீழ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முழு பாதுகாப்பு அளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சாதி வன்கொடுமையால் படுகாயமடைந்த திரு.சௌந்திரராஜன் அரக்கோணம் தாலுகா காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.விநாயகம் அவர்களிடம் வாய்மொழியாக அளித்த புகாரை முழுவதுமாக பதிவு செய்யாமல் வேண்டுமென்றே உண்மையை மறைத்து தனது கடமையை புறக்கணித்த சார்பு ஆய்வாளர் மீது வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015 பிரிவு 4 (2) ன் துறை ரீதியான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வன்கொடுமைத் தடுப்பு திருத்த சட்டம் 2015 பிரிவு 18 ன் கீழ் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு இவ்வழக்கு விசாரணை முடியும் வரை நீதிமன்ற பிணை வழங்கக்கூடாது. மேலும் புலன் விசாரணை , நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து வன்கொடுமைத் தடுப்பு திருத்த சட்டம் 2015 பிரிவு 15A (3)ன் கீழ் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, வழக்கை கண்காணிக்கும் பொது அமைபிற்கு தவறாமல் தகவல் தெரிவிக்க வேண்டும்.
- தேசிய பட்டியல் சாதி ஆணையம், புதுடெல்லி தாமாக முன் வந்து இரட்டை படுகொலை சம்பவத்தை விசாரணை செய்ய வேண்டும். சாதி வன்கொடுமை தாக்குதலால் படுகொலை செய்யப்பட்ட மற்றும் வன்கொடுமை தாக்குதலுக்குள்ளான குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் வகையில் தமிழக அரசு, காவல் துறை இயக்குனருக்கு உரிய பரிந்துரைகளை, வழிகாட்டுதல்களை வழங்கவேண்டும்.
- சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கை முழுவதுமாக கண்காணிக்க வேண்டும்.
- தமிழகத்தில் தேர்தலையொட்டி பட்டியல் சாதி மக்கள் மீது அதிகரித்து வரும் சாதி வன்கொடுமை தாக்குதல்கள் , படுகொலைகள் குறித்த சம்பவங்களை தேசிய பட்டியல் சாதி ஆணையம் ஒரு முழுமையான ஆய்வை செய்வதோடு பட்டியல் சாதி மக்கள் பாதுகாப்பாக தேர்தலை எதிர் கொள்ள தேர்தலுக்கு, முன்பும், பின்பும் தமிழக காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் வழங்க வேண்டும்.
நன்றி!
தோழமையுடன்
வழக்கறிஞர். இ. பாண்டியன்
செயல் இயக்குனர், நீதிக்கான சாட்சியம், மதுரை.